நமது தோல்களுடைய இயல்பான நிறம், பளபளப்பு, மிருதுவானத் தன்மை ஆகியவற்றை பராமரிப்பதற்கு வேண்டிய எளிய தீர்வுகளை ஆயுர்வேதம் அளிக்கிறது.
அத்துடன், தோலின் அழகினை நிலைநிறுத்துவதற்கும், ஆரோக்கியத்தைக் காப்பதற்குமான வழி முறைகளும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன.
அழகிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தோல் ஆரோக்கியத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது.
ஆரோக்கியமான தோல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு ஆயுர்வேதம் நல்கின்ற விளக்கம்... பளபளப்பானது, தெளிவானது, மிருதுவானது, ஒரே நிறம் கொண்டவை, சுருக்கங்கள் இல்லாதவை, தேவைக்கேற்ற எண்ணெய்ப் பசை கொண்டிருத்தல், சாதாரணமாக வியர்வை இருத்தல் போன்றவை ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமான தோலுக்கான அடிப்படை.
நமது உடலை சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு மண்டலம் என்ற நிலையில், தோலுக்கு சிறிய கீறல் முதல் நோய்கள் வரை வருவதற்கான சாத்தியம் கூடுதலாகவே உள்ளது. குறிப்பாக, வானிலை மாற்றங்கள், தூசு, புகை, காற்றில் ஏற்படுகின்ற மாசு, கிருமிகள் போன்றவை தோலுக்கு கெடுதலான பல நிரந்தர பிரச்சனைகளாக இருக்கின்றது. அதனால் தோலைப் பாதுகாப்பதற்கு நாம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
உணவுமுறையில் கவனம்!
நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து மிக்கதானால் மட்டுமே தோல் ஆரோக்கியமானதாக இருக்கும். தோலுக்கு அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் புரதம், கால்சியம் ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மீன், முட்டை, பால், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேநீர், காபி, மது, காரமும் மசாலாவும் மிகுதியாக இருக்கின்ற உணவு போன்றவற்றை தவிர்க்கவும். கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிடவும். வறுத்த, பொறித்த உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு மட்டுமின்றி, தோல் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.
தூய்மையான காற்று, சூரிய வெளிச்சம், முறையான உடற்பயிற்சி போன்றவை தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயல்பான அம்சங்கள்.
குளிரும் வெப்பமும் கூடுதலாக இருப்பது தோலுக்கு நல்லதல்ல. வெப்பம் அதிகமாகும்போது, தோலினுடைய மடிப்புகளில் வியர்வை தேங்கி நிற்கும். அந்த இடங்களில் தோல் மிருதுவாகும். அதனால் அங்கே அலர்ஜி உண்டாகும்.
மேலும், தோல் நோய்கள் வராமல் தவிர்க்க, உடை அணியும் முறைகளிலும் தனி கவனம் தேவை.
கோடை காலங்களில்...
கோடை காலங்களில் காலை - மாலை இருவேளையும் குளிப்பது, தோல் பாதுகாப்புக்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தேகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், தோல் பாதுகாப்புக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.
குளிர் காலங்களில்...
குளிர் காலங்களில் வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். உதட்டில் நெய்யோ அல்லது வெண்ணெயோ தேய்த்துக்கொள்வது நல்லது. உதடுகள் வெடிக்காமல் இருப்பதற்கு இது உகந்தது.
குளிர் காலத்தில் இளம் சூடான தண்ணீரில் குளிப்பதுதான் நல்லது. தலையில் வெந்நீர் ஊற்றக்கூடாது. குளித்து முடித்தவுடன் உடம்பில் இருக்கும் நீரை நன்றாக துடைக்க வேண்டும். குறிப்பாக, உடம்பில் உள்ள மடிப்புகளிலும், கால் பாதங்களில் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
காலை வேளையில் குளிப்பதுதான் மிகவும் நல்லதாகும். உணவு அருந்தியதற்குப் பிறகும், நள்ளிரவிலும் குளிப்பதைத் தவிர்க்கவும். வெந்நீரிலும், குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றி குளிப்பதனால் இரத்த ஓட்டம் கூடுவதற்கு வழிவகுக்கப்படும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், நம்மை தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் அண்டாது..!