நிலவோடு உறவாடிய இருள்போர்வை
மெல்ல விலக ,அதிகாலை பனி சூழ,
புற்களை சிம்மாசனம் ஆக்கி,
பனித்துளிகள் அதன் மேல் வீற்றிருக்க ...
இரவும் முழுவதும் உறங்கிய அசதியில்
மரங்கள் துயில் எழுந்து சோம்பல் முறித்து
ஆதவன் வழங்கும் ஒளி உணவிற்காய்
கீழ் வானத்தை நோக்கி எதிர் பார்த்திருக்க...
கதிரவனும் கண்ணை கசக்கி
துயில் எழ முற்பட
சிறகுகள் விரிக்காத சிறிய பறவைகள்
அதை வரவேற்கும் வாத்தியங்களாய்
சங்கீதம் கற்காமலே இனிமையாய்
குரல் எழுப்பிக்கொண்டிருக்கும்
இனிமையான காலை பொழுது.
தரு நிழலும் , தூய காற்றும் , வான்மழையும்
இயற்கையின் அணிகலன்கள் .
வளர்ந்துவரும் நாகரிக உலகம்
தன் தேவைக்கு இயற்கையை அழித்து
எதிர்கால சந்ததியை இருளில் தள்ள முற்படும்
அறியாமையை களைவோம்.
இயற்கை உணவுமுறை மாறியது.
மனிதனின் ஆயுளும் குறைந்தது.
ஊட்டசத்து குறைவு,தினமும் ஒரு புது வியாதி ,
தூய காற்றுக்கு தட்டுப்பாடு,
கணக்கிலடங்க புதிய வியாதிகள் .
கணினி மயத்தையும் , விண்ணுலகம் செல்லும்
வல்லமையையும் கற்று தரும் மானிடா ..
இப்புவி இயங்க ஆதாரமாய் இருக்கும்
இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தையும் ,
அதற்குரிய வழிமுறைகளையும்
உன் சந்ததிக்கு கற்று தந்து
எதிர்காலத்தில் மனித இனம்
உணவிற்காய் அல்லல்படும் அவலம் களைய முற்படு.
இயற்கையோடு ஒன்றிய நவீனயுகமே
வளமான வாழ்விற்கு வழி .
இயற்கை அன்னையை பாதுகாப்போம் .
நம் சந்ததி வளமுடம் வாழ உறுதி அளிப்போம்