Author Topic: ~ `எஸ்ஐபி'... மூன்று எழுத்து முதலீட்டு மந்திரம்! ~  (Read 344 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
`எஸ்ஐபி'...
மூன்று எழுத்து முதலீட்டு மந்திரம்!


முதலீட்டில் அதிக லாபம் பெறும் வழிமுறைகளில் ஒன்று, ‘முறையான தொடர் முதலீடு’. இதனை ஆங்கிலத்தில் ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்  (Systematic Investment Plan - SIP) என்கிறார்கள். சுருக்கமாக `எஸ்ஐபி'.
வங்கி, தபால் அலுவலகங்களில் மாதா மாதம் சேமித்து வரும் ‘தொடர் சேமிப்பும்' (Recurring Deposit -RD) இந்த எஸ்ஐபி முதலீட்டு முறையின் கீழ்தான் வரும். இருந்தாலும், இது அதிக லாபகரமாக இருப்பது பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃப்ண்ட் முதலீடுகளில்தான். அதாவது, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃப்ண்டுகளில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்து வரும் முறைதான் எஸ்ஐபி.



இந்த முறையில் மாதம்தோறும் முதலீடு செய்து வருவதால் என்ன லாபம் என்கிறீர்களா..?
நம்மில் பலருக்கு மொத்தமாக முதலீடு செய்ய பெரிய தொகை இருக்காது. எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 500 ரூபாய், 1,000 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். இது முதல் லாபம். அடுத்து, சந்தையின் ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரும்போது, இந்த முறையில் ஒருவருக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அதன் மதிப்பை யூனிட்களில்தான் குறிப்பார்கள். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் புதிதாக வரும்போது, ஒரு யூனிட் மதிப்பு 10 ரூபாயாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் 10,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் ஒரு யூனிட் மதிப்பு 10 ரூபாய் என்பதால் அவருக்கு 1,000 யூனிட்கள் கிடைக்கும்.
எஸ்.ஐ.பி முறையில் ஓவ்வொரு மாதமும் ஒருவர் முதலீடு செய்யும்போது அவருக்குக் கிடைக்கக் கூடிய யூனிட்களின் எண்ணிக்கை, முதலீடு செய்யும் நாளில் யூனிட் மதிப்பு அடிப்படையில் இருக்கும். இந்த மதிப்பை `என்ஏவி' (Net Asset Value) என்பார்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் திரட்டப்பட்ட நிதி, முதலீடு செய்யப்பட்ட நிறுவனப் பங்குகளின் விலையேற்றம் மற்றும் இறக்கத்துக்கு ஏற்ப இந்த என்ஏவி மதிப்பும் ஏற்ற இறக்கத்துக்கு உட்படும்.
சில மாதங்களில், பங்குச் சந்தை உயரும்போது, முதலீட்டு தொகைக்கு குறைந்த எண்ணிக்கையில் யூனிட்கள் கிடைக்கலாம். சில மாதங்களில் பங்குகளின் விலை குறையும்போது, அதே முதலீட்டு தொகைக்கு கூடுதல் எண்ணிக்கையில் யூனிட்கள் கிடைக்கும் (அட்டவணையைப் பார்த்தால் எளிதில் விளங்கும்).
இதேபோல், தொடர்ந்து சில ஆண்டுகள் எஸ்ஐபி முறையில் மாதாமாதம் முதலீடு செய்து வரும்போது அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது சராசரியாக கூடுதல் யூனிட்கள் கிடைத்திருக்கும்.
உதாரணத்துக்கு ஒருவர், புதிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதல் மாதத்தில் மொத்தமாக 12,000 ரூபாயை முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு யூனிட் மதிப்பு 10 ரூபாய் என்கிற நிலையில் அவருக்கு மொத்தமாக 1,200 யூனிட்கள் கிடைத்திருக்கும். இதுவே வேறு ஒருவர் மாதாமாதம் 1,000 ரூபாயை 10 தேதி வாக்கில் முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தில் 12 மாத முடிவில் மொத்தம் 1,276.80 யூனிட்கள் கிடைத்திருக்கும் (அட்டவணையில் விவரம் இருக்கிறது).



ஆண்டு இறுதியில் ஒரு யூனிட் மதிப்பு ` 12.25 என்கிறபோது மொத்த முதலீடு செய்திருப்பவரின் முதலீட்டு மதிப்பு ரூ 1200x12.25 = 14,700 ஆகவும், மாதாமாதம் முதலீடு செய்தவரின் யூனிட்களின் மதிப்பு ரூ 1276.80x12.25 = 15,640.80 ஆகவும் அதிகரித்திருக்கும். இங்கே மொத்த முதலீட்டைவிட எஸ்ஐபி முறையில் ` 940.80 கூடுதல் லாபம் கிடைத்திருக்கிறது என்பதோடு, கஷ்டமில்லாமல் மாதம் குறைந்த தொகையை முதலீடு செய்ய முடிந்தது என்பது கூடுதல் வசதி.
சந்தை தொடர் ஏற்றத்தில் இருந்தால் எஸ்ஐபி முறையைவிட மொத்த முதலீடு லாபகரமாக இருக்கும். அப்படி இருப்பது என்பது மிக அரிது. அடுத்து ஒருவர் முதலீடு செய்து வரும் காலகட்டத்தில் யூனிட்களின் என்ஏவி மதிப்பு குறைந்து வருவது லாபகரமாக இருக்கும். எனவே, முதலீடு செய்யும் காலத்தில் யூனிட் மதிப்பு குறைந்தால், பயம் இல்லாமல் முதலீட்டை தொடருங்கள். முடிந்தால், யூனிட் மதிப்பு மிகவும் குறைந்தால், கூடுதலாக 5,000, 10,000 என அந்த ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். இப்படி கூடுதல் முதலீடு செய்வது மிக எளிது. இதற்கான காசோலையுடன் ஒரு சிறிய படிவத்தை நிரப்பி உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் கொடுத்தால் போதும்.
எஸ்ஐபி... ஏற்றம் தரும் வாழ்வில்!