மக்களின் குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு ஊடகங்களும் சம்பாதிக்கப் பார்க்கிறதேயன்றி மக்களின் குறைகளை நீக்கி அவர்களுக்கு உதவுவதாய் இல்லை. மக்களின் முன்னேற்றத்தில் ஊடகங்களின் பங்கு இப்போதெல்லாம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் நாய் மனிதரைக் கடிப்பது செய்தியல்ல; மனிதர் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்பார்கள். நடிகைகளின் தொப்புள் முதல் சிட்டு குருவி லேகியம் வரை இவர்கள் பக்கத்தை நிரப்ப போடாத செய்திகள் சேவைகள் இல்லை. அடுத்து அரசியல்வாதிகளின் அடிவருடி காக்கைக் கூட்டங்களாய் இறைச்சித்துண்டுக்கும், கோர்ட்டர் பாட்டில், பேட்டாவுக்குமாய் ஆலாய்ப்பறக்கின்றன. எந்த பத்திரிக்கைகளுக்கு ஆவது அரசை இடித்துரைத்து கேட்க்கும் திராணியுள்ளதா என்றால் விளம்பரம் போய்விடுமே என்ற கவலை.
ஜனநாயகத்தின் 4 ஆவது தூண்கள் என்று சித்தரிக்கப்பபடும் ஊடகங்கள், எதார்த்தத்தில் டாடா அம்பானிகளின் பங்களா நாய்களாக இருந்துள்ளது என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம். இது ஜனநாயக அமைப்பை நம்பியவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் என்றவுடன் உங்கள் நினைவுக்கு எப்படியானதொரு சித்திரம் தோன்றுகிறது? ஒல்லியான உருவம் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கான பைஜாமா, லேசாகக் குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், கனமான கண்ணாடி, அதற்குள் சிவந்த கூர்மையான கண்கள். இவரது ஆளுமை பற்றிய பிம்பமாக, அதிகாரத்தையும் முறைகேடுகளையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பது, மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் உயிரையே கூட துச்சமாக மதிப்பது, நேர்மை… இத்யாதி இத்யாதி. என்றால், நீங்கள் இன்னமும் என்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களின் தாக்கத்திலிருந்து விடுபடாதவர் என்று பொருளாகிறது. இப்பொழுது பத்திரிகையாளர்கள் என்றால் இறக்குமதி செய்யப்பட்ட காரில், பளீரென்ற மேக்கப்பில், டிசைனர் உடைகளோடும் நுனி நாக்கில் புரளும் ஆங்கிலத்தோடும் ஒரு சினிமா நடிகருக்கு ஒப்பான தோற்றம் தான் இன்றைய நவீன பத்திரிகையாளர்களின் தோற்றம்! .
தமிழகத் தேர்தல் சமயங்களில் போயஸ் கார்டனை விட்டு ஒரு மர்மப் புன்னகையோடு வெளியேறும் துக்ளக் சோவை தவறாமல் தமிழ் செய்தி ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். சுயேச்சையாய் செய்திகளை அளிக்கும் கடமை உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு அரசியல் அணி சேர்கைகளுக்காக தரகு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி இது வரை எழுந்ததில்லை.
கவர் வாங்கிக் கொண்டு “கவர்” ஸ்டோரிகள் எழுதுவது பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக ‘இன்னதற்கு இன்ன ரேட்’ என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது. ஆளும் கட்சியின் விளபரங்களுக்காக அவர்கள் செய்யும் எல்லா திருட்டு வேலைகளுக்கும் உடந்தையாக இருப்பது, தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வோர் கட்சிகளை பிடித்து கொண்டு ஜெயிக்கும் என்று ஆருடம் சொல்வது, கருத்துகணிப்புகள் நடத்தி இவர்களே ஜெயிக்க வைப்பது என்று இவர்கள் பண்ணும் காமடி எல்லாம் அறிந்ததே.
தற்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் (ஆதர்ஷ் ஊழல்) முறைகேடுகள் செய்து அம்பலமாகி ஊரே காறித்துப்பிக் கொண்டிருக்கும் மகாராஷ்ட்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவாண் பற்றி அம்மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “ஆற்றல் மிக்க இளம் தலைவர்” என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் சவாண் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியைப் போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது.
அரிந்தம் சௌத்ரி “இதிலெல்லாம் என்னய்யா பிரச்சினையக் கண்டுட்டீங்க?” என்கிறார். “அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுப்பதோ லையசன் (தரகு) வேலை பார்ப்பதோ ஒன்றும் புதிதில்லையே? இத்தனைக்கும் நம்மை விட அவர்களோ முன்னேறிய ஜனநாயக நாடு அல்லவா; நாம் மட்டும் ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் இனிமேல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுக்கவோ தரகு வேலை பார்க்கவோ வேண்டாம் – அதை வெளிப்படையாக நேரடியாகவே செய்து விடலாம்” என்று தனது சண்டே இண்டியன் பத்திரிகையில் எழுதியுள்ளார். அரிந்தமின் அந்தக் கட்டுரையை ஒரு வேளை சோ ராமசாமி படித்திருந்தால் “ஹெஹ் ஹெஹ் ஹே.. இவாள்ளாம் இப்பத்தான் எல்கேஜிக்கே வந்திருக்கா… நாமெல்லாம் பிஹெச்டியே முடிச்சுட்டோமே” என்று இந்து ராமைப் பார்த்து சொல்லியிருக்கக் கூடும்.
இந்த மானம் கெட்ட பத்திரிக்கைகள் தாம் வெளியிடும் செய்திகளை வியாபாரமாக கருதி மக்களிடம் திணிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை, பத்திரிக்கைக்கு தேவையான நீதி, நேர்மை, நியாயம் போன்ற எல்லா அம்சங்களுக்கும் இவர்களிடம் ஒரு விலை உண்டு. இவர்கள் பணத்திற்கு எல்லாத்தையும் விற்க துணிந்த வியாபாரிகள். 2005ஆம் ஆண்டு விடியோகான், கைனடிக் போன்ற நிறுவனங்கள் கணக்கற்ற பங்குகளை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை குழுமத்துக்கு லஞ்சமாக அளித்து தமது நிறுவனங்களைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா , டைம்ஸ் நௌ, பிசினஸ் டைம்ஸ் போன்ற எல்லா பத்திரிகைகளிலும் நல்லவிதமாக’ செய்தி வரும்படி பார்த்துக் கொண்டன. அதனால் போது மக்களே இது போன்ற பத்திரிக்கைகளை புறக்கணித்து பத்திரிக்கையில் வரும் சம்பவங்கள் எல்லாம் உண்மை என்று நினைக்கும் மன பாங்கை விட்டு முதலில் மாறுவோம்.