ஒரு பாலைவனத்து சிற்றூர்
குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டு முன்னே நின்றார்.
'வீட்டில் யார் இருக்கிறார்கள்?' குதிரையில் இருந்தபடி பெரியவர் கேட்டார்.
வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வாசலில் வந்து நின்றாள்.
பெரியவர் அவளிடம் 'உன் கணவர் எங்கே?' என்று கேட்டார்.
அவள் சிடுசிடுப்போடு 'வீட்டில் இல்லாதவரை பற்றி ஏன் கேட்கிறீர்கள்?' என்றாள்.
பெரியவர் 'எப்போது உன் கணவன் திரும்புவான்?' என்று கேட்டார்.
அவள் 'யாருக்குத் தெரியும்?' என்றாள்.
அவர் 'உண்ண ஏதாவது கிடைக்குமா?' என்று கேட்டார்.
அவள், ' நாங்களே பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கிறோம். இதில் உங்களுக்கு எதை கொடுப்பது?' என்றாள்.
அதைக் கேட்டு பெரியவர் முகம் வாடியது.
அவர் ' நல்லது நான் சென்று வருகிறேன். உன் கணவன் வீட்டுக்கு வந்ததும் இன்ன இன்ன அடையாளம் உள்ளவர் வீட்டுக்கு வந்தார். தங்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதன் பின் இந்த வாயிற்படி நன்றாக இல்லை.எனவே அதை மாற்றி அமைக்கச் சொன்னாரென்று உன் கணவனிடம் சொல்' என்று கூறிவிட்டு போய்விட்டார்.
அவளுடைய கணவன் மாலையில் வீடு திரும்பினான்.
அவள் அவனிடம் 'இன்ன இன்ன அடையாளம் உள்ளவர் வீட்டுக்கு வந்திருந்தார். உங்களுக்கு வாழ்துக் கூறினார்' என்று சொன்னாள்.
வந்தவர் யார் என்பதை புரிந்து கொண்ட அவன் 'அவரை உபசரித்தாயா? உண்ண ஏதாவது கொடுத்து உபசரித்தாயா?' என்று விசாரித்தான்.
அவள் குற்றவுணர்வோடு தலைகுனிந்து நின்றாள்.
அவன் 'அந்த பெரியவர் ஏதவது சொன்னாரா' என்ரு கேட்டான்.
அவள் 'ஆம். இந்த வீட்டு வாயிற்படி நன்றாக இல்லை. அதை மாற்றி அமைக்கச் சொன்னார்' என்று சொன்னாள்.
அவன் 'பாவி வந்தவர் எனது தந்தையார். நெடுங்காலத்துக்குப் பின் என்னை பார்க்க வந்திருக்கிறார். நெடுந்த்தூரத்தில் இருந்து வந்திருக்கிறார். அவரை உபசரிக்க வேண்டாமா?' என்று கேட்டான்.
'அவர் உங்கள் தந்தை என்று என்னிடத்தில் கூறவேயில்லையே'
' நீ கேட்டிருக்கலாமே? அவர் உன்னை சோதித்திருக்கிறார். யாராக இருந்தாலென்ன? நெடுந்தூரம் பயணம் செய்து களைத்து போயிருக்கும் ஒரு முதியவரை நீ உபசரித்திருக்க வேண்டாமா? அவர் வாயிற்படி என்று சொன்னது உன்னைத்தான். அவர் உன்னை சரியாகவே மதிப்பிட்டிருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை அன்பாக உபசரிப்பவள் தான் இல்லத்தரசி. அந்த குணம் இல்லத உன்னோடு வாழ்வது பாவம். இல்லரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.' என்ரு கூறி அவர் அவளுக்கு மணவிலக்கு அளித்து அனுப்பி விட்டான்.
பின்பு அவன் வேறொரு பெண்ணை மணமுடித்தான்.
அடுத்த ஆண்டு அதே பெரியவர் அதே வீட்டு முன்வந்து நின்றார்.
வெளியில் இருந்து ஓசை கேட்டு உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள்.
பெரியவர் ;அம்மா நீ யார்?' என்று கேட்டார்.
அந்தப் பெண் ' நான் இன்னாரின் மனைவி. இன்னாரின் மகள்.' என்றாள்.
' நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?'என்று பெரியவர் கேட்டார்.
'இறைவன் அருளால் நாங்கள் நலமாக இருக்கிறோம்'
'உன் கணவர் எப்படிப் பட்டவர்?'
'நல்லவர். என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்.'
'உன் கணவர் எங்கே?'
'வேட்டைக்கு போய் இருக்கிறார்.இப்போது திரும்பும் நேரம் தான். நீங்கள் வயது முதிர்த்தவராக இருக்கிறீர்கள். நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பும் பசியும் உங்கள் முகத்தில் தெரிகிறது. தயவு செய்து எங்கள் வீட்டில் தங்கி இளைப்பாற வேண்டும். எங்கள் வீட்டில் இருக்கும் உணவைத் தருகிறேன். உண்டு பசியாற வேண்டும்.' என்று அன்பாக அந்த பெரியவரை வேண்டினாள்.
அதப் பெண் வீட்டுக்குள் சென்று ரொட்டி, பால், இறைச்சி, பழங்கள் எல்லாம் கொண்டு வந்து பெரியவரை உண்ணுமாறு அன்பாக உபசரித்தாள்.
நீர் கொண்டு வந்து பெரியவரின் கால்களைக் கழுவி தூய்மைப்படுத்தினாள்.
பெரியவர் உணவை உண்டு மகிழ்ந்தார்.
'இறைவா, இப்பொருட்களை இம்மண்ணில் இவர்களுக்கு அதிகமாக்கி வை' என்று இறைவனைப் பிராத்தித்தார்.
அந்தப் பெண்ணை நோக்கி 'அம்மா, நீ நன்றாக இரு. உன் கணவர் வந்தால் என் வாழ்த்துக்களை கூறு. அவருடைய வாயிற்படி நன்றாக இருக்கிறது என்று கூறு. அதனால் அதை எப்போதும் எதற்காகவும் மற்றக் கூடாது என்று நான் கூறியதாகக் கூறு. நான் சென்று வருகிறேன்.' என்ரு சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கணவனிடம் அவள் நடந்ததைக் கூறினாள்.
அவன் 'அன்பே, வந்தது எனது தந்தையே. அவர் யார் என்ரு தெரியாமலேயே அன்பாக உபசரித்திருக்கிறாய். உன்னை மனைவியாக பெற்றது என் பாக்கியம். என் தந்தை உன்னை ஆசிர்வதித்திருக்கிறார்.அவர் வாயிற்படி என்று சொன்னது உன்னைத்தான்' என்று கூறி மகிழ்ந்தான்.
அவன் கடைசிவரை அந்த ஒரு மனைவியுடனேயே இல்லறம் நடத்தினான்.
அந்தப் பெரியவர், யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று மூன்றாகப் பிரிந்திருக்கும் சமயங்களுக்கு மூல பிதாவான இறைத்தூதர் இப்ராஹீம் (ஏபிரகாம்) அவர்கள் ஆவார்.
அவருடைய புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயில் (இஸ்மவேல்) ஆவார்.
இது நடந்த இடம் மக்கா. காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்.
இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள் கூறிய வாயிற்படி என்பது ஒரு அற்புதக் குறியீடு.
பொதுவாக பெண் சிறந்த இல்லத்தரசியாக இப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த குறியீடு அழகாக விளக்குகிறது.
பெண் வாயிற்படியாக இருக்கிறாள்.வாயிற்படி வழியாக தான் நாம் உள்ளே செல்ல வேண்டும்.
பெண்ணின் வழியாகத்தான் நாம் உலகுக்குள் வந்தோம். நாம் வாழ்க்கைக்குள் நுழைய அவளே வாயிற்படியாக இருக்கிறாள். நாம் 'வெளியேற' வேண்டுமானாலும் அவள் வழியாகத்தான் வெளியேற வேண்டும்.
இல்லத்துக்குள் நுழைய வாயிற்படி வேண்டும். இல்லறத்துக்குள் நுழைய பெண் வேண்டும்.
நன்மையோ தீமையோ அவள் அனுமதித்தால் தான் வீட்டிக்குள் நுழைய முடியும்.
வாயிற்படி குறுகலாக இருந்தால் நுழைவதும் சிரமம், வெளியேறுவதும் சிரமம்.
பெண் குறுகிய மனம் கொண்டவளாக இருந்தால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது.
சொர்க்கவாசலும் பெண் தான். நரகவாசலும் அவள் தான்.