ஹெலோ
குரல் கேட்டு திரும்பினேன். அவளே தான். என்னைப் பார்த்து சிரித்த அவள் கண்களில் வெகுநாட்கள் பழகியதை போல ஒரு ஒளி தெரிந்தது.
"நீங்கள் தினமும் கேட்கும் பஸ் இன்னும் வரவில்லை. இப்போது மணி 9." கேட்காமல் பதில் சொல்லும் என்னைப் பார்த்து அவள் குறும்பாகச் சிரித்ததாள்.
" நீங்கள் தினமும் கேட்கும் கேள்விகள் தானே இது. அதனால் தான் கேட்காமலே பதில் சொன்னேன்". நான் சொன்னதைக் கேட்டு அவள் குறும்பாக உதடு கடித்து சிரித்தாள்.
" நான் கேட்காமல் பதில் சொன்னதற்கு நன்றி. ஆனால் நான் இன்று அந்த கேள்விகளை கேட்க வரவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு". அவள் உதடுகள் சிரிக்கவேன்றே பிறந்தவை போலும்.
"என்னிடம் பேச இவளுக்கு என்ன இருக்கிறது?" புருவங்கள் சுருங்க கேள்விக்குறியாய் அவளைப் பார்த்தேன்.
" உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். அது உங்கள் எதிகாலம் பற்றியது. தயவு செய்து நாளை மாலை மெரினாவிற்கு வருவீர்களா?" அவள் பேச்சை நான் இடைமறித்தேன்.
" என்னிடம் பேச என்ன இருக்கிறது? முன்னம் பின்னம் தெரியாத நமக்குள் பேச என்ன இருக்கிறது?"
"இருக்கிறது. எனக்காக நாளை மட்டும் பேச அனுமதி தாருங்கள். அதன் பிறகு நான் உங்களை இடையுறு பண்ணமாட்டேன். பிளீஸ்." கெஞ்சும் அவள் கண்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தயக்கத்துடன் சரி என தலையசைத்தேன்.
அவள் முகத்தில் சந்தோசம் "மின்னலடித்தது. தேங்க்ஸ் யூ வெரிமச். நாளை 5 மணிக்கு மெரினா பீச்சில் உழைப்பாளர்கள் சிலை அருகே சந்திப்போம். என் பதிலைக் கூட எதிர்பாராமல் வீதியைக் கடந்தது எதிரில் வந்த ஆட்டோவில் ஏறி மறைந்தாள்.
யாரிவள்? இந்த ஒரு வாரமாக தினமும் நான் நிற்கும் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறாள். நான் போகும் வரை எந்த பஸ்சிலும் ஏறுவதும் இல்லை. தினமும் ஏதாவது ஒரு பஸ் வரவில்லையா என்று கேட்பாள். அலது டைம் என்ன என்று கேட்பாள். ஒரு ஓரமாக நின்று என்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருப்பாள்.
தினமும் இப்படி வந்து ஏதாவது கேட்டு நான் பேச மாட்டேனா என்று எதிர்பார்த்து நிற்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
எனக்கு அவள் அருகே நிற்கும் போது அங்கே நிற்கவே தவிப்பாக இருக்கும். நான் திரும்பி நின்றாலும் அவள் பார்வையின் வீச்சு என்னை ஊடுருவது எனக்குப் புரியும்.
அவளைப் பார்க்கும் யாருக்குமே அவள் பேச மாட்டாளா என்று ஆசை தோன்றும். அவள் அத்தனை அழகாக இருந்தாள். வேறு ஆண்களாக இருந்திருந்தால் இந்நேரம் அவர்களாகவே வலியப் போய் பேசி இருப்பார்கள்.
நான் அப்படியல்ல. என் மனதை எந்த அல்லி ராணியாலும் அசைக்க முடியாது.
இன்று வந்து என்னுடன் பேச வேண்டும் என்கிறாள். அதுவும் என் எதிர்காலத்தை பற்றியாம். என் எதிகாலத்தை பற்றி பேச இவள் யார்? முன்னே பின்னே பார்த்திராதவள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேசப் போகிறாள்?
குழப்பமாக இருந்தது எனக்கு. ஏன் சம்மதித்தோம் என தன்னைத்தானே திட்டிக் கொண்டது எனது மனது. என்றாலும் என்ன பேசப்போகிறாள் என மனது தவியாய் தவித்தது.
அடுத்த நாள் என்பது ஒரு யுகமாகத் தோன்றியது. எந்த வேலையும் ஓடவில்லை. மனம் குழம்பித் தவித்ததில் ஆபீஸில் வேலையும் ஓடவில்லை. எப்படியோ அடுத்த நாள் மாலையும் வந்தது. நான் படபடக்கும் நெஞ்சத்துடன் பஸ் பிடித்து மெரினா சென்றேன்.
எனக்கு முன்பே அவள் வந்து காத்திருந்தாள்.
"என்னை ஏன் வரச் சொன்னீர்கள்? என்னிடம் என்ன பேசப் போகிறிர்கள்? அவளைக் கண்டதும் நான் கேட்ட முதல் கேள்வி இது தான்.
அவள் அருவியென சிரித்தாள். " ஒருத்தரை முதலில் சந்தித்ததும் நலம் விசாரிக்க கூட நினைவு வரவில்லை பார்த்திர்களா. நான் அத்தனை உங்களை குழப்பி விட்டேனா". அவள் குறும்பாகக் கேட்டாள்.
நான் ஏன் தவறை உணர்ந்து வெட்கினேன். " சாரி, நேற்று நீங்கள் சொன்னதில் இருந்து நான் நான் நானாக இல்லை. ஒரே யோசனை. நாம் இருவரும் பார்த்ததும் இல்லை. என்னை பற்றி என்ன பேசப் போகிறீர்கள் என குழப்பத்தில் தவறி விட்டேன்". நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன் .
"பரவாயில்லை\, வாருங்கள் நிழலான இடத்தில் அமர்ந்து பேசலாம்." இருவரும் மவுனமாக நடந்தோம்.
ஒரு தனிமையான இடம் பார்த்து அமர்ந்ததும் நான் தான் முதலில் பேசினேன்.
" ஏதோ பேச வேண்டும் என்று சொன்னிர்களே, விசயத்தை சொன்னால் நான் சீக்கிரம் ரூமுக்கு போகலாம்."
" என் இத்தனை அவசரம்? என்னைக் கண்டால் பயமா , அல்லது பெண்களையே பிடிக்காதா?" அவள் கிண்டலாகக் கேட்டாள்.
" பயம் ஒன்றும் இல்லை. உங்களைப் போல இளம் பெண்ணுடன் தனிமையில் பேசி எனக்குப் பழக்கம் இல்லை." நான் தலையை குனிந்தபடி பேசினேன்.
" ஏன் பேச யாரும் இதுவரை கிடைக்கவில்லையா அல்லது? .............." அவள் குரலில் பரிகாசம் தெரிந்தது.
"பெண்களுடன் பேச வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. பேசுவதற்கு ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை." ஏன் குரலில் சுருதி கூடியது.
" ஏன் பெண்கள் என்றால் அத்தனை பயமா, அலது வெறுப்பா?"
"நான் ஏன் பெண்களை வெறுக்க வேண்டும்? என்னைப் பெற்றவளும் ஒரு பெண்தானே. தேவையில்லாமல் ஒரு பெண்ணுடன் பேசுவது பிரச்சனையாகும். அதை நான் விரும்பவில்லை. " இன்னும் நான் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை.ஏன் விரல்கள் மண்ணில் கோலம் போட்டு அழித்துக் கொண்டிருந்தன.
" ஏன் என் முகத்தை பார்த்து பேச மாட்டேன் என்கிறிர்கள்? நான் அத்தனை அசிங்கமாகவா இருக்கிறேன்? அல்லது பார்த்தால் காதலித்து விடுவேம் என்ற பயமா?" சிரித்தபடி நேரிடையாக அவள் கேட்ட கேள்வியில் தான் தலைகுனிந்து போனேன். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.
எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. அவள் அப்படி கேட்பாள் என நான் எதிபார்க்கவில்லை.
" நீங்கள் அசிங்கமும் இல்லை. அதற்காக காணும் அழகான பெண்களை எல்லாம் காதலிக்க நினைக்க என் மனம் அசிங்கமானதும் இல்லை. தயவு செய்து நீங்கள் பேச வந்ததை பேசுங்கள் நான் போக வேண்டும்." எனக்கு அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்றிருந்தது.
' நான் பேச வந்ததை தான் பேசிக் கொண்டிருக்கிறேன். " அவள் சொவது எனக்குப் புரியவில்லை.
" நான் சொல்லது புரியவில்லையா? நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். நான் உங்களை விரும்புகிறேன். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்." எனக்கு மின்சாரம் தாக்கியது போல இருந்தது. நாக்கு மேல்வாயில் ஒட்டிகொண்டது. பேச்சு வரவில்லை.
"என்ன பேச்சைக் காணவில்லை. வழமையில் ஆண்கள் தான் அழகான பெண்களைக் கண்டதும் பின்னால் விரட்டி ஐ லவ் யு சொல்லுவாங்க. இங்கே நான் கேட்டதும் ஆச்சரியமாக இருக்கிறதா? சொல்லுங்கள் நீங்கள் என்னை விரும்புகிறிர்களா?"
" அந்த எண்ணம் எனக்கு துளி கூட இல்லை." நான் அவசரமாக மறுத்தேன்.
" ஏன் நான் அழகில்லையா, அல்லது உங்களுக்கு பொருத்தமானவள் இல்லையா" அவள் குரலில் சோகம் எட்டிப் பார்த்தது.
" உங்களை அழகில்லாதவள் என்று சொல்பவன் குருடனாகத்தான் இருப்பான். நான் தான் உங்களுக்கு பொருத்தமானவன் இல்லை. நான் முன்பு சொன்னது போல அழகான பெண்களை எல்லாம் காதலிக்கும் ஆண் நான் இல்லை."
" நீங்கள் இயற்கைக்கு மாறாக பேசுகிறிர்கள். என்னை மறுக்கும் நீங்கள் ஒன்றில் காதலை வெறுப்பவராக இருக்க வேண்டும் அல்லது, வேறொரு பெண்ணை விரும்புபவராக இருக்க வேண்டும். இதில் எது சரி?"
அவள் கேள்விக்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று யோசித்தேன்.
" நான் காதலை வெறுப்பவன் அல்ல. நீங்கள் இரண்டாவது சொன்னபடி எனது மனது முழுவதும் இன்னொருத்தி நிறைந்த்திருக்கிறாள்." நான் அமைதியாக பதில் சொன்னேன்
"ஓ, அதனால் தான் என் காதலை மறுக்கிறிர்களா? உங்கள் காதலி என்னை விட அழகா?" அவள் குரலில் இருந்தது வியர்ப்பா அல்லது பொறாமையா? புரியவில்லை எனக்கு.
அவள் உங்களை விட அழகு தான். மனத்தால், எண்ணத்தால் அவள் அழகானவள் தான். அவள் கையெழுத்து ஒவ்வொன்றும் முத்து முத்தாக அழகானனவை". நான் அமைதியாக சொன்னேன்.
அவள் புரியாமல் விழித்தாள். " உங்கள் காதலி அழகா என்று கேட்டால் அவள் எழுத்துகள் அழகானவை என்று சொல்கிறிர்கள். நேரில் அவளை பார்த்ததில்லையா?"
" நான் நேரில் அவளை பார்த்ததில்லை. படத்தில் தான் அவளைப் பார்த்திருக்கிறேன். அவள் அழகி இல்லையென்றாலும் அருவெறுக்க கூடிய உருவமும் இல்லை." என் பதில் அவளுக்கு வியர்ப்பை ஊட்டியிருக்கும்.
"காதல் என்கிறிர்கள், பார்த்ததில்லை என்கிறிர்கள். சினிமா கதையா இது? எனக்கு விளங்கவில்லை." அவள் விளங்காமல் கேட்டாள்.
" நேரில் பார்த்தால் தான் காதல் வருமா?"
"பின் எப்படி வரும்? "
காதலுக்கு கண் தேவையில்லை. மனதுக்கும் மனதுக்கும் ஏற்படும் ஈர்ப்பு தான் காதல். அப்படிதான் எங்கள் காதலும்."
"எனக்கு விளங்கவில்லை." அவள் தெளிவில்லாமல் கேட்டாள்.
நான் சில நேரம் பத்திரிகைகளுக்கு கதை, கவிதைகள் எழுதி அனுப்புவேன். அப்படி ஒரு நேரம் நான் காதல் என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதை பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. அதில் ஒரு கடிதம் மட்டும் என்னை கவர்ந்தது. அந்த கடிதத்தில் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அச்சிட்டது போல முத்து முத்தாக அழகாக இருந்தன."
" நான் பதில் எழுதியது அந்த கடிதத்துக்கு மட்டும் தான். பதில் எழுதி விட்டு அவளிடம் இருந்து மறுகடிதம் வராதா என்று காத்திருந்தேன். பதில் கடிதமும் வந்தது. இப்படி கடிதத்தின் மூலம் தொடர்ந்த நட்பு காதலாக மலர்ந்தது."
" அவள் இருந்தது பம்பாயில். நான் இருந்தது சென்னையில். எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் சந்தர்பம் கிடைக்கவில்லை. அவள் பம்பாயில் ஒரு கம்பனியில் வேலை செய்கிறாள். நாங்கள் அடிக்கடி டெலிபோனில் பேசுவதுண்டு. ஆனால் நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்பம் இன்னும் கிட்டவில்லை." நான் பேச்சை நிறுத்தி சிறிது மூச்சி வாங்கினேன்.
:இதுவும் ஒரு சாதாரண காதல் தானே, இதில் என்ன புதுமை இருக்கிறது? "
புதுமை என்று ஏதும் இல்லை. ஆனால் சுவாரஸ்யம் இருக்கிறது. நான் டெலிபோனில் பேசும் போது அவளிடம் அவள் படத்தை அனுப்ப சொன்னேன் அவளும் எனது படத்தை அனுப்ப சொன்னாள். நான் எனது படத்துக்கு பதிலாக மாறுகண்ணும் பல் முன்னுக்கு தள்ளிய ஒரு நண்பனின் படத்தை அனுப்பினேன்."
"அதை பார்த்து விட்டு அவள் என்னை வெறுத்து விடுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் குறைகளை பெரிதக நினைக்கவில்லை. கடைசிவரை தன காதல் மாறாது என்று சொன்னாள். இன்று வரை என்மேல் கொண்ட காதல் குறையவில்லை. அடிகடி டெலிபோன் செய்வாள். இந்த ஒரு வாரம் அவளை எங்கோ வேலை விசயமாக வேறு இடத்துக்கு மாத்தி இருப்பதால் அவளுடன் பேச முடியவில்லை."
நான் பேச்சை நிறுத்தினேன்.
" அது சரி அவள் படத்தை அனுப்பினாளா? "
" படம் அனுப்பி இருந்தாள். அழகு என்று சொல்லமுடியாது. கருப்பு தான். என்றாலும் அசிங்கம் இல்லை. அப்படி இருந்தாலும் நான் அவளை மறக்கமாட்டேன். என்னை அவலட்சண உருவத்தில் பார்த்தும் காதலிக்கும் அவளை என்றும் வெறுக்க மாட்டேன். அவள் எனது விரும்புவது போல நானும் அவள் மனதையே விரும்புகிறேன். அதனால் எங்களுக்குள் பிரிவில்லை.அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள்.
" உண்மையில் உங்கள் காதலி கவிதா கொடுத்து வைத்தவள் தான்." அவள் உணர்ச்சி வசப்பட்டு பேசியதில் எனக்கு பொறி தட்டியது.
" என்ன சொன்னிர்கள் கவிதாவா? என் காதலின் பெயரை உங்களுக்கு சொல்லவில்லையே. அப்படியிருக்க அவள் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?" நான் ஆச்சரியமாகக் கேட்டேன்.
அவள் தன நாக்கை கடித்துக் கொண்டாள். பிறகு என்னை ஆழமாக பார்த்து விட்டு தலை குனிந்து சிரித்தாள்.
"கவிதாவை உங்களுக்குத் தெரியுமா? தயவு செய்து சொல்லுங்கள்." நான் ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.
" தெரியும். கவிதாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் மனம் முழுக்க நீங்கள் இருப்பதும் தெரியும்." அவள் அமைதியாக சிரித்தாள்.
" அப்படி தெரிந்துமா என்னை விரும்புவதாக சொன்னீர்கள்? " என்னால் நம்ப முடியவில்லை.
" தெரிந்து தான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் நான் உங்களை காதலிக்கிறேன். அந்த கவிதாவுக்கு உங்களை காதலிக்க உரிமை இருக்கிறது என்றால் எனக்கும் இருக்கிறது." இவள் பைத்தியமோ என்பது போல அவளை பார்த்தேன்.
என் மனதை உணர்த்து கொண்டவள் போல பேசினாள். " எனக்கு பைத்தியம் இல்லை. கவிதாவின் மனதில் நீங்கள் இருப்பது உண்மை என்றால் எனது மனதிலும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஏனெனில் அந்த கவிதா நான் தான்."
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
" இவள் எப்படி கவிதாவாக இருக்க முடியும்? நான் விரும்பும் கவிதா இவள் இல்லையே?" நான் நம்ப முடியாமல் தடுமாறினேன்.
" நீங்கள் எனக்கு பொய்யான படம் தானே அனுப்பி வைத்தீர்கள். அதை போலத் தான் நானும் உங்கள் மனதை அறிய உங்களுக்கு பொய்யான படத்தை அனுப்பினேன். நான் ஒரு வாரம் வேறு இடத்துக்கு மாறுவதாக சொன்னது உண்மையில்லை. உங்களை நேரில் சந்திக்க வேண்டும், உங்களை ஆச்சரிபடுத்த வேண்டும் என்று தான் 2 வாரம் லீவு எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து எனது சினேகிதி வீட்டில் தங்கினேன்."
"நான் உங்கள் ஆபிஸ் வந்து விசாரித்த போது அவர்கள் காட்டிய உங்கள் உருவத்தை பார்த்த போது நீங்களும் என்னிடம் நாடகம் ஆடியதை உணர்ந்தேன் . இன்னும் உங்களை நன்றாகப் புரிந்து கொள்ளத் தான் அடிகடி உங்களை நெருங்கி வந்தேன். "
' அழகான பெண்ணை கண்டதும் என் காதலன் ஜொள்ளு வடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவரா என தெரிந்துகொள்ளவே உங்களை அடிகடி சீண்டினேன். நீங்கள் அசையவில்லை. கடைசியில் எனது காதலை சொல்லி அப்போது சரி நீங்கள் மனம் மாறுகிறிர்களா பார்போம் என் நினைத்தேன். you are great. உண்மையில் நான் கொடுத்து வைத்தவள் தான்." உணர்ச்சி மேலிட்டால் அவள் கண்கள் கசிந்தன.
எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் பார்க்கத் துடித்த என் காதலி என்முன்னால் . அதும் இதனை அழகுடன். ஒரு நந்தவனமே என்முன்னால் . எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. ஆனந்தத்தால் எனது கண்களும் கசிந்தன.