உறவுகள் பல ஆண்டவன் படைத்தாலும்
தொப்புள்கொடி உறவே சிறந்தது
உதிரம் கொடுத்து பத்தரைமாத
தங்கமாய்,கருவறையில் சுமந்து
உன் மறுபிறப்பில் என் உரு கொடுத்தாய்!
நித்தம் தன் இரத்தம் முறித்து
உணவாய் கொடுத்தாய்,நித்திரை
கலைத்து தத்தம் தன்னை காத்தாய்
சிறு எறும்பு என் மீது ஏறினாலும்
எமனாய் மாறினாய் நீயே!
உன் நெஞ்சில் நிறைந்த
களங்கமில்லா பாசத்தை,பாடும்
தாலாட்டுலேயே உணர்வேன், நீ
ஊட்டிய நிலாச் சோற்றின்
சுவைக்கு ஈடாகுமா உண்பன அனைத்தும்!
நான் கலங்கும் வேளைகளில்
கண்ணின் கருவிழியில் வைத்து
தாங்கினாய், காலத்தால் அழிக்கமுடியா
உறவு நீ, அன்பின் துணைகொண்டு
ஆராயமுடியும் அண்டம் நீ!
எனை தாங்கிய ஏடாகிய
உன் தோள்களிலும்,மடியிலும்
காணாத சுகமா கண்டேன்
இன்று நான் துயிலும்
பஞ்சு மெத்தையில்!
நான் பிறந்த இம்மண் வாசனை
அறியுமுன் , அறிந்தேனடி உன்
வாசனை, தகப்பனென்ரு அடையாளம்
கொடுத்தவளும் நீதான் , என்
பண்பறிவை படைத்தவளும் நீதான்!
நான் உயர வளர்ந்தாலும்
தளரவில்லை உன் அன்பு
ஆடையென்ன அலங்காரமென்ன
கல்லாய் நிற்கும் கடவுள் கூட
காணிக்கை எதிர்பார்க்கிறது!
எதிர்பார்ப்பிலாமல் கிடைக்கும்
அன்பு, அன்னையின் அன்பு ஒன்றே
நம் சுவாசத்தின் சுதந்திரம் அவளே
முதர்கடவுளுக்கு முன்னோடியும் நம்
கண்முன் வாழும் தெய்வமும் அவளே
அனைத்தையும் அளக்க அளவுகோள்
ஆயிரமாயினும் அன்னையின்
அன்பை அளக்க அளவுகோள் இல்லை
அன்னையே அணையா விளக்கே
காலம் கடந்தாலும், கடலலைகள்
ஓய்ந்தாலும் , என் உயிர் பிரியும்வரை
நீ எரிய திரியாய் இருப்பேனடி!!!