Author Topic: கல்லறையில் முடிந்த காதல் காவியங்கள்  (Read 1110 times)

Offline thamilan

காதல் இரண்டு இதயங்களை இணைத்து வைக்கும் ஒரு உன்னதமான பசை. அன்பெனும் வீணையிலே அன்றாடம் மீட்கப்படும் ஒரு அமரத்துவம் வாய்ந்த இசை.இந்த மூன்றெழுத்து  தேவ மயக்கத்தில் மூழ்காத மனிதர்களே இல்லை. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளையும் கடந்தது காதல்.
' கவிதையும், கானமும், சிற்பமுதற்கலைகளும் காதலருக்கு மட்டுமே கைவரப் பெற்றவை ' என்று உரத்தக் குரலில் உணர்த்தினான் பாரதி. காதல் தான் வாழ்க்கை நேசிப்புக்கான வழிக்கதவுகளை திறந்து வைக்கும் மூலமந்திரம். எந்த ஒரு மனிதனும் வாழ்வில் ஒரு முறையாவது காதலின் வசப்படாமல் கண்ணை மூடுவது இல்லை.
காதல் ஒரே நேரத்தில் சுகத்தையும், சோகத்தையும் கலந்து தரும் ரசவாதம்.
ஆதாம், ஏவாள் காலம் தொட்டு இன்று வரை காதல் அனுபவம் ஒரே மாதிரி தான். வரலாறு வடித்துக் காட்டும் ஆண்டனி - கிளியோபாட்ராவில் இருந்து இலக்கியங்களில் இறவா இடம் பிடித்த ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு, சலீம் - அனார்கலி, அம்பிகாபதி -அமராவதி என உண்மையான காதல் அனைத்தும் துயரத்தில் தான் முடிந்திருக்கின்றன.
 காதலுக்குறிய ஆற்றல் அளப்பரியது, அது கடந்த காலங்களில் மன்னர்களின் தலையில் இருந்து மகுடங்களை இறக்கி இருக்கிறது. ஆதிக்கவாசிகளின் அடிமனதில் புகுந்து ஆயுள் வரை அலைக்கழித்திருக்கிறது, இரக்கமற்ற அரக்கர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது.

மார்க் ஆண்டனி.

 ரோமப் பேரரசின் முப்பெரும் ஆட்சியாளர்களில் ஒருவன். ஜூலியஸ் சீசரின் வலக்கரமாக விளங்கியவன்.தரைப்படை போரில் தன்னிகரற்றவன். முதற் பார்வையிலே கருப்பழகி கிளியோபாட்ராவின் காதல் வலையில் வீழ்ந்தவன்.  ' டைபர் நதியில் ரோம் கரைந்து போகட்டும். அகன்று விரிந்த பேரரசு உடைந்து நொறுங்கட்டும். கிளியோ பாட்ராவின் காதலே என் வாழ்வில் உன்னதம்' என்று பிரகடனம் செய்தவன். 'நீ வசை பாடினால் அது ஓர் அழகு. வாய் மலர்ந்து சிரித்ததால் அதும் அழகு. கண்கள் அழுதால் கூட அதும் ஒரு அழகு' என்று காதல் வயப்பட்டு வர்ணித்தவன்..
அரசியல்  நிர்பந்தங்களால் அவளைப் பிரிந்து அவன் ரோம் செல்ல நேர்ந்தது. அந்தப் பிரிவை தாங்க முடியாமல் தவித்த நைல்நதி நங்கை கடிதத்தில் காதல் காவியம் வரைந்து அன்றாடம் அவனுக்கு அனுப்பி வைத்தாள். ரோமில் எழுந்த எதிப்பை தவிர்க்க, ஆக்டோவியஸ் சீசரின் தங்கை ஆக்டோவியாவை ஆண்டனி மணமுடிக்கும் சூழ்நிலை உருவானது. ஆனாலும் கைப்பிடிதவளிடம் அன்பு செலுத்த இயலாமல், மாறாத காதல் மயக்கத்தால் மீண்டும் அலெக்சாண்ட்ரியா வந்து கிளியோபாட்ராவின் காலடியில் விழுந்தான் மகா வீரன் ஆண்டனி.
தங்கையை தவிக்க விட்டு பேரரசின் பெருமையை சிதைத்து ஒரு பெண்ணின் அழகில் அறிவிழந்து கிடந்தவனுக்கு எதிராக ஆக்டோவியஸ் படையெடுத்தான்.
ஆக்டியம் என்ற இடத்தில் கடல் போர் நடந்ததது. போரை பார்வையிட கிளியோபாட்ரா தனிக் கப்பலில் சென்றாள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்ததைக் கண்டு அஞ்சி அவள்  தன் கப்பலை மீண்டும் அலெக்சான்ரியாவுகே திருப்பினாள். களத்தில் போர் புரிந்த போதும் காதலி மேல் கண்வைத்திருந்த ஆண்டனி, பாதிப் போரில் படையை கை விட்டு, அவளை பின்தொடர்ந்தான். முத்தத்தின் வெதுவெதுப்பில் ஒரு மாவீரனின் சித்தம் சிதைந்ததில் வீரர்கள் மனம் நொந்தனர். வெற்றி மாலை ஆக்டோவியசின் தோள்ளில் விழுந்தது.
ஏற்கனவே ஜூலியஸ் சீசர், பாம்பே இருவரையும் காதல் வலை விரித்து சீரழித்தவள் ஆயிற்றே இந்த கிளியோபாட்ரா, தோல்வியுற்ற தன்னையும்     வெறுத்து  விடுவாளோ என்று எண்ணிய அன்டனி, அவள் காதலை சந்தேகித்து கடும் மொழியில் அவளை வசைபாடினான்.
அவன் சினத்தை தவிர்க்க நினைத்த அவள், 'ஆன்டனி' என்ற வார்த்தையை கடைசியாக உச்சரித்தபடி கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டதாக அவனிடம் போய் சொல்லும்படி மார்ட்டியன் என்ற ஒரு அலியை அனுப்பி வைத்தாள்.
காதலி இல்லாத உலகில் ஒரு நொடியும் வாழ விரும்பாத ஆன்டனி வாளை நிலத்தில் நட்டு, அதன்மேல் விழுந்து குற்றுயிராய் கிடக்கும் நிலையில், தன் காதல் தேவதை உயிரோடு இருப்பதை அறிந்தான். அவளிடம் தன்னை கொண்டு சேர்க்கும்படி காவலனிடம் வேண்டினான்
கல்லறை மாளிகையில் இருந்த கிளியோபாத்ராவிடம் ஆன்டனி கொண்டு சேர்க்கப்பட்டான்.
' அன்பே! உன் கடைசி முத்தத்துக்காகவே இன்னும் என் உயிர் காத்திருக்கிறது' என்று சொல்லிக் கண் மூடினான்.
' வானத்தில் வட்டமிடும் நிலவுக்கு கீழுள்ள மண்ணுலகில் இனி சிறப்புக்குரியவை எதுவும்மில்லை ' என்று சொல்லி வாய் விட்டு அழுதாள் அந்தப் பேரழகி. ஏற்கனவே திட்டமிட்டபடி கொண்டு வரப்பட்ட வீரியன் பாம்பை மார்பில் ஏந்தினாள் ' குழந்தை எனது மார்பில்  தவழ்ந்து பால் அருந்துவது, என்னை கிறங்கச் செய்கிறது ' என்று சொன்னபடி இறுதியாக உறங்கிப் போனாள்.
மகுடம் தாங்கிய மாவீரர்களும், பேரழகு பேரரசிகளும் காதல் வலையில் சிக்கியதால் கல்லறைக் காவியங்களாகவே கடைசியில் முடிந்தனர்.


நெப்போலியன் போனபார்ட்

ஒரு சாதாரண படைவீரனாய் இருந்து, தன பேராற்றலால் படைத் தலைவனாக உயர்ந்து, பிரான்ச் புரட்சின் விளைவுகளைத் தனக்கு சாதகமாக வளைத்து பேரரசனாக முடி  சூடிக் கொண்டவன். பாரிசில் கலவரங்களைத் தடுக்க மக்களிடமிருந்து ஆயுதங்ககளை பறிக்க ஆணையிட்டான்.
ஈஜிள் என்ற 12 வயது இளைஞன் ஒரு நாள் நெப்போலியனிடம் வந்து நின்றான். கிலட்டின் தலைவெட்டி கருவிக்கு பலியான தனது தந்தையின் வாளை அவர் நினைவாக வைத்திருக்க தன்னிடம் தரும்படி வேண்டினான். மனமிரங்கிய நெப்போலியன், அந்த வாளை வரவழைத்து அவனிடம் தந்து வாழ்த்தி அனுப்பினான். நெப்போலியனின் பெருந்த்தன்மையை பாராட்ட ஈஜிலின் தாய் ஜோசபைன் நேரில் வந்தாள்.முதல் சந்திப்பிலேயே இருவர விழிகளும் கலந்து இதயங்கள் சங்கமாகின.

ஜோசபைன் ஒரு விதவை. இரண்டு பிள்ளைகளுக்கு தாய். நெப்போலியனை விட வயதில் மூத்தவள். ஆனால் இளமை கொஞ்சமும் கலையாத பேரழகுப் பெட்டகம். கால நடையில் காதல் வளர்ந்து பதிவு திருமணத்தில் முடிந்ததது. குடியரசுக்கு விடைகொடுத்து விட்டு பிரெஞ்சு பேரரசின் முடிசூடிக்கொண்ட நெப்போலியன், ஜோசபைனை பேரரசியாக அமரச்செய்து அழகு பார்த்தான். காதல் வசந்தத்தில் 15 வருடங்கள் கடந்தன. தனக்குப் பின்னால் ஆட்சியில் அமர  நெப்போலியனுக்கு ஒரு வாரிசை பெற்றுத்தர ஜோசபின்னால் முடியவில்லை. வேறுவழி இன்றி நெப்போலியன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, ஆஸ்திரிய இளவரசி மரிய லூயிசாவை மணம் முடித்தான். நெப்போலியன் நலனுக்காக ஜோசபைனும் விலகிக் கொண்டாள். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்கமுடியாமல் தவித்தனர். 
 ரஷ்யப் படையெடுப்புக்குப் பின்னர் நெப்போலியனின் வீழ்ச்சிப் படலம் தொடங்கியது. தோல்வி தடுக்க முடியாது என்று தெரிந்திருந்தும் போருக்குப் புறப்பட்டவன் ஜோசபைனை சந்தித்தான். 'என்றும் என் அன்பிட்குரியவளே! நல் வாய்ப்புத் தேவதைகளால் இதுவரை ஆசிர்வதிக்கப்பட்ட நான், முதன்முதலாய் ஆபத்து வளையத்துக்குள் சிக்கிக் கொண்டேன். இந்த நேரத்தில் உனைத்தவிர உலகில் என் நம்பிக்கைக்குரியவர்கள் வேறு எவரும் இல்லை.....' என்று கட்டித் தழுவி கண்ணீர் விட்டான்.
எல்பாத் தீவில் அவன் சிறையில் அடைக்கப் படும் முன்பு, 'ஜோசபைன்.....இனி வாளுக்கு விடை கொடுத்து விட்டு பேனா பிடித்து என் வரலாற்றை வரையப் போகிறேன். என் நெஞ்சில் என்றும் நீங்காமல் நின்று ஒளிவிடும் எழில் ரசியே! உன்னை எப்போதும் மறவாத என்னை நீயும் மறக்காமல் இருக்க வேண்டும்.' என்று உருக்கமாக கடிதம் எழுதி அனுப்பினான்.
நெப்போலியன் சாவின் மடியில் சேர்ந்த போது வாய் திறந்து சொன்ன கடைசி வார்த்தை 'ஜோசபைன்!' உலகத்தை ஆதிக்கம் செய்தவன் உள்ளத்தை காலம் முழுவதும் ஆதிக்கம் செய்த அதிசயம் காதல்.


அடால்ப் ஹிட்லர்

மூண்டரை கோடி மக்களுக்கு மரணம் தந்தவன். 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தவன். படுகொலை செய்யப்பட்டவர்களின் தங்கப் பற்ற்களையும் திருமண மோதிரங்களையும் கொள்ளையடித்து, அவர்களுடைய சடலங்களை சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தியவன்.
இந்த இறுகிப்போன இதயத்திலும் காதல் ஈரம் கசிந்தது. தனது 40வது வயதில் 17 வயது ஈவா பிரானை ஹிட்லர் சந்தித்தான். அதுவரை யாரையும் மணமுடிக்காதவன், வாழ்நாள் முழுவதும் ஈவாவிடம் மட்டுமே காதல் கொண்டான். ஜெர்மனியின் சான்சலராக பதவியேற்ற பின்பும் அவளை அவன் கை விடவில்லை. ஆண்டுதோறும் அவள் பிறந்தநாளில் வைர நகைகளை பரிசளித்து வாழ்த்தினான். ஹிட்லருக்கு வயதான போது மிகவும் இளமையாக இருந்தாள் ஈவா. அவளை வேறு யாரையாவது மணமுடித்து வாழும படி வற்புறுத்தினான் ஹிட்லர். 'என்னை நீங்கள் மணமுடிக்காமல் போனாலும், உயிர் உள்ளவரை நீங்களே எனது கணவர்' என்றாள் ஈவா பிரான்.
இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவி, ரஷ்யப் படைகள் கைது செய்வதற்கு பெர்லினில் நுழைந்து விட்ட நிலையில், சுரங்க மாளிகையில் ரகசிய அறையில் தங்கி இருந்த ஹிட்லர், தன ஆசை காதலி ஈவாவிடம் தன்னை விட்டு விலகி வெளியேறும்படி வேண்டினான்
'உங்களை விட என் உயிர் பெரிதில்லை.இப்போதாவது என்னை மணந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி என்ற உரிமையோடு நானும் மகிழ்சியுடன் சாவேன்' என்ற ஈவாவில் காதலில் ஹிட்லர் மனம் நெகிழ்ந்தான். இருவருக்கும் மரணப் பொழுதில் மணவிழா நடந்தது. அதன் பின் ஹிட்லர் தற்கொலை செய்து மேசை மேல் சாய்ந்து சரிந்தான். அவன் காலடியில் ஈவா பிரான் சடலம் தலைகுப்புற விழுந்து கிடந்தது.கல்லுக்குள்ளும் ஈரம் கசியும் என்பதற்கு ஹிட்லரின் காதலே சாட்சி


ஆபிரகாம் லிங்கன்


'அமெரிக்காவிலேயே அசிங்கமான முகம் என்னுடையது தான்' என்றவர் ஆபிரகாம் லிங்கன். ரட்லஜ் என்ற அழகியிடம் காதல் பிறந்தது. ஆனால், அசிங்கமான தன்னை அவள் காதலிக்க வாய்ப்பில்லை என்று எண்ணி, உள்ளுக்குள்ளேயே தன காதலை வளர்த்து உருக்குலைந்தார். ஒரு நாள் அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்து முடிந்தது. லிங்கனுக்கு உலகமே இருண்டு விட்டது.
அந்தப் பெண்ணை மணமுடித்தவன் ஊர் சென்று திரும்புவதாக சொல்லிவிட்டுப் போனான். போனவன் திரும்ம்பவே இல்லை. ரட்லஜ்ஜின் பெற்றோரிடம் அவள் மீதான தன் காதலை வெளிப்படுத்தினார் லிங்கன். பெற்றோர் மகிழ்ந்தனர். பெண்ணும் இசைந்தாள். மணநாள் நிச்சயிக்கப் பட்டது. லிங்கனின் துரதிஷ்டம், அவள் திடிரென நோயில் விழுந்து இறந்து போனாள். இதயம் ரணமான லிங்கன், 'பொழியும் மழையும், விழும் பனியும் என் காதலியின் கல்லறை மேல் விழுகின்றனவே' என்று கதறி அழுதார்.
காலம் கடந்தது. காயம் ஆறியது. அடுத்த காதலில் அடியெடுத்து வைத்தார். அவள் பெயர் மேரி ஓவன். விதவை. லிங்கனின் காதலை மனம் நோக மறுதலித்தாள் அவள்.
பொது வாழ்வில் தோல்விகளை படிக்கற்கள் ஆக்கி, வெற்றி மாளிகையில் வாசம் செய்த லிங்கன், முன்றாவது முறை தன் நண்பனின் மைத்துனி மேரி டாட் மீது காதல் கொண்டு, அவளையே மனம் முடித்து இறுதிவரை இன்பமாக இல்லறம் நடத்தினார். ஆபிரகாம் லிங்கனாக இருந்தாலும் முன்றாம் முறை காதல் வந்தால் அதற்குப் பெயர் காதலே இல்லை. 
நாம் வாழும் சமூகத்தில் காதல் என்ற போர்வையில் காமம் தான் களிநடனம் புரிகிறது. எங்கோ...... அரிதாய் அபூர்வமாய்..... குறிஞ்சிப் பூவாய் சில காதலர்கள்.
காதலுக்கு உடம்பு தேவை இல்லை என்றில்லை. ஆனால், காதல் வெறும் காமம் இல்லை. காமத்துக்கு உடம்பு ஒன்றே குறி. காதல், உடம்பின் எலும்பு சதைகளை ஊடுருவி  உள்ளத்தின் உணர்வுகளை அலங்கரிக்கும் ஒரு உன்னதமான உணர்வு. காமம் உடம்பில் தொடங்கி உடம்பில் முடிந்து போகும். காதலோ உதிரத்தின் அணுக்களில் உள்ளத்தின் உணர்வுகளுடன் கலந்து போகும்.
இரண்டு  இதயங்களும் அன்பில் தேய்ந்து, அன்பில் நனைந்து, அன்பிலே தவழ்ந்து, அன்பிலே ஐக்கியமாவது தான் காதலின் இலக்கணம்.
வீணையில் விதம் விதமாக ராகங்கள் வாசிக்கலாம். ஆனால், கைப்பிடிதவனுக்காக வாசிக்கும் காதல் ராகம், கடைசி மூச்சிருக்கும் வரை சுருதியும் லயமும் கலையாமல் சுத்தமாக ஒலிக்க வேண்டும்.சாதிகளற்ற சமுதாயம் ஒரு நாள், காதலினால் மட்டுமே சாத்தியம் ஆகும். ஆதலால் மானிடரே காதல் செய்வீர்!



« Last Edit: February 16, 2015, 08:23:07 PM by thamilan »

Offline Cute VigNesH

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Am back to here Ftc friends
Awwww..... Really unbelievable (Hitlar Love). Great