கவிஞர்கள் பலரின் கவிதைகளை
செவியுறும் பொழுது
எழாத கவி ஆர்வம்.
பூவுலகை வலம் வந்து
இயற்கையை ரசித்த பொழுது
வராத கற்பனை..
என்னவளாய் உனை நினைக்கையில்
உன் எண்ணங்களின் தழுவலில்
கண்கள் சொக்கிப்போய்,
நம் வாழ்க்கையை முன்னோக்கி
காணும் நோக்கோடு
கனவுலகில் தலை சாய்க்கிறேன்.
என் விழியில் நீ விழுந்த நாள் முதல்
என் கனவுகள் நீயானதன் காரணம்
காதலன்றி வேறென்ன?
உன் காதலை நான் பெற
என் ஒவ்வொரு நொடியையும்
உனக்காக மாற்றினேன்.
என்னருகில் நீ இருக்கையில்
ஒவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வு வசந்தமாய் உணர்கிறது.
உன் கரம் பிடித்த நாள் முதல்
எனக்கு நீ உனக்கு நான் என்று
மனதால் பிரியாது,
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து
நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை
கனவு முழுதும் தித்திக்கிறது.
நமக்குள் பிரிவென்பதை
மரணம் கூட தரக்கூடாதென
உள்ளம் வேண்டுகிறது.
இருவரில் யார் முன் இறப்பினும்
மௌனங்களாய் வார்த்தைகளற்று
நீளும் மனவலியிலும்
வருத்தங்கள் தோய்ந்த
ஆறாத ரணத்திலும்,
தன் இணையது பிரிந்துவிட்டால்
ஏதுமருந்தாமல் தனித்திருக்கும்
அன்றில்பறவையின் கையறு நிலையை
மற்றவர் அனுபவிக்க நேரிடும்.
இவ்வலியை உணர்கையில்,
இருவரும் ஒருசேர மரணித்து
பிரியாத நிலையை மறுவுலகிலும்
தொடர வேண்டும் என்ற எண்ணம் மேலிட,
சிந்தனை தடைபட்டு
ஆரம்ப நிலைக்கே மீள்கிறேன்.
எதிர்காலத்திலாவது கவிதை எழுத வேண்டும்
என்ற எண்ணத்தோடு!
இப்படிக்கு,
இறப்பிலும் உன்னை பிரியாத வரம் வேண்டி
நிஜத்தினில் உன்னுடன் வாழ நித்தம்
உனக்காய் காத்திருக்கும் இதயம்.