கேவலங்கள்....!
ஆச்சர்யமாய் தானிருக்கிறது சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்கத்தின் அசிங்கங்களை நினைக்கும் போது, சாதாரண பத்திரிக்கையிலிருந்து, டி.வி.விளம்பரம், சினிமா, அரசியல், வலைப்பூக்கள் என்று இலை மறைகாயாய் புரையோடிபோயிருக்கும் இந்த விஷத்தை, விஷம் என்று அறிந்தே நாம் அனுமதித்துக் கொண்டுதானிருக்கிறோம்.
பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் தமிழ் சினிமாக்களில் எல்லாம் பெண்ணை கற்பழிப்பது அவளுக்கு அளிக்கப்படும் தண்டனையாகாவேதான் காட்டப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு சினிமாவில் அந்த ஆண் தவறு இழைத்துவிட்டான் என்று அவனை வேட்டி சட்டையை அல்லது பேண்ட்டை கழட்டி துன்புறுத்தும்படியோ அல்லது பாலினம் சொல்லி அசிங்கப்படுத்தும் வார்தைகளோ வந்திருக்கின்றனவா? வராது... வரவே வராது... காலமெல்லாம் இதைத்தாதனே கற்று பொது புத்தியில் ஏற்றி வைத்திருக்கிறோம்....
மகாபாரத துச்சாதனன் கூட திரெளபதியின் துகிலைத்தான் உரிந்திருக்கிறான்.....தருமனின் வேஷ்டியை அல்ல..............
இதன் நீட்சிதான்.. பத்திரிக்கைகளின் கவர்ச்சிப்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களிலும் கூட்டம் கூட்டமாய் பெண்கள் அழும் காட்சிகள்......என்ன நடக்கிறது? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்...!
சினிமா விமர்சனம் என்ற பெயரில் ஆபாசப் படங்களை விமர்சித்து.. பெண்ணை ஒரு போகப்பொருளாய் சித்தரிக்கும் படங்களை போட்டு விட்டு பகிங்கரமாய் பதின்ம வயதினரை தமது வலைப்பக்கங்களுக்கு இழுக்கும் யுத்தியாக.. விளம்பரங்கள் வேறு செய்கிறார்கள்.. அடுத்தவாரம் இதை எழுதுவேன் அதை எழுதுவேன் என்று,.... இது போன்ற போக்குகள் தனிமனிதரால் நடத்தப்படும் வலைப்பூக்கள் வரைக்கும் வந்திருப்பது...அவலத்தின் உச்சம்தானே....?
பெண்ணைப் போகப்பொருளாய் சித்தரிக்கும் வார்த்தைகளை எப்படி உங்களின் விமர்சனத்திற்குள் கொண்டு வருகிறீர்கள். போதாக்குறைக்கும் 18+ ஜோக்குகள் வேறு வலைப்பூக்களில் இடைசெருகலாய்... இதில் தவறு என்ன இருக்கிறது 18+ என்றுதான் நாங்கள் போடுகிறோமே என்று வேறு நியாயம்..கற்பித்தல் வேறு...
18+ என்று போடுவதின் நோக்கமே...சும்மா போறவன இந்தப் பக்கம் வாடா மச்சி என்று பாக்கு வெத்திலை வைத்து கூப்பிடுவது போலத்தானே...! காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை அது எப்போதும் சங்ககாலத்தில் இருந்து நமது சமுதாயத்தில் இருந்தே இருக்கிறது ஆனால் அதன் வெளிப்பாடு மிக நளினமாய் ரசனைக் குரியதாய் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட வெளிப்பாடுதான்.. நமது ஊர் கோவிலில் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும். தேவையின் அடிப்படையில் கருத்துக்களை சொல்ல வரும் இடத்தில் சில நேரங்களில் காமம் பற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தங்கள் வரும்..ஆனால் அதன் வெளிப்பாடும் அர்த்தங்களோடு அழகாய் இருக்க வேண்டும்...
நியாயங்கள் சொல்ல நீ யார் ? இதுதானே உங்கள் கேள்வி...........சரி ஒன்று செய்யுங்கள்! உங்கள் கணிணியை அணைத்துவிட்டு.......தனியே போய் அமர்ந்து கொள்ளுங்கள். கண் மூடி யோசியுங்கள்........நான் செய்வது சரியா? ஊரும் உலகமும் உழன்று கொண்டிருக்கும் வழமைகளை எல்லாம் நாமும் திரும்பச் செய்தால் அது சரி ஆகுமா? கேளுங்கள் உங்களுக்குள்ளாகவே கேளுங்கள்... ! என்ன பதில் கிடைக்கிறதோ அதை மனசாட்சிக்கு விரோதமின்றி செய்யுங்கள்...!
கருப்பாய் இருப்பது குற்றம் என்று உங்களை சிவப்பாக்க அழகு க்ரீம் விளம்பரம் செய்கிறானே..........அதை ரசித்துப் பார்த்ததில் ஆரம்பிக்கிறது நமது முட்டாள்தனமான நம்பிக்கைகள்....!
அதுவும் பெண்களை குறி வைத்துதான்.. !
உருவாக்குபவனுக்கு ஓராயிரம் வேண்டுகோள்கள் வைத்தாலும் தன்னின் பெருமை பேசும், புகழ் விரும்பு எந்த மனிதனும் தனது அசிங்கத்தை நிறுத்திவிட்டு எதார்த்த வாழ்க்கைக்கு வரப்போவதில்லை வந்ததாய் சரித்திரமும் இல்லை.....
நேர்மையான மனிதர்களே....!திரைப்பட ரசிகர்களே! வாசகர்களே..........சிந்தியுங்கள்...எந்த கருத்தை தேடி உங்கள் மனம் ஓடுகிறதோ அதில் என்ன பயன் இருக்கிறது... என்று? நீங்கள் அப்படி ஓடுவதால் நல்ல விசயங்கள் உங்கள் சந்ததியினருக்கும் கிடைக்காமல் போக மறைமுக காரணமாகிவிடுகிறீர்கள்.....
இப்போது சொல்லுங்கள் எதை போதிக்கப்போகிறீகள் உங்கள் மகன் அல்லது மகளுக்கு?
ஆபாச எழுத்துக்களையும், சினிமாக்களையும், பத்திரிக்கைகளையும் படிக்கவா...?
இல்லை......
சந்தோசத்தையும், எதிர்கால வாழ்கையில் அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும் அறிவுக்களஞ்சியங்களையும், நகைச்சுவையை அதிகரிக்கவைக்கும் படைப்புகளையுமா?
நீங்கள் தீர்மானியுங்கள்........