நிழல் படத்தின் வெளிச்சம் !
வீல்.. வீல்.. என்ற சத்தம் கேட்டு
விரைந்து ஓடினேன் ஓசை வந்த திசையை நோக்கி
பால் சோறு பிசைந்த கரத்தையும்,
சிவப்பு நிறமாய் மாறியிருந்த அன்னத்தையும் கண்டேன்.
பாதி உணவே போதும் என நினைத்து,
பக்கம் இருந்த தன்னை மறந்து
அத்தனை சீக்கிரத்தில் ஆழ்தூக்கம் என்னவோ? என்றவாறு
தாயின் முந்தியை இழுத்தவண்ணம் இருந்த
மழலையின் அழுகையே அது !
அப்பூவினை சமாதனம் செய்யத் தெரியாது
அள்ளி எடுத்துக்கொண்டது இன்னொரு பிஞ்சுக்கரம்
போருக்கு அர்த்தம் தெரியாத மலரும், மொட்டும்
ஓய்ந்த புயலுக்கு நடுவில் நின்ற காட்சி என் கண்முன்னே
கையிலிருந்த புகைப்படக் கருவியை நேரே எடுத்து
ஒளியிழந்த அவ்வைரங்களை கண்ணோக்கி படம் பிடித்தேன்
அப்பெட்டியிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்
இந்த நிழலுலகின் பிரதிபலிப்பாய் இருக்கட்டும்..
உலகத்திற்கு தெரியட்டும் என்று.
கிறுக்கலுடன்
-பருஷ்ணி
