Author Topic: மின்னுவதெல்லாம் பொன்னல்ல  (Read 1669 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

சுஜா ஒரு பெரிய கால் சென்டரில் பணி புரிபவள்.
இரவில் விழித்து பகலில் தூங்கி அன்றாட வெளியுலகை மறந்து, ஒரு தனி உலகத்தில் வாழ்பவள்.
விடியற்காலை பணி முடித்து வீடு திரும்பிய சுஜா.

"அம்மா எங்க இருக்க..காப்பி கொண்டு வாம்மா, தலை வலிக்குது" என்று கைபையை சோபாவில் தூக்கி எரிந்து விட்டு பொத்தென்று சோபாவில் விழுந்தாள்.

"வந்துட்டேன்மா. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த வேலைக்கு போக போறியோ?? வேண்டாம்னு சொன்னாலும் சொல் பேச்சுக் கேட்கமாற்றே" என்று தன் மகளைச் செல்லமாக கோபித்துக் கொண்டு சோபாவில் போய் உட்கார “அம்மா” என்று மடியில் போய் சிறு குழந்தையாய் முகம் புதைத்துக்கொள்ள, தலையைக் கோதி விட்ட தாயை,

“அம்மா இப்படியே செய்த நான் நல்லா தூங்கிடுவேன்“ என்று சொல்ல

“போடி எந்திரிச்சு உன் ரூம்-ல போயி தூங்கு. அண்ணன், அப்பா, எல்லாம் எந்திரிச்சு வந்ததா திட்டு வாங்குவ. நான் போயி அவங்களுக்கு டிபன் செய்துட்டு உனக்கும் தரேன் சாப்பிட்டு தூங்கிடு. உன்னை எழுப்ப என்னால முடியாது. அவங்களுக்கு ஆபீஸ் லேட் ஆகிடும்” என்று சொல்லி சமையல் அறைக்கு சென்றாள் ஜானகி.

அம்மா தந்த காப்பியை எடுத்துக் கொண்டு சமையல் அறையில் நுழைந்தாள்.

"என்னமா டிபன்" இன்னைக்கும் தோசையா, தூக்கமத்திரையே வேண்டாம்மா உன் டிபன் சாப்டா போதும்” என்று கிண்டல் அடிக்க,

“நீயும் குடும்பத் தலைவி ஆனால் தெரியும். என்ன பண்றேன்னு நானும் பார்க்கத் தானே போறேன். முதல இந்த வேலைய விடு” என்று திட்டத் தொடங்கினாள்.

“ஐயோ ஆரம்பிசுட்டியா. உம் பொண்ணு தமிழ் மீடியத்துல படிச்சிட்டு என்னோட முயற்சியால சாட்டிங் எல்லாம் போய் அப்படி இப்படி எப்படியோ இங்கிலீஷ் கத்துக்கிட்டு இப்போ அமெரிக்காகாரனோட இங்கிலீஷ்ல கலக்குறேன். இதைப் பார்த்து சந்தோஷபடாமல் திட்டுரதே வேலையா போச்சு உனக்கு” என்று பெருமை அடித்துக்கொண்டாள் சுஜா.

“எல்லாம் சரி அடுத்த வாரம் உன்னை பொண்ணு பார்க்க வராங்க நீ லீவ் போட்ரு. புதன் கிழமை வராங்க சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு பிறகு நீ வேலைக்கு போவதும் போவாததும் நீயாச்சு உன் புருஷனாச்சு” என்று சிரித்தாள் ஜானகி.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ கவலை படாதே. நீ நல்லா மாப்பிளையா மட்டும் பாரு” என்று சொல்லி சிரித்து விட்டு தன் அறைக்கு சென்று ஆழ்ந்த உறக்கத்துக்கு ஆயத்தம் ஆனாள்.
இனி பூகம்பமே வந்தாலும் தெரியாது சுஜாவிற்கு.

சுஜாவின் அண்ணா ஒரு தனியார் வங்கி மேலாளர், அப்பா கட்டட பொறியாளர். சுஜா வேலைக்கு போகவேண்டும் என்று அவசியம் இல்லை என்றாலும், அவள் விருப்பதிற்க்காகவும், அவள் தோழிகளும் அதே அலுவலகத்தில் பணிப் புரிவதால், அதுவும் செல்ல மகள் என்பதால் அவள் இஷ்டத்திற்கே விட்டுவிட்டனர். அவள் அம்மாவிற்கு தான் தன் மகள் வேலைக்கு போவதை விரும்பாதவளாய் இருந்தாள்.

புதன் கிழமை.

சுஜாவை பொண்ணுப் பார்க்க மாப்ளை வீடு வந்து இருக்க மாப்பிள்ளை அரவிந்த் MBA முடித்து ஆஸ்திரேலியா செல்ல தேர்வு எழுதிவிட்டு, அப்படியே அவன் அப்பாவின் தொழிலுக்கு உதவியாய் இருந்து வருகிறான். அவன் அப்பா குருமூர்த்தி ஒரு பெரிய தனியார் கம்பெனி நடத்திவருகிறார். திருமணம் முடிந்து இருவரும் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கவேண்டும் என்று இரு குடும்பத்தாரும் ஆசைப்பட்டனர். சுஜா, அரவிந்த் இருவருக்கு ஒருவரை ஒருவர் பிடித்துப் போக மூன்று மாதம் கழித்து திருமணம் என்று நாள் குறித்தனர்.
சுஜாவும், அரவிந்தும் திருமணக் கனவில் முழ்க தொடங்கினர்.

தினம் தினம் போனில் பேசுவதே வாடிக்கையாகவும், வீட்டுக்கு தெரியாமல் சினிமா, பீச் என்று சந்தித்துக் கொண்டு திருமண நாளை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டு இருந்தனர். சுஜாவிற்கு நட்பு வட்டம் அதிகம். எல்லா நட்பு இணையத்திலும் சென்று அரட்டை அடிப்பதே பொழுதுபோக்காய் இருப்பவள். வேலைக்கு சென்ற பிறகுதான் நட்புத்தளங்களுக்கு செல்ல முடியாமல், நேரம் கிடைக்கும் போது மட்டும் தன்னோட Profile ல் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி போட்டுவிட்டு வருவாள். அதுபோல தான் தன் திருமண செய்தியையும் போட்டு விட்டு வந்தாள்.
திருமண நாளை எண்ணத் தொடங்கினாள் சுஜா.

அன்றும் வழக்கம் போல அலுவலகம் முடித்து வந்தவுடன் கைபேசி ஒலிக்க அரவிந்த் தான் என்று ஆசையாக கைபேசியை எடுத்துப் பார்க்க

புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர யாரோ என்று தெரியாமல்
“ஹலோ” என்று சொன்னால் சுஜா.

மறுமுனையில் ஒரு ஆண் குரல்

“ஹாய் சுஜா, எப்படி இருக்க, நீ ரொம்ப அழகு. உன்னை நான் பார்க்கணும்”, என்று ஆபாசமாக பேச அதிர்ந்தே போனாள் சுஜா...

“யாரு நீ, உனக்கு எப்படி என் நம்பர் கிடச்சுது, ராங் நம்பர்” என்று வைத்துவிட்டாள். ஆனால் தொடர்ந்து அந்த அழைப்பு வர போனை அணைத்து விட்டாள். இதே போல பல ஆண்கள், இவளுக்கு தொடர்புக்கொண்டு ஆபாசமாக பேசுவதால் எப்போதும் தன் கைபேசியை அணைத்தே வைத்து இருந்தாள்.

வழக்கம் போல அரவிந்த் இவளுக்கு போன் செய்ய போன் அணைத்து இருப்பதால்
“ஏன் இவள் இப்பொது எல்லாம் போனே எடுக்கறது இல்லை” நேரில் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று சுஜாவின் வீட்டிற்கு சென்றான்.

சுஜா காய்ச்சல் என்று சொல்லிவிட்டு ஒரு வாரமாக வீட்டில் இருப்பது. அரவிந்த்க்கு அப்போது தான் தெரிய கோபம் அடைந்தான்.

“எதுவுமே சொல்ல மாட்டியா, போனும் ஆப் பண்ணி வச்சு இருக்க. ஏன் நீ முன்ன மாதிரி இல்லை. ஏன் என்னை பிடிக்கலையா?? எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிடு” என்று கோபமாய் பேச தொடங்கினான்.

கண்களில் கண்ணீர் வர, “நாம வெளிய போகலாமா?? “என்று சுஜா கேட்க ஏதோ சொல்ல நினைப்பதை உணர்ந்தவனாய்

“ஆன்ட்டி நான் சுஜாவ பக்கத்துல வெளிய கூட்டிட்டு போயிடு வரேன். அவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்-ஆ இருக்கும்” என்று சொல்ல,

“சரிபா. போயிட்டு வாங்க. நான் சமைச்சு வைக்குறேன் சாப்ட்டு போங்க" என்று ஜானகி சொல்ல இருவரும் “சரி” என்று புறப்பட்டனர்.

இருவரும் பீச்சுக்கு சென்றனர். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு வழியாக அரவிந்திடம் தனக்கு வரும் போன் அழைப்பை பற்றி சொல்லி
“வீட்டில சொல்ல பயமா இருக்குங்க” என்று அழுதாள்.

“இதை நீ எனக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் தானே”
சரி “நம்பர்-அ மாத்திடு” என்று சொன்னான் அரவிந்த்.

“நம்பர் மாத்தியும் பிரயோஜனம் இல்லைங்க. யார் யாரோ என் அலுவலகத்துக்கு வராங்க. குடிச்சிட்டு வந்து வெளிய நிக்குறாங்க. என்னை சுற்றி என்ன நடக்குது என்று தெரியல. அது தான் ஆபீஸ் கூட லீவ் போட்டேன்” என்று அழுதாள் சுஜா.

சற்று நேரம் யோசித்தவன்.

“சரி இரு நண்பன் போலீசா இருக்கான் அவனிடம் சொல்லலாம்” என்று சொல்லி அவனுக்கு போன் செய்ய இருவரையும் நேரடியாக வரசொன்னார் அவன் நண்பன்.

“சரி நாளைக்கு போகலாம் நேராடியா. நீ ரெடியா இரு. காலைல வந்து கூட்டிட்டு போறேன். வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம். இதுக்கு போயிட்டு பயந்து காய்ச்சல் வர வச்சு இருக்க” என்று அரவிந்த் சொல்ல.
இதனை இவ்வளவு ஈசியாக எடுத்த அரவிந்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்து, பெரிய பாரம் தீர்ந்ததை போல உணர்ந்தவளாய் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்..

அரவிந்தும் சுஜாவும் மறுநாள் அவன் நண்பன போலீஸ் அதிகாரி ரகுவை சந்திக்க சென்றனர். அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்ல..
“சுஜா முதல உங்க போன் ஆன் பண்ணுங்க. போன் வந்தா எடுத்து நான் சொல்ற படி பேசுங்கள்” என்று ரகு சொல்ல..

சுஜாவும் “சரி” என்று சொல்லி போனை ஆன் செய்ய ஒரு அழைப்பு வர எடுத்து பேசினாள்.. அவர்கள் எதிர்பார்த்த அதே அழைப்புதான்.

எதிர் முனையில் இருந்த ஆண்,
“சுஜா உங்களை பார்க்கணும் எங்க வரணும் சொல்லுங்க என்று சொல்ல”

சுஜாவும் “ம்ம் சரி, 6 மணிக்கு அடையார் வாங்க. மற்ற விஷயத்தை நேரில் பேசிக்கலாம்” என்று சொல்ல.

“சரி” என்று அவனும் போனை வைத்துவிட்டான்.

“அரவிந்த் எனக்கு பயமா இருக்கு” என்று சுஜா அழ ஆரம்பிக்க

“பயப்படாதீங்கள் நாங்க இருக்கோம் தானே” என்று போலீஸ் அதிகாரி ரகு சொல்ல சற்று ஆறுதலாய் இருந்தாள்.

6 மணிக்கு சொன்னது போலவே மூவரும் சென்றனர்.
அவர்கள் சொன்ன இடத்திலேயே ஒரு பையன் காத்து கொண்டு இருந்தான். அவன் தானா என்று உறுதி படுத்த சுஜாதாவை போன் செய்ய சொன்னார் ரகு.

சுஜா போன் செய்ததும். அவன் போன் எடுக்க அவள் கட் செய்து விட்டாள். தொடர்ந்து அவன் சுஜாக்கு அழைத்துக் கொண்டு இருப்பதை வைத்து உறுதியாக்கி அவனை போலீஸ் அடித்து பிடித்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் அவனை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தனர். அவன் சொன்னதைக் கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.

ஒரு தவறான இணையத்தில் சுஜாவின் புகைப்படமும், அவளோட போன் நம்பர், விலாசம் எல்லாம் தந்து இருப்பதாய் சொன்னான்.
முதலில் நம்ப மறுத்த பின், அவன் சொன்னத் தளத்திற்கு சென்று பார்த்தனர்.

அது ஒரு தவறான இணையத்தளம். அங்கு சிலர் தங்களுடைய முகவர்கள் மூலம் இத்தகைய விளம்பரங்களை செய்து வாடிக்கையாளர்களை பிடிக்கும் தளம் என்று அவன் சொல்ல அதிர்ந்து போனார்கள். அதில் சுஜாவின் படமும் இருப்பது கண்டு சுஜா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

அடுத்த கட்ட விசாரணையாக சைபர் கிரைம் மூலம் முழு விவரம் சேகரிக்க சொல்லி ரகு கூறினார். முதலில் இந்த விளம்பரம் எந்த இணைய முகவரியில் இருந்து தரப்பட்டுள்ளது என்று அறிய, அந்த இணையத்தின் தலைமையிடம் விசாரணைக்காக தேவைப்படுவதாக சொல்லி அணைத்து விவரங்களையும் சேகரித்தனர்.

அது ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து தரப்பட்டுள்ளது என்பதையும், இன்டர்நெட் மையத்தின் முழு விலாசத்தையும் பெற்று நேரில் சென்றனர். திருவான்மியூரில் இருந்த இன்டர்நெட் மையம் அது. ஒரு வயதானவர் தான் அதன் உரிமையாளர். அவராக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்க அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதை உணர்ந்து, அங்கு உள்ள கேமராவில் குறிப்பிட்ட தேதியில் யார் யார் வந்து சென்றார்கள் என்பதையும், சுஜாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருகின்றார்களா என்று பார்க்க சொன்னார்கள்.

ஒவ்வொருத்தராய் பார்த்துகொண்டு இருந்த சுஜாவிற்கு திடீரென்று ஒருவன் முகம் தோன்ற அதிர்ச்சியானாள். ஒரு வேலை இவனாக இருக்குமோ என்று எண்ணி

“இவனை எனக்குத் தெரியும்” என்று அரவிந்த் இடம் சொல்ல...
அவனைப் பற்றி அரவிந்திடம் சொல்லத் தொடங்கினாள்.

ரமேஷ்.

சுஜாவிற்கு ஒரு நட்பு இணையதளத்தில் கிடைத்த நண்பர்.
சாதரணமாக பேசத் தொடங்கிய இவர்கள் நட்பு பிறகு நாளுக்கு நாள் நெருங்கிய நட்பாக மாறத் தொடங்கியது.

ஒரு நாள் ரமேஷ், சுஜாவிடம்
“சுஜா எத்தனை நாள் உன்னை பார்க்காமலே பேசுவது. உன்னிடம் கேம் இல்லையா? இல்லனா உன் போட்டோவாவது அனுப்பு” என்று சொல்லி கேட்க..

“இதுல என்ன இருக்கு ரமேஷ். இரு என் போட்டோ உனக்கு அனுப்புறேன். அப்புறம் நான் வேலைக்கு போக போறேன். அதுனால இனி சாட் அடிக்கடி வர முடியாது” என்றாள்.

“அப்போ எப்படி உன்னோட பேசுவது?? எனக்கு இருக்க ஒரே தோழி நீ தான்” என்று ரமேஷ் சொல்ல..

“சரி இந்தா என் போன் நம்பர் ஏதாவது என்றா போன் பண்ணு என்று சுஜா கொடுத்தாள்.

பிறகு இவர்கள் நட்பு போன்-ல் தொடர அரவிந்த பெண் பார்க்க வரும்
ஒரு வாரத்திற்கு முன் திடீரென்று ரமேஷ் சுஜாவிற்கு போன் செய்து,

“சுஜா நான் உன்னை லவ் பண்றேன்..உன்னை நேரில் பார்க்கணும்” என்றான்.

“டேய் லூசு மாதிரி பேசாத. நீ என் நண்பன் அவ்ளோதான் வேற எண்ணத்தோட இனி போன் பண்ணாத, அதுவும் இல்லாம அடுத்தவாரம் என்னை பொண்ணு பார்க்க வராங்க. நீ குழப்பம் பண்ணாத” என்று சுஜா சொல்ல.

“சுஜா என்னால் உன்னை மறக்க முடியாது ப்ளீஸ்” என்று ரமேஷ் கெஞ்ச தொடங்கினான்.

சுஜாவிற்கு கோபம் வர

“நீ என்ன பண்ற?? ஒரு வேலை கூட இல்லை. முதல்ல ஒரு நல்ல வேலைக்கு போ. ஒழுங்க சம்பாதிக்கிற வழிய பாரு. தேவை இல்லாமல் காதல் கீதல்னு லைப் வேஸ்ட் பண்ணாத” என்று கோபமாகத் திட்ட,

“சரி சுஜா நான் எல்லாத்தையும் மறந்துடுறேன். ஆனால் நீ இனி என்னை மறக்கவே மாட்ட” என்று சொல்லி வைத்து விட்டான்..
சுஜா அவனை பெரிய விஷயமாக நினைக்காமல் அப்டியே விட்டு விட்டாள்.

அவன் போன் நம்பர் வைத்து அவன் முகவரி கண்டுபிடித்து விசாரிக்க எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள அதிர்ச்சி ஆனாள்.

அரவிந்திடம், “இப்படி எல்லாம் பண்ணுவாங்க என்று எனக்கு நிஜமா தெரியாது. நான் எல்லோர் கூடவும் சகஜமா பேசுவேன் அப்டித்தான் இவனிடமும் பழகினேன்” என்று சுஜா சொல்ல

அரவிந்த ஒன்றுமே சொல்லாமல் மெளனமாக இருந்தான்.

சைபர் கிரைம் மூலம் அந்த தளத்தில் இருந்த சுஜாவின் புகைப்படம், மற்றும் அவள் விவரங்கள் அனைத்தையும் அழித்து விட செய்தான்..
ரமேஷையும் கைது செய்தனர் போலீஸ்.

எல்லாம் முடிந்த திருப்தி இருந்தாலும் அரவிந்தின் மௌனம் சுஜாவை ஏதோ செய்ய.

“அரவிந்த், என்னை தப்பா நினைக்குறீங்களா. நிஜமா நான் அவனை நேரில் எல்லாம் சந்திக்கவே இல்லை, ஜஸ்ட் சாட்டிங் ப்ரெண்டு தான்” என்றாள்.

“சுஜா முதல்ல நான் சொல்றத கவனமா கேளு. இப்போ எல்லாம் டெக்னாலஜி எவ்வளவோ இம்ப்ரூவ் ஆகிடிச்சி. நாம செய்ற சில செயல்கள் நமக்கே பாதகமாகி விடும். யாராவது போட்டோ கேட்டா கொடுப்பாங்களா?? நம்மளோட Profile-ல கூட இந்தா மாதிரி போட்டோ போட்டு வைப்பது எல்லாம் தப்பு. என்ன தான் மார்டன்-கேர்ள்-ஆ இருந்தாலும் பாரு ஒரு சின்ன விஷயம் எந்த அளவுக்கு நம்மை பாதிக்குது. நான் உன்னை நம்புறேன். நீ உங்க வீட்டுக்குக் கூட சொல்லாமல் என்னிடம் தான் இதை சொன்ன. அப்பவே எனக்கு தெரியும் உன் மேல எந்த தவறும் இல்லை என்று. அதனால் இனி இதைப் பற்றி நினைக்கவே நினைக்காத சரியா” என்று சொல்லிவிட்டு
“சரி போகலாம். உங்க வீட்டில தேடப் போறாங்க” என்று சொன்னான் அரவிந்த்.

“ம்ம் சரி போகலாம்” என்று சுஜா சொல்லிவிட்டு. “முதலில் Profile-ல் உள்ள எல்லா போட்டோக்களை நீக்கவேண்டும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த
சந்தோஷத்தோடு தன் திருமண நாளை நோக்கி காத்துகொண்டு இருந்தாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னுவதெல்லாம் பொன்னல்ல
« Reply #1 on: August 05, 2011, 01:51:24 AM »
ithu kathai alla niyam... kavanma erukanum ellarume... ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மின்னுவதெல்லாம் பொன்னல்ல
« Reply #2 on: August 08, 2011, 02:54:01 PM »
ithu oru nija sambavam:P


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: மின்னுவதெல்லாம் பொன்னல்ல
« Reply #3 on: October 21, 2011, 12:29:10 PM »
kathaiyo.  nijamo
nalarukku
nala advise paniruka

Word of caution porapa intha story link ah yum kuda podungapa:D