இயக்குநர் பிரபு சாலமனும், டான் மேக்ஷும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சாட்டை.' பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் இப்படம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், அரசு பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் சமுத்திரக்கனி, அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியரான தம்பி ராமைய்யா உள்ளிட்ட மற்ற அனைத்து ஆசிரியர்களும் சமுத்திரக்கனியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுடைய எதிர்ப்பை மீறி அந்த பள்ளியை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று போராடும் சமுத்திரக்கயின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் விதத்தில் தம்பி ராமைய்யா செயல்படுகிறார்.
இதற்கிடையில் பிளஸ் டூ மாணவனான யுவன், தனது சக வகுப்பு மாணவி மகிமாவை காதலிப்பதாகச் சொல்லி அவறுக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் மகிமா விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். மகிமா விசம் குடித்ததற்கு காரணம் ஆசிரியர் சமுத்திரக்கனி தான் என்று புரிந்துகொள்ளும் மகிமாவின் குடும்பத்தார் சமுத்திரக்கனியை அடித்து போலீஸில் பிடித்துகொடுக்கிறார்கள்.
மகிமா விஷம் குடித்ததற்கு உண்மையான காரணம் யுவன் அவரை காதலிப்பதாக சொல்லி தொந்தரவு கொடுத்ததோ அல்லது சமுத்திரக்கனியோ அல்ல, அதற்கு மாறாக வேறு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை அவருடைய குடும்பத்தார்கள் தெரிந்துகொண்டார்களா? இல்லையா? சமுத்திரக்கனிக்கு எதிராக செயல்படும் துணை தலைமை ஆசிரியர் தம்பி ராமைய்யா சமுத்திரக்கனியை என்ன செய்தார்? இத்தனை தடைகளையும் எதிர்கொள்ளும் சமுத்திரக்கனி இறுதியில் அந்த பள்ளியை முதல் இடத்திற்கு கொண்டுவந்தாரா? என்பதுதான் படத்தின் முடிவு.
அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஐ.ஏ.எஸ் ஆனவர்களும் உண்டு, ஆட்டோ டிரைவர் ஆனவர்களும் உண்டு. அவர்கள் என்னவாக ஆகப்போகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதைவிட, அவர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் தான் சாட்டை.
ஏதோ கடமைக்கு ஆசிரியர்களாக இல்லாமல் மாணவர்களிடம் சக நண்பர்களாக பழகி அவர்களுடைய தேவையை அறிந்து பாடம் நடத்த வேண்டும். அதே போல பெற்றொர்களும் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என்பதை காட்சிக்கு காட்சிக்கு உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அன்பழகன்.
தயாளான் என்ற கதாபாத்திரத்தில் புரட்சி குணம் மிக்க ஆசிரியர் வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். தயா என்ற கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும் சமுத்திரக்கனி, அலட்டிகொள்ளாமல் இயல்பாக நடித்திருப்பது அருமை. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் சமுத்திரக்கனி போன்ற ஆசிரியர் ஒருவர் இருந்தாலே போதும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசித்து விடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது கதாபாத்திரத்தின் மூலம் ரொம்பவே அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.
புதுமுகம் யுவன் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக தெரிகிறார். பிளஸ் டூ மாணவனாக நடித்திக்கும் யுவன், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கனகச்சிதமாக வெளிப்பத்தி அப்ளாஸ் வாங்குகிறார்.
நாயகி புதுமுகம் மகிமா, இது யாரும்மா என்று கேட்கும் அளவுக்கு அழகாக இருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித எக்ஸ்பிரன்ஸ்கள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.
படத்தில் ஒரு ஹீரோ சமுத்திரக்கனி என்றால் மற்றொரு ஹீரோ தம்பி ராமைய்யா என்று சொல்ல வேண்டும். இதுவரை தம்பி ராமைய்யா நடித்தப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். துணை தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் தம்பி ராமைய்யாவின் தோற்றமும், வில்லத்தன நடிப்பும், சில நேரங்களில் காமெடி இல்லாத குறையை போக்குகின்றன.
மாணவர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் ஜூனியர் பாலைய்யா, யுவனின் அப்பாவாக நடித்திருப்பவர் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு மெல்லிசை கிங் என்று பட்டம் கொடுக்கலாம். அந்த அளவுக்கு ரொம்பவே அழகான மொலோடி மெட்டுக்களை அமைத்திருக்கிறார். "அடி போடி ராங்கீ...", "சகாயனே சகாயனே..." போன்ற பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கின்றன."இழப்பதற்கு எதுவும் இல்லை..." என்ற பாடல் எனர்ஜி கொடுக்கும் வகையில் உள்ளது.
ஜீவன் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிக எதார்த்தமான ஒளிப்பதிவு.
பள்ளி மாணவர்களை மையமாக வைத்து படம் எடுத்தாலே, ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மையப்படுத்திதான் திரைக்கதை அமைக்கப்படுகிறது. இந்தப் படமும் அதற்கு விதிவிளக்கில்லை என்றாலும், நல்ல விஷயங்களையும், நாட்டில் இன்னமும் இருக்கும் சில குறைபாடுகளையும் யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டி காட்டலாம். அந்த வகையில் இந்த படமும் சமுதாயத்திற்கும், கல்வித்துறைக்கும் தேவையான ஒரு படம்.
அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் நிலை என்ன என்பதை சாட்டை அடியைப் போலவே மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.
ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவார்கள். உண்மையிலே சாட்டையை சுழற்ற வேண்டியது ஆசிரியர்களுக்கு எதிராகத்தான் என்பதை உணர்த்தும் 'சாட்டை' படத்தைப் பார்த்து இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் திருந்தினாலே போதும். அதுவே இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
ஜெ.சுகுமார் (டிஎன்எஸ்)