உழவுக் குடியில் பிறந்து, எனக்குத் தொடர்பு இல்லாத திரைப்படத் துறையில் எனது உழைப்பும் சிந்தனையும் செலவாகிக் கொண்டு இருக்கிறது. நான் என்ன செய்தாலும், எதை எழுதினாலும் என் சிந்தனை முழுக்க என் கிராமத்திலேயே இருக்கிறது. என்னைக் காப்பாற்றிய என் நிலங்களை விட்டுவிட்டு, சென்னைக்காரனாக உருமாறி, அடையாளம் அற்ற மனிதர்கள் கூட்டத்தில் கலந்துவிட்டேன். என் கிராமமான பத்திரக் கோட்டையிலேயே நான் இருந்திருந்தால், இப்படி எழுதவேண்டி இருந்திருக்காது! இதோ... பொங்கலைக் கொண்டாடப் போகிறோம். வணிகர்கள், சினிமா, தொலைக்காட்சி என ஊடகக்காரர்கள் அனைவரும் சம்பாதிப்பதும், மாதச் சம்பளக்காரர்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு, அத்துடன் ஊக்கத்தொகையையும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கும்தான் இன்றைக்குப் பொங்கல் பண்டிகை பயன்படுகிறது. எவன் பொங்கலைக் கொண்டாட வேண்டுமோ அவன் குடும்பம் புதுத் துணியும், பொங்கல் பானையும் வாங்கக்கூட காசு இல்லாமல், அதையும் இலவசமாகத் தர மாட்டார்களா? என ஏங்கிக்கொண்டு இருக்கிறது.
வாழ்க்கை முழுக்க மண்ணிலேயே கிடந்து வயலிலும், மேட்டிலும், மழையிலும், வெயிலிலும் அலைந்து வறுமையிலேயே செத்துமடிகிற உழவன் பொங்கலைக் கொண்டாடுகிறானா இல்லையா என்பது பற்றிய அக்கறையோ, கவலையோ யாருக்கும் இல்லை. இலவசத் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு, எந்த சினிமா நடிகனின் மூஞ்சி எங்கே தெரிகிறது.... எந்த நடிகையின் உடை எங்கே விலகுகிறது? எனப் பல்லை இளித்துக்கொண்டு, அவர்கள் பேசுகிற Meet பண்ணி, use பண்ணி, disturb பண்ணி என்ற பாழ் பண்ணும் தமிழைக் கேட்டுக் கொண்டு, வெட்கம் இல்லாமல் தமிழன் எனச் சொல்லி பொங்கலைக் கொண்டாடப் போகிறோம்.... அதைக்கூட "ஹேப்பி பொங்கல்" எனச் சொல்லி!
வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பொங்கல் கொண்டாடப் போகிற தமிழன், பொங்கலுக்கு ஆதாரமாக இருக்கிற உழவனைப் பற்றியோ, உழவுத் தொழிலைப் பற்றியோ கொஞ்சமாவது சிந்திப்பான். எந்தெந்தத் தொழிலையோ செய்தவன் எல்லாம் பொருளாதாரத்தில் எவ்வளவோ உயரத்துக்குப் போய் விட்டான். விவசாயத்தைச் செய்தவன் மட்டும், அதை விட்டுவிட்டு ஓடிவிட்டான். அல்லது அதைச் செய்யத் தயாராக இல்லை. ஆனால், இது 70 விழுக்காட்டு மக்களுக்கு மேல் விவசாயத் தொழிலை நம்பியிருக்கும் நாடு.
விளைபொருளுக்கு விலை இல்லை எனச் சொல்லிச் சொல்லி, அவன் குரலும் அற்றுப்போய்விட்டான். உழவனுக்காக அமைத்த சங்கங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்கிற கூட்டுக்கொள்ளைக்காரர்களால் விலை பேசப்பட்டு, சாக்கடையில் கலந்து காணாமல் போய்விட்டன. இனி, அவனது குரலைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அவன் என்ன தான் கத்தினாலும் பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட அவனது குரல் கேட்காது. ஏனென்றால், அவன் குரல் வெளியே கேட்க முடியாத அளவுக்கு வெற்றுக் கூச்சல்கள் அதிகம் கேட்கின்றன!
உழவனின் ஏரின் பின்தான் இந்த உலகம் இருப்பதாக நம் தாத்தா திருவள்ளுவர் சொன்னார். ஆனால், அவன் பின்னால் வறுமையும், கடனும், துயரமும்தான் இருக்கின்றன. வாழும்போது ஒருவனுடைய தேவையையும், அதற்கான அவசியத்தையும் புரிந்துகொள்ளாத சமூகம், அவன் அழிவின் பின்தான் நரம்புடைக்க, வாய் கிழியப் பேசும், விழா எடுக்கும், லட்சக்கணக்கான பணம் செலவு செய்து விளம்பரம் செய்யும், வான வேடிக்கைக்கூட நடத்தும். "உயிர் போகிறது" எனச் சொன்னபோது, கண்டுகொள்ளாத கருங்காலிகளாகவே இருக்கிறார்கள். இன்றைக்கு 2,000 கோடி செலவு செய்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் வீடு கட்டிக் கொடுக்கிறார்களாம். சாம்பல் காடாகவும், புல் பூண்டு அற்ற பாலைவனமாகவும் மாற்றிவிட்டு யாருக்காக இதனைச் செய்கிறீர்கள்? அனைத்தும் அழிந்துபோன பின் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் கண்ணீரைக்கூடத் துடைக்க நாதி இல்லாமல் அழுது அழுது கண்ணீரும் வற்றிப்போய் நம்பிக்கை அற்றுப் போய்விட்டார்கள் எம் மக்கள். அனைத்தும் இருந்தும் நம்மால் நம் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. இன்னும் யாருக்காக விடுதலை பெற்றுத் தர இந்தப் பசப்பு வேடம்?
விடுதலை பெற்று 63 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மலம் கழிக்கக்கூட கழிப்பறை வசதி அற்று, சாலையோரம் அலையும் எம் மக்களைப் பற்றி முதலில் கவலைப்படுங்கள். நமக்கு எல்லாம் உணவளித்துவிட்டு கோவணத்துக்கூட வழி இல்லாமல், உழவன் வறுமையோடு கிடக்கிறான். இனி, ஏதாவது போராட்டம் என நடந்தால், அது உழவுத் தொழிலை நம்பிக்கிடக்கிற முக்கால்வாசி மக்களுக்காகப் போராடுங்கள். மண்ணில் நஞ்சினை ஊற்றி, நிலத் தாயின் கர்ப்பப்பையையே அழித்து நாசமாக்கிய, நாசமாக்கிக் கொண்டு இருக்கும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடுங்கள். அவர்கள் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்றுத் தாருங்கள். பெய்த மழை நீரெல்லாம் கடலுக்குள் ஓடிவிட்டது. பத்து நாள் நீரைத் தேக்கிவைத்தாலே பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீர் கிடைத்திருக்கும். மணலையும், அள்ளி மலடாக்கிவிட்டு, விவசாயிகளுக்கு வெறும் இலவசங்களையும் நிவாரணங்களையும் தந்து ஏமாற்றும் நாசக்காரர்களுக்காகப் போராடுங்கள். அவ்வாறு உங்கள் போராட்டம் அமையாமல் போனால், எங்களின் எதிரிகளும் துரோகிகளும் நீங்களாகவே இருப்பீர்கள். இது என்னுடைய குரல் இல்லை. ஆதரவின்றி தன் இன்னல்களைச் சொல்ல ஆட்கள் இன்றித் தவிக்கும் அனைத்து உழவர்களின் குரல்!
வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து, "எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?" எனக் கேட்டால் எல்லோருமே, டாக்டர்கள்தான், இன்ஜினீயர்கள்தான், விஞ்ஞானிகள்தான், போலீஸ் அதிகாரிகள்தான்! ஒரு குழந்தையும் நான் விவசாயத்தைப் பார்க்கப் போகிறேன் என சொன்னதைப் பார்த்தது உண்டா? ஏனென்றால், அவன் பார்வையில் விவசாயம் என்பது உருப்படாத தொழில், விவசாயி என்பவன் அழுக்கு மனிதன், பிச்சைக்காரன், படிக்காதவன், பேருந்திலோ, பொது இடத்திலோ ஓர் உழவனின் பக்கத்தில் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அவனுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு, இவன் எழுந்து விடுவான்.
"நாலெழுத்தைப் படித்து, இந்த ஊரைவிட்டு ஓடி எங்கேயாவது போய்ப் பிழைத்துக்கொள்" என சொல்லித்தான், என் அப்பாவும் அம்மாவும் என்னைத் துரத்தினார்கள். நான் என் பிள்ளைகளை ஊருக்குப் போய் நிலங்களைக் கவனித்து, நல்லபடியாக இருங்கள் என சொல்லத் தயாராக இல்லை. அப்படி நான் சொன்னால் அது மிகப் பெரிய பொய்!
இனி, கிராமம் என்பது ஏழைகளுக்கும் வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும்தான். எந்த ஒரு இளைஞனும் கிராமத்தில் இருக்கத் தயாராக இல்லை. உருவாக்கப்படுகிற அனைத்துப் பொருள்களையும் 12 சதவிகிதம் வரியுடன் சேர்த்து, எந்தக் கேள்வியும் கேட்காமல், எவ்வளவு கூட்டமானாலும் இடித்துச் சென்றோ, வரிசையில் நின்றோ வாங்குகிறான். விவசாயி மட்டும் அவன் உருவாக்கிய பொருளை எவனிடமோ கொடுத்துவிட்டு, அவன் சொல்கிற விலைக்காக வாய் பிளந்து, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது. விற்கப் போன விவசாயி, விளைந்த பொருள்களுக்கு விலை கட்டுப்படி ஆகாமல் போனால் "போய் வா" எனச் சொல்லவும் முடிவது இல்லை. ஒன்று, வந்த விலைக்குத் தருகிறான். அல்லது வயிற்றெரிச்சலோடு வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான்.
நிலங்கள், பசுமைப் புரட்சியாளர்களால் பூச்சி மருந்தையும் ரசாயன உரத்தையும் குடித்து, தின்று கற்பழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. வளர்ச்சி என்கிற பெயரில் தொழிற்சாலைக் கழிவுகள் எல்லாம் தண்ணீரைப் பாழடித்துவிட்டன. மக்களிடம் வாக்குப் பொறுக்கி அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள், இரவு பகலாக மணல் கொள்ளை நடத்தியதால் தமிழக ஆறுகள் ஏழை உழவனைவிடவும் தாடை ஒடுங்கி வற்றிக்கிடக்கின்றன. மண் வளத்தையும் அழித்து, தண்ணீரையும் கெடுத்தவர்களுக்கு எல்லாம் எந்தத் தண்டனையும் இல்லை. மக்கள் ஆட்சி என்கிற பெயரில் தேர்தலை அவர்களே நடத்தி, அவர்களையே நம் காவலர்களாக இருக்கச் சொல்லி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நமது அடுத்த தலைமுறைகளையாவது இதைப்பற்றி சிந்திக்கச் செய்து, உழவுத் தொழிலை அவர்களிடம் கொடுக்கலாமா என நினைக்காமல், அவர்களையும் கனவு காணச் சொல்கிறோம். இங்கு வாழ்வதற்கும் அவமானமாக இருக்கிறது. இதனை எழுதுவதற்கும் கேவலமாக இருக்கிறது!