என்னுள் வருவாயா?
உனக்காக ஏங்குகின்றேன்
ஏன் என்னுள் நீ செயலற்று போகிறாய்?
தந்த வலிகளால் வெறுக்கின்றாயா?
வேண்டுதல் செய்யும் வேளை உன்னை,
முகத்துக்கும் அதன் முன்பாய் பிடிக்கும்
கரத்துக்கும் நடுவே காண்கின்றேன்;
கடவுள் தந்த வரமாய்!
பழுதற்றே தெரிகின்றாய், ஆனால் ஏன்
பரிசோதனையில் பழுதாய்?
தேவையற்ற துவாரங்கள் கொண்டவளாய்!
தேவையான துவாரங்கள் அடைபட்டவளாய்!?
இரக்கமின்றி நீ கக்கும் கோவக்கனலில்
என்முகம் பிரகாசிக்கிறதே அப்பாவியென
என்மேல் ஏனுனக்கு இத்தனை வெறுப்பு
இமைக்காமல் கண்கள் ஏங்குதே இரங்காயோ?
நீ ஓய்ந்தால்? உன்முன் தெரியும் உருப்போல்
உணர்வற்று! உயிரில்லா சடபொருளாய்
போவேனே! ஏன் என்னை வெறுக்கின்றாய் ?
பிறரை நேசிக்க தவறிய தண்டணையா
நீதிக்கு முரணாய் இச்சித்த குற்றமா
அவதூறுகள் பேசியதன் வினைப்பயனா
வன்முறை பகை உன்னுள் விதைத்த சுமையா
அடுத்தோரை இகழ்ந்துரைத்த வேதனையா
தவறை தவறென நீ சொல்ல மறந்ததேயில்லை
சரியை நான் ஒருபொழுதும் செய்யவேயில்லை
உனக்கெதிராய் குற்றம் செய்தேன் ஒரே ஒருறை
எனை மன்னிப்பாயா?
திருந்திவிட்டேன் வருந்துகின்றேன்; வாழ
விரும்புகின்றேன் உயிர்வாழும் அவாவல்ல,
எனைபோல் வாழ்வோர்க்கு உனை உணர்த்தவே
ஆசை, ஒரேயொரு முறை எனை மன்னிப்பாயா?
எனை சுற்றி எங்குமே காரிருள்! கண்டாயா?
நீ எனை பிரிந்தபின் உடலை எரிக்கையில்
எழும் கரும்புகையின் அதே நிறம்
இது என் பயணத்தின் நேரம்வந்ததெனும்
அறிவிப்பா?
உன்னிடம் கெஞ்சியது போதும்
உன் எண்ணப்படி பயணம்போ
நானும் ஆயத்தமே! போனால்
விரைவாய்போ!உள்ளவரை
வீண்செலவு!
என்னுள்ளே உனையும் சேர்த்தே
படைத்தவர், நம்மிலும் பெரியவர்!
அவர் விருப்பம்போல் நிகழட்டும்!.
கடவுளுக்கே நன்றி
[highlight-text]"வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்"[/highlight-text]