Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 47231 times)

Offline Anu

கறுப்பு பிளேக்-1

இந்தியர் குடியிருந்த ஒதுக்கல் இடங்களை நகரசபை வாங்கிக் கொண்டதுமே அவ்விடத்திலிருந்து இந்தியர் அகற்றப்பட்டு விடவில்லை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்து விட முடியாமல் இருந்ததனால், அந்த ஆபாசப் பகுதியிலேயே இந்தியர்கள் இருந்து கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது என்பதுதான் இதில் வித்தியாசம். சொந்தக்காரர்கள் என்று இல்லாது போய்விட்டதால் அவர்கள் நகரசபையின் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களாயினர். இதன் பலனாக அவர்களுடைய சுற்றுப்புறங்களெல்லாம் முன்னால் இருந்ததைவிட அதிக ஆபாசமாயின. அவர்களே சொந்தக் காரர்களாக இருந்தபோது சட்டத்திற்குப் பயந்துகொண்டாவது. ஏதோ ஒரு வகையில் சூழ்நிலை சுத்தமாக இருக்கும்படி செய்யவேண்டியிருந்தது. நகர சபைக்கோ  அப்படிப்பட்ட பயம் எதுவும் இல்லை! அங்கே குடியிருந்தோர் தொகை அதிகமாயிற்று. அதோடு ஆபாசமும் ஒழுங்கீனமும் பெருகின. நிலைமை இவ்வாறு இருந்து வந்ததைக் குறித்து  இந்தியர் கொதிப்படைந்திருந்த சமயத்தில் அங்கே திடீரென்று கறுப்புப் பிளேக் நோய் பரவியது.

இந்த நோயை நிமோனிக் பிளேக் என்றும் கூறுவது உண்டு. புபோனிக் பிளேக்கைவிட இது மகா பயங்கரமானதும் பிராணாபாயமானதுமாகும். இந்த நோய் பரவுவதற்குக் காரணமாக இருந்த இடம், அதிர்ஷ்டவசமாக இந்தியர் குடியிருப்பு இடமன்று. ஜோகன்னஸ்பர்க்குப் பக்கத்தில் இருந்த தங்கச் சுரங்கம் ஒன்றிலிருந்தே இந்த நோய் பரவியது. அச்சுரங்கத்தின் தொழிலாளர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள். அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள், அவர்களுடைய வெள்ளைக்கார எஜமானர்களே. அங்கே இச் சுரங்க சம்பந்தமான வேலையில் சில இந்தியர்களும் இருந்தனர். இவர்களில் இருபத்து மூன்று பேருக்கு இந் நோய் கண்டது. ஒரு நாள் மாலை இந்நோயினால் கடுமையாகப்  பீடிக்கப்பட்ட இவர்கள், இந்தியர் குடியிருப்புப் பகுதியிலிருந்த  தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இந்தியன் ஒப்பீனியனுக்கு அப்பொழுது சந்தாசேர்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ மதன்ஜித் அப்பொழுது அப் பகுதிக்குப் போயிருந்தார். அவர் அச்சம் என்பதை ஒரு சிறிதும் அறியாதவர். கொள்ளை நோய்க்குப் பலியான இத் துர்ப்பாக்கியர்களைப் பார்த்ததும் அவர் உள்ளம் பதறியது.

பென்ஸிலினால் எழுதி எனக்குப் பின்வருமாறு ஒரு குறிப்பு  அனுப்பினார்: “திடீரென்று கறுப்புப் பிளேக் நோய் கண்டிருக்கிறது. தாங்கள் உடனே வந்து அவசரமாக நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால் மகா மோசமான விளைவுகளுக்கு நாம் தயாராக வேண்டியிருக்கும். தயவுசெய்து உடனே வாருங்கள்.” காலியாக இருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து ஸ்ரீ மதன்ஜித் தைரியமாகத் திறந்தார். நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களையெல்லாம்  அவ் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்பகுதிக்கு நான் உடனே சைக்கிளில் போனேன். எந்தச் சந்தர்ப்பத்தை  முன்னிட்டு அந்த வீட்டை எடுத்துக் கொள்ளநேரிட்டது என்பதைக் குறித்து நகரசபை நிர்வாகிக்கு உடனே எழுதினேன். இச் செய்தியை அறிந்ததும் ஜோகன்னஸ்பர்க்கில் வைத்தியத் தொழில் செய்துவந்த  டாக்டர் வில்லியம் காட்பிரே உதவிக்கு விரைந்து வந்து சேர்ந்தார். நோயாளிகளுக்கு அவரே டாக்டரும் தாதியுமானார். ஆனால், இருபத்து மூன்று நோயாளிகளை நாங்கள் மூன்று பேர் கவனித்துக் கொண்டுவிட முடியாது. ஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே  அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை. அச் சமயம் என் அலுவலகத்தில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் மூவரின் பெயர்கள் ஸ்ரீ கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் என்பவையாகும். மற்றொருவரின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை.

கல்யாண்தாஸை அவர் தந்தை என்னிடம் ஒப்படைத்திருந்தார். பரோபகார குணத்திலும், சொன்ன மாத்திரத்தில் சொன்னதை மனமுவந்து பணிவுடன் செய்வதிலும் கல்யாண்தாஸைவிடச் சிறந்தவர்கள் யாரையும் நான் தென் ஆப்பிரிக்காவில் கண்டதில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அப்பொழுது மணமாகவில்லை. எவ்வளவுதான் மகத்தானவை ஆயினும்  ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடமைகளை அவர்மீது சுமத்த நான் தயங்கவே இல்லை. மாணிக்கலால், ஜோகன்னஸ்பர்க்கில் எனக்குக் கிடைத்தார். இவருக்கும்  மணமாகவில்லை என்றுதான் எனக்கு ஞாபகம். ஆகவே, அந்த  நால்வரையும் - அவர்களைக் குமாஸ்தாக்கள் என்று சொன்னாலும் சரி; சக ஊழியர்கள் அல்லது என் புதல்வர்கள் என்று சொன்னாலும் சரி - தியாகம் செய்துவிடத் தீர்மானித்தேன். கல்யாண்தாஸைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்றவர்களும் - அவர்களிடம் நான் கூறியதுமே-சம்மதித்து விட்டனர். “நீங்கள் எங்கே இருப்பீர்களோ அங்கே நாங்களும் இருப்போம்” என்பதே அவர்களுடைய சுருக்கமான, இனிமையான பதில். ஸ்ரீ ரிச்சின் குடும்பம் பெரியது. அவரும் இதில் குதித்து விடத்தயாராக இருந்தார். ஆனால், அவரை நான் தடுத்தேன். அவரை இந்த ஆபத்திற்கு உட்படுத்த எனக்கு மனம் வரவில்லை. ஆபத்துப் பிராந்தியத்திற்கு வெளியே இருந்த வேலைகளை அவர் கவனித்துக் கொண்டார். 

கண்விழித்துப் பணிவிடை செய்த அன்றிரவு மிகப் பயங்கரமான இரவு.  அதற்கு முன்னால் எத்தனையோ நோயாளிகளுக்கு நான்  பணிவிடை செய்திருக்கிறேன். ஆனால், கறுப்புப் பிளேக் நோய் கண்டவர்களில் யாருக்கும் நான் பணிவிடை செய்ததே இல்லை. டாக்டர் காட்பிரேயின் தீரம் மற்றவர்களையும் தொத்திக்கொண்டது.  பணிவிடை செய்வது என்பது அதிகமாகத் தேவைப்படவில்லை. அப்போதைக்கப் போது அவர்களுக்கு மருந்து கொடுத்துவருவது, நோயாளிகளின் தேவைகளைக் கவனிப்பது, அவர்களுடைய படுக்கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது,  அவர்கள் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவது ஆகியவையே நாங்கள் செய்ய வேண்டியிருந்தவை. வேலை செய்த இளைஞர்கள் காட்டிய தளராத உற்சாகத்தையும் பயமின்மையையும் கண்டு,  அளவு கடந்த ஆனந்தமடைந்தேன். டாக்டர் காட்பிரேயின் தைரியத்தையும், அனுபவம் மிக்கவரான ஸ்ரீ மதன்ஜித்தின் தீரத்தையும், யாரும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இன்னும் வயது வராதவர்களான இந்த இளைஞர்களின் உற்சாகத்தை என்னவென்று கூறுவது? அன்றிரவு எல்லா நோயாளிகளையும்  காப்பாற்றிவிட்டோம் என்பதுதான் எனக்கு ஞாபகம். ஆனால், அச்சம்பவம்-அதிலுள்ள பரிதாபம் ஒரு புறமிருக்க-  உள்ளத்தைக் கவரும் முக்கியத்துவம் உடையதாகும். எனக்கு அது பாரமார்த்திக மதிப்பு வாய்ந்தது. ஆகையால், அதை விவரிக்க மேலும் இரு அத்தியாயங்களை நான் எழுத வேண்டும்.


Offline Anu

காலி வீட்டை எடுத்துக்கொண்டு, நோயாளிகளையும் கவனித்துக்  கொண்டதற்காக நகரசபை நிர்வாகி எனக்கு நன்றி தெரிவித்து எழுதினார். இப்படிப்பட்டதோர் அவசர நிலைமையைச் சமாளிப்பதற்கு நகரசபையிடம் உடனே செய்வதற்கான சிகிச்சை முறைகள் எவையும் இல்லை என்பதையும்,  அவர் மனம்விட்டு ஒப்புக்கொண்டார். நகரசபை தனது கடமையைக் குறித்து விழிப்படைந்தது; துரிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுவதில் காலதாமதம் செய்யவில்லை. மறுநாள், காலியாக இருந்த ஒரு கிடங்கை என்னிடம் ஒப்படைத்தார்கள். நோயாளிகளை அங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசனை கூறினர். ஆனால், அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் வேலையை நகரசபை எடுத்துக்கொள்ளவில்லை. அக் கட்டிடம் மிகவும் அசுத்தமாகவும் வசதியில்லாமலும் இருந்தது. அதை  நாங்களே சுத்தம் செய்து கொண்டோம். தரும சிந்தனையுள்ள இந்தியரின் உதவியைக் கொண்டு சில படுக்கைகளையும் தேவையான மற்றவைகளையும் சேகரித்தோம். இவ்வாறு அதைத் தாற்காலிகமானதோர் வைத்திய சாலையாக்கிக் கொண்டோம். நகர சபை, உதவிக்கு ஒரு தாதியை அனுப்பியது. பிராந்தி முதலிய மற்ற ஆஸ்பத்திரிச் சாதனங்களுடன் அவர் வந்தார். டாக்டர் காட்பிரேயே இன்னும் பொறுப்பு வகித்து வந்தார்.

தாதி மிகுந்த அன்பானவர்: தாமே நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய விரும்பினார்.  நோய் அவருக்கும் தொத்தி என்பதற்காக நோயாளிகளைத் தொட அவரை நாங்கள் விடவில்லை. நோயாளிகளுக்கு அடிக்கடி பிராந்தி கொடுக்குமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நோய்த் தடுப்பு முறையாகத் தாதியும் அடிக்கடி பிராந்தி சாப்பிட்டார். அதேபோல எங்களையும் சாப்பிடச்சொன்னார். ஆனால், எங்களில் யாரும் அதைத் தொடவில்லை. நோயாளிகளுக்குக்கூட அது  பயனளிக்கவல்லது என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. டாக்டர் காட்பிரேயின் அனுமதியின்பேரில் பிராந்தி சாப்பிடாமலேயே இருக்கத் தயாராயிருந்த மூன்று நோயாளிகளுக்கு மண்  சிகிச்சை அளித்து வந்தேன். அவர்களுடைய தலைக்கும் மார்புக்கும் ஈர மண் வைத்துக் கட்டினேன். அவர்களில் இருவர் பிழைத்துக் கொண்டார்கள். கிடங்கிலிருந்த மற்ற இருபது பேர் இறந்து விட்டனர்.

இதன் நடுவே நகரசபை மற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது.  ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து ஏழுமைல் தூரத்தில் தொத்துநோய்  கண்டவர்களை வைப்பதற்கு என்று ஓர் இடம் இருந்தது. பிழைத்திருந்த இருவரையும் அங்கிருந்த கூடாரங்களுக்குக் கொண்டுபோயினர். புதிதாக நோய் கண்டவர்களை அங்கே கொண்டு போவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். இவ்விதம் இவ் வேலையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். சில தினங்களுக்கெல்லாம் அந்த நல்ல தாதி அந்நோய் கண்டு இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம். நோயாளிகளில் அந்த இருவர் மாத்திரம் எப்படிப் பிழைத்தார்கள், எங்களுக்கு மாத்திரம் அந் நோய்  எப்படிப் பற்றாமல் இருந்தது என்பதைக் கூறுவது சாத்தியமில்லை. ஆனால், இதில் ஏற்பட்ட அனுபவம், மண் சிகிச்சையில் எனக்கு இருந்த  நம்பிக்கையை அதிகப்படுத்தியது. மருந்து என்ற வகையில்கூட,  பிராந்தியின் ஆற்றலில் எனக்கு இருந்த நம்பிக்கையின்மை பலப்பட்டது.  இந்த நம்பிக்கையோ அல்லது இந்த நம்பிக்கையின்மையோ எந்த உறுதியான ஆதாரத்தையும் கொண்டது அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், அன்று நான் பெற்ற கருத்து இன்றும் எனக்கு அப்படியே இருந்து வருகிறது. ஆகையால், அதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதினேன்.

பிளேக் நோய் கண்டதும் நகரசபையைக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினேன். இந்தியர் குடியிருந்த பகுதி நகரசபைக்குச் சொந்தமாகிவிட்ட பிறகு அச்சபை அசட்டையாக இருந்துவிட்ட குற்றத்தைச் செய்திருக்கிறது என்றும், பிளேக் தோன்றியதற்கே அவர்கள்தான் பொறுப்பு என்றும் அதில் எழுதினேன். அந்தக் கடிதத்தினால் ஸ்ரீ ஹென்றி போலக் எனக்குக் கிடைத்தார். காலஞ்சென்ற பூஜ்யர் ஜோஸப் டோக்கின் நட்பு ஏற்பட்டதற்கும் அதுவே ஓரளவுக்குப் பொறுப்பாயிற்று. ஒரு சைவ உணவு விடுதியில்  நான் சாப்பிடுவது வழக்கம் என்று முந்திய அத்தியாயம் ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அங்கே தான் ஸ்ரீ ஆல்பர்ட் வெஸ்ட்டைச்  சந்தித்தேன். ஒவ்வொரு நாள் மாலையில் இந்த விடுதியில்  நாங்கள் சந்தித்துச் சாப்பிட்ட பிறகு உலாவப் போவது வழக்கம். ஒரு சிறு அச்சகத்தில்  ஸ்ரீ வெஸ்ட் கூட்டாளி. பிளேக் நோய் ஏற்பட்டதைக் குறித்து நான் எழுதியிருந்த கடிதத்தை அவர் பத்திரிகையில் படித்தார். என்னை அந்த விடுதியில் காணாது  போகவே அவருக்குக் கவலையாகிவிட்டது. தொத்து நோய் ஏற்படும் காலங்களில் சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டுவிடுவது என்பதை  நீண்ட காலமாகவே நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிளேக் நோய் ஏற்பட்டதும் நானும் என் சக ஊழியர்களும் எங்கள் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டுவிட்டோம். ஆகையால், இந்த நாட்களில் மாலையில் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். மத்தியானச் சாப்பாட்டைக்கூட மற்ற விருந்தினர் வருவதற்கு முன்னால் சாப்பிடுவேன். அந்தச் சாப்பாட்டு விடுதியின் சொந்தக் காரரை எனக்கு நன்றாகத் தெரியும். பிளேக் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும் வேலையில் நான் ஈடுபட்டிருப்பதால் சாத்தியமான வரையில் நண்பர்களைச் சந்திப்பதைத்  தவிர்த்துக்கொள்வது என்று இருக்கிறேன். என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்.

சாப்பாட்டு விடுதியில் இரண்டொரு நாட்கள் என்னைக் காணாது போகவே ஸ்ரீ வெஸ்ட், ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு வந்தார். உலாவப் போவதற்கு அப்பொழுதுதான் நான் தயாராகிக்கொண்டிருந்தேன். நான் கதவைத் திறந்ததும் ஸ்ரீ வெஸ்ட் கூறியதாவது: “உங்களைச்  சாப்பாட்டு விடுதியில் காணவில்லை. எனவே,  உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று பயந்து விட்டேன். ஆகையால், உங்களை வீட்டிலாவது போய்ப் பார்ப்போம் என்பதற்காகக் காலையில் புறப்பட்டு வந்தேன். இப்பொழுது நீங்கள் சொல்லும் பணியைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன். நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் உதவி செய்யத்தயாராயிருக்கிறேன். என்னால்  பராமரிக்கப்பட வேண்டியவர்கள் யாருமில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.” என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டேன். ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்  பின்வருமாறு பதில் சொன்னேன்: “உங்களை நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய நான் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. மேற்கொண்டும் புதிய நோயாளிகள் இல்லை என்றால், இரண்டொரு நாளில் எங்களுக்கே வேலையிராது ஆனால், நீங்கள் செய்யக் கூடியது ஒன்று இருக்கிறது.”

அது என்ன?” என்று அவர் கேட்டார். டர்பனிலிருக்கும் இந்தியன் ஒப்பீனியன் அச்சக நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளுவீர்களா? ஸ்ரீ மதன்ஜித்துக்கு இங்கே வேலை இருக்கிறது. டர்பனில் யாராவது இருக்க வேண்டியிருக்கிறது. உங்களால் அங்கே இருக்க முடியுமானால் எனக்கு அந்தக் கவலை நீங்கியதாக எண்ணுவேன்” என்றேன். எனக்கும் ஓர் அச்சகம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேகமாக நான் அங்கே போவது சாத்தியமாகலாம். ஆனால், என் முடிவான பதிலை இன்று  மாலை கூறலாமல்லவா? மாலையில் நாம் உலாவப்போகும்போது அதைக் குறித்துப் பேசுவோம்” என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். மாலையில் பேசினோம். போவதற்குச் சம்மதித்தார்.  சம்பளத்தைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. ஏனெனில், பணம் அவர் நோக்கமல்ல. என்றாலும், மாதம் 10 பவுன் சம்பளமும், ஏதாவது லாபம் வந்தால்  அதில் ஒரு பங்கும் என்ற முடிவுக்கு வந்தோம். தமக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்கும் வேலையை என்னிடம்  விட்டுவிட்டு அன்று மாலை மெயில் ரெயிலிலேயே ஸ்ரீ வெஸ்ட், டர்பனுக்குப் புறப்பட்டார். அன்று முதல், தென்னாப்பிரிக்காவிலிருந்து  நான் கப்பலேறிய வரையில், அவர் என்னுடைய இன்ப துன்பங்களில் பங்காளியாக இருந்து வந்தார். லௌத்தில் (லின்கன்ஷயர்) ஒரு  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வெஸ்ட். சாதாரணப் பள்ளிப் படிப்புத்தான் அவர்பெற்றிருந்த கல்வி. ஆனால், அனுபவம் என்ற பள்ளியிலும், திடமான சுயமுயற்சியினாலும் அவர் எவ்வளவோ அறிந்து கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும்  தூய்மையும், நிதானமும், காருண்யமும்,  கடவுள் பக்தியுமுள்ள ஆங்கிலேயராக இருக்கக் கண்டேன். இனி வரும் அத்தியாயங்களில்  அவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி அதிகமாகக் கவனிப்போம்.


Offline Anu

ஒதுக்கலிடம் எரிந்தது

நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளவேண்டிய வேலை எனக்கும் என் சகஊழியர்களுக்கும் இல்லாதுபோயிற்று என்றாலும் கறுப்புப் பிளேக்கினால் ஏற்பட்ட பல காரியங்களை நாங்கள் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தது. இந்தியர் குடியிருப்பு ஒதுக்கல் பகுதி சம்பந்தமாக நகரசபை சிரத்தையின்றி  இருந்துவிட்டதைக் குறித்து முன்னால் கூறியிருக்கிறேன். ஆனால்,  வெள்ளைக்காரரின் சுகாதாரத்தைப் பற்றிய வரை அச்சபை அதிக விழிப்புடனேயே இருந்தது. வெள்ளைக்காரரின் தேகநிலை கெடாமலே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவதற்காக நகரசபை ஏராளமான தொகையைச் செலவிட்டு வந்தது. இப்பொழுது பிளேக் நோயை ஒழிப்பதற்குப் பணத்தைத் தண்ணீர் போல வாரி இறைத்தது. இந்தியர் விஷயத்தில் அச்சபை செய்தது,  செய்யாமலிருந்து விட்டது ஆகியவைகளை குறித்து அநேக  குற்றச்சாட்டுகளை நான் அதன் மீது சுமத்தியிருந்த போதிலும், நகரிலிருந்த வெள்ளைக்கார மக்களின் நலன் விஷயத்தில் அது காட்டிய அக்கறையை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அதனுடைய சிறந்த முயற்சிக்கு என்னால்  இயன்ற உதவிகளைச் செய்தேன். நகரசபைக்கு  என்னுடைய ஒத்துழைப்பை அளிக்காதிருந்திருப் பேனாயின், அதனுடைய வேலைகள் அதிகக் கஷ்டமானதாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது ஆயுதந்தாங்கிய படை பலத்தை உபயோகிக்கவும், இன்னும் மோசமான முறைகளைக் கையாளவும்  அச்சபை தயங்கியிராது.

ஆனால், அப்படி எதுவும்  நடவாதபடி செய்துவிட்டோம். இந்தியர் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து நகரசபையினர் சந்தோஷம் அடைந்தார்கள். பிளேக் சம்பந்தமான எதிர்கால வேலைகள் பலவும் சுலபமாக்கப்பட்டன. நகரசபை விரும்புபவைகளுக்கெல்லாம் இந்தியர் உடன்பட்டு நடந்துகொள்ளும்படி செய்வதில் இந்திய சமூகத்தினரிடம் எனக்கு இருந்த முழுச் செல்வாக்கையும் உபயோகித்துக் கொண்டேன். எல்லாவற்றிற்குமே உடன்பட்டுச் செய்துகொண்டு போவது என்பது இந்தியருக்குக்  கஷ்டமாகவே இருந்தது. ஆனால் என் ஆலோசனையை எந்த இந்தியரும் மறுதலித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்த ஒதுக்கல் குடியிருப்புப்  பகுதிக்குப் பலமான காவல் போட்டுவிட்டார்கள். அனுமதியில்லாமல் உள்ளே போவதோ, உள்ளே இருந்து வெளியே வருவதோ இயலாது. நானும் என் சக ஊழியர்களும் மாத்திரம் நினைத்தபோது உள்ளே போய்வருவதற்கு அனுமதிச் சீட்டுகள் கொடுத்திருந்தார்கள். அப் பகுதியில் குடியிருந்தவர்களையெல்லாம் காலி செய்து விடச் செய்வது, அவ்விதம் காலி  செய்துவிட்டவர்களெல்லாம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து பதின்மூன்று மைல் தூரத்திலுள்ள ஒரு திறந்த மைதானத்தில் கூடாரங்களில் வசிக்கும்படி செய்வது, பிறகு இந்த  ஒதுக்கல் பகுதிக்கே தீ வைத்துவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

உணவுப் பொருள்கள் போன்ற அவசியமான பொருள்களுடன் இவர்களைக் கூடாரங்களில் போய் வசிக்கும்படி செய்யக் கொஞ்சகாலம் ஆகும். ஆகவே, இதற்கு நடுவில் காவல் போட வேண்டியது அவசியமாயிற்று.மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர். ஆனால், நான் அடிக்கடி போய்க் கொண்டிருந்தது அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர், தங்களிடமிருந்த சிறு பொருள்களையெல்லாம் புதைத்து வைத்துவிடுவது வழக்கம். அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் பாங்குள் இல்லை. பாங்க் என்பது இன்னது என்றே அவர்களுக்குத் தெரியாது. நானே அவர்களுடைய பாங்க்கரானேன் ஏராளமான பணம் வந்து  என் அலுவலகத்தில் குவிந்தது. இத்தகையதோர் நெருக்கடியில் என் உழைப்புக்காக எந்தக் கட்டணமும் விதிப்பதற்கில்லை. எப்படியோ இந்த வேலைகளையும் சமாளித்துக் கொண்டேன். நான் கணக்கு வைத்திருந்த பாங்கின் நிர்வாகியை நான் நன்றாக அறிவேன்.

இப்பணத்தையெல்லாம் அவர் பாங்கில் நான் போட்டுவைக்க வேண்டியிருக்கிறது என்று அவரிடம் கூறினேன். செப்புக் காசுகளையும் வெள்ளிப் பணத்தையும் ஏராளமாக வாங்கிக் கொள்ளுவது சிரமமானதால்  வாங்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.  பிளேக் நோய் பரவியிருக்கும் பகுதியிலிருந்து வருகிற பணம் என்பதனால், அதைத் தொடுவதற்கும் பாங்குக் குமாஸ்தாக்கள் மறுத்து விடக்கூடும் என்ற பயமும் இருந்தது. ஆனால், பாங்கு நிர்வாகி எல்லா வகையிலும் எனக்குச் சௌகரியம் செய்து கொடுத்தார். அப்பணத்தையெல்லாம் பாங்குக்கு அனுப்புவதற்கு முன்னால் அவற்றில் விஷக்கிருமிகள் இல்லாதபடி மருந்து கொண்டு சுத்தம் செய்து அனுப்புவது என்று தீர்மானித்தோம். சுமார் அறுபதாயிரம் பவுன் வரையில் பாங்கில் கட்டினோம் என்பது எனக்கு ஞாபகம். பணம் அதிகமாக வைத்திருந்தவர்களை-குறிப்பிட்ட காலத்திற்குப்  பிறகே வாங்குவது என்ற முறைப்படி-டிபாசிட்டில் போடும் படி சொன்னேன். அவர்களும் என் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். இதன் பலனாக, பணத்தைப் பாங்கில் போட்டுவைக்கும் வழக்கத்தைச் சிலர் கைக்கொண்டார்கள்.

ஒதுக்கல் பகுதியில் இருந்தவர்களைத் தனி ரெயிலில் ஜோகன்னஸ்பர்க்குக்கு அருகில் கிளிப்ஸ் புரூயிட் பண்ணைக்குக் கொண்டு போயினர். அங்கே அவர்களுக்கு நகரசபை தனது சொந்தச் செலவில் உணவுப் பொருள்களை அளிக்க ஏற்பாடு செய்தது. கூடாரங்களினாலாகிய இந்த நகரம், ஒரு ராணுவ முகாம்போலத் தோன்றியது. மக்கள், கூடாரங்களில் வாழ்ந்து பழக்கமில்லாததனால்  எப்படி இருக்குமோ என்று கஷ்டத்துடன் இருந்தார்கள். ஆனால், அங்கே செய்யப்பட்டிருந்த  ஏற்பாடுகளைக் கண்டு திகைத்துப் போயினர். குறிப்பிடத்தக்க அசௌகரியம் எதுவும் அவர்களுக்கு இல்லை. தினமும் சைக்கிளில் அந்த இடத்திற்கு நான் போய் வருவேன். அங்கே குடியேறிய இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மக்கள் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து குதூகலமாக வாழ ஆரம்பித்துவிட்டனர். நான் அங்கே போன சமயங்களிலெல்லாம் அவர்கள் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பதையே கண்டேன். திறந்த வெளியில் மூன்று வாரங்கள் வசித்ததால் அவர்களுடைய  தேக நிலையும் விருத்தியடைந்தது. இவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்ட  மறுநாளே அந்த ஒதுக்கல் பகுதி தீயிடப்பட்டுவிட்டது என்றுதான் எனக்கு ஞாபகம். தீயினுக்கு இரையாகாமல் எதையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் நகரசபைக்கு சிறிதேனும் இல்லை. அதே சமயத்தில்தான்-இதே காரணத்திற்காகவே-மார்க்கெட்டிலிருந்த நகரசபையின் மர உத்திரங்கள் எல்லாவற்றையும் கொளுத்திவிட்டார்கள். இதனால்  நகரசபைக்கு பத்தாயிரம் பவுன் போல் நஷ்டம். மார்க்கெட்டில் எலிகள் செத்துக் கிடக்கக் கண்டதே இத் தீவிரமான நடவடிக்கைக்குக் காரணம். நகரசபைக்குச் செலவு ஏராளமாக ஆயிற்று. என்றாலும், மேற்கொண்டும் பிளேக் பரவாதபடி வெற்றிகரமாகத் தடுத்து விட்டார்கள். நகர மக்களும் பயம் தீர்ந்து  பெருமூச்சு விட்டனர்.


Offline Anu

ஒரு நூலின் மந்திர சக்தி

கறுப்புப் பிளேக், ஏழை இந்தியரிடையே என் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அதனால், என் தொழில் வருவாயும் அதிகமானதோடு என் பொறுப்பும் அதிகமாயிற்று. புதிதாகத் தொடர்பு ஏற்பட்ட ஐரோப்பியருடன்  நெருங்கிப் பழகியதனால் எனக்கு ஒழுக்க ரீதியான கடமைகள் அதிகமாயின. சைவச் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீ வெஸ்ட் எனக்குப் பழக்கமானதுபோல, ஸ்ரீ போலக்கும் அங்கே பழக்கமானார். ஒரு நாள் மாலை, என் மேஜைக்குக் கொஞ்ச  தூரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இளைஞர்,  என்னைப் பார்க்க விரும்புவதாக ஒரு சீட்டு அனுப்பினார். என் மேஜைக்கே வருமாறு அழைத்தேன். அவ்வாறே வந்தார். நான், கிரிடிக் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியன். என் பெயர் போலக். பிளேக் சம்பந்தமாகப் பத்திரிகைகளுக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் பார்த்தது முதல் தங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்குப் பலமான ஆர்வம் ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார், அவர்.

ஸ்ரீ போலக்கின் கபடமற்ற தன்மை என்னை அவர்பால் இழுத்துவிட்டது. அன்று மாலை நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களிலெல்லாம் நாங்கள் இருவரும் ஒரேவிதக் கருத்து உடையவர்களாக இருப்பதாகத் தோன்றியது. இவர் எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். தமது புத்திக்குப் பிடித்தமாக இருக்கும் எதையும் உடனே நடைமுறையில் கொண்டு வந்துவிடும் அற்புதமான ஆற்றல் அவருக்கு இருந்தது. தம்  வாழ்க்கையில் அவர் செய்துகொண்ட மாறுதல்கள், தீவிரமானவைகளாக இருந்ததைப் போன்றே துரிதமாகவும் செய்து கொள்ளப்பட்டவைகளாகும். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைக்கு நாளுக்குநாள் செலவு அதிகமாகிக்கொண்டு வந்தது. ஸ்ரீ வெஸ்ட் அனுப்பியிருந்த முதல் அறிக்கையே பீதி தருவதாக இருந்தது. அவர் எழுதியதாவது: “லாபம் வரக்கூடும் என்று நீங்கள் நினைத்தது போல  இந்த ஸ்தாபனம் லாபம் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நஷ்டமும் வரலாம் என்றே அஞ்சுகிறேன். கணக்குகள் சரிவர இல்லை. வசூலாக வேண்டிய பாக்கி ஏராளமாக இருக்கிறது. அவைகளின் விவரத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் அடியோடு மாற்றியாகவேண்டும்! ஆனால், இதையெல்லாம் கேட்டு நீங்கள் பீதியடைந்துவிட வேண்டாம். என்னால் முடிந்த வரையில் எல்லாவற்றையும்  ஒழுங்காக்க முயல்கிறேன். லாபம் இருந்தாலும் இல்லாதுபோனாலும், நான் இங்கே வேலை பார்க்கவேபோகிறேன்.”

அதில் லாபம் எதுவும் வராது என்று கண்டதுமே ஸ்ரீ வெஸ்ட் அந்த வேலையைவிட்டுப் போயிருக்கலாம். அவர்மீது நான் குறை சொல்ல முடியாது. உண்மையில் போதுமான  ருசுக்கள் இல்லாமல் அந்த ஸ்தாபனம் லாபம் தரக்கூடியதென்று நான் வருணித்ததற்காக என் மீது குற்றஞ் சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு ஒரு  வார்த்தையேனும் அவர் புகார் சொல்லவில்லை. என்றாலும், தாம் கண்டுபிடித்த நிலைமை, நான் எவரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவன் என்று என்னை எண்ணும்படி ஸ்ரீ வெஸ்ட்டைச் செய்திருக்கும் என்பதே என் அபிப்பிராயம். ஸ்ரீமதன்ஜித் கூறியதைப் பரிசீலனை  செய்து பார்க்காமலேயே நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதைக்கொண்டு லாபம் வரும் என்று ஸ்ரீ வெஸ்ட்டிடம் சொல்லிவிட்டேன். தமக்கு நிச்சயமாகத் தெரியாதவைகளை வைத்துக்கொண்டு பொதுஜன ஊழியர் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். அதிலும் சத்தியத்தை நாடுபவன் இதில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும். ஒரு விஷயத்தை  ஒப்புக்கொண்டுவிட வேண்டி இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். இந்த அனுபவம் எனக்கு இருந்தும், பிறரைச் சுலபத்தில் நம்பிவிடும் என் சுபாவத்தை நான் இன்னும் போக்கிக்கொண்டுவிடவில்லை. நான் சமாளிக்கக் கூடியதை விட அதிகமான வேலையைச் செய்துவிட எனக்கு இருக்கும் ஆசையே இதற்குக் காரணம். இந்த ஆசை, என்னைவிட என் சக ஊழியர்களுக்கே அதிகத் தொந்தரவாக முடிந்து விடுகிறது.

ஸ்ரீ வெஸ்ட்டின் கடிதம் கிடைத்ததும் நேட்டாலுக்குப் புறப்பட்டேன். ஸ்ரீ போலக் என் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் ஆகிவிட்டார். என்னை வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்.  பிரயாணத்தின்போது படிக்க எனக்கு ஒரு புத்தகம் கொடுத்து விட்டுப் போனார். அது எனக்குப் பிடித்தமான புத்தகமாக இருக்கும்  என்றும் சொன்னார். ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூலே அது. இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த பின் நடுவில் கீழே வைக்கவே முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்துகொண்டுவிட்டது. ஜோகன்னஸ்பர்க்கிற்கும்  டர்பனுக்கும் இருபத்துநான்கு மணி நேரப்பிரயாணம். ரெயில் அங்கே மாலையில் போய்ச் சேர்ந்தது. அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அந்நூலில் கண்ட லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன். ரஸ்கினின் நூல்களில் நான் படித்த முதல் நூல் இதுவே. நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த காலத்தில் பாடப் புத்தகங்களைத் தவிர அநேகமாக வேறு புத்தகங்களை நான் படித்ததில்லை எனலாம்.

சேவை வாழ்க்கையில் இறங்கிவிட்ட  பிறகு படிப்பதற்கு எனக்கு நேரமே இருப்பதில்லை. ஆகையால்,  நூல்களைப் படித்த அறிவு எனக்கு உண்டென்றே சொல்லிக் கொள்ளுவதற்கில்லை. என்றாலும், இந்தக் கட்டாயமான தடையால் நான் அதிகமாக நஷ்டம் அடைந்துவிடவில்லை என்றே கருதுகிறேன்.  ஆனால், இதற்கு மாறாக நான் கொஞ்சமாகப் படித்தது,  நான் படித்ததையெல்லாம் அப்படியே முற்றும்  கிரகித்துக்கொண்டு விடுவதற்கு உதவியாக இருந்தது. அத்தகைய நூல்களில், என் வாழ்க்கையில் உடனேயே நடைமுறையான மாறுதலை உண்டாக்கிய நூல் கடையனுக்கும் கதி மோட்சம் என்ற நூலேயாகும். பின்னர்  அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்து, சர்வோதயம் (சர்வஜன நலம்) என்ற பெயருடன் வெளியிட்டேன். ரஸ்கினுடைய இம் மகத்தான நூலில் என் உள்ளத்தில் உறுதிப்பட்டிருந்த கொள்கைகள் பிரதிபலித்திருப்பதை நான் கண்டுகொண்டதாகவே நினைக்கிறேன். அதனால்தான் அது என்னை ஆட்கொணடதோடு என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும்படி செய்தது. மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி. ஆனால் கவிகள், எல்லோரின் உள்ளங்களிலும் இதேபோன்ற மாறுதல்களை உண்டாக்கி விடுவதில்லை. ஏனெனில், எல்லோரும் சரி சமமான வளர்ச்சியை அடைந்திருக்கவில்லை. கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூல் பின்வருபவைகளைப் போதிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது:

1. எல்லோருடைய  நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும்  அடங்கியிருக்கிறது.

2. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.

3. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்.

இவைகளில் முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ, என் புத்தியில் தோன்றவே இல்லை. இரண்டாவதும் மூன்றாவதும், முதலாவதாகக் கூறப்பட்டிருப்பதிலேயே அடங்கியிருக்கின்றன என்பதைக்கடையனுக்கும் கதி மோட்சம் பட்டப்பகல் போல் எனக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்படி செய்தது. பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவரத் தயாரானேன்
.


Offline Anu

போனிக்ஸ் குடியிருப்பு

எல்லாவற்றையும் குறித்து ஸ்ரீ வெஸ்டுடன் பேசினேன். கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூல் என் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை அவருக்கு விவரித்துச் சொன்னேன். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையை ஒரு பண்ணைக்கு மாற்றிவிட வேண்டும்; அப் பண்ணையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒரே மாதிரியான ஊதியத்தை எல்லோரும் பெறவேண்டும், ஓய்வு நேரங்களில் அச்சக வேலையைக் கவனிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை அவரிடம் கூறினேன். இந்த யோசனையை ஸ்ரீ வெஸ்ட் அங்கீகரித்தார்.  எந்த நிறத்தினராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் மூன்று பவுன்தான்  என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், அச்சகத்தில் வேலை செய்யும் பத்துப் பன்னிரண்டு பேரும் இந்த ஏற்பாட்டுக்கு  ஒப்புக்கொள்ளுவார்களா? எங்கோ மூலை முடுக்கிலிருக்கும்  ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான  ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா? இதுவே  பிரச்னையாயிற்று. ஆகையால், ஒரு யோசனை செய்தோம் புதிய திட்டத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், இப்பொழுது பெறும்  சம்பளத்தையே தொடர்ந்து வாங்கிக்கொள்ளுவது, நாளா வட்டத்தில் குடியேற்றத்தின் உறுப்பினராகும் லட்சியத்தை  அடைய முடிவு செய்வது என்பதே அந்த யோசனை. இந்தத் திட்டத்தையொட்டி ஊழியர்களிடம் பேசினேன். ஸ்ரீ மதன்ஜித்திற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. என் திட்டம் பைத்தியக்காரத்தனமானது என்றார். தமக்குள்ள சகலத்தையும், நான் ஈடுபட்டிருக்கும் இந்த முயற்சி நாசமாக்கிவிடும் என்றார். ஊழியர்களெல்லோரும் ஓடிப் போய் விடுவார்கள் என்றும், இந்தியன் ஒப்பீனியன்  நின்று விடும் என்றும், அச்சகத்தையும் மூடிவிடவேண்டியதாகிவிடும் என்றும் கூறினார்.

அச்சகத்தில் வேலை செய்து வந்தவர்களில் என் சிற்றப்பா பிள்ளையான மதன்லால் காந்தியும் ஒருவர். என் யோசனையை ஸ்ரீ வெஸ்ட்டிடம் கூறியபோதே அவரிடமும் சொன்னேன். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர், குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்று  என்னிடம் வேலை செய்ய விரும்பி வந்தவர். என்னிடம் அவருக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. ஆகவே, எந்தவித வாதமும் செய்யாமல் என் திட்டத்தை ஒப்புக்கொண்டார். அது முதல் என்னுடனேயே இருக்கிறார். இயந்திரத்தை  ஓட்டுபவரான கோவிந்தசாமியும் என் திட்டத்திற்குச் சம்மதித்தார். மற்றவர்கள் இத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அச்சகத்தை  எங்கே நான் கொண்டு போனாலும் அங்கே வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். இந்த விஷயங்களையெல்லாம் ஆட்களுடன் இரண்டு நாட்களில் பேசி முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, டர்பனுக்குப் பக்கத்தில் ஒரு  ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கமாக இருக்கக்கூடிய நிலம் விலைக்குத் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். போனிக்ஸ் சம்பந்தமாகப் பதில் வந்தது. அந்தப் பண்ணையைப் பார்த்து வர ஸ்ரீ வெஸ்ட்டும், நானும் போனோம். ஒரு வாரத்திற்குள் இருபது ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் இனிய  சிறிய நீர் ஊற்று ஒன்றும் ஆரஞ்சு செடிகளும் மாமரங்களும் இருந்தன. அந்த நிலத்திற்கு அடுத்தாற் போல எண்பது ஏக்கர் நிலப்பகுதி ஒன்றும் இருந்தது. அதில் மேலும் பல பழ மரங்களும், இடிந்துபோன ஒரு பழைய குடிசையும் இருந்தன. அந்த நிலத்தையும் வாங்கிவிட்டோம். எல்லாம் சேர்ந்து ஆயிரம் பவுன் விலையாயிற்று.

இது போன்ற என் முயற்சிகளிலெல்லாம் காலஞ்சென்ற ஸ்ரீருஸ்தம்ஜி எப்பொழுதும் எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்தத் திட்டம் அவருக்குப்  பிடித்திருந்தது. ஒரு பெரிய கிடங்கிலிருந்து எடுத்த பழைய இரும்புத் தகடுகளையும், வீடு கட்டுவதற்கான மற்றச் சாமான்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு வேலையை ஆரம்பித்தோம். போயர் யுத்தத்தில் என்னோடு வேலை செய்தவர்களான சில இந்தியத் தச்சர்களும், கொத்து வேலைக்காரர்களும் அச்சகத்திற்கு ஒரு கொட்டகை போட எனக்கு உதவி செய்தனர். 75 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள இக் கொட்டகை ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீ வெஸ்டும்  மற்றவர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் தச்சர்களுடனும் கொத்து வேலைக்காரர்களுடனும் தங்கினர்.  அந்த இடம், இதற்கு முன்பு மனித சஞ்சாரமே இல்லாமல் இருந்த இடம். புல்லும் காடாக மண்டிப் போயிருந்தது. அங்கே பாம்புகள்  ஏராளமாக இருந்ததால் வசிப்பதற்கு ஆபத்தான இடம். முதலில் எல்லோரும் கூடாரங்களில் வசித்து வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள் சாமான்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றிப் போனிக்ஸூக்குக் கொண்டு வந்துவிட்டோம். அந்த இடம் டர்பனிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. போனிக்ஸ் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டரை மைல் தூரம்.

இந்தியன் ஒப்பீனியனின் ஓர் இதழை மாத்திரமே வெளியில் மெர்க்குரி அச்சகத்தில் அச்சிடவேண்டியிருந்தது. சம்பாதிக்கும் நோக்கத்தோடு இந்தியாவிலிருந்து என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு  வந்திருந்த என் உறவினர்களையும் நண்பர்களையும் போனிக்ஸு க்கு இழுத்துவிட இப்பொழுது முயன்றேன். அவர்கள் பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் செல்வம் திரட்ட வந்தவர்களாகையால் அவர்களை இங்கே வந்துவிடும்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், சிலர் ஒப்புக் கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின்  பெயரை மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன். மற்றவர்கள் திரும்பவும் வியாபாரம் செய்யப் போய்விட்டனர்.  மகன்லால் காந்தி மட்டும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொண்டார். தார்மிகத்துறையில் நான் செய்த சோதனைகளில் என் ஆரம்ப சக ஊழியர்களாக இருந்தவர்கள் சிலர் உண்டு. அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கியவர் இவரே.  கைத்தொழில்களை இவர் தாமே கற்றுக்கொண்டார். அதனால்,  கைத்தொழிலாளிகளிடையே இவர்வகித்த ஸ்தானம் இணையில்லாதது. இவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல் ஆரம்பமாயிற்று. எவ்வளவோ கஷ்டங்களெல்லாம்  ஏற்பட்டபோதிலும் இந்தியன் ஒப்பீனியன் அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள்,  செய்யப்பட்ட மாறுதல்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு ஒரு தனி அத்தியாயமே அவசியமாகிறது


Offline Anu

முதல் இரவு

போனிக்ஸிலிருந்து இந்தியன் ஒப்பீனியனின் முதல் இதழை வெளியிடுவது  எளிதான காரியமாகவே இல்லை. இரு முன்னெச்சரிக்கையான  காரியங்களை நான் செய்யாது இருந்திருப்பேனாயின், முதல் இதழை நிறுத்திவிடவே நேர்ந்து இருக்கும்; அல்லது வெளியாவது தாமதப்பட்டிருக்கும். அச்சு இயந்திரத்தை ஓட்ட ஓர் இன்ஜின் வைத்துவிடுவது என்ற யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. விவசாய வேலையையும் கையினாலேயே செய்யவேண்டியிருக்கும் ஓர் இடத்தில், அச்சு இயந்திரமும் கையினாலேயே சுற்றப்படுவதாக இருப்பதே அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த யோசனை சரியானதாகத் தோன்றாது போகவே ஓர் எண்ணெய் இன்ஜினை அமைத்தோம்.  இன்ஜின் சரியாக வேலை செய்யாது போனால், உடனே செய்வதற்கான வேறு ஏற்பாடும் தயாராக இருக்கட்டும் என்று வெஸ்டுக்கு யோசனை கூறி இருந்தேன். ஆகவே கையினால் சுற்றக்கூடிய ஒரு சக்கரத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார். பத்திரிகையின் அளவு, தினப் பத்திரிகையின் அளவாக இருப்பது, போனிக்ஸ் போன்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு வசதியானதல்ல என்று யோசிக்கப்பட்டது. அவசர நிலைமை ஏற்பட்டால் டிரடில் அச்சு இயந்திரத்திலேயே பத்திரிகையை அச்சிட்டு விடுவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்பதற்காகப் பத்திரிகை, புல்ஸ்காப் அளவுக்குக் குறைக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் பத்திரிகை வெளியாவதற்கு முன்னால் நாங்கள் இரவில் வெகுநேரம் கண் விழிக்கும்படி ஆயிற்று. இளைஞர்களும், கிழவரும் ஒவ்வொருவரும் பத்திரிகைத் தாள்களை மடிக்க உதவவேண்டியிருந்தது. வழக்கமாக இரவு பத்து மணிக்கு மேல் பன்னிரெண்டு மணிக்குள் வேலையை முடிப்போம். ஆனால், முதல் நாள் இரவு என்றுமே மறக்க முடியாது. பக்கங்களை முடுக்கியாயிற்று; இயந்திரமோ  வேலை செய்ய மறுத்துவிட்டது. இன்ஜினை முடுக்கி அதை ஓட்டிக்கொடுப்பதற்காக டர்பனிலிருந்து ஒரு இன்ஜினீயரைத் தருவித்து வைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் எவ்வளவோ  கஷ்டப்பட்டுப் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை. எல்லோருக்கும் ஒரே  கவலையாகி விட்டது. எல்லா முயற்சியும் முடியாது போய்க் கடைசியாகக் கண்களில் நீர் வழிய வெஸ்ட் என்னிடம் வந்தார்.  “இன்ஜின் வேலை செய்யாது. உரிய காலத்தில் பத்திரிகையை நாம் வெளியிடமுடியாது என்றே அஞ்சுகிறேன்” என்றார். அதுதான் நிலைமையென்றால் இதில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை. கண்ணீர் விட்டு ஒரு பயனும் இல்லை. மனிதப் பிரயத்தனத்தில் சாத்தியமானதையெல்லாம் செய்வோம். கைச்சக்கரம் இருக்கிறதல்லவா”? என்று அவருக்கு ஆறுதல் அளித்துச் சொன்னேன். அதைச் சுற்றுவதற்கு நம்மிடம் ஆட்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.  “அந்த வேலையைச் செய்வதற்கு நாம் போதாது. நான்கு நான்கு பேராக மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நம் ஆட்களோ, களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார்.

கட்டிட வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. ஆகையால், தச்சர்கள் அந்த வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் அச்சுக் கூடத்திலேயே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.  நான் அவர்களைச் சுட்டிக்காட்டி,  “இந்தத் தச்சர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாதா? நமக்கு இரவு முழுவதும் வேலை இருக்கும். இந்த உபாயம் நமக்குப் பாக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றேன். தச்சர்களை எழுப்ப எனக்குத் தைரியமில்லை. நம் ஆட்களோ உண்மையில் மிகவும் களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார் வெஸ்ட்.  சரி, அவர்களோடு நான் பேசிக்கொள்ளுகிறேன்” என்றேன். “அப்படியானால், வேலையை முடித்துவிடுவது சாத்தியமே” என்றார், வெஸ்ட். தச்சர்களை எழுப்பினேன். ஒத்துழைக்க  வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. “அவசரத்திற்கு எங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவதற்கில்லையென்றால் நாங்கள் இங்கே இருந்துதான் என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள். சக்கரத்தைச் சுற்றும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். அது எங்களுக்குச் சுலபம்” என்றார்கள். எங்கள் சொந்த ஆட்களும் தயாராக இருந்தனர்.

வெஸ்ட்டுக்கு ஒரே ஆனந்தம். நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவர் ஒரு தோத்திரப் பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார். தச்சர்களுடன்  நானும் சேர்ந்துகொண்டேன். மற்றவர்களெல்லாம் அவரவர்கள் முறையில் கலந்து கொண்டு வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம்.  இன்னும் வேலை எவ்வளவோ பாக்கியாக இருந்தது. ஆகவே, வெஸ்ட்டிடம் ஒரு யோசனை கூறினேன். இன்ஜினீயரை எழுப்பி இயந்திரத்தை ஓட்டச் சொல்லிப் பார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில் வேலையை முடித்துவிடலாம். வெஸ்ட் அவரை எழுப்பினார். எழுந்ததும் இன்ஜின் அறைக்குப் போனார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி? இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே?” என்று விசாரித்தேன். “இது எப்படி என்று கூறுவது கஷ்டம். நம்மைப் போலவே தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல  இயந்திரமும் சில சமயம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ, இன்ஜினீயரோ கூறினார்கள்.

சொன்னது யார் என்பதை மறந்துவிட்டேன். இன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு சோதனையாக ஆயிற்று என்றும்,  எங்களுடைய யோக்கியமான, மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே இன்ஜின் வேலை செய்யத் தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று. பிரதிகளும் உரிய காலத்தில் அனுப்பப்பட்டன. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். ஆரம்பத்தில் காட்டிய இந்தப் பிடிவாதம், பத்திரிகை ஒழுங்காக வெளியே வந்து கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போனிக்ஸில் சுயபலத்தில் நிற்கும் சூழ்நிலையையும் உண்டாக்கியது.  வேண்டுமென்றே இன்ஜினை உபயோகிப்பதை நாங்கள் நிறுத்தி விட்டு, ஆள் பலத்தைக் கொண்டே வேலை செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில் குடியேறியிருந்தவர்களின் தார்மிக குணம் உச்ச நிலைக்கு எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.


Offline Anu

போலக் துணிந்து இறங்கினார்

போனிக்ஸில் நான் குடியேற்றத்தை ஆரம்பித்துவிட்ட போதிலும் அங்கே நான் நிரந்தரமாக வசிக்க முடியாமல் இருந்தது, எப்பொழுதும் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நாளாவட்டத்தில் வக்கீல் தொழிலிலிருந்து விலகி, இக்குடியேற்றத்தில் வசித்து, என் உடலுழைப்பினால் என்  ஜீவனத்திற்கு வேண்டியதைச் சம்பாதித்துக்கொண்டு, போனிக்ஸ் பூரணத்துவத்தை அடைய நான் செய்யும் சேவையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆரம்ப எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் முடிவான லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்துவிடுமானால், மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில்  எதிர்பாத்ததைவிட அதிக நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது. போனிக்ஸ் குடியேற்றம் எதிர்பாராத விதமாக மாறுதல் அடைந்ததும், எதிர் பாராமல் நேர்ந்த சில நிகழ்ச்சிகளும், நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட மேலாக முடிந்தன என்று சொல்லுவது கஷ்டமேயானாலும், தீமையாக மாத்திரம் முடியவில்லை.

நாங்கள் எல்லோரும், உடல் உழைப்பினாலேயே ஜீவனம் செய்வது சாத்தியமாக வேண்டும் என்பதற்காக, அச்சுக்கூடத்தைச் சுற்றி இருந்த நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொண்டோம். இதில் ஒரு பகுதி என் பங்குக்கு விழுந்தது. இந்த ஒவ்வொரு பகுதி நிலத்திலும், எங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இரும்புத் தகடு போட்டு வீடுகளைக் கட்டினோம். நாங்கள் விரும்பியதெல்லாம், வைக்கோல் வேய்ந்த மண் குடிசைகளைக் கட்டிக்கொள்ளு வதுதான். இல்லாவிட்டால், சாதாரண விவசாயி வசிக்கக் கூடிய வகையில் சிறு செங்கல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவது என்பதே. ஆனால், அது நிறைவேறவில்லை. அப்படிக் கட்டுவதாக இருந்தால் அதிகச் செலவாகும்; அதிக காலமும் பிடிக்கும். நாங்களோ, கூடுமானவரையில் சீக்கிரத்திலேயே குடியேற்றத்தில் நிலைபெற்றுவிட வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் இருந்தோம்.

மன்சுக்லால் நாஸரே இன்னும் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். புதிய திட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியன் ஒப்பீனியனுக்கு டர்பனில் ஒரு கிளைக் காரியாலயம் இருந்தது. அங்கே இருந்துகொண்டே அவர் இப் பத்திரிகைக்கு வேலைசெய்து வந்தார். அச்சுக் கோர்ப்போருக்குச் சம்பளம் கொடுத்து வந்தோம். ஆனால்,  குடியேற்றத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சுக்கூடத்தில் இந்த வேலை அலுப்புத் தட்டும் வேலையானாலும் சுலபமான வேலையே. ஆகையால், இதற்கு முன்னால் இந்த வேலையைக் கற்றுக் கொள்ளாதிருந்தவர்கள், இப்பொழுது கற்றுக்கொண்டோம். ஆனால், இந்த வேலையில் நான் கடைசி வரையில் திறமை இல்லாதவனாகவே இருந்தேன். மகன்லால் காந்தி இதில் எங்களெல்லோரையும்விட முதன்மையாய் இருந்தார். இவர், இதற்கு முன்னால் அச்சுக்கூடத்தில் வேலையே செய்ததில்லையென்றாலும், அச்சுக் கோர்ப்பதில் அதிக சமர்த்தராகி விட்டார். அதிக வேகமாக அச்சுக் கோர்ப்பவராகிவிட்டதோடு மாத்திரமல்லாமல், அச்சுக் கூடத்தின் எல்லா வேலைகளையுமே வெகுவிரைவில் கற்றுக் கொண்டுவிட்டார். இது எனக்கு அதிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவருடைய ஆற்றல் அவருக்கே தெரியாது என்பதுதான் எப்பொழுதும் என் அபிப்பிராயம்.

கட்டிடங்களைக் கட்டி முடித்து நாங்கள் அங்கே நிலை பெற ஆரம்பித்தவுடனேயே, புதிதாக அமைந்திருந்த கூட்டை விட்டுவிட்டு நான் ஜோகன்னஸ்பர்க்கிற்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே இருந்த வேலைகளை நான் கவனிக்காமலேயே அதிக காலத்திற்கு விட்டுவைத்துவிட என்னால் ஆகவில்லை. ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பியதும், நான் செய்திருக்கும் முக்கியமான மாறுதல்களைக் குறித்து ஸ்ரீ போலக்கிடம் கூறினேன். அவர் இரவல் கொடுத்த புத்தகம் இவ்வளவு பலனுள்ளதாக ஆயிற்று என்பதை அறிந்ததும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. “இப் புதிய முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்ளச் சாத்தியப்படாதா?” என்று கேட்டார். “நிச்சயமாகச் சாத்தியமே. நீங்கள் விரும்பினால் நீங்களும்  குடியேற்றத்தில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். “என்னைச் சேர்த்துக் கொள்ளுவதாக இருந்தால் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

 அவருடைய உறுதி என்னைக் கவர்ந்துவிட்டது. கிரிடிக் பத்திரிகையில் தாம் செய்து வந்த வேலையிலிருந்து ஒரு மாதத்தில் விலகிக்கொள்ள அனுமதிக்குமாறு பிரதம ஆசிரியருக்கு எழுதினார். பின்னர் அதிலிருந்து விலகிப் போனிக்ஸு க்கு வந்து சேர்ந்தார். தமது இனிய சுபாவத்தினாலும், எல்லோருடனும் நன்றாகப் பழகும் குணத்தினாலும், வெகு சீக்கிரத்தில் அவர் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகிவிட்டார். எளிமை அவருடைய சுபாவத்திலேயே இருந்தது. போனிக்ஸ் வாழ்க்கை அவருக்கு விசித்திரமானதாகவோ, கஷ்டமானதாகவோ தோன்றவில்லை. நீரிலிருப்பது மீனுக்கு எவ்விதம் இயற்கையோ அதேபோல் இவ்வாழ்க்கை அவருக்கு ஒத்ததாக இருந்தது. ஆனால், அவரை அங்கேயே அதிக காலம் நான் வைத்திருப்பதற்கில்லை. இங்கிலாந்துக்குப் போய்த் தமது சட்டப் படிப்பை முடிக்க  ஸ்ரீ ரிச் விரும்பினார். எனவே, என் அலுவலகத்தின் வேலை பளுவை நான் ஒருவனே சமாளித்து விடுவதென்பது அசாத்தியம். ஆகவே, என் அலுவலகத்தில் சேர்ந்து அட்டர்னியாகப் பயிற்சி பெறுமாறு போலக்குக்கு யோசனை கூறினேன். முடிவில் நாங்கள் இருவருமே அத் தொழிலிலிருந்து விலகிப் போனிக்ஸில் நிலைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அது நிறைவேறாமலேயே போய்விட்டது.

நம்பும் சுபாவமுள்ளவர், போலக் ஒரு நண்பரிடம் நம்பிக்கை வைத்து விடுவாரானால், அவரோடு விவாதித்துக் கொண்டிருப்பதைவிட ஒத்துப் போகவே அவர் முயல்வார். போனிக்ஸிலிருந்து எனக்கு எழுதினார். அங்கே இருக்கும் வாழ்க்கை தமக்கு இன்பமாக இருக்கிறதென்றாலும், தாம் சந்தோஷமாகவே இருப்பினும், குடியேற்றத்தை அபிவிருத்தி செய்யலாம் என்று நம்பினாலும், இதை விட்டுவிட்டுக் காரியாலயத்தில் சேர்ந்து அட்டர்னிக்குப் பயிற்சி பெறுவதனால் நாங்கள் எங்கள் லட்சியத்தை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடமுடியும் என்று நான் நினைத்ததால் அப்படியே செய்யத் தாம் தயார் என்று எழுதினார். இக்கடிதத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். போலக், போனிக்ஸிலிருந்து கிளம்பி ஜோகன்னஸ்பர்க்கிற்கு வந்து பயிற்சி பெறத் தஸ்தாவேஜில் கையெழுத்தும் இட்டார். அதே சமயத்தில் ஸ்காட்லாந்துக்காரரான ஒரு பிரம்மஞான சங்கத்தினரையும் போலக்கைப் பின்பற்றும்படி அழைத்தேன். உள்ளூர்ச் சட்டப் பரீட்சைக்குப் போவதற்காக அவர் என்னிடம் முன்பு பயிற்சி பெற்று வந்தார். இப்பொழுது என் அழைப்பை ஏற்றுக்கொண்டு வக்கீல் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். ஸ்ரீ மெக்கின்டயர் என்பது அவர் பெயர். இவ்வாறு, போனிக்ஸில் லட்சியங்களைச் சீக்கிரத்தில் அடைந்து விடவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் பேரில், நான் வேறு ஒரு திக்கில் மேலும் மேலும் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. கடவுள் மாத்திரம் வேறுவிதமாக எனக்கு அருள் செய்யாதிருந்தால், எளிய வாழ்க்கையின் பெயரால் விரித்திருந்த வலையில் நான் சிக்கிக்கொண்டிருந்திருப்பேன். யாருமே எண்ணியோ, எதிர்பார்த்தோ இராத வகையில், நானும் என்னுடைய லட்சியங்களும் எவ்வாறு காப்பாற்றப் பட்டன என்பதை இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு நான் விவரிப்பேன்


Offline Anu

கடவுள் யாரைக் காக்கிறார்?

வருங்காலத்தில்  இந்தியாவுக்குத் திரும்புவது என்ற நம்பிக்கையை எல்லாம் இப்பொழுது அடியோடு கைவிட்டுவிட்டேன். ஓர் ஆண்டில் திரும்பி வந்துவிடுவேன் என்று என் மனைவிக்கு வாக்களித்திருந்தேன். நான் திரும்புவதற்கான ஏது எதுவுமில்லாமலேயே அந்த ஓராண்டும் முடிந்துவிட்டது. ஆகையால், அவளையும் குழந்தைகளையும் வரவழைத்துக்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் என் மூன்றாவது மகன் ராமதாஸ், கப்பல் காப்டனுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் விழுந்து கையை முறித்துக் கொண்டான். காப்டன்  அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டதோடு கப்பல் டாக்டர் அவனுக்குச் சிகிச்சை செய்யும் படியும் ஏற்பாடு செய்தார். கட்டுப்போட்ட கையோடு ராமதாஸ் கப்பலிலிருந்து இறங்கினான். வீட்டுக்குப் போனதும் தக்க டாக்டர் ஒருவரைக் கொண்டு அவன் காயத்திற்குக் கட்டுக்கட்ட வேண்டும் என்று கப்பல் டாக்டர் ஆலோசனை கூறினார். மண் சிகிச்சையில் நான் பூரணமாக நம்பிக்கை வைத்திருந்த சமயம் அது. என்னுடைய அரைகுறை வைத்தியத்தை நம்பிய என் கட்சிக்காரர்கள் சிலரையும் மண், நீர் சிகிச்சை செய்து கொள்ளும்படி தூண்டிவந்தேன்.

இந்த நிலைமையில் ராமதாஸ் விஷயத்தில் நான் என்ன செய்வது? அப்பொழுது அவனுக்கு எட்டு வயது. அவனுக்கு நான் கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று அவனைக் கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான். தனக்கு நல்லது இன்னது என்பதை அந்த வயதில் அவன் முடிவு செய்து கொள்ளுவது சாத்தியமில்லை. ஆனால், அரை குறையான வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும் உள்ள பேதம் அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு வைத்தியப் பழக்கத்தை அவன் அறிவான். தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில் அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது. பயந்து நடுங்கிக்கொண்டே அவனுக்குப் போட்டிருந்த கட்டை அவிழ்த்தேன். புண்ணை அலம்பினேன். அதன்மீது சுத்தமான மண் பற்றும் போட்டேன். பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன். புண் முற்றும் ஆறிவிடும் வரையில் ஒரு மாத காலம் இவ்விதம் கட்டுப்போடுவது தினந்தோறும் நடந்து வந்தது. எந்தத் தொந்தரவுமே இல்லை; சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும் என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.

இதுவும், என்னுடைய மற்றப் பரீட்சைகளும், வீட்டு வைத்திய முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தின. நான் இப்பொழுது அதிகத் தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை மேற்கொண்டும் கையாளலானேன். மற்றும் பல நோய்களுக்கும் இம்முறையைக் கையாண்டேன். புண்கள், ஜு ரங்கள், அஜீரணம், காமாலை ஆகிய நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம் செய்து வந்தேன். அநேகமாகக் குணமாகிக் கொண்டே வந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதில் எனக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். ஆகையால், இந்தச் சோதனைகளைக் குறித்து நான் இங்கே கூறியிருப்பது, அவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுவதற்காக அன்று. எந்தச் சோதனையும் முழுமையான வெற்றியைக் கண்டது என்று நான் கூறிக் கொள்ளுவதில்லை. வைத்தியர்கள்கூட, தங்கள் சோதனை பூரண வெற்றியை அளித்தது என்று சொல்ல முடியாது. புதிய சோதனைகளைச் செய்ய முற்படுகிறவர், முதலில் அவற்றைத் தம்மிடமே செய்துகொண்டு பரீட்சிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே என் நோக்கம். இதனால், உண்மையைத் துரிதமாகக் கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது. அத்துடன் யோக்கியமாகப் பரிசோதனை செய்பவரைக் கடவுள் எப்பொழுதும் காப்பாற்றுகிறார்.

இயற்கை வைத்திய சோதனையில் எவ்வளவு ஆபத்துக்கள் உண்டோ, அவ்வளவு ஆபத்துக்கள் ஐரோப்பியர்களுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொள்ளுவதற்குச் செய்யும் சோதனைகளிலும் இருக்கின்றன. அந்த அபாயங்கள் வேறு வகையானவை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால், இந்தத் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளுவதற்குச் செய்த முயற்சியில் ஆபத்துக்கள் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. என்னுடன் வந்து தங்குமாறு போலக்கை அழைத்தேன். சொந்தச் சகோதரர்கள் போல நாங்கள் வாழ ஆரம்பித்தோம். சீக்கிரத்தில் ஸ்ரீமதி போலக் ஆகவிருந்த பெண்ணுக்கும் அவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், அனுகூலமான வேளையை எதிர் பார்த்துத் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மண வாழ்க்கையில் நிலைபெறுவதற்கு முன்னால் கொஞ்சம் பணம் சம்பாதித்து வைத்துக் கொள்ளலாமென்று ஸ்ரீ போலக் விரும்பினார் என்பது என் அபிப்பிராயம். ரஸ்கினின் நூல்களை என்னைவிட அவர் நன்றாக படித்திருந்தார். ஆனால், அவருடைய மேனாட்டுச் சூழ்நிலை, ரஸ்கினின் உபதேசங்களை உடனே அனுபவத்திற்குக் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தது.

அவரிடம் நான் பின்வருமாறு கூறி வாதாடினேன்: “உங்கள் விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்கும்போது, பொருளாதாரக்  காரணங்களுக்காக விவாகத்தை ஒத்தி வைத்துக்கொண்டு போவது நியாயமே அல்ல. வறுமை ஒரு தடையாக இருக்குமாயின், ஏழைகள் மணம் செய்து கொள்ளவே முடியாது. மேலும்,  இப்பொழுது நீங்கள் என்னுடன் தங்கியிருக்கிறீர்கள். வீட்டுச் செலவைப்பற்றிய கவலையும் இல்லை. ஆகையால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மணம் செய்துகொண்டுவிட வேண்டும்.” முந்திய ஓர் அத்தியாயத்தில் நான் கூறியிருப்பதைப்போல, ஸ்ரீ போலக்குடன் ஒரு விஷயத்தைக் குறித்து நான் இரு முறை விவாதிக்க வேண்டி வந்ததே இல்லை. என் வாதத்திலுள்ள நியாயத்தை அவர் ஒப்புக்கொண்டார். அச்சமயம் இங்கிலாந்தில் இருந்த ஸ்ரீமதி போலக்குக்கு இதைக் குறித்து உடனே கடிதம் எழுதினார். அவரும் இந்த யோசனையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் ஜோகன்னஸ்பர்க் வந்து சேர்ந்தார். கல்யாணத்திற்குச் செலவு செய்யும் எண்ணம் இல்லை. விசேட ஆடைகள் அவசியம் என்றும் கருதப்படவில்லை தமது பந்தத்திற்கு முத்திரையிட இவர்களுக்கு எந்த மதச் சடங்குகளுங்கூட அவசியப்படவில்லை. ஸ்ரீமதி போலக் பிறப்பினால் கிறிஸ்தவர்; போலக், யூதர். நீதியின் தருமமே இவர்கள் இருவருக்கும் பொதுவான மதம்.

இந்த விவாக சம்பந்தமாக நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் குறித்துச் சிறிது கூற விரும்புகிறேன். டிரான்ஸ்வாலில் இருக்கும் ஐரோப்பியரின் கல்யாணங்களைப் பதிவு செய்து கொள்ளும் அதிகாரி,  கறுப்பு அல்லது மற்ற நிறத்தினரின் விவாகங்களைப் பதிவு செய்யக்கூடாது. இந்தக் கல்யாணத்தில் நான் மாப்பிள்ளைத்தோழனாக இருந்தேன். இதற்கு ஓர் ஐரோப்பியர் எங்களுக்குக் கிடைக்கமாட்டார் என்பதல்ல. ஆனால், அந்த யோசனையைப் போல ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள் மூவரும் கல்யாணப் பதிவு அதிகாரியிடம் சென்றோம். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒரு விவாகத்தில், தம்பதிகள் வெள்ளக்காரர்கள்தான் என்று அவர் எப்படி நிச்சயமாக நம்பி விடமுடியும்? தம்பதிகள் வெள்ளையர்தானா என்பதை விசாரிப்பதற்காக விவாகப் பதிவை ஒத்தி வைப்பதாக அந்த  அதிகாரி கூறினார். மறுநாளோ, ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாள் புது வருடப் பிறப்பு நாளாதலால் விடுமுறை நாள். பக்தியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்துக்கு இத்தகைய அற்பமான சாக்குப்போக்குக் கூறித் தேதியை ஒத்திவைப்பதென்றால், அதை யாரும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. பதிவு இலாகாவின் தலைவரான பிரதம மாஜிஸ்டிரேட்டை எனக்குத் தெரியும். தம்பதிகளுடன் அவர் முன்பு சென்றேன். அவர் சிரித்தார். பதிவு அதிகாரிக்கு ஒரு குறிப்பும் கொடுத்தார். அதன் பேரில் முறைப்படி திருமணம் பதிவாயிற்று.

இதுவரையில் எங்களுடன் வசித்து வந்த ஐரோப்பியர்கள், அநேகமாக எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ எங்களுக்கு முற்றும் புதியவரான ஓர் ஆங்கிலப் பெண் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தாள். புதிதாக மணமான இத் தம்பதிகளுக்கும் எங்களுக்கும் எப்பொழுதேனும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதாக  எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீமதி போலக்கும் என் மனைவிக்கும் சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்தது உண்டு. ஆனால், அவை சிறந்த வகையில் ஒழுங்காகவும் ஒற்றுமையாகவும் உள்ள குடும்பங்களில் சாதாரணமாக ஏற்படும் மனஸ்தாபங்களைவிட எந்த விதத்திலும் அதிகமானவை அல்ல. இன்னும் ஒன்றும் நினைவில் இருக்க வேண்டும். முக்கியமாக என் குடும்பம் பற்பல வகையானவர்கள் சேர்ந்த கலப்புக் குடும்பம் என்றே கருதவேண்டும். எல்லா வகையானவர்களும், வெவ்வேறு குணாதிசயங்களுள்ளவர்களும் தாராளமாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைக் குறித்தும் நாம் நினைக்கும்போது ஒரே சாதி, வெவ்வேறு இனம் என்பதற்கிடையே உள்ள பேதமெல்லாம் வெறும் கற்பனையே என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். நாம் எல்லோரும் ஒரே குடும்பமே. வெஸ்டின் விவாகத்தையும் இந்த அத்தியாயத்திலேயே நடத்திவிடுகிறேன்.

என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் பிரம்மச்சரியத்தைப் பற்றிய என் எண்ணம் பூரணமாக வளர்ச்சியடையவில்லை. ஆகவே, என் பிரம்மச்சரிய நண்பர்கள் எல்லோருக்கும் மணமாகிவிட வேண்டும் என்பதில் நான் அதிகச் சிரத்தை கொண்டேன். வெஸ்ட், தமது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதற்காக லௌத்துக்கு யாத்திரை சென்றார். சாத்தியமானால் விவாகம் செய்துகொண்டு திரும்புமாறு அவருக்குச் சொல்லியனுப்பினேன். போனிக்ஸ் எங்கள் எல்லோருக்கும் பொது வீடு. நாங்கள் எல்லோரும் விவசாயிகளாகவே ஆகி விட்டதாக எண்ணிக்கொண்டதால், விவாகத்தைப்பற்றியும், அதன் சாதாரணமான விளைவுகளைக் குறித்தும் நாங்கள் பயப்படவில்லை. வெஸ்ட் ஸ்ரீமதி வெஸ்ட்டுடன் திரும்பி வந்தார். அவர், லீஸ்டரைச் சேர்ந்த அழகிய இளம்பெண். லீஸ்டர் தொழிற் சாலையில் செருப்புத் தயாரிக்கும் வேலை செய்யும்  ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அத் தொழிற்சாலையில் வேலை செய்து ஸ்ரீமதி வெஸ்ட்டுக்கும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அழகிய பெண் என்று நான் அவரைக் கூறியது, அவருடைய குணசீலத்தின் அழகு என்னை உடனே கவர்ந்திருந்ததனால்தான். உள்ளத்தின் தூய்மையிலேயே உண்மையான அழகு இருக்கிறது. ஸ்ரீ வெஸ்டுடன் அவருடைய மாமியாரும் வந்தார். அவ்வயோதிக மாது இன்றும் உயிருடன் இருக்கிறார். தமது உழைப்பு, உற்சாகம், சந்தோஷமான சுபாவம் ஆகியவைகளினால் அவர், நாங்கள் எல்லோரும் வெட்கப்படும்படிசெய்துவிட்டார். விவாகம் செய்து கொள்ளுமாறு இந்த ஐரோப்பிய நண்பர்களை நான் தூண்டியதைப் போன்றே, இந்தியாவிலிருக்கும் தங்கள் குடும்பங்களைத் தருவித்துக் கொள்ளுமாறு இந்திய நண்பர்களையும் உற்சாகப்படுத்தினேன். இவ்விதம் போனிக்ஸ் ஒரு சிறு கிராமமாக வளர்ந்தது. ஆறு குடும்பங்கள் அங்கே வந்து குடியேறி வளர ஆரம்பித்தன.


Offline Anu

குடும்பக் காட்சி

வீட்டுச் செலவு அதிகமாக இருந்தபோதிலும் எளிய வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற மனப்போக்கு டர்பனிலேயே ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை முன்பே கவனித்து இருக்கிறோம். ஆனால், ரஸ்கினின் உபதேசங்களை அனுசரித்து ஜோகன்னஸ்பர்க் வீடே கடுமையான மாறுதலை அடைந்தது. ஒரு பாரிஸ்டரின் வீட்டில் எவ்வளவு எளிமையைப் புகுத்துவது சாத்தியமோ அவ்வளவையும் செய்தேன். ஓரளவுக்கு மேஜை நாற்காலிகள் இல்லாமல் இருக்க முடியாது. புறத்தில் ஏற்பட்ட மாறுதலைவிட அகத்தில் ஏற்பட்ட மாறுதலே அதிகம். உடலுழைப்பு வேலைகளையெல்லாம் நாமே செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வளர்ந்தது. ஆகையால், என் குழந்தைகளையும்கூட இவ்விதமான கட்டுத் திட்டங்களின் கீழ் வளர்க்க ஆரம்பித்தேன். கடையில் ரொட்டி வாங்குவதை நிறுத்தினோம். கூனேயின் முறைப்படி தவிடு போக்காத கோதுமையைக்கொண்டு வீட்டிலேயே ரொட்டி தயாரிக்க ஆரம்பித்தோம். இதற்குக் கடையில் விற்கும் மில் மாவு பயனில்லை. கையினாலேயே அரைத்த மாவை உபயோகிப்பது அதிக எளிமை ஆவதோடு  உடம்புக்கும் நல்லதாகவும் சிக்கனமாகவும் இருக்கும்  என்று எண்ணினோம். எனவே கையினால் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்றை ஏழு பவுன் கொடுத்து வாங்கினேன். அதன் இரும்புச் சக்கரத்தை ஒருவரே சுற்றுவது கஷ்டம். இரண்டு பேர்  சுலபத்தில் சுற்றலாம். வழக்கமாகப் போலக்கும் நானும் குழந்தைகளும் அந்த இயந்திரத்தில் மாவு அரைப்போம்.

நாங்கள் மாவு அரைக்கும் நேரந்தான் சாதாரணமாக என் மனைவி அடுப்பங்கரை வேலையைப் பார்க்கப் போகும் நேரம். என்றாலும், மாவு அரைப்பதில் அவ்வப்போது அவளும் எங்களுக்கு உதவி செய்ய வருவாள். ஸ்ரீமதி போலக் வந்து சேர்ந்த பிறகு அவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுவார். மாவு அரைப்பது குழந்தைகளுக்கு நன்மை தரும் தேகப் பயிற்சியாக இருந்தது. இந்த வேலையையோ, வேறு எந்த வேலையையோ செய்ய வேண்டும் என்று குழந்தைகள் கட்டாயப்படுத்தப் படுவதில்லை. தாங்களே வந்து, இதில் எங்களுக்கு உதவி செய்வது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு. களைத்துப் போனால் அவர்கள் போய்விடலாம். குழந்தைகள் - பின்னால் உங்களுக்கு நான் அறிமுகம் செய்துவைக்கப் போகிறவர்கள் உள்பட - எனக்கு உதவி செய்ய வராமல் இருந்ததே இல்லை. இவ் வேலையில் பின் தங்கியவர்களும் சிலர் உண்டு. ஆனால், அநேகர் உற்சாகமாகவே வேலை செய்தனர். அந்த நாளில் இளைஞர்கள், வேலை செய்யத் தயங்கியதாகவோ, களைப்பாயிருப்பதாகச் சொன்னதாகவோ எனக்கு நினைவு இல்லை.

வீட்டு வேலையைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஒரு வேலைக்காரரை நியமித்திருந்தோம். குடும்பத்தில் ஒருவராக அவரும் எங்களுடன் வசித்தார். அவருடைய வேலைகளில் குழந்தைகளும் அவருக்கு உதவியாக இருப்பார்கள். முனிசிபல் தோட்டி மலத்தை அப்புறப்படுத்திவிடுவார். ஆனால், கக்கூசுகளை அலம்பும் வேலையை வேலைக்காரர் செய்யும்படி விடாமல், அவர் செய்வதை எதிர்பார்த்துக் கொண்டிராமல் நாங்களே செய்து வந்தோம். குழந்தைகளுக்கு இது நல்ல பயிற்சியாயிற்று. இதன் பலனாக, என் புதல்வர்கள் எல்லோருக்கும் தோட்டி வேலையில் அருவருப்பு ஏற்படாமல் இருந்தது. சுகாதார  விதிகள் சம்பந்தமாகவும் நல்ல பயிற்சி பெற்றார்கள். ஜோகன்னஸ்பர்க் வீட்டில் யாருக்கும் நோய் என்பதே இல்லை. யாருக்காவது நோய் வந்தால், குழந்தைகள் மனம் உவந்து பணிவிடை செய்வார்கள்.  குழந்தைகளின் புத்தகப் படிப்பு விஷயத்தில் நான்  அசிரத்தையாக இருந்தேன் என்றும் சொல்லமாட்டேன். என்றாலும், அதைத் தியாகம் செய்துவிட நிச்சயமாக நான் தயங்கவில்லை. ஆகையால், என் புதல்வர்கள் என் மீது குறை சொல்லுவதற்குக் கொஞ்சம் காரணமும் இருக்கிறது. சில சமயங்களில் இதை அவர்கள் தெரிவித்தும் இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு என் குற்றத்தையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

அவர்களுக்கு இலக்கியக் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நானே அதைச் சொல்லிக் கொடுக்கவும் முயன்றேன். ஆனால், ஒவ்வொரு சமயமும் இதற்கு ஏதாவது ஓர் இடையூறு வந்துகொண்டே இருந்தது. வீட்டில் அவர்களுக்குப் போதிக்க நான் வேறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. என்றாலும், தினமும் என் அலுவலகத்திற்குப் போகும் போதும், வீடு திரும்பும்போதும், அவர்கள் என்னுடன் நடந்துவரும்படி செய்துவந்தேன். இப்படி நடக்கும் தூரம் மொத்தம் ஐந்து மைல்கள். இது எனக்கும் அவர்களுக்கும் நல்ல தேகாப்பியாசமாயிற்று. இவ்விதம் நடந்து போகும்போது, வேறு யாரும் என் கவனத்தைக் கவராது போனால்,  பேசிக்கொண்டே போவதன் மூலம் அவர்களுக்குக் கல்வி போதிக்க முயல்வேன். இந்தியாவில் தங்கியிருந்த மூத்த மகன் ஹரிலாலைத் தவிர மற்ற என் புதல்வர்கள் எல்லோரும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்த வகையில் வளர்ந்தவர்கள்தான். தினமும் ஒரு மணி நேரம் ஒழுங்காக அவர்களுடைய இலக்கியப் படிப்புக்குச் செலவிட என்னால் முடிந்திருக்குமானால், மிகச்சிறந்த படிப்பை நான் அவர்களுக்கு அளித்திருப்பேன் என்பது என் கருத்து. அவர்களுக்குப் போதுமான இலக்கியப் பயிற்சியை அளிக்க நான் தவறி விட்டது, அவர்களுக்கும் எனக்கும் கூடத் துயரம் தருவதாயிற்று.

என் மூத்த மகன், தனது வருத்தத்தைத் தனிமையில் என்னிடத்திலும் பகிரங்கமாகப் பத்திரிகைகளிலும் அடிக்கடி தெரிவித்து வந்திருக்கிறான். ஆனால் என் மற்ற புதல்வர்கள், என் தவறு தவிர்க்கமுடியாதது என்று எண்ணித் தாராளத்துடன் என்னை மன்னித்து விட்டனர். இதற்காக நான் மனம் உடைந்து போய் விடவில்லை. இதில் எனக்கு ஏதாவது வருத்தமிருந்தால், அது ஒரு தந்தை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி, நான் இல்லாது போய் விட்டேனே என்பதற்காகத்தான். சமூகத்திற்குச் சேவை என்று நான் எதை நம்பினேனோ  அது தவறானதாகவும் இருந்து இருக்கக்கூடும். என்றாலும், நான் உண்மையாகவே நம்பிய அந்தச் சேவையில் என் புதல்வர்களின் இலக்கியப் பயிற்சியை நான் தியாகம் செய்துவிட்டேன் என்றே கருதுகிறேன். அவர்களுடைய ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அவசியமானவை எவையோ அவைகளை நான் அலட்சியம் செய்துவிட்டதில்லை என்பது நிச்சயம். இதற்குச் சரியான ஏற்பாடு செய்யவேண்டியதே ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான கடமையும் என்று நம்புகிறேன். இதில் நான் எவ்வளவு முயன்றிருந்தும், என் புதல்வர்களிடம் குறைபாடுகள் தோன்றும் போதெல்லாம், அவற்றைக் குறித்து எனக்கு நிச்சயமாகத் தோன்றும் முடிவு ஒன்று உண்டு. அவர்களுடைய குறைபாடுகளுக்குக் காரணம். நான் போதிய கவனம் செலுத்தத் தவறியது அல்ல. ஆனால், அவர்களுடைய பெற்றோர் இருவரிடமும் இருக்கும் குறைகள்தான் என்பதே என் உறுதியான முடிவு.

குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜி தமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிப்பது விரும்பத் தக்கதா என்பதைக் குறித்துப் போலக்கும் நானும் அடிக்கடி கடுமையான விவாதம் செய்திருக்கிறோம். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே பேசுமாறு தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கும் நாட்டுக்கும்  துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்பது எப்பொழுதுமே என் திடமான அபிப்பிராயமாக இருந்து வந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமூக பாரம்பரியச் செல்வம் குழந்தைகளுக்கு இல்லாது போகும்படி செய்து, அந்த அளவுக்கு நாட்டின் சேவைக்குத் தகுதியில்லாதவர்களாகவும், அவர்களை செய்து விடுகிறார்கள். இவ்விதத்  திடமான கருத்துக்களை நான் கொண்டிருந்ததால், குழந்தைகளிடம் குஜராத்தியில் தான் பேசுவது என்று வைத்துக்கொண்டேன்.

இது போலக்குக்குப் பிடிப்பதே இல்லை. அவர்களுடைய எதிர்காலத்தை நான் நாசமாக்குகிறேன் என்று அவர் கருதினார். தம் முழுவலிமையுடனும், அன்புடனும் என்னோடு விவாதிப்பார். ஆங்கிலம் போன்ற உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு மொழியை,  மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளுவதாக இருந்தால், வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிட அதிக அனுகூலங்களைச் சுலபமாக அவர்கள் பெறுவார்கள் என்பார், போலக். ஆனால், என் மனத்தை அவரால் மாற்ற முடியவில்லை. என் போக்குத்தான் சரி என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்துவிட்டேனா, அல்லது நான் அதிகப் பிடிவாதக்காரன் என்று அவர்தான் விட்டுவிட்டாரா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. இது, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. என் கருத்துக்கள், அனுபவத்தினால் இப்பொழுது அதிகப் பலப்பட்டே இருக்கின்றன. முழு இலக்கியப் படிப்பும் இல்லாததனால் என் புதல்வர்கள் நஷ்டமடைந்திருந்தாலும், இயற்கையாகவே தாய் மொழியில் அவர்கள் அடைந்த அறிவு, அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மையானதாகவே இருக்கிறது. இதனாலேயே, தங்கள் சொந்த நாட்டில் அந்நியரைப் போல் தோன்றியிருக்க வேண்டியவர்கள், இன்று அப்படித் தோற்றமளிக்காமல் இருக்கிறார்கள். இயற்கையாகவே அவர்கள் இரு மொழிகளை அறியலாயினர். ஏராளமான ஆங்கில நண்பர்களுடன் தினமும் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தாலும், முக்கியமாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகவே இருந்த நாட்டில் அவர்கள் இருந்தாலும் எளிதில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கூடியவர்களாக இருக்கின்றனர்.


Offline Anu

ஜூலுக் கலகம்

ஜோகன்னஸ்பர்க்கில் நான் நிலைபெற்றுவிட்டேன் என்று நினைத்த பிறகும் எனக்கு நிலையான வாழ்க்கை ஏற்படவில்லை. இனிமேல் கொஞ்சம் அமைதியாக இருக்க முடியும் என்று நான் எண்ணிய சமயம், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நேட்டாலில் ஜூலுக் கலகம்  ஆரம்பமாயிற்று என்று பத்திரிகைகளில் செய்தியைப் படித்தேன். ஜூலுக்களிடம் எனக்கு எந்த விதமான விரோதமும் இல்லை. அவர்கள் இந்தியருக்கு தீமை செய்துவிடவும் இல்லை. கலகம் என்று சொல்லப்பட்டதைக் குறித்து எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகத்தின் நன்மைக்காகவே இருக்கிறது என்று நான் அப்பொழுது நம்பினேன். எனக்கு இருந்த உண்மையான விசுவாசம், அந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஒரு கெடுதலைக்கூட எண்ண முடியாதபடி என்னைத் தடுத்தது. ஆகையால், கலகம் நியாயமானதுதானா, நியாயமில்லாததா என்பதும் கூட என்னுடைய தீர்மானத்தைப் பாதித்து விடவில்லை. நேட்டாலில் தொண்டர் பாதுகாப்புப் படை ஒன்று இருந்தது. அதில் அதிகம் பேரைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு இடமிருந்தது. கலகத்தை அடக்குவதற்காக இப்படை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பத்திரிகைகளில் படித்தேன்.

நேட்டாலுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டவன். ஆகையால், என்னை அதன் பிரஜையாகவே கருதினேன். எனவே, அவசியமானால், இந்திய வைத்தியப் படை ஒன்றை அமைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துக் கவர்னருக்கு எழுதினேன். என் யோசனையை ஏற்றுக்கொண்டு அவர் உடனே பதில் எழுதினார். இவ்வளவு சீக்கிரமே என் யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, கடிதம் எழுதுவதற்கு முன்னாலேயே, அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தேன். என் யோசனை ஏற்கப்பட்டுவிடுமானால், ஜோகன்னஸ்பர்க் ஜாகையை எடுத்துவிடுவது, வேறு ஒரு சிறு வீட்டுக்குப் போலக் குடி போய்விடுவது, என் மனைவி போனிக்ஸு க்குப் போய் அங்கேயே இருப்பது என்று நான் தீர்மானித்தேன். இம் முடிவு குறித்து என் மனைவி பூரண சம்மதம் அளித்தாள். இதுபோன்ற காரியங்களில் என் தீர்மானத்திற்கு அவள் என்றாவது ஒரு சமயமேனும் குறுக்கே நின்றதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஆகையால், கவர்னரிடமிருந்து பதில் வந்ததுமே,  வீட்டைக் காலி செய்வதற்கு வீட்டுச் சொந்தக்காரருக்கு வழக்கமான  ஒரு மாத முன்னறிவிப்புக் கொடுத்தேன். வீட்டிலிருந்த  சாமான்களில் சிலவற்றைப் போனிக்ஸு க்கு அனுப்பிவிட்டு மீதியைப் போலக்கிடம் விட்டுச் சென்றேன்.

டர்பனுக்குச் சென்று, ஆள் தேவை என்று கோரிக்கை வெளியிட்டேன். பெரிய படை எதுவும் தேவைப்படவில்லை. இருபத்து நான்கு பேரைக் கொண்ட ஒரு குழு எங்கள் படை இதில் என்னைத் தவிர மற்றும் நான்கு குஜராத்திகள் இருந்தனர். சுயேச்சையான ஒரு பட்டாணியரைத் தவிர மற்றவர்களெல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்;  முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்தவர்கள். எனக்கு ஓர் அந்தஸ்தை அளிப்பதற்காகவும், வேலை எளிதாக நடப்பதற்காகவும், அப்பொழுது இருந்த சம்பிரதாயத்தை அனுசரித்தும், பிரதம வைத்திய அதிகாரி என்னைத் தற்காலிக சார்ஜண்டு மேஜராக நியமித்தார். நான் தேர்ந்தெடுத்த மூவரை சார்ஜண்டுகளாகவும், ஒருவரைக் கார்ப்பொரலாகவும் நியமித்தார். இவற்றிற்குரிய ஆடைகளையும் அரசாங்கத்தினர் எங்களுக்கு அளித்தனர். எங்கள் படை ஆறு வாரம் சேவை செய்தது. கலகப் பிரதேசத்தை அடைந்ததும், கலகம் என்ற பெயர் அதற்குச் சரி என்பதற்கான நியாயம் எதையும் நான் அங்கே காணவில்லை. கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் எதிர்ப்பு என்பதே இல்லை. சிறு கலவரம்,பெறும் புரட்சியாக மிகைப்படுத்தப்பட்டதன் காரணம் இதுதான்: ஜூலுக்கள் மீது புது வரி விதித்தார்கள். அதைக் கொடுக்க வேண்டாம் என்று ஒரு ஜூலுத் தலைவர் தம் மக்களுக்கு கூறினார்.

வரி வசூலிக்கப் போன  ஒரு சார்ஜண்டை ஈட்டியால் குத்திவிட்டனராம். விஷயம் எப்படி இருந்தாலும், என் அனுதாபம் ஜூலுக்கள் பக்கமே இருந்தது. எங்களுடைய முக்கியமான வேலை, காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வதே என்று, தலைமைக் காரியாலயத்திற்குப் போனதும் நான் அறிந்து ஆனந்தமடைந்தேன். அங்கிருந்த வைத்திய அதிகாரி எங்களை வரவேற்றார். காய மடைந்த ஜூலுக்களுக்கு வெள்ளைக்காரர்கள் மனமாரப் பணிவிடைகள் செய்வதில்லை என்றும், அவர்கள் புண்கள் அழுகிக்கொண்டு வருகின்றன என்றும், என்ன செய்வதென்று தெரியாமல் தாம் திகைத்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். நாங்கள் வந்தது, ஒரு பாவமும் அறியாத ஜூலுக்களுக்குத் தெய்வ சகாயம்போல் ஆயிற்று என்று அவர் ஆனந்தம் அடைந்தார். புண்களுக்கு மருந்து வைத்துக் கட்டுவதற்கு வேண்டியவைகளையும், கிருமி ஒழிப்பு மருந்துகளையும் எங்களுக்குக் கொடுத்தார். தாற்காலிக ஆஸ்பத்திரிக்கும் எங்களை அழைத்துச் சென்றார். எங்களைப் பார்த்ததும் ஜூலுக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எங்களுக்கும் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்த இடத்திற்கும் மத்தியில் கம்பிக் கிராதி போட்டிருந்தனர். அதன் வழியே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் எங்களை எட்டிப் பார்த்து, ஜூலுக்களுக்குச் சிகிச்சை செய்ய வேண்டாம் என்று எங்களைத் தூண்ட முயன்றனர். அவர்கள் சொல்லுவதை நாங்கள் கேட்காது போகவே ஜூலுக்களைச் சொல்லொணாத கேவலமான பாஷையில் திட்டினார்கள்.

நாளாவட்டத்தில் இந்தச் சிப்பாய்களுடன் நான் நெருங்கிப் பழகலானேன். பிறகு எங்கள் வேலையில் தலையிடுவதை அவர்கள் நிறுத்தி விட்டனர். ராணுவத்தில் பெரிய உத்தியோகத்தில் கர்னல் ஸ்பார்ஸு ம், கர்னல் வைலியும் இருந்தனர். 1896-இல் இவர்கள் என்னை அதிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இப்பொழுது என் போக்கைக்கண்டு  ஆச்சரியமடைந்தனர். என்னைப் பார்ப்பதற்கென்றே வந்து, எனக்கு நன்றியும் தெரிவித்தனர். ஜெனரல் மெக்கன்ஸியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இவர்கள் எல்லோரும் ராணுவ சேவையையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வாசகர்கள் எண்ணிவிடவேண்டாம். கர்னல் வைலி, டர்பனில் பிரபலமான வக்கீல். கர்னல் ஸ்பார்கஸ், டர்பனில் ஒரு பெரிய கசாப்புக்கடையின் சொந்தக்காரர் என்ற வகையில் பிரபலமானவர். ஜெனரல் மெக்கன்ஸி, நேட்டாலில் பிரபல விவசாயி. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் படையில் சேர்ந்தவர்கள். இதனால், ராணுவப் பயிற்சியையும் அனுபவத்தையும் இவர்கள் பெற்றனர். எங்கள் பராமரிப்பில் இருந்த காயம்பட்டோர், யுத்தத்தில் காயமடைந்தவர்களல்ல.  இவர்களில் ஒரு பகுதியினரைச் சந்தேகிக்கப்பட்டவர்கள் என்றுசிறைப்படுத்தினர். இவர்களுக்குச் சவுக்கடி தண்டனை அளிக்கும்படி ஜெனரல் தீர்ப்பளித்தார்.

சவுக்கடியால் இவர்களுக்குப் பலமான புண்கள் ஏற்பட்டன. புண்களுக்கு எந்தச்  சிகிச்சையுமே செய்யாது போனதால் அழுகிவிட்டன. மற்றவர்களோ, சிநேகமான ஜூலுக்கள். விரோதிகளிலிருந்து இவர்களைப் பிரித்துக் காட்டுவதற்காக இவர்களுக்குப் பட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தும் தவறாக இவர்களைச் சிப்பாய்கள் சுட்டுவிட்டனர். இந்த வேலையல்லாமல், வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்கு மருந்து கலந்து கொடுக்கும் வேலையும் எனக்கு இருந்தது. டாக்டர் பூத்தின் சிறிய வைத்தியசாலையில் ஒரு வருடம் நான் இதில் பயிற்சி பெற்றிருந்ததால், இந்த வேலை எனக்கு எளிதாக இருந்தது. இந்த வேலையின் காரணமாக அநேக ஐரோப்பியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதிக வேகமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய்க் கொண்டிருந்த ஒரு படையுடன் நாங்கள் இணைக்கப்பட்டிருந்தோம். எங்கெங்கே ஆபத்து இருப்பதாகத் தெரிந்ததோ அங்கே போகும்படி இப்படைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பெரும்பகுதியினர் குதிரை வீரர்கள். எங்கள் முகாம் நகர்ந்ததும் காயமடைந்தவர்களைத் தூக்குவதற்குள்ள டோலிகளைத் தோளில் சுமந்துகொண்டு நாங்கள் நடந்தே போகவேண்டும். இரண்டு மூன்று தடவைகளில் ஒரே நாளில் நாற்பது மைல்கள் நாங்கள் நடந்து போகவேண்டி வந்தது. ஆனால், நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் எங்களுக்குத் தெய்விகத்தொண்டு இருந்ததற்காக நன்றியுள்ளவனாகிறேன். தவறுதலாகச் சுடப்பட்டு விடும் சிநேக ஜூலுக்களை நாங்கள் டோலிகளில் தூக்கிக்கொண்டு முகாம்களுக்குப் போய்த் தாதிகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தோம்.


Offline Anu

இதய சோதனை

ஜூலுக் கலகத்தில் நான் அநேக புது அனுபவங்களைப் பெற்றேன். அது என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படியும் செய்தது. போரின் பயங்கரங்களைக் குறித்து ஜூலுக் கலகத்தில் நான் அறிந்துகொண்டதைப் போல் போயர் கலகத்தின் போது நான் தெரிந்துகொள்ளவில்லை. இது மனித வேட்டையேயன்றிப் போர் அல்ல. இது என்னுடைய அபிப்பிராயம் மாத்திரமல்ல, நான் இதைக் குறித்துப் பேச நேர்ந்த போது ஆங்கிலேயர் பலரும் இதே அபிப்பிராயத்தையே கூறினார்கள். ஒரு பாவமும் அறியாத மக்கள் வாழ்ந்த குக்கிராமங்களில், சிப்பாய்களின் துப்பாக்கிகள் பட்டாசுகள் போல் வெடித்தன என்ற செய்தியை ஒவ்வொரு நாள் காலையிலும் கேட்டுக் கொண்டு, அவர்கள் மத்தியிலும் வசித்து வருவது என்பது, பெருஞ் சோதனையாகவே இருந்தது. ஆனால், இந்த வேதனையை நான் ஒருவாறு சகித்துக்கொண்டேன். ஏனெனில் முக்கியமாகக் காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வது என்பது மாத்திரமே எங்கள் படையின் வேலை. நாங்களும் இல்லாதிருந்தால், அந்த ஜூலுக்களை  யாருமே கவனித்திருக்க மாட்டார்கள் என்பதையும் கண்டேன். ஆகவே, இந்த வேலை என் மனத்திற்குச் சமாதானமாக இருந்தது. ஆனால், சிந்திக்கவேண்டிய வேறு விஷயங்களும் அநேகம் இருந்தன. அந் நாட்டில் மிகக் குறைவான ஜனத் தொகையைக் கொண்ட பகுதி அது. குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில்  அநாகரிகர்கள் என்று சொல்லப்படும் ஜூலுக்களின் கிரால்கள் எனப்படும் கிராமங்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டோ, சும்மாவோ இந்த ஏகாந்தமான பகுதிகளில் நடந்து போகும்போதே அடிக்கடி தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன்.

பிரம்மச்சரியத்தைக் குறித்தும், அதன் விளைவுகளைப் பற்றியும் யோசித்தேன். அது சம்பந்தமான என் கருத்துக்கள் ஆழ வேர் ஊன்றின. எனது சக ஊழியர்களுடன் அதைக் குறித்து விவாதித்தேன். ஆன்ம ஞானத்தை அடைவதற்குப் பிரம்மச்சரியம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அப்பொழுது நான் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால், தனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால், நான் செய்து வருவதைப் போன்ற தொண்டுக்கு, மேலும் மேலும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதையும், குடும்ப வாழ்க்கையின் இன்பத்திலும்  பிள்ளைகளைப் பெறுவதிலும் அவற்றை வளர்ப்பதிலுமே நான் ஈடுபட்டிருந்தேனாயின் என் வேலைக்கு நான் தகுதியுடையவனாகமாட்டேன்  என்பதையும் உணர்ந்தேன். சுருங்கச் சொன்னால், உடலை நாடுவது அல்லது ஆன்மாவை நாடுவது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிற்காகவே நாம் வாழ முடியும். உதாரணமாக, இச் சமயம் என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்க்கும் நிலையில் இருந்திருப்பாளாயின், இப் போரின் சேவையில் நான் குதித்திருக்க முடியாது.

பிரம்மச்சரியத்தை அனுசரிக்காத  குடும்ப சேவை, சமூக சேவைக்குப் பொருந்தாகதாகவே இருக்கும். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால் அது முற்றும் பொருந்துவதாக இருக்கும். இவ்வாறு சிந்தித்ததனால், முடிவான விரதம் கொண்டு விட வேண்டும் என்று ஒருவகையில் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். இவ்விரதத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு வகையான ஆனந்தத்தை உண்டாக்கியது. கற்பனா சக்தியும் சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தது. சேவை செய்வதற்கு எல்லையற்ற துறைகள் தோன்றலாயின. இவ்வாறு கடுமையான உடலுழைப்பின் நடுவிலும், மன உழைப்பின் நடுவிலும் இருந்த சமயத்தில், கலகத்தை அடக்கும் வேலை அநேகமாக முடிந்துவிட்டது என்றும், நாங்கள் சீக்கிரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விடுவோம் என்றும் ஒரு செய்தி வந்தது. இரண்டொரு நாட்களுக்குப் பிறகு நாங்கள் விடுவிக்கப்பட்டோம் பிறகு சில தினங்களில் எங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம். கொஞ்ச நாட்கள் கழித்துக் கவர்னரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தில், எங்கள்  வைத்தியப் படையின் சேவைக்குப் பிரத்தியேகமாக நன்றி கூறியிருந்தார். போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும், பிரம்மச்சரிய விஷயத்தைக் குறித்து சகன்லால், மகன்லால், வெஸ்ட் முதலியவர்களிடம் பேசினேன். இந்த யோசனை அவர்களுக்கும் பிடித்திருந்தது. இவ் விரதத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அதிலிருக்கும் கஷ்டங்களையும் எடுத்துக் கூறினர்.

சிலர், இதை அனுசரிக்கத் தைரியமாக முன்வந்தார்கள். இதில் சிலர் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அறிவேன். நானும் துணிந்து இறங்கினேன். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது என்று விரதம் பூண்டேன். ஆனால் நான் மேற்கொண்ட இக் காரியம் எவ்வளவு மகத்தானது, கடுமையானது என்பதை அப்பொழுது நான் உணரவில்லை. அதிலுள்ள கஷ்டங்கள் இன்றும்கூட என் எதிரே மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த விரதத்தின் முக்கியத்துவமும் நாளுக்கு நாள் எனக்கு  நன்றாகப் புலனாகிக்கொண்டு வருகிறது. பிரம்மச்சரியம்  இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத்தனமாகவும்  எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான். பிரம்மச்சரியத்தின் பெருமையைக் குறித்து நமது மத நூல்களில் புகழ்ந்து கூறப் பட்டிருப்பதெல்லாம் மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பதாக முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிரம்மச் சரியத்தைக் குறித்து நாளுக்கு நாள் நான் தெளிவடைந்து வருவதால் சமய நூல்கள் கூறுவதெல்லாம் சரியானவையே என்பதையும், அனுபவத்தில் கண்டு கூறப்பட்ட உண்மைகள் என்பதையும் இன்று காண்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான சக்தியையுடையதான பிரம்மச்சரியம், எளிதான காரியமும் அன்று என்பதையும் கண்டேன். அது நிச்சயமாக உடலைப்பற்றிய விஷயம் மாத்திரம் அல்ல. உடலின் அடக்கத்தோடு அது ஆரம்பமாகிறது. ஆனால், அதோடு அது முடிந்துவிடுவதில்லை. பூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி  செய்து கொள்ளக் கனவிலும் எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்திவிட்டால் அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகுதூரம் கடக்கவேண்டி இருக்கும். எனக்கோ சரீர அளவில் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பதிலும் கூடக் கஷ்டங்கள் அதிகம் இருந்தன. அநேகமாக அபாய எல்லையைத் தாண்டிவிட்டேன் என்று நான் இன்று சொல்லலாம். ஆயினும், இதில் மிகவும் அத்தியாவசியமான - சிந்தையை வசப்படுத்துவதில் - நான் இன்னும் முழு வெற்றியையும் அடைந்து விடவில்லை. இதில் உறுதியோ, முயற்சியோ இல்லாமலில்லை. ஆனால், விரும்பத்தகாத எண்ணங்கள் எங்கிருந்து எழுந்து வஞ்சகமாகப் படையெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுவது இன்னும் எனக்கு  ஒரு பிரச்னையாகவே இருந்துவருகிறது. விரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மகான்களும் முனிவர்களும் தங்கள் அனுபவங்களை நமக்குச் சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் ஏற்றதாகவும், தவறாமல் பலிக்கக் கூடியதாகவும் உள்ள மருந்து எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

பரிபூரணத்துவம் அல்லது தவறே இழைக்காமலிருக்கும் சக்தி கடவுளின் அருளினால் மாத்திரமே கைகூடும். அதனாலேயே கடவுளை நாடிய பக்தர்களும் ஞானிகளும் தங்களுடைய தவ வலிமையினாலும் தூய்மையினாலும், சக்தி பெற்ற ராமநாமம் போன்ற
மந்திரங்களை நமக்கு அளித்திருக்கிறார்கள். அவன் அருளை நாடி அவனே கதி என்று  பரிபூரணமாக அடைக்கலம் புகுந்து விட்டாலன்றிச் சிந்தையை முற்றிலும் அடக்கி விடுவது என்பது சாத்தியமே இல்லை. சிறந்த சமய நூல் ஒவ்வொன்றும் இதையே போதிக்கிறது. பூரணமான பிரம்மச்சரியத்தை அடைந்து விடுவதற்காக நான் பாடுபடும் ஒவ்வொரு கணத்திலும் இந்த உண்மையை உணர்ந்து வருகிறேன். அந்த முயற்சி, போராட்டம் ஆகியவற்றின் சரித்திரத்தில் ஒரு பகுதியை இனி வரும்  அத்தியாயங்களில் கூறுகிறேன். இம்முயற்சியை எப்படித் தொடங்கினேன் என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். உற்சாகத்தின் ஆரம்ப வேகத்தில், பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது வெகு எளிதானது என்பதைக் கண்டேன். என் வாழ்க்கை முறையில் நான் செய்த முதல் மாறுதல், என் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுப்பதையும் அவளுடன் தனிமையை நாடுவதையும் விட்டு விட்டதாகும். இவ்வாறு 1900-ஆம்  ஆண்டிலிருந்து, விரும்பியும் விரும்பாமலும் நான் அனுசரித்து வந்த பிரம்மச்சரியத்திற்கு, 1906-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து ஒரு விரதத்தின் மூலம் முத்திரையிட்டேன்.


Offline Anu

சத்தியாக்கிரகத்தின் பிறப்பு

என்னளவில் நான் மேற்கொண்ட பிரம்மச்சரியமாகிய ஆன்மத் தூய்மை, சத்தியாக்கிரகத்திற்குப்  பூர்வாங்கமானதாகும்படி செய்வதற்காக ஜோகன்னஸ்பர்க்கில் சம்பவங்கள் தாமாகவே உருவாகிக்கொண்டு வந்தன. பிரம்மச்சரிய விரதத்தில் முடிந்த என் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் எல்லாமே அந்தரங்கத்தில் என்னைச் சத்தியாக்கிரகத்திற்குத் தயார் செய்து வந்தன என்பதை இப்பொழுது காண முடிகிறது. சத்தியாக்கிரகம் என்ற சொல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னாலேயே அத்ததுத்துவம் தோன்றி விட்டது. அது பிறந்தபோது, அதை இன்னதென்று சொல்ல எனக்கே தெரியவில்லை. குஜராத்தியிலும்கூட அதைக் கூற ஆங்கிலச் சொற்றொடரான பாஸிவ் ரெஸிஸ்ட்டன்ஸ் (பேசிவ் ரெசிஸ்டன்ஸ்-சாத்விக எதிர்ப்பு) என்பதையே உபயோகித்தோம். ஐரோப்பியர்களின் கூட்டமொன்றுக்குச் சென்றிருந்தபோது, சாத்விக எதிர்ப்பு என்பதற்கு மிகக் குறுகிய பொருளே உண்டு என்பதைக் கண்டேன். மேலும், அது பலவீனங்களின் ஆயுதமாகவும் கருதப்பட்டது. அதில் பகைமைக்கு இடம் உண்டு என்பதையும், முடிவில் அதுவே பலாத்காரமாக வளர்ந்து விடக்கூடும் என்பதையும் அறிந்தேன்.

இந்தக் கருத்துக்களை எல்லாம் நான் மறுத்துக்கூறி, இந்தியரின்  இயக்கத்தினுடைய உண்மையான தன்மையை விளக்கவேண்டி இருந்தது. இப் போராட்டத்தைக் குறிப்பிடுவதற்கு ஒரு புதிய சொல்லை இந்தியர் கண்டுபிடித்தாக வேண்டும் என்பது தெளிவாயிற்று. நான் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒரு புதிய பெயரைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. ஆகவே, இது சம்பந்தமாகச் சிறந்த யோசனையைக் கூறுபவருக்கு ஒரு சிறு பரிசு அளிப்பதாக இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகை மூலம் அறிவித்தேன். இதன் பயனாக மகன்லால் காந்தி சதாக்கிரகம் (சத்-உண்மை; ஆக்கிரகம்-உறுதி) என்ற சொல்லைச் சிருஷ்டித்துப் பரிசைப்பெற்றார். ஆனால், அது இன்னும் தெளிவானதாக இருக்கட்டும் என்பதற்காக அதைச் சத்தியாக்கிரகம் என்று மாற்றினேன். அதிலிருந்து அப்போராட்டத்திற்குக் குஜராத்தியில் அச்சொல் வழங்கலாயிற்று. இந்தப் போராட்டத்திற்குச் சரித்திரமே, என்னுடைய தென்னாப்பிரிக்க வாழ்க்கையின் சரித்திரமும் - முக்கியமாக அந்த உபகண்டத்தில்  நான் நடத்திய சத்திய சோதனையின் சரித்திரமும்-ஆகும். இந்தச் சரித்திரத்தின் பெரும் பகுதியை எராவ்டாச் சிறையில்  இருக்கும்போது எழுதினேன். நான் விடுதலையான பிறகு மீதத்தைப் பூர்த்திசெய்தேன்.

அது நவ ஜீவனில் பிரசுரமாகிப் பின்னர் புத்தகரூபமாக வெளிவந்தது. கரண்ட்தாட் பத்திரிக்கைக்காக ஸ்ரீ வால்ஜி கோவிந்தஜி தேசாய், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவருகிறார். சீக்கிரத்தில் அதைப் புத்தக ரூபத்தில் வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த மிகவும் முக்கியமான சோதனைகளை அறிய விரும்புவோருக்கு உதவியாக இருக்கட்டும் என்பதற்காகவே  இந்த ஏற்பாடு இன்னும் படிக்காதவர்கள் நான் எழுதிய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தைப் படிக்கும்படி சிபாரிசு செய்வேன். அதில் எழுதியிருப்பதை இங்கே நான் திரும்பச் சொல்லப் போவதில்லை. ஆனால், பின்வரும் சில அத்தியாயங்களில் அந்தச் சரித்திரத்தில் கூறப்படாத என் வாழ்க்கையின் சொந்தச் சம்பவங்கள் சிலவற்றை மாத்திரமே கூறுவேன். இவற்றைச் சொல்லி முடித்ததும், இந்தியாவில் நான் செய்த  சில சோதனைகளைக் குறித்து உடனே கூற ஆரம்பிப்பேன். ஆகையால், இந்தச் சோதனையை வரிசைக்கிரமத்தில் கவனிக்க விரும்புகிறவர்கள், தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரத்தை முன்னால் வைத்துக் கொள்ளுவது நல்லது.


Offline Anu

மேலும் உணவுப் பரிசோதனைகள்

மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டும் என்பதில் நான் ஆர்வத்துடனிருந்தேன். அதேபோல் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கே அதிக அளவு என் காலத்தைச் செலவிடவும், தூய்மையை வளர்த்துக்கொண்டு அதற்கு என்னைத்  தகுதியுடையவனாக்கிக்கொள்ளவும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகையால், என் உணவு சம்பந்தமாக மேலும் பல மாறுதல்களைச் செய்துகொண்டு,  எனக்கு நானே அதிகக் கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. முன்னால் செய்த மாறுதல்களெல்லாம் பெரும்பாலும் தேகாரோக்கியத்தை முன்னிட்டுச் செய்தவை. ஆனால், புதிய சோதனைகளோ, சமய நோக்கில் செய்தவை. உண்ணாவிரதமும், ஆகாரக் கட்டுப்பாடும் என் வாழ்க்கையில் இப்பொழுது  முக்கியமானவைகளாயின. நாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக்குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும் என் விஷயத்திலும் அவ்வாறே இருந்தது. காம இச்சையையும் நாவின் ருசியையும் அடக்க முயன்றதில் நான் எத்தனயோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவைகளை முற்றும் அடக்கிவிட்டேன் என்று நான் இன்னும் சொல்லிக்கொள்வதற்கில்லை.

என்னைப் பெருந்தீனிக்காரனாகக் கருதி வந்தேன். எனது  கட்டுத்திட்டம் என்று நண்பர்கள் எதை நினைத்தார்களோ அது கட்டுத்திட்டமாக எனக்கு என்றும் தோன்றவில்லை. நான் இன்று கொண்டிருக்கும் அளவுக்குக் கட்டுத்திட்டங்களை வளர்த்துக்கொள்ளத் தவறியிருப்பேனாயின், மிருகங்களிலும் இழிந்த நிலைக்கு நான் தாழ்ந்துபோய் வெகுகாலத்திற்கு முன்பே நாசமடைந்து இருப்பேன். என்றாலும், என்னுடைய குறைபாடுகளைப் போதிய அளவுக்கு நான் அறிந்திருந்ததால், அவைகளைப் போக்கிக் கொண்டுவிடப் பெரும் முயற்சிகளை நான் செய்தேன். இந்த முயற்சிகளின் பலனாக இவ்வளவு காலமும் இவ்வுடலுடன் காலந்தள்ளிவருவதோடு அதைக்கொண்டு என்னால் இயன்ற பணியையும் செய்து வருகிறேன். என் குறைகளை நான் அறிந்திருந்ததோடு மனத்துக்கு இசைந்த சகாக்களின் தொடர்பும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. ஏகாதசி தினத்தன்று பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது அல்லது பட்டினி விரதம் இருப்பது என்று ஆரம்பித்தேன். ஜன்மாஷ்டமி முதலிய விரத தினங்களையும் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.

முதலில் பழ ஆகாரத்துடன் ஆரம்பித்தேன். ஆனால், நாவின் சுவையடக்கத்தைப் பொறுத்த வரையில் பழ ஆகாரத்திற்கும் தானிய ஆகாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் எனக்குத் தோன்றவில்லை. தானிய ஆகாரத்தைப் போலவே பழ ஆகாரத்திலும் நாவின் சுவை இன்பத்திற்கு இடமுண்டு என்பதைக் கண்டேன். பழ ஆகாரத்தில் பழக்கப்பட்டுவிட்டால் அதில் ருசி இன்பம் இன்னும் அதிகமாகிவிடவும் கூடும். ஆகையால், பட்டினி இருப்பது அல்லது விடுமுறை நாட்களில் ஒரே வேளைச் சாப்பாட்டுடன் இருப்பது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தேன். பிராயச்சித்தம் செய்து கொள்ளுவது போன்ற சந்தர்ப்பம் வந்தால், அதையும் பட்டினி கிடப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். உபவாசத்தினால் உடலிலிருந்து கழிவுப் பொருள்கள் நன்றாக  வெளியேறிவிடுவதால் சாப்பாடு அதிக ருசியாக இருந்தது; நன்றாகப் பசி எடுத்தது. பட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம் என்பது அப்பொழுது எனக்குத் தெரிந்தது. நான் கண்ட இந்த திடுக்கிடும் உண்மைக்கு, பின்னால் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என் உடல் நிலையை அபிவிருத்தி செய்யவும், அதற்கு பயிற்சி அளிக்கவும் விரும்பினேன். ஆனால், இப்பொழுது எனது முக்கியமான நோக்கம், கட்டுத்திட்டங்களும் சுவையடக்கமுமே. ஆகையால், முதலில் ஓர் ஆகாரத்தையும், பிறகு மற்றோர் ஆகாரத்தையும் தேர்ந்தெடுத்துச் சோதித்தேன். அதே சமயத்தில் அளவையும் குறைத்தேன். ஆனால் சுவை இன்பம் மாத்திரம் எனக்கு முன்பு இருந்ததைப் போன்றே இருந்தது. ஒன்றைவிட்டு மற்றொன்றைச் சாப்பிட ஆரம்பித்த போது, முன்னால் சாப்பிட்டதைவிடப் பின்னால் சாப்பிட்டது புதிதாகவும், அதிக ருசியுள்ளதாகவும் எனக்குத் தோன்றிற்று.

இச்சோதனைகளைச் செய்வதில் எனக்குப் பல தோழர்களும் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் ஹெர்மான் கால்லென்பாக்.  இந்த நண்பரைக் குறித்துத் தென்னாப்பிரிக்கச் சக்தியாக்கிரக சரித்திரத்தில் முன்பே எழுதியிருக்கிறேன். ஆகையால், அதைப்பற்றி நான் இங்கே திரும்பச் சொல்லப் போவதில்லை. பட்டினியானாலும் சரி, உணவு மாற்றமானாலும் சரி, கால்லென்பாக் எப்பொழுதும் என்னுடன் இருப்பார். சத்தியாக்கிரகப் போராட்டம் உச்சநிலையில் இருந்தபோது, அவருடைய இடத்தில் நான் அவருடன் வசித்து வந்தேன். எங்கள் உணவு மாறுதல்களைக் குறித்து விவாதிப்போம். பழைய சாப்பாட்டைவிடப் புதிய சாப்பாட்டில் அதிக இன்பத்தை அனுபவிப்போம். இப்படிப்பட்ட பேச்சுக்கள் அந்த நாளில் அதிக இன்பமானவைகளாக இருந்தன. அவை தகாத பேச்சுக்களாக எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால், உணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக்கூடாது; உடலை வைத்திருப்பதற்கு என்று மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுது தான் அதற்கென்று இயற்கை வகுத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது.

இயற்கையோடு இசைந்த இந்த நிலையை அடைவதற்கு எத்தனைதான் பரிசோதனைகள் நடத்தினாலும் போதுமானவையாக மாட்டா; எந்தத் தியாகமும் இதற்கு அதிகமாகாது. ஆனால், துரதிருஷ்டவசமான இக்காலத்தின் போக்கோ இதற்கு எதிரிடையான திக்கில் பலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப காலம் அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவத்திற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம். இவை யாவும்நம் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,  இவற்றைப் பார்க்காமல் இருப்பவர்களைப் போன்ற குருடர்கள் வேறு யாருமே இல்லை. உணவுச் சோதனைகளின் நோக்கத்தையும், அவற்றிற்குக் காரணமாக இருந்த கருத்துக் கோவையையும் இதுவரை எடுத்துக்காட்டினேன். இனி உணவுச் சோதனைகளைக் குறித்துக் கொஞ்சம் விவரமாகவே கூற நினைக்கிறேன்.


Offline Anu

கஸ்தூரிபாயின் தீரம்

என் மனைவி தனது வாழ்க்கையில் மும்முறை கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தாள். குடும்ப வைத்திய முறைகளினாலேயே அவள் குணமடைந்தாள். சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போதோ அல்லது ஆரம்பம் ஆவதற்கிருந்த சமயத்திலோ அவள் முதல் முறை கடுமையாக நோயுற்றாள். அவளுக்கு அடிக்கடி ரத்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது. ரண சிகிச்சை செய்வது அவசியம் என்று ஒரு வைத்திய நண்பர் ஆலோசனை கூறினார். முதலில் கொஞ்சம் தயங்கினாள் எனினும் பிறகு சம்மதித்தாள். அவள் அதிகப் பலவீனமாக இருந்ததால் மயக்க மருந்து கொடுக்காமல் டாக்டர் ரண சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. கிசிச்சை வெற்றிகரமானதாயிற்று. ஆனால், அவள் அதிக நோவை அனுபவிக்க நேர்ந்தது. நானே அதிசயிக்கத்தக்க தீரத்துடன் அதை அவள் சகித்துக்கொண்டாள். டாக்டரும், அவருக்குத் தாதியாக இருந்து பணிவிடை செய்த அவருடைய மனைவியும் அதிகக் கவனத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டார்கள். இது டர்பனில் நடந்தது. பிறகு நான் ஜோகன்னஸ்பர்க் போக டாக்டர் அனுமதித்தார். அவளைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.

ஆனால், அவளுடைய உடல்நிலை அதிக மோசமாகி விட்டது என்று சில தினங்களுக்கெல்லாம் எனக்குக் கடிதம் வந்தது. படுக்கையில் உட்காருவதற்குக் கூட அவளுக்குப்பலமில்லை என்றும் ஒரு சமயம் பிரக்ஞை இல்லாமல் இருந்தாள் என்றும் அறிந்தேன். என்னுடைய சம்மதமில்லாமல் அவளுக்கு மதுவாவது, மாமிசமாவது கொடுக்கக்கூடாது என்பது டாக்டருக்குத் தெரியும். எனவே, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் என்னுடன் டெலிபோனில் பேசி, அவளுக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்க அவர் அனுமதி கேட்டார். இதற்கு நான் அனுமதி கொடுக்க முடியாது என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டேன். ஆயினும், இது விஷயமாக அபிப்பிராயம் கூறக்கூடிய நிலையில் அவள் இருந்ததால், அவளைக் கலந்து ஆலோசிக்கலாம் என்றும், அவள்  இஷ்டம்போல் செய்து கொள்ளலாம்  என்றும் சொன்னேன். ஆனால், டாக்டரோ, “இவ்விஷயத்தில் நோயாளியின் விருப்பத்தைக் கேட்க நான் மறுக்கிறேன். நீங்கள் தான் இதில் அபிப்பிராயம் கூறவேண்டும். நான் கொடுக்க விரும்பும் ஆகாரத்தைக் கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு அளிக்க நீங்கள் மறுப்பதானால், உங்கள் மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பாளியாகமாட்டேன்” என்றார். அன்றே ரெயிலில் டர்பனுக்குப் புறப்பட்டேன். அங்கே போனதும் டாக்டரைச் சந்தித்தேன். அவர் நிதானத்துடன் சமாசாரத்தை என்னிடம் கூறினார். “தங்களுடன் டெலி போனில் பேசுவதற்கு முன்னாலேயே ஸ்ரீமதி காந்திக்கு மாட்டு மாமிச சூப் கொடுத்துவிட்டேன்” என்றார். டாக்டர், நீங்கள் செய்தது பெரும் மோசம்” என்றேன்.  “ஒரு நோயாளிக்கு மருந்தோ, ஆகாரமோ இன்னது கொடுப்பதென முடிவு செய்வதில், மோசம் என்பதற்கே இடமில்லை. நோயுற்றிருப்போரையோ, அவர்கள் உறவினரையோ இவ்விதம் ஏமாற்றிவிடுவதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடிவதாயின், டாக்டர்களாகிய  நாங்கள் ஏமாற்றுவதையே புண்ணியமாகக் கருதுகிறோம்” என்றார் டாக்டர்.

இதைக் கேட்டதும் நான் பெரிதும் மனவேதனை அடைந்தேன். என்றாலும், அமைதியுடன் இருந்தேன். டாக்டர் நல்லவர்; என் சொந்த நண்பர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். என்றாலும், அவருடைய வைத்திய தருமத்தைச் சகித்துக் கொள்ள நான் தயாராயில்லை. டாக்டர், இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம் என்பதைச் சொல்லுங்கள். என் மனைவி சாப்பிட விரும்பினாலன்றி, என் மனைவிக்கு ஆட்டிறைச்சி அல்லது மாட்டு இறைச்சி கொடுப்பதை நான் அனுமதிக்கவே மாட்டேன். இதனால், அவள் இறந்துவிட நேர்ந்தாலும் சரிதான்” என்றேன். உங்களுடைய தத்துவத்தை நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி என்னிடம் சிகிச்சையில் இருக்கும் வரையில் நான் விரும்பும் எதையும் அவருக்குக் கொடுக்கும் உரிமை எனக்கு இருக்க வேண்டும். இது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், அவரை அழைத்துக்கொண்டு போய்விடும்படியே வருத்தத்துடன் நான் கூற வேண்டியிருக்கும். என் வீட்டில் அவர் சாக நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றார், டாக்டர். அப்படியானால், அவளை உடனே அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்கிறீர்களா?” அவரை அழைத்துக்கொண்டு போய்விடவேண்டும் என்று நான் எப்பொழுது சொன்னேன்? இதில் எனக்குப் பூரண உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் அவருக்காக எங்களாலானதை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். அவரைப்பற்றி நீங்களும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் திரும்பிப் போகலாம். இந்தச் சிறு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், என் இடத்திலிருந்து அவரை அழைத்துக் கொண்டு போய்விடுங்கள் என்று சொல்ல என்னைக் கட்டாயப்படுத்தியவர்களாவீர்கள்”.

என் புதல்வர்களில் ஒருவனும் என்னுடன் இருந்தான் என்று நினைக்கிறேன். என் கருத்தை அவனும் முற்றும் ஆதரித்தான். தன் தாயாருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றான். பிறகு நான் கஸ்தூரிபாயிடமே இதைக் குறித்துப் பேசினேன். உண்மையில் அவள் அதிகப் பலவீனமாக இருந்தாள். இதுபற்றிக் கலந்து ஆலோசிக்கும் நிலையிலும் அவள் இல்லை. என்றாலும், அவளுடன் ஆலோசிக்க வேண்டியது என் வருந்தத்தக்க கடமை என்று எண்ணினேன். டாக்டரும் நானும் பேசிக்கொண்டிருந்த விவரத்தை அவளிடம் கூறினேன். அவள்  தீர்மானமாகப் பதில் சொல்லி விட்டாள். “நான் மாட்டு மாமிச சூப் சாப்பிடமாட்டேன். இவ்வுலகில் மானிடராய்ப் பிறப்பதே அரிது. அப்படியிருக்க இத்தகைய பாதகங்களினால் இவ்வுடலை அசுத்தப்படுத்திக் கொள்ளுவதைவிட உங்கள் மடியிலேயே இறந்து போய்விட நான் தயார்” என்றாள். அவளுக்குச் சொல்லிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றித் தான் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றேன். மதுவையும் மாமிசத்தையும் மருந்தாகச் சாப்பிடுவதில் தவறு இருப்பதாக நினைக்காமல் நண்பர்களான ஹிந்துக்கள் சிலர் சாப்பிட்டிருக்கும் உதாரணங்களையும் அவளுக்கு எடுத்துக் கூறினேன்.
அவள் பிடிவாதமாக இருந்தாள். “தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுங்கள்” என்றாள்.

நான் மிகுந்த ஆனந்தமடைந்தேன். எனக்குக் கொஞ்சம் மனக்கலக்கமும் ஏற்பட்டது. என்றாலும், அவளை எடுத்துக் கொண்டு போய்விடத் தீர்மானித்தேன். நான் செய்துவிட்ட இம்முடிவை டாக்டருக்கு அறிவித்தேன். அவருக்கு ஒரே கோபம் வந்து விட்டது. அவர் சொன்னதாவது: “எவ்வளவு ஈவிரக்கமில்லாத மனிதர் நீங்கள்! இப்பொழுது அவருக்கு இருக்கும் தேக நிலையில் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லவே நீங்கள் வெட்கப்பட்டிருக்க வேண்டும். இங்கிருந்து எடுத்துக்கொண்டு போகக் கூடிய நிலையில் உங்கள் மனைவி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். கொஞ்சம் உடம்பு அசங்கினாலும் அவரால் தாங்க முடியாது. வழியிலேயே அவர்  இறந்துவிட நேர்ந்தாலும்கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். அப்படியிருந்தும் நீங்கள் பிடிவாதம் செய்வதானால், உங்கள் இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். அவருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றால், அவரை ஒருநாள் கூட என் இடத்தில் வைத்துக்கொண்டு அந்த ஆபத்துக்கு உடன்பட நான் தயாராக இல்லை. ஆகவே, அந்த இடத்தைவிட்டு உடனே புறப்பட்டுவிட முடிவு செய்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது. ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரம் போக வேண்டும். டர்பனிலிருந்து போனிக்ஸு க்கு ரெயிலில் போய் அங்கிருந்து எங்கள் குடியிருப்புக்கு இரண்டரை மைல் போகவேண்டும். நான் பெரும் அபாயகரமான காரியத்தையே மேற்கொண்டேன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், கடவுளிடம் நம்பிக்கை வைத்து இவ்வேலையில் இறங்கினேன். முன் கூட்டிப் போனிக்ஸு க்கு ஓர் ஆள் அனுப்பினேன். ஓர் ஏணை, ஒரு புட்டி சூடான பால், ஒரு சுடு நீர்ப் புட்டி ஆகியவைகளுடன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைச் சந்திக்குமாறு வெஸ்ட்டுக்குச் சொல்லியனுப்பினேன். ஏணையில் வைத்துக் கஸ்தூரிபாயைத் தூக்கி செல்ல ஆறு ஆட்களும் வேண்டும் என்று அறிவித்தேன். அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷõவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள். பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷõவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால் கொஞ்ச தூரம் நடந்துதான் ரெயில் நிற்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் ஆகையால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன். போனிக்ஸ் ஸ்டேஷனிலிருந்து ஏணையில் வைத்துக் கொண்டு போனோம். அங்கே நீர்ச் சிகிச்சை செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வந்தாள். நான் போனிக்ஸ்  போய்ச் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரு சாமியார் அங்கே வந்து சேர்ந்தார். டாக்டர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள  நாங்கள் எவ்விதம் பிடிவாதமாக மறுத்துவிட்டோம் என்பதை அவர் அறிந்தார். கஸ்தூரிபாயின் நிலைக்காக அனுதாபம் கொண்டு, எங்களுடன் வாதாடி எங்களைத் திருப்பிவிடுவதற்காகவே அவர் வந்தார். சாமியார் அங்கே வந்தபோது என் இரண்டாவது மகன் மணிலாலும், மூன்றாவது மகன் ராமதாஸு ம் அங்கே இருந்ததாக எனக்கு ஞாபகம். மாமிசம் சாப்பிடுவது மத விரோதமாகாது என்று அவர் வாதித்தார். இதற்கு மனுஸ்மிருதியிலிருந்து ஆதாரங்களையும் எடுத்துக் கூறினார்.

என் மனைவியின் முன்னிலையில் அவர் இவ்வாறு விவாதம் செய்தது எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், மரியாதைக்காக நான் அவரைத் தடுக்காமல் இருந்தேன். மனுஸ்மிருதியின் சுலோகங்கள் எனக்குத் தெரியும். என்னுடைய நம்பிக்கையைப் பொறுத்தவரையில்  அவை தேவையும் இல்லை. அந்தச் சுலோகங்களெல்லாம் இடைச் செருகல்கள் என்று கருதும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். அப்படி இவை இடைச் செருகல்கள் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும் என்னுடைய சைவ உணவுக் கொள்கை சமய நூல்களை  ஆதாரமாகக் கொள்ளாமல் சுயேச்சையாகக் கைக்கொள்ளப்பட்டதாகும். கஸ்தூரிபாயின் மன உறுதியும் அசைக்க முடியாதது. சாத்திரங்களைப்பற்றி அவள் எதுவும் அறியாள். தன்னுடைய மூதாதையரின் பாரம்பரிய தருமமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. குழந்தைகளும் தந்தையின் கொள்கையில் உறுதி கொண்டிருந்தன. ஆகையால், அவர்கள் சாமியாரின் வாதங்களை அலட்சியமாகக் கருதி எதிர்த்துப் பேசினர். இந்தச் சம்பாஷணைக்குக் கஸ்தூரிபாய் உடனே ஒரு முடிவு கட்டிவிட்டாள். “சுவாமிஜி, நீங்கள் என்ன சொன்னாலும் சரி, மாட்டு மாமிச சூப் சாப்பிட்டுக் குணமடைய நான் விரும்பவில்லை. தயவுசெய்து என்னை மேற்கொண்டும் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் விரும்பினால் என் கணவருடனும் குழந்தைகளோடும் விவாதித்துக் கொள்ளுங்கள். ஆனால், நான் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.


Offline Anu

குடும்ப சத்தியாக்கிரகம்

சிறை வாழ்க்கையில் முதல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது 1908-ஆம் ஆண்டில். கைதிகள் அனுசரித்தாக வேண்டிய சில கட்டுத் திட்டங்கள், ஒரு பிரம்மச்சாரி அதாவது புலனடக்கம் செய்துகொள்ள விரும்புகிறவர் தாமாகவே அனுபவிக்க வேண்டியவைகளாக இருந்தன என்பதைக் கண்டேன். உதாரணமாக, அத்தகையதோர் கட்டுத் திட்டம், தினம் கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்துக் கொண்டு விடவேண்டும் என்பது. இந்தியக் கைதிகளுக்கோ, ஆப்பிரிக்கக் கைதிகளுக்கோ தேநீரோ அல்லது காப்பியோ கொடுப்பதில்லை. சமைத்த உணவில் வேண்டுமானால் அவர்கள் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ருசியைத் திருப்தி செய்வதற்காக என்று மாத்திரம்  அவர்கள் எதையும் சாப்பிடக்கூடாது. எங்களுக்குக் கறிமசாலைப் பொடி கொடுக்கும் படியும் உணவைச் சமைக்கும்போதே அதில் உப்பைச் சேர்த்துக் கொள் அனுமதிக்குமாறும் சிறை வைத்திய அதிகாரியைக் கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது: “ருசி பார்த்துச் சாப்பிடுவதற்காக நீங்கள் இங்கே இல்லை. உடல்நலனைப் பொறுத்த வரையில் கறிமசாலைப்பொடி அவசியமே இல்லை. சமைக்கும் போது உப்பைச் சேர்ப்பதற்கும் பின்னால் உப்புப் போட்டுக் கொள்ளுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை”.

அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே ஆயினும், பின்னால் இந்தத் தடைகளுக்கெல்லாம் விமோசனம் ஏற்பட்டது. ஆனால், அவை இரண்டும் புலனடக்கத்திற்குச் சிறந்த விதிகள். வெளியிலிருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அநேகமாக வெற்றி பெறுவதில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் தமக்குத் தாமே விதித்துக் கொண்டவையாக இருப்பின், நிச்சயமாக நல்ல பலனை அளிக்கின்றன. ஆகவே சிறையிலிருந்து விடுதலையானாலும் அவ்விரு விதிகளையும் எனக்கு நானே விதித்துக் கொண்டேன். சாத்தியமான வரையில் தேநீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்து விடுவேன். இவ்விரண்டையும் அனுசரிப்பதற்கு இப்பொழுது எந்த முயற்சியுமே எனக்குத் தேவையில்லை. உப்பை அடியோடு விட்டுவிட வேண்டிய சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. இந்தத் தடையைப் பத்து ஆண்டுகாலம் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். மனிதனுடைய உணவில் உப்பு அவசியமான பொருள் அல்ல என்று சைவ உணவைப் பற்றிய ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். உப்பு இல்லாத உணவே உடலின் சுகத்திற்கு நல்லது என்றும்  அதில் கூறப்பட்டிருந்தது. இதிலிருந்து பிரம்மச்சாரிக்கு உப்பில்லாத உணவு நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். பலவீனமான உடம்பைக் கொண்டவர்கள் பருப்புவகைகளைத்  தவிர்க்க வேண்டும் என்று நான் படித்திருந்ததோடு அதன் உண்மையை அறிந்துமிருந்தேன். எனக்கோ, பருப்பு வகைகளில் அதிகப்பிரியம்.

ரண சிகிச்சைக்குப்  பிறகு குணமடைந்து வந்த கஸ்தூரிபாய்க்குத் திரும்பவும் ரத்த நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. இந்த நோய் சுலபத்தில் குணமாகாது என்றும் தோன்றிற்று. நீர்ச் சிகிச்சையினாலும் குணம் ஏற்படவில்லை. என்னுடைய சிகிச்சை முறைகளை அவள் எதிர்க்கவில்லையாயினும் அவற்றில் அவளுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனாலும் வெளி வைத்திய உதவி வேண்டும் என்று அவள் கேட்கவே இல்லை. ஆகவே, என் வைத்திய முறைகளெல்லாம் பயன்படாது போய்விட்டதால் உப்பையும் பருப்புவகைகளையும் தள்ளும்படி அவளைக் கேட்டுக் கொண்டேன். தக்க ஆதாரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நான் எவ்வளவோ விவாதித்துப் பார்த்தும் இதற்கு அவள் சம்மதிக்க மறுத்து விட்டாள். கடைசியாக அவள் எனக்கு ஒரு சவாலும் விட்டாள். உப்பையும் பருப்பையும் விட்டுவிடுமாறு எனக்கு யாராவது யோசனை கூறினாலும் அவற்றை என்னாலும் விட்டுவிட முடியாது என்றாள். இதைக் கேட்டு நான் வருந்தினேன். என்றாலும் அதே சமயத்தில் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவளிடம் எனக்குள்ள அன்பைப் பொழிவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். நான் அவளிடம் சொன்னேன்: “நீ தவறாக நினைத்து விட்டாய். நான் நோயுற்று இருந்து, இவற்றையும் மற்றவைகளையும் தவிர்த்து விடுமாறு வைத்தியர் யோசனை கூறினால், கொஞ்சமும் தயங்காமல் அப்படியே செய்வேன்.

அது போகட்டும் வைத்திய ஆலோசனை எதுவும் இல்லாமலேயே, நீ விட்டாலும் விடாது போனாலும், உப்பையும் பருப்புக்களையும் ஓர் ஆண்டுக்கு நான் கைவிடுகிறேன்.” இதைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுப் போனாள். மிகுந்த துயரத்தோடு அவள் கூறியதாவது: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் இயல்பு தெரிந்திருந்தும் நான் இப்படி உங்களுக்குக் கோபம்  மூட்டியிருக்கக்கூடாது. உப்பையும் பருப்பையும் சாப்பிடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன். கடவுள் ஆணை; உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த விரதத்தை மட்டும் நீங்கள் விட்டுவிடுங்கள். இப்படி நீங்கள் என்னைத் தண்டிக்கக் கூடாது.” “உப்பையும் பருப்பையும் சாப்பிடாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது. அவைகள் இல்லாமல் நீ நன்றாகவே இருப்பாய் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் நிச்சயமாக எடுத்துக் கொண்டுவிட்ட விரதத்தைக் கைவிட முடியாது. இது எனக்கும் நன்மையே செய்வது நிச்சயம். ஏனெனில், ஒரு கட்டுத்திட்டம், அது எக்காரணத்தினால் ஏற்பட்டதாயினும், மனிதருக்கு நல்லதே. ஆகையால், என்னைப்பற்றிக் கவலைப்படாதே. இது எனக்கு ஒரு சோதனை.

அதோடு நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது உனக்கு ஓர் தார்மிக ஆதரவாகவும் இருக்கும்” என்றேன். எனவே, என்னை மாற்றுவதற்கில்லை என்று விட்டு விட்டாள். “நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர். யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்று கூறிக் கண்ணீர் வடித்து ஆறுதல் அடைந்தாள்.  இந்தச் சம்பவத்தைச்  சத்தியாக்கிரகத்திற்கு ஓர் உதாரணமாகவே கொள்ள விரும்புவேன்.என்னுடைய வாழ்க்கையின் இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்று. இதற்குப் பிறகு கஸ்தூரிபாயின் தேக நிலை வெகு வேகமாகக் குணமடைந்து வந்தது. இவ்விதம் குணம் ஏற்பட்டது, உப்பும், பருப்பு வகையும் இல்லாத சாப்பாட்டினாலா? அல்லது அதன் பலனாக அவளுடைய ஆகாரத்தில் ஏற்பட்ட மற்ற மாறுதல்களினாலா? வாழ்க்கை சம்பந்தமான மற்ற விதிகளில் சரியாக நடக்கும்படிசெய்வதில் நான் கவனமாக இருந்ததன் காரணமாகவா? அல்லது அந்தச் சம்பவத்தினால் உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தின் பலனாலா? அப்படித்தான் என்றால் எந்த அளவுக்கு? இதை என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால், அவள் துரிதமாய் குணமடைந்து வந்தாள். ரத்த நஷ்டம் அடியோடு நின்றுவிட்டது. அரைகுறை வைத்தியன் என்று எனக்கு இருந்த மதிப்பும் அதிகமாயிற்று. என்னைப் பொறுத்த வரையில், உப்பையும் பருப்பையும் தவிர்த்துக்கொண்டதால் நன்மையே அடைந்தேன். விட்டு விட்ட பொருள்களைத் தின்னவேண்டும் என்ற ஆசையும் எனக்கு வரவில்லை. ஒரு வருடமும் விரைவில் கடந்துவிட்டது.

முன்னால் இருந்ததைவிட என் புலன்கள் கட்டுக்கு அடங்கியவைகளாக இருந்ததைக் கண்டேன். இந்தப் பரீட்சை புலனடக்க ஆர்வத்தை அதிகரித்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பி வெகுகாலம் வரையிலும் உப்பையும் பருப்பு வகைகளையும் தின்னாமலேயே இருந்து வந்தேன். 1914-இல் லண்டனில் இருந்தபோது, ஒரே ஒரு முறை மாத்திரம் அந்த இரண்டையும் நான் சாப்பிட வேண்டியதாகி விட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைக் குறித்தும், இந்த இரண்டையும் நான் எவ்விதம் திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தேன் என்பது பற்றியும் பிந்திய அத்தியாயம் ஒன்றில் கூறுகிறேன். தென்னாப்பிரிக்காவில் எனது சகஊழியர்கள் பலரிடத்திலும் கூட, உப்பும் பருப்புமில்லாத உணவை நான் சோதனை செய்து நல்ல பலனையே கண்டிருக்கிறேன். இத்தகைய உணவின் நன்மையைக் குறித்து வைத்திய ரீதியில் இருவகையான அபிப்பிராயங்கள் இருக்கக் கூடும். ஆனால், தார்மிக ரீதியில், தன்மறுப்பு எல்லாமே ஆன்மாவுக்கு நல்லதுதான் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. புலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்கவேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைக்கொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள்.