Author Topic: அவன் போட்ட பிச்சை  (Read 738 times)

Offline சிநேகிதன்

அவன் போட்ட பிச்சை
« on: January 28, 2013, 11:56:14 PM »
பாங்கில் கட்டுவதற்காக பாக்கெட்டில் வைத்திருந்த கடன் தவணைப் பணத்தில் ஒரு இருபது ரூபாயை மனைவி உருவிவிட்டாள் என்ற ஆத்திரம் ராகவனுக்கு. அவளை திட்டிக்கொண்டே குளித்து முடித்து, டிரஸ் பண்ணி, டிபன் சாப்பிட்டுவிட்டு, ஆபீசுக்கு புறப்படும் வரை டென்ஷனில் இருந்தான்.

வெளியே வந்து ஸ்கூட்டரை எடுத்து ஸ்டார்ட் பண்ணியபோது அது உயிர்பெற மறுத்தது. டாங்கைத் திறந்து பார்த்தான் பெட்ரோல் ரிஸர்வில் கூட இல்லை. மணி ஒன்பதரை ஆகிவிட்டது. பங்க்குக்கு தள்ளிக் கொண்டுபோய் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு போவதென்றால் நேரமாகிவிடும். யோசித்தான். அதை ஓரமாக நிறுத்திவிட்டு அவசரமாகப் புறப்பட்டபோது காம்பவுண்ட் கேட் அருகே ஒரு பிச்சைக்காரக் கிழவர்.

"சாமி....... ஏதாச்சும் தர்மம் போடுங்க சாமி!"

"ஏன்யா... ஒனக்கு எத்தனை தடவை சொல்றது?...வெளியே புறப்படற நேரத்துல இப்படி எதிரே வந்து நிக்காதேன்னு? காலை நேரத்துல பிராணனை எடுக்காம நகருய்யா!" என்று கிழவரிடம் தன் கோபத்தைக் காட்டிவிட்டு அவசரமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான்.

'ஆபீஸில் தலையைக் காட்டிவிட்டு நேராக பேங்குக்குப் போய் பணத்தைக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்' என்று நினைத்தவாறு பர்சிலிருந்த பணத்தை எடுத்து ஒரு முறை சரிபார்த்து விட்டு பாண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

அரைமணி நேரம் ஆகியும் ஒரு பஸ்கூட வரவில்லை.

பக்கத்தில் ஒருவர் செய்தித்தாளை விரித்து படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்த போது.......

திடீரென்று தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் யாரோ கை விட்டதைப் போல உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவனுடைய பர்ஸை திருடிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் ஒரு பிக்பாக்கெட் ஆசாமி.

"ஐயோ.... பர்ஸை அடிச்சுக்கிட்டு ஓடறான்.... அவனைப் பிடிங்க சார்.....!" என்று ராகவன் கத்தியதைக்கூட பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

கடன் தவணை கட்டுவதற்காக வைத்திருந்த பணம். அதுவும் தொலைந்துவிட்டால் இந்த கடைசித் தேதியில் எவனிடம் போய் பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கமுடியும்?

பிக்பாக்கெட் ஆசாமியை விரட்டிக்கொண்டு ஓடினான் ராகவன். எதிரே வந்து கொண்டிருந்தவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவன் கத்தியும், அவனுக்கு எவரும் உதவ முன்வரவில்லை.

எதிரே கம்பை ஊன்றியவாறு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்த அந்த பிச்சைக்காரக் கிழவரைப் பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. 'வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே இந்த கிழவன் எதிரே வந்து தொலைத்த சகுனம்தானே இப்படி ஆகிவிட்டது!'

ராகவன் அந்த பிக்பாக்கெட் ஆசாமியை துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்து விஷயத்தைப் புரிந்து கொண்டுவிட்டார் கிழவர். ராகவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அந்தக் கிழவருக்கு உதித்தது. ஓடிப்போய் அந்த திருடனைப் பிடிக்க தன்னால் முடியாது என்று நினைத்த அவருக்கு, திடீரென ஒரு யோசனை.

தன் கையிலிருந்த ஊன்றுகோலைச் சுழற்றினார். ஓடிக்கொண்டிருந்த திருடனை நோக்கி வீசினார். சுழன்று பறந்து சென்ற அந்தக் கம்பு ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலில் போய்ச் சிக்கிக்கொள்ள, ஒரு நிமிடம் அவன் தடுமாறிப்போய் நிலைகுழைந்து கீழே விழுந்தான். கையிலிருந்த பர்ஸ் கீழே விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் எழுந்து ஓடிவிட்டான் அந்த பிக்பாக்கெட் ஆசாமி.

தள்ளாடியபடி நடந்துபோன கிழவர் அந்த பர்ஸை குனிந்து எடுத்துக் கொண்டிருந்த போது ராகவன் அவர் முன் வந்து நின்றான்.

"திருட்டுப்பயலுங்க பெருகிப் போன ஊராப்போச்சு!...... நீங்க பத்திரமா வச்சுக்கப்படாதாங்க?" என்ற சொல்லியபடி பர்ஸை அவனிடம் கிழவர் நீட்ட, அதை வாங்கிக் கொண்ட ராகவனுக்கு மனதுக்குள் குற்றவுணர்வு நெருடியது.

பர்ஸிலிருந்த பத்த ரூபாயை எடுத்து கிழவரிடம் நீட்ட, அவர் அதை வாங்கவில்லை.

"இந்த சின்ன ஒதவிக்கு எதுக்குங்க இதெல்லாம்? ஒடம்புல தெம்பு இருந்துச்சுன்னா இன்னேரம் அந்த பயல புடிச்சி ஒதைச்சு வெரட்டியிருப்பேன். முடியலையே...... ஏதோ என்னாலான ஒதவி.....அந்த காசக் குடுத்து என்ன கூலிக்காரன் ஆக்கிபுடாதீங்க!"..... நேரமாயிடப் போவுது. போங்க தம்பி.

கீழே கிடந்த தன் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு தள்ளாடியபடி நடந்துபோய்விட்டார் கிழவர்.

அவர் போவதையே பார்த்தபடி நின்றிருந்த ராகவனின் கண்களில் ஈரம் கசிந்திருந்தது.