Author Topic: பாட்டி வடை சுட்ட கதை  (Read 24 times)

Offline MysteRy

பாட்டி வடை சுட்ட கதை
« on: May 10, 2025, 07:40:19 PM »


இந்தக் கதையை ஒரு முறையாவது எதாவது ஒரு வகையில் கேட்டிருப்போம்.ஆனால் இப்படிக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது.ஒரு நாள் அதற்கு மிகவும் பசிக்கவே,வடை சுடும் பாட்டியைத் தேடிச் சென்றது.

பாட்டி எனக்கு ஒரு வடை கொடு என்று காகம் பாட்டியிடம் மிகப் பணிவாகக் கேட்டது.

இங்கே அவர்கள் குழந்தைகளுக்கு நேர்மையைக் கற்றுக் கொடுக்கிறார்கள்

காகம் தனக்குத் தேவையான வடையை திருடவில்லை. மாறாக, பாட்டியிடம் நேர்மையாக தனக்குத் தேவையான வடையைக் கேட்டது.

பாட்டி தன்னுடைய விறகுகள் ஈரமாக இருப்பதால் வடை சுடுவது கடினம் என்று காகத்திடம் கூறவே, காகம் யோசித்து,பாட்டி வடை சுடுவதற்காக பறந்து சென்று காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி வந்தது.

இங்கே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பைக் கற்றுக் கொடுகிறார்கள்

காகம் தனக்குத் தேவைப்பட்ட வடைக்காக கடினமாக உழைத்தது.

விறகு கிடைக்கவே பாட்டி வடையைச் சுட்டாள்.வடையை சுட்டு முடித்த மகிழ்ச்சியில் காகத்தை மறந்தாள்.

இங்கே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலாளித்துவத்தை கற்றுக் கொடுக்கிறார்கள்

இப்பொழுது காகம் தன் வடையை பாட்டியிடம் கேட்டது.முதல் முறைப் போல இல்லாமல் இப்பொழுது

தன் வடையை உரிமையுடன் கேட்டது.

இந்த இடத்தில உரிமைக்காகப் போராடும் குணம் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள்

காகம் முன்பு கேட்டது தானம்,இப்போதோ அது கேட்பது தன் உழைப்பிற்கான பலன். காகத்திடம் மன்னிப்பு கேட்ட பாட்டி, காகத்திற்கு வடையைக் கொடுத்தாள். காகம் சந்தோஷமாக காட்டிற்குப் பறந்தது.

காட்டில், அனைவரையும் ஏமாற்றும் நரி காகத்திடம் வடையைப் பார்த்தது.

இங்கே அவர்கள் உழைப்பை ஏமாற்றி சுரண்டுபவர்களைப் பற்றிக் கூறுகிறார்கள்

நரி காகத்திடம் அதன் திறமைகளைப் புகழ்ந்தது.புகழில் ஒரு நிமிடம் மயங்கிய காகம் வடையை நரியிடம் பறி கொடுத்தது.

நரி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த

காகம் விழிப்புணர்வு பெற்றது.

இந்த இடத்தில் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்

"நீ ஏமாற்றப்பட்டால் விழிப்புணர்வு அடைய வேண்டும்,இல்லையேல் மீண்டும் அதேபோல் ஏமாறுவாய்" என்பது இதன் சாரம்.

விழிப்புணர்வு அடைந்த காகம் மிகவும் பலமாகக் கரைந்தது.

அதன் குரலைக் கேட்ட ஆயிரக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில் திரண்டன.

இந்த இடத்தில் குழந்தைகள் தொழிலாளர் ஒற்றுமையை கற்றுக் கொள்கிறார்கள்

அன்று அந்த காகத்திற்கு வடை மட்டும் கிடைக்கவில்லை.

உழைப்பைச் சுரண்ட நினைத்த நரி பல ஆயிரக்கணக்கான காகங்களுக்கு உணவானது.

இந்தக் கதை நமக்கு மிகவும் பரிச்சியமானது தான். ஆனால் இந்தக் கதையில் குழந்தைகளுக்கு இவ்வளவு கற்றுக் கொடுக்க முடியும் என்பதை நினைத்து வியப்பாக உள்ளது

நாம் எப்படி கற்றுக் கொடுத்தோம்

பாட்டியைக் காகம் 'ஏமாற்றியது'

காக்காவை நரி 'ஏமாற்றியது'

இதுதான் நாம் சொல்லிக் கொடுத்தது

அவர்கள் (சீனர்கள்) வாழ்வின் நெறிமுறைகளை கற்பிக்கிறார்கள்.

நல்லதை யார் சொன்னால் என்ன

ஏற்போம் கற்பிப்போம்...

உள்ளதை சொன்னேன்.
உண்மையை சொன்னேன்.