டாஸ்மார்க் போனால் கள்ளச்சாராயம்
டாஸ்மார்க் கடைகளை அரசு மூடிவிட்டால் டாஸ்மார்க் கடைகளுக்குச் சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை துன்புறுத்தும் கணவன்களின் தொல்லைகள் நிறுத்தப்பட்டு வீடுகள் தோறும் அமைதி நிலவும் என்பது நிச்சயமானால் டாஸ்மார்க் கடைகளை மூடுவதில் நியாயமிருக்கிறது, சிலகாலமாக சாராயம் காய்ச்சி விற்கும் தொழில் செய்ய இயலாமல் திருட்டு கொள்ளை வழிப்பறிகளில் தங்களது வரும்படியை தேடிக்கொண்டு போனவர்கள் மறுபடியும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழில் ஆரம்பித்து விடுவார்களே தவிர குடிகாரர்கள் ஒருநாளும் குடிக்காமல் இருக்கப்போவது கிடையாது.
டாஸ்மார்க் கடைகளினால் மற்றுமொரு சமுதாய சீர்திருத்தம் குடித்துவிட்டு வீதிகளில் மயங்கி கிடப்பவர்களால் 'வம்ச விருத்தி செய்வது' என்பது கணிசமாகவே குறைந்திருக்கும், இல்லையென்றால் பொழுது போகாமல் மனைவியுடன் சரசமாடி வயிற்றில் பிள்ளையை கொடுத்துவிட்டு, அடுக்கடுக்காய் பிள்ளைகளை பெற்றுத் தள்ளிவிட்டு எல்லாம் 'கடவுள் கொடுத்தது' என்று பெருமைபட்டுக் கொள்வதுடன் நிறுத்திக்கொண்டு ஒருநாளைக்கு ஒரு வேளைச் சோறு போடக் கூட பொருளாதார வசதியின்றி நாட்டின் ஜனத்தொகையை அதிகரிக்கச் செய்து, வீதியில் பிள்ளைகள் பிச்சையெடுக்கவும் திருடித் தின்னவும் பழகிக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்ப்படுவது மட்டுமே இருக்கும்.
தற்போது வேலையிலிருந்து நேரே டாஸ்மார்க் கடைக்குச் சென்று சரக்கை வாங்கி ஊற்றிக்கொண்டு தெருவிலோ சாக்கடையிலோ புரண்டுகொண்டு, இரவை அங்கேயே கழித்து விடுவதால் குறைந்த பட்சம் நாட்டின் ஜனத்தொகையாவது கட்டுக்குள் இருக்கும், அல்லது ஏயட்ஸ் வியாதிக்கு ஆளாகாமல் டாஸ்மார்க் போதை மண்டைக்குள் சென்று நடு வீதியில் ஆளைக் கிடத்திவிடும். டாஸ்மார்க் கடைகளை அரசு மூடிவிட்டாலும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சாராயமும் வேறு மதுபானங்களும் கிடைக்காமல் போகாது. முன்பெல்லாம் அரசிடமிருந்து பெர்மிட் பெற்றிருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மதுபானங்களை வாங்கும் உரிமம் கொடுக்கபட்டிருந்தது, அதே போன்ற முறை திரும்பவும் கொண்டுவரப்பட்டாலும் குறிப்பிட்ட சாரர் மட்டுமே அதில் மதுபானம் வாங்க இயலும் என்பதால் ஏழை எளிய, குறைந்த வருமானம் உள்ளவர்களால் பெர்மிட் பெற இயலாது, இந்நிலையில் திருட்டு சாராயம் அதிகமாகி விஷச் சாராயமும் அதனால் மரணங்களும் தவிர்க்க இயலாத நிலை ஏற்ப்படும்,
அடுத்துள்ள மாநிலங்களில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும், இதனால் சம்பந்தமே இல்லாத கும்பல்கள் லாபம் பெறுவார், சமுதாய விரோதிகளும் லாபமடைவார்கள். ஆங்காங்கே சாராயம் காய்ச்சும் சர்வாதிகாரிகளும் தோன்றுவார்கள். இவையெல்லாம் ஏற்க்கனவே நடந்த கதைகள்தான், பின்னர் அரசு டாஸ்மார்க் கடைகளின் வரவால் இல்லாமல் போனதும் யாவரும் அறிந்ததே, டாஸ்மார்க் கடைகளை அரசு மூடுவதால் 'பழைய குருடி கண்ணை திறடி' என்பது போல அதே கதைகள் மறுபடியும் நாட்டில் திரும்பவும் நடக்கும்.