Author Topic: வார்த்தைகளில் வரும் வசந்தம்  (Read 612 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வார்த்தைகளில் வரும் வசந்தம் !!! - அமுத மொழிகள்


ரோஜா...

இரண்டு அசைகளைக் கொண்ட ஓர் ஒற்றைச் சொல்.

இந்த ஒற்றைச் சொல்லை சொல்லும் போதே மனசுக்குள் மலர்கிறது, மலர்.

அதன் அழகிய சிவந்த நிறம், விரிந்த இதழ்கள்... நறு

மணம்... படக் காட்சியாய் மனத்திரையில் விரிகின்றது.

வார்த்தையும், மனக்காட்சியும் ஒன்று சேரும்போது

நினைப்பது விரைவில் நடக்கும் என்பது உளவியலாளரின் கருத்து.

ஒவ்வொரு சொல்லும் ஏதேனும் பொருளை உணர்த்தும். சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது. அதனால் `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று நன்னூல் இலக்கணம் கூறுகின்றது.

`சொல்' என்பதற்கு வார்த்தை, பதம், கிளவி போன்ற சொற்களும் உண்டு.

சொற்கள் மிகப்பெரிய தாக்கத்தையும், வலிமையையும் தரக்கூடியவை. ஒவ்வொரு சொல்லும் ஒரு சூரியனைப் போன்றது. அதற்கு உதயம் உண்டே தவிர அஸ்தமனம் இல்லை.

எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சொல்லாக மாறுவதைப் போல மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து அச்சுக் கோர்த்தது போல் நிற்கும்போதுதான் வாழ்விற்கான ஒரு அர்த்தம் பிறக்கின்றது.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியை அதனால் உண்டாக்க முடியும். வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை இணக்கமாக வைப்பது வார்த்தைகளே. வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தி விட்டால், வாழ்வில் வெற்றிகரமான இணக்கம் நிலவும் என்பதில் சந்தேகமில்லை என்பார் சிந்தனையாளர் பெர்கென் இவான்ஸ். இவரது இந்த சிந்தனை வார்த்தைகள் வலிமையைத் தருகின்றது.

ஒரு சம்பவம்...

`மாட்டுக்கு பல்லைப் பிடிச்சுப் பார்க்கணும், மனிதனுக்கு சொல்லைப் பிடிச்சுப் பார்க்கணும்' என்பது பழமொழி.

பழமொழிகள், அனுபவ மொழிகள். ஆம், ஒருவர் சொல்லும் சொற்களின் மூலம் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அடையாளப்படுத்த முடியும்.

தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களில் புகழ்பெற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா. இவர் ஒரு வழக்கில் உயர்நீதி மன்றக் கூண்டில் ஏறினார். கிட்டப்பா இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரை விசாரணை செய்த நார்ட்டின் துரை மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞர். கூண்டிலிருந்த கிட்டப்பாவை விசாரணை செய்தார்.உங்கள் பெயர் என்ன?

கிட்டப்பா..

உங்கள் தொழில்?

நான் ஒரு நடிகன்.

நடிகன் என்றால் `கூத்தாடி' தானே?

ஆமாம்!

அது ஒரு மட்டமான தொழில் தானே?

ஆமாம்! ஆனால் என் அப்பாவின் தொழிலை விட இது மேலானது.

உங்கள் அப்பாவின் தொழில் என்ன?

அவர் உங்களைப் போல் ஒரு வக்கீல்...

வழக்கு மன்றமே சிரிப்பலைகளால் கலகலத்தது. மெத்தப்படித்த அவர், கிட்டப்பாவை அவமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார். கிட்டப்பாவின் வெற்றிக்குக் காரணம், அவரது துணிவு, மற்றொன்று சொற்களின் வழி சமாளித்தது.

இவரைப் போல் மறைந்த நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சினிமாவில் கூட நான் யாரையும் `நீ நாசமாய்ப் போ' என்று சொன்னதில்லை.

எப்படிப்பட்ட உயர்ந்த குணம். இதுதான் நயத்தக்க நாகரீகம் என்பது.

புகழ் பெற்ற பேச்சாளர் சர்ச்சில். அவர் குறிப்பிட்டார், `நான் பேச்சாற்றலில் வெற்றிபெறக் காரணம் எவரையும் அவமதித்து பேசமாட்டேன்.'

ஆம்! வார்த்தைகள் பூப்போன்றவை. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் மதிப்பை பெற முடியும். உங்கள் உடை, தோற்றம், இவற்றை விடவும், உங்கள் வார்த்தை தான் உங்களது மதிப்பை உயர்த்தும். நம்பிக்கை வாய்ந்த சொற்களால் மனதை நிரப்புவதன் மூலம் நம்பிக்கை ஏற்படுகிறது. துணிவுமிக்க சொற்

களால் துணிவு ஏற்படுகிறது. இரக்கம், கருணை போன்ற சொற்களால் பாசமும் பரிவும் உண்டாகிறது. அடுத்தவர்களின் இதயத்தை வெல்ல வேண்டுமா...? அதற்கான வழி, பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வரவேண்டும்.


அன்பு நிறைந்த இனிய சொல், இரும்புக் கதவையும் திறக்கும் என்பார்கள்.

யாராவது உங்கள் குறைகளை அல்லது தவறை சுட்டிக் காட்டினால், அடடா! நான் இதுவரை கவனிக்கவே இல்லையே. நல்லவேளை சொன்னீர்கள். உடனே அதை சரிசெய்து விடுகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி, என்று சொல்லிப் பாருங்கள். குற்றம் சாட்டியவர் சூடாறிப் போய் அதனாலென்ன பரவாயில்லை என்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான் வார்த்தைகளில் வரும் வசந்தம்.

இப்போது `ஒரு சொல் நகர்த்திய கல்லின் கதை...'

புகழ் பெற்ற குரு. அவரிடம் கல்வி கற்க வந்தான், ஒரு மாணவன். அவனது பேச்சில் சுத்தமில்லாததை உணர்ந்தார். அவனைச் சேர்க்க வேண்டாம் என நினைத்தார்.

என்னப்பனே! நீ நல்ல அறிவாளி. நான் உனக்குச் சொல்லித் தருவதில் பாதி உனக்குத் தெரிந்திருக்கிறது. அதோ பார்! இந்தப் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய கல் இருக்கிறது. அதனிடம் போய், `கல்லே நீ நகர்ந்து விடு' என்று சொல். நீ சொன்னபடி எப்போது கல் நகர்கிறதோ அப்போது என்னை வந்து பார்' என்றார்.

சரி ஐயா, `சொல்லால் இந்தக் கல்லை நகர்த்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?'

எனக்குத் தெரியாது, அது உனது சொல்லின் தன்மையைப் பொருத்திருக்கிறது.

`சரி, நான் நகர்த்திய பிறகு என்னை உங்கள் மாணவனாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.'

`நிச்சயமாக...', என்றபடி குரு தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் அவன் அந்தக் கல்லிடம் சென்று `கல்லே நகர்ந்து விடு... கல்லே நகர்ந்து விடு' என்று இடைவிடாமல் சொல்ல ஆரம்பித்தான். இதைப் பார்த்தவர்கள் சிரித்தார்கள், கேலி செய்தார்கள். இப்படியொரு முட்டாளா? என்று...

ஆனால், அவன் சொல்வதை நிறுத்துவதாக இல்லை. மெதுவாகச் சொன்னான், மனசுக்குள் சொன்னான், கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னான், பரிதாபமாகச் சொன்னான், கோபத்தோடும் சொன்னான், அந்தக் கல் நகர்வதாக இல்லை.

ஒரு வருடமாயிற்று...

அவனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. `இந்தக் கல்லை நகர்த்தியே தீருவேன்', என்று தீர்மானித்தான்.

நிச்சயமாக நகரும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொண்டான்.

`கல்லே கொஞ்சம் நகர்' கனிவுடன் சொன்னான், மனதில் கல் நகர்வதைக் கண்டான், பிறகு ஆறு மாதமாயிற்று.

ஒரு நாள் மாலை அந்தக்கல் மெதுவாக நகர்ந்தது. வலதுபுறம் நகரச் சொன்னான், நகர்ந்தது. இடதுபுறம் நகரச் சொன்னான், நகர்ந்தது. இப்படி திசைகள் தோறும் நகரச் சொன்னான். நகர்ந்தது. அன்போடு கல்லை மார்போடு அணைத்துக் கொண்டான். மகிழ்ச்சியில் ஆடினான்... பாடினான்.... பரவசப்பட்டான்.

கேலி பேசியவர்கள் ஆச்சரியமாக வந்து பார்த்தார்கள்...

எப்படி இது சாத்தியமாயிற்று? என வியந்தார்கள்.

குருவின் காதிலும் இந்தச் செய்தி விழுந்தது. அவரும் அந்த இடத்திற்கு வந்தார்!

ஐயா! என அவர் காலில் விழுந்தான்.

`நீங்கள் சொன்னது போல் நகர்த்தி விட்டேன். என்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்', என்றான்.

`சரி! கல்லை நகரச்சொல்', என்றார்

கல்லின் அருகில் போய் அதைத்தடவி `கல்லே நகர்' என்றான், கல் நகர்ந்தது. அவரும் அதிர்ந்தார்.

கதைதான்... இது கதைதான்... கதைக்குள் அவர் சொன்ன கருத்து இதுதான்...

அப்பா! நீ பெரியவன். உனக்கு வாக்குச் சுத்தம் வந்து விட்டது. எதைப் பேச வேண்டுமோ அதைப் பேச நீ பழகிக்கொண்டாய். இனி, தேவையற்றதைப் பேசாதே. பயனில்லாததைப் பேசாதே. எண்ணமும் சொல்லும் ஒன்றானால் நீ சொல்வதெல்லாம் நடந்துவிடும்' என்றார்.

சரி ஐயா! என் கல்வி என்ன ஆனது! நான் குருகுலம் வரலாமா?

அப்பா... இந்த மனத்தையும் சொல்லையும் ஒருமைப்படுத்தத்தான் கல்வி... நீ கற்றுக்கொண்டு விட்டாய்' என்றார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் இதுதான்.

வசந்தம் தரும் வார்த்தைகளால் பிறரை உற்சாகப்படுத்துங்கள். முடிந்தவரை `ந' எழுத்துக்களில் தொடங்கும் மூன்று வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

`நன்றி சொல்லுங்கள்' - மனிதர்கள் அடி மனதில் பாராட்டை விரும்புபவர்கள்... நீங்கள் நன்றி சொல்லும்போது அவர்களின் உள் மனத் தேவை பூர்த்தியாகிறது.

`நல்லெண்ணத்தை வெளிப்படுத்துங்கள்' - அது உங்கள் வாழ்க்கையில் வசந்த காலத்தை வரவழைக்கும்...

`நல்வாழ்த்துக்களை கூறுங்கள்'- பிறர் நல்லபடியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உணர்வார்கள்.

இந்த மூன்று வார்த்தைகளை உங்கள் இதய வானொலி அடிக்கடி ஒலிபரப்பும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். வார்த்தைகளில் காத்திருக்கின்றது வாழ்வின் வசந்தம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்