Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 47240 times)

Offline Anu

மரணத்தின் வாயிலருகில்

படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடம்பையே அநேகமாக நாசப்படுத்திக் கொண்டுவிட்டேன். அந்த நாட்களில் நிலக்கடலை வெண்ணெயும் எலுமிச்சம் பழமுமே என் முக்கியமான உணவு. அந்த வெண்ணெயையே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், அதனால் உடம்புக்குத் தீமை உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அதை நான் அளவுக்கு மிஞ்சியே சாப்பிட்டுவிட்டேன். இதனால் எனக்கு இலேசாகச் சீதபேதி ஏற்பட்டது. அதை நான் அதிகமாகப் பொருட்படுத்தாமலேயே அன்று மாலை ஆசிரமத்திற்குச் சென்றேன். அடிக்கடி ஆசிரமத்திற்கு நான் போய்வருவது வழக்கம். அந்த நாட்களில் நான் மருந்து எதுவும் சாப்பிடுவதில்லை. ஒரு வேளை பட்டினி போட்டுவிட்டால் உடம்பு குணமாகிவிடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை சாப்பிடாமல் இருந்ததால் உண்மையில் உடம்பு குணமாகியிருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால், முழுவதும் குணமடைந்துவிடவேண்டுமானால் நீடித்து உபவாசம் இருந்து வர வேண்டும். ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தாலும் பழ ரசத்தைத் தவிர வேறு எதுவுமே சாப்பிடக்கூடாது என்பதை அறிவேன். அன்று ஏதோ பண்டிகை நாள்.

மத்தியானம் நான் எதுவும் சாப்பிடப் போவதில்லை என்று கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன். ஆனால், சாப்பிடும் ஆசையை அவள் தூண்டி விட்டாள். அதற்குப் பலியாகிவிட்டேன். பாலையோ, பாலினால் ஆனவைகளையோ சாப்பிடுவதில்லை என்று நான் விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப் பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காகக் கோதுமைத் தித்திப்புப் பலகாரம் செய்திருந்தாள். ஒரு கிண்ணம் நிறைய பயிற்றங் கஞ்சியையும் வைத்திருந்தாள். இவைகளை உண்பதில் எனக்கு அதிகப் பிரியம் உண்டு. அவைகளைச் சாப்பிட்டேன். கஸ்தூரிபாயைத் திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும் அளவு சாப்பிட்டால் கஷ்டப்பட வேண்டி வராது என்றும் நம்பினேன். ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டேன். இதுவே எமனுக்குப் போதுமான அழைப்பாகி விட்டது. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது. அன்று மாலையே நான் நதியாத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. சபர்மதி ஸ்டேஷனுக்குப் பத்து பர்லாங்கு தூரம்தான். என்றாலும், அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே அங்கே நடந்து சென்றேன் ஸ்ரீ வல்லபாய், அகமதாபாத்தில் வந்து என்னோடு சேர்ந்துகொண்டார். நான் உடல் குணமின்றி இருப்பதைக் கண்டார். என்றாலும், வலி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை நான் அவருக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை.

இரவு பத்து மணிக்கு நதியாத் போய்ச் சேர்ந்தோம். எங்கள் தலைமை ஸ்தானமாக நாங்கள் கொண்டிருந்த ஹிந்து அனாதசிரமம் ரெயிலடியிலிருந்து அரை மைல் தூரம்தான். ஆனால், அது எனக்குப் பத்துமைல் தூரம்போல இருந்தது. எப்படியோ சமாளித்துக்கொண்டு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன். ஆனால், வயிற்றிலிருந்த கடுப்பு வலி அதிகரித்துக் கொண்டே போயிற்று. வழக்கமாகப் போகும் கக்கூசு, தூரத்தில் இருந்ததால், பக்கத்து அறையிலேயே ஒரு மலச்சட்டி கொண்டுவந்து வைக்கும்படி கூறினேன். இதைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தபோதிலும் வேறு வழியில்லை. ஸ்ரீ பூல்சந்திரர், ஒரு மலச்சட்டியைத் தேடிக் கொண்டுவந்து வைத்தார். நண்பர்கள் எல்லோரும் அதிகக் கவலையுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னிடம் முழு அன்பையும் காட்டி என்னைக் கவனித்துக் கொண்டனர். ஆனால், எனக்கிருந்த வேதனையை அவர்களால் போக்கிவிட முடியாது. என்னுடைய பிடிவாதம் வேறு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபடி செய்து விட்டது. வைத்திய உதவி எதையும் பெற நான் மறுத்து விட்டேன். நான் மருந்தும் சாப்பிடுவதில்லை.

நான் செய்து விட்ட தவறுக்குத் தண்டனையை அனுபவிக்கவே விரும்பினேன். ஆகையால், அவர்கள் எதுவுமே செய்ய இயலாதவர்களாகப் பிரமித்து நின்றனர். இருபத்துநான்கு மணி நேரத்தில் முப்பது, நாற்பது தடவை பேதியாகி விட்டது. ஆரம்பத்தில் பழரசமும் சாப்பிடாமல் பட்டினி இருந்தேன். பசியே இல்லாது போயிற்று என் உடல் இரும்புபோலப் பலமானது என்று நீண்டகாலமாக நான் எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதோ இவ்வுடல் வெறும் களிமண் பிண்டம்போல் ஆகிவிட்டதைக் கண்டேன். நோயை எதிர்க்கும் சக்தியையெல்லாம் அது இழந்துவிட்டது. டாக்டர் கனுகா வந்து மருந்து சாப்பிடுமாறு வேண்டினார். மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதாகச் சொன்னார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதைப் பற்றி அக்காலத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது பரிகாசத்திற்குரிய ஒன்றே. ஊசியினால் குத்தி ஏற்றும் மருந்து ஏதோ பிராணியின் நிணநீராகவே இருக்க வேண்டும் என்று நம்பினேன். ஊசியினால் குத்தி எனக்கு ஏற்றுவதாக டாக்டர் சொன்ன மருந்து, ஏதோ மூலிகையின் சத்து என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இதைக் காலங்கடந்தே நான் அறிந்துகொண்டதால் அதனால் பலனில்லாது போயிற்று. தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தது. நான் முற்றும் களைத்துப்போனேன். களைப்பின் காரணமாக ஜு ரமும் பிதற்றலும் ஏற்பட்டன. நண்பர்கள் மேலும் பீதியடைந்து விட்டனர். வேறு பல வைத்தியர்களையும் அழைத்து வந்தார்கள். ஆனால், வைத்தியர்களுடைய யோசனைகளையெல்லாம் கேட்க மாட்டேன் என்று இருக்கும் நோயாளிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

சேத் அம்பாலால் தமது உத்தம பத்தினியுடன் நதியாத்திற்கு வந்து என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார். அகமதாபாத்தில் இருக்கும் தமது மீர்ஜாப்பூர் பங்களாவுக்கு என்னை மிகவும் ஜாக்கிரதையாகக் கொண்டுபோனார். இந்த நோயின்போது நான் பெற்ற அன்பு நிறைந்த தன்னலமற்ற தொண்டைப் போன்று வேறு யாரும் பெற்றிருக்க முடியாது. ஆனால், ஒரு வகையான உள் ஜு ரம் மாத்திரம் இருந்து கொண்டே வந்தது. இதனால், நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. நோய் நீண்டகாலம் நீடித்து இருந்து வரும், அநேகமாக மரணத்திலேயே முடிந்துவிடக்கூடும் என்று எண்ணினேன். அம்பாலால் சேத்தின் வீட்டில் என்மீது சொரியப்பட்ட அன்பிற்கும் கவனத்திற்கும் எல்லையே இல்லை. என்றாலும், என் மனம் அமைதியே இல்லாதிருந்தது. என்னை ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் விடும்படிஅவரை வற்புறுத்தினேன். என் வற்புறுத்தலுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று. ஆசிரமத்தில் இவ்விதம் நான் வலியால் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கையில், ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும், படைக்கு ஆள் திரட்டுவது இனி அவசியமில்லை என்று கமிஷனர் சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றும் ஸ்ரீ வல்லபபாய் செய்தி கொண்டுவந்தார். படைக்கு ஆள் திரட்டுவதைக் குறித்து நான் மேற்கொண்டும் கவலைப்பட வேண்டியதில்லை என்பது எனக்கு அதிக ஆறுதலை அளித்தது. அப்பொழுது நான் நீர்சிகிச்சை செய்து கொண்டு வந்தேன்.

அதில் எனக்குக் கொஞ்சம் சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு தேறும்படி செய்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. வைத்தியர்கள் பலர் எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி வந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் அனுசரிக்க எனக்கு விருப்பமில்லை. பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் கெடாமல் மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு, மூன்று வைத்தியர்கள் யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத்திலிருந்தும் மேற்கோள்களைக் காட்டினர். அவர்களில் ஒருவர், முட்டைகளைச் சாப்பிடும்படி பலமாகச் சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள் எல்லோருக்கும், முடியாது என்ற ஒரே பதிலையே நான் கூறி வந்தேன். ஆகாரத்தைப்பற்றிய விஷயம், எனக்குச் சாத்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்யவேண்டியது அன்று. என் வாழ்க்கையின் போக்கு, வெளி ஆதாரங்களை மேற் கொண்டும் நம்பியிராத கொள்கைகளின் வழியை அனுசரித்தது. அதனுடன் பின்னியிருப்பது எனது உணவு விஷயம். அக்கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற வகையில் நான் வற்புறுத்தி வந்திருக்கும் ஒரு கொள்கையை என் விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்?

என் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்ந்த நோய் இதுதான். இந்நோய், என் கொள்கைகளைப் பரிசீலனை செய்து சோதிக்கும் வாய்ப்பை இவ்வாறு எனக்கு அளித்தது. ஒரு நாள் இரவு நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டேன். மரணத்தின் வாயிலில் நிற்கிறேன் என்றே எனக்குத் தோன்றியது. அனுசூயா பென்னுக்குச் சொல்லி அனுப்பினேன். அவர் ஆசிரமத்திற்குப் பறந்தோடி வந்தார். வல்லபாய், டாக்டர்.கனுகாவுடன் வந்து சேர்ந்தார். டாக்டர், என் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, உங்கள் நாடியெல்லாம் நன்றாகவே இருக்கிறது. அபாயம் எதுவும் இல்லவே இல்லை. பலவீனம் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஆயாசம் இது என்றார் ஆனால், எனக்கு மட்டும் நம்பிக்கை உண்டாகவில்லை. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை.  சாவு வராமலேயே பொழுது விடிந்துவிட்டது. ஆனால், முடிவு சமீபித்துவிட்டது என்ற உணர்ச்சி மாத்திரம் விடாமல் எனக்கு இருந்தது. ஆகவே ஆசிரமவாசிகளைக் கீதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பதிலேயே விழித்திருக்கும் நேரம் முழுவதையும் கழித்து வந்தேன். என்னால் படிக்க முடியாது. பிறரிடம் பேசும் விருப்பமும் எனக்கு இல்லை. கொஞ்சமும் பேசினாலும் மூளைக்குக் களைப்பாயிருந்தது.

வாழ்வதற்காகவே வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்கு என்றுமே இல்லையாகையால், வாழ்வில் எல்லாச் சுவையும் போய் விட்டது. ஒன்றும் செய்யமுடியாமல் நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் வேலை வாங்கிக்கொண்டு உடல் மெள்ளத் தேய்ந்து கொண்டே போவதைக் காணும் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த துன்பமாகவே இருந்தது. இவ்விதம் சதா சாவை எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர், ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார். கிரான்ட் வைத்தியக் கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து முடித்துவிட்டார். ஆனால், இன்னும் பட்டம் பெறவில்லை. அவர் பிரம்ம சமாஜத்தில் ஓர் அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத் தெரிந்தது. ஸ்ரீ கேல்கர் என்பது அவர் பெயர். சுயேச்சையான, பிடிவாதப் போக்குள்ளவர் அவர். பனிக்கட்டிச் சிகிச்சையில் அவருக்கு அதிக நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம் பரீட்சிக்க விரும்பினார். அவருக்குப் பனிக்கட்டி டாக்டர் என்று பெயர் வைத்தோம். தேர்ந்த டாக்டர்களுக்கும் தெரியாது போன சில விஷயங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அவருக்குத் திடமான நம்பிக்கை உண்டு.

தமது சிகிச்சையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னையும் தொத்திக் கொள்ளும்படி செய்ய முடியாது போனது, எங்கள் இருவருக்குமே பரிதாபகரமான விஷயமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு வரையில், அவருடைய சிகிச்சை முறையை நான் நம்புகிறேன். ஆனால், அவர் அவசரப்பட்டே சில முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்று அஞ்சுகிறேன். அவர் கண்டுபிடித்திருப்பவைகளின் குணாதிசயங்கள் எதுவாக இருந்தாலும், என் உடலில் அவற்றைப் பரிசோதிக்க அவரை நான் அனுமதித்தேன். உடலுக்கு வெளியில் செய்யும் சிகிச்சையைப் பற்றி எனக்கு ஆட்சேபமில்லை. உடம்பு முழுவதற்கும் பனிக்கட்டி வைத்துக்கட்டுவதே அவருடைய சிகிச்சை அவருடைய சிகிச்சையினால் என் உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர் சொல்லிக்கொண்டதை அங்கீகரிக்க என்னால் முடியாவிட்டாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும் என்னுள் அது நிச்சயமாக உண்டாக்கியது. இயற்கையாகவே மனநிலை உடம்பிலும் பிரதிபலித்தது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெல்ல நடக்கவும் தொடங்கினேன். அப்பொழுது அவர் என் ஆகாரத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய யோசனை கூறினார். அவர் கூறியதாவது: நீங்கள் பச்சை முட்டைகளைச் சாப்பிட்டால் அதிகச் சக்தியைப் பெற்றுச் சீக்கிரமாகப் பழைய பலத்தை அடைவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். முட்டைகள், பாலைப் போலத் தீங்கில்லாதவை. நிச்சயமாக முட்டை புலால் ரகத்தைச் சேர்ந்ததல்ல. முட்டைகள் எல்லாமே குஞ்சு பொரிக்கக் கூடியவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்விதம் குஞ்சு பொரிக்காதவைகளாக்கப்பட்ட முட்டைகளும் விற்கின்றன. என்றாலும், குஞ்சு பொரிக்காதவைகள் ஆக்கப்பட்டுவிட்ட முட்டைகளைச் சாப்பிடவும் நான் தயாராயில்லை. ஆனால், என் உடல் நிலையில் ஏற்பட்ட அபிவிருத்தி, பொதுக் காரியங்களில் நான் சிரத்தை கொள்ளுவதற்குப் போதுமானதாக இருந்தது.


Offline Anu

ரௌலட் மசோதாக்கள் : என் மனக்குழப்பம்

மாதேரானுக்குப் போய் அங்கே தங்கினால், சீக்கிரத்தில் என் உடம்பு தேறும் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினார்கள். ஆகவே, நான் அங்கே போனேன். ஆனால், மாதேரானில் தண்ணீர் உப்பாக இருந்ததால் அங்கே நான் தங்குவது கஷ்டமாகிவிட்டது. வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விட்டதால் என் ஆசனவாய் மென்மையாகிவிட்டது. இதனால் மலம் கழிக்கும்போது ஆசனவாயில் எனக்குத் தாங்கமுடியாத வலி இருந்தது. ஆகையால், சாப்பிடுவது என்று நினைத்தாலே எனக்கு ஒரே பயமாக இருந்தது. ஒரு வாரம் முடிவதற்கு முன்னாலேயே மாதேரானிலிருந்து நான் போய்விட வேண்டியதாயிற்று. அப்பொழுது சங்கர்லால் பாங்கர் என் உடல் நிலையின் காவலராக இருந்து வந்ததால், டாக்டர் தலாலைக் கலந்து ஆலோசிக்குமாறு என்னை வற்புறுத்தினார். அதன் பேரில் டாக்டர் தலாலை அழைத்து வந்தனர்.

உடனுக்குடனேயே முடிவுக்கு வந்துவிடுவதில் அவருக்கு இருந்த ஆற்றல் என்னைக் கவர்ந்தது. அவர் கூறியதாவது: நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது. அதோடு அயம், ஆர்ஸனிக் ஆகிய மருந்துகளை ஊசிமூலம் குத்திக் கொள்ளுவீர்களானால் உங்கள் உடம்பைத் தேற்றி விடுவதாக நான் முற்றும் உத்தரவாதம் அளிக்க முடியும். அதற்கு நான், ஊசி குத்தி மருந்தை நீங்கள் ஏற்றலாம். ஆனால், பால் சாப்பிடுவது என்பது வேறு விஷயம். பால் சாப்பிடுவதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறேன் என்றேன். அதன் பேரில் டாக்டர், உங்கள் விரதத்தில் தன்மைதான் என்ன? என்று கேட்டார். பசுவையும் எருமையையும் பால் கறப்பதற்கு பூக்கா முறையை அனுசரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததிலிருந்து நான் இந்த விரதத்தை மேற்கொண்டதைப்பற்றிய வரலாற்றையும், அவ்விரதத்தின் காரணத்தையும், அவருக்கு எடுத்துக் கூறினேன். பால் என்றாலே எனக்குப் பலமான வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும், பால், மனிதனுக்கு இயற்கையான ஆகாரம் அல்ல என்றே எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். ஆகையால், அதை உபயோகிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் என்றேன். அப்பொழுது கஸ்தூரிபாய் என் படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டு நாங்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள். அப்படியானால், ஆட்டுப்பால் சாப்பிடுவதற்கு உங்களுக்கு எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை என்று குறுக்கிட்டுச் சொன்னாள். டாக்டரும் அவள் கூறியதைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டார்.

நீங்கள் ஆட்டுப்பால் சாப்பிட்டால் அதுவே எனக்குப் போதும் என்றார், அவர். நானும் உடன்பட்டு விட்டேன். சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்துவந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடிருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது. எனவே, விரதத்தைச் சொல்லளவில் மாத்திரம் அனுசரித்துவிட்டு, அதன் உட்கருத்தை தத்தம் செய்துவிட என்னையே திருப்தி செய்து கொண்டேன். நான் விரதம் எடுத்துக்கொண்டபோது பசுவின் பாலும் எருமைப் பாலுமே. என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல. இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமானதாக நிரூபிக்கப்பட்டு விட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால், சத்தியத்தை வற்புறுத்தி வந்த நான், தெய்வீகமான கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டேன். இச்செய்கையின் நினைவு இன்னும் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருப்பதோடு எனக்கு மனச் சஞ்சலத்தையும் உண்டாக்கி வருகிறது. ஆட்டுப் பால் சாப்பிடுவதை எப்படி விட்டு விடுவது என்பதைக் குறித்துச் சதா சிந்தித்தும் வருகிறேன். ஆனால், சேவை செய்ய வேண்டும் என்ற மிகுந்த, அடக்கமான ஆசை எனக்கு இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறது.

அதிலிருந்து விடுபட இன்னும் என்னால் முடியவில்லை. அகிம்சை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவுள்ள என்னுடைய ஆகார சோதனைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவை என் மனத்திற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், நான் ஆட்டுப்பால் சாப்பிட்டு வருவது வாக்குறுதியை மீறியதேயாதலால், அகிம்சையை ஒட்டிய ஆகார வகையில் அல்ல, சத்திய வகையில், இன்று எனக்கு அதிகச் சங்கடமாக இருந்து வருகிறது. அகிம்சையின் லட்சியத்தைவிட சத்தியத்தின் லட்சியத்தையே நான் நன்றாகப் புரிந்துகொள்ளுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சத்தியத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பை நான் விட்டுவிடுவேனாயின், அகிம்சையின் புதிரை அறிந்துகொள்ள என்னால் என்றுமே முடியாது என்பதை அனுபவம் எனக்குக் கூறுகிறது. மேற்கொள்ளும் விரதங்களை, அதன் சொல்லுக்கும் பொருளுக்கும் ஏற்ப நிறைவேற்றி வைக்க வேண்டியது, சத்தியத்தின் லட்சியத்திற்கு அவசியமாகிறது. இந்த விஷயத்திலோ, என் விரதத்தின் பொருளை அதன் ஆன்மாவைக் கொன்றுவிட்டு அதன் வெளித்தோற்றத்தை மாத்திரமே அனுசரிக்கிறேன். எனக்கு இதுதான் வேதனையளிக்கிறது. ஆனால், இதை நான் தெளிவாக அறிந்திருந்தும், நேரான வழி என் முன்னால் எனக்குத் தென்படவில்லை. இன்னும் சொன்னால், நேரான வழியைப் பின்பற்றுவதற்கு வேண்டிய தைரியம் எனக்கு இல்லை. அடிப்படையில் இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஏனெனில், எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது. ஆகவே, ஆண்டவனே! எனக்கு நம்பிக்கையைக் கொடு என்று நான் இரவு பகலாகப் பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன்.

நான் ஆட்டுப்பால் சாப்பிட ஆரம்பித்ததுமே டாக்டர் தலால் எனக்கு ஆசனவாய்க் கோளாறுக்கு வெற்றிகரமான ரணசிகிச்சை செய்து முடித்தார். என் உடல் பலம் பெற்று வரவே, முக்கியமாகக் கடவுள் நான் செய்வதற்கென்று வேலையைத் தயாராக வைத்திருந்ததால், உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குத்திரும்பவும் பிறந்தது. குணமடைந்து வருகிறேன் என்று நான் உணர ஆரம்பித்ததுமே, ரௌலட் கமிட்டியின் அறிக்கையை தற்செயலாகப் பத்திரிகையில் படித்தேன். அந்த அறிக்கை அப்பொழுதுதான் வெளியாகியிருந்தது. அக்கமிட்டியின் சிபாரிசுகள் என்னைத் திடுக்குறச் செய்தன. சங்கரலால் பாங்கரும், உமார் சோபானியும் என்னிடம் வந்து, இவ்விஷயத்தில் நான் உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார்கள். ஒரு மாதத்தில் நான் அகமதாபாத்திற்குப் போனேன். அநேகமாகத் தினமும் என்னைப் பார்ப்பதற்கு வல்லபாய் வருவார். அவரிடம் எனக்கு இருந்த சந்தேகங்களைக் கூறினேன். ஏதாவது செய்தாக வேண்டும் என்றேன். அதற்கு அவர், இந்த நிலைமையில் நாம் என்ன செய்ய முடியும்? என்று என்னைக் கேட்டார். நான் சொன்னதாவது: அம்மசோதாக்களை எதிர்ப்பது என்ற பிரதிக்ஞையில் கையெழுத்திட ஒரு சிலர் கிடைத்தாலும் போதும். அதையும் பொருட்படுத்தாமல் சட்டம் செய்யப்பட்டு விடுமானால், நாம் உடனே சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துவிட வேண்டியதே.

நான் இதுபோல் நோயுற்றுக் கிடக்காமல் இருந்தால், மற்றவர்கள் என்னைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நானே தன்னந்தனியாக அதை எதிர்த்துப் போராடுவேன். ஆனால், நான் இப்பொழுது இருக்கும் இத்திக்கற்ற நிலைமையில் அந்த வேலை என்னால் ஆகாது என்றே எண்ணுகிறேன். இவ்விதம் நாங்கள் பேசியதன் பேரில், என்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அழைத்து ஒரு கூட்டம் கூட்டுவது என்று முடிவாயிற்று. ரௌலட் கமிட்டி அறிக்கையில் பிரசுரமாகியிருக்கும் சாட்சியங்களைக் கொண்டு பார்த்தால், அக்கமிட்டியின் சிபாரிசுகள் அவசியமில்லாதவை என்று எனக்குத் தோன்றியது. மானமுள்ள யாரும் அந்தச் சிபாரிசுகளுக்கு உடன் பட்டு இருந்து விடமுடியாது என்றும் உணர்ந்தேன். முடிவாக அக்கூட்டமும் ஆசிரமத்தில் நடந்தது. இருபதுபேர் கூட அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. வல்லபாயைத் தவிர ஸ்ரீ மதி சரோஜினி நாயுடு, ஸ்ரீ ஹார்னிமன், காலஞ்சென்ற ஸ்ரீ உமார் சோபானி, ஸ்ரீ சங்கரலால் பாங்கர், ஸ்ரீ மதி அனுசூயா பென் ஆகியவர்களே அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்று எனக்கு ஞாபகம். சத்தியாக்கிரக பிரதிக்ஞை நகலை இக்கூட்டத்தில் தயாரித்தோம்.

வந்திருந்தவர்கள் எல்லோரும் அதில் கையெழுத்திட்டார்கள் என்றும் எனக்கு ஞாபகம். அச்சமயம் நான் எந்தப் பத்திரிகையையும் நடத்தவில்லை. ஆனால், என் கருத்துக்களை எப்பொழுதாவது தினப்பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டு வருவேன். இச்சமயமும் அவ்வாறே செய்தேன். சங்கரலால் பாங்கர் இக்கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, உறுதியுடன் விடாமல் வேலை செய்வதில் அவருக்கு இருந்த அற்புதமான ஆற்றலைப்பற்றி முதல் தடவையாக அப்பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன். சத்தியாக்கிரகத்தைப் போன்ற புதியதானதோர் ஆயுதத்தை, அப்பொழுது இருந்த ஸ்தாபனங்களில் எதுவும் அனுசரிக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் வீண் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடைய யோசனையின் பேரில் சத்தியாக்கிரக சபை என்ற ஒரு தனி ஸ்தாபனம் ஆரம்பமாயிற்று. அதன் முக்கியமான
அங்கத்தினர்களெல்லாம் பம்பாயைச் சேர்ந்தவர்கள். ஆகையால், அதன் தலைமைக் காரியாலயம் அங்கே அமைக்கப்பட்டது. அச்சங்கத்தில் சேர ஏராளமானவர்கள் விரும்பிப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டார்கள்.

துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டோம். பொதுக்கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடந்தன. கேடாச்சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முக்கியமான அம்சங்களை இவையெல்லாம் நினைவூட்டின. சத்தியாக்கிரக சபைக்கு நான் தலைவனானேன். இச் சபையில், படித்த அறிவாளிகள் என்று இருந்தவர்களுக்கும் எனக்கும் அபிப்பிராய ஒற்றுமை இருப்பதற்கில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். சபையில் குஜராத்தி மொழியையே உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதோடு, என்னுடைய மற்றும் சில வேலை முறைகளும் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியதோடு அவர்களுக்குக் கவலையையும் சங்கடத்தையும் உண்டாக்கின. ஆனால், அவர்களில் அநேகர் பெரிய மனதோடு என்னுடைய விசித்திரப் போக்குகளை எல்லாம் சகித்துக்கொண்டார்கள் என்பதையும் நான் சொல்லவே வேண்டும். ஆனால், சபை நீண்ட காலம் உயிரோடு இருக்காது என்பது ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. சத்தியத்தையும் அகிம்சையையும் நான் வற்புறுத்தி வந்தது அச்சபையின் அங்கத்தினர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் நான் கண்டுகொள்ள முடிந்தது. என்றாலும், ஆரம்பக் கட்டங்களில் எங்களுடைய புதிய நடவடிக்கை அதிக வேகமாக நடந்து கொண்டு வந்தது; இயக்கமும் தீவிரமாகப் பரவலாயிற்று.


Offline Anu

அந்த அற்புதக் காட்சி!

இவ்வாறு ஒரு பக்கம் ரௌலட் கமிட்டி அறிக்கையை எதிர்த்து நடந்த கிளர்ச்சி வளர்ந்து, தீவிரமாகிக்கொண்டு வந்த சமயத்தில், மற்றொரு பக்கத்தில் அரசாங்கம், அக் கமிட்டியின் அறிக்கையை அமுலுக்குக் கொண்டு வருவதில் மேலும் மேலும் அதிக உறுதிகொண்டது. ரௌலட் மசோதாவையும் பிரசுரித்தார்கள். இந்திய சட்டசபைக் கூட்டத்திற்கு என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை நான் போயிருக்கிறேன். அது, இந்த மசோதாவின் பேரில் அந்தச் சபையில் விவாதம் நடந்தபோதுதான். அப்பொழுது சாஸ்திரியார் ஆவேசமாகப் பேசினார். அரசாங்கத்திற்குப் பலமான எச்சரிக்கையும் செய்தார். வைசிராய் பிரமித்துப்போய் அப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. சாஸ்திரியார் தமது சூடான பேச்சு வன்மையைப் பொழிந்து கொண்டிருந்த போது வைசிராய், கண்கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சில் உண்மையும், உணர்ச்சியும் நிறைந்திருந்தன. ஒருவர் உண்மையிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் அவரை எழுப்பிவிட முடியும். ஆனால், தூங்குவதாகப் பாசாங்குதான் செய்கிறார் என்றால், அப்படிப்பட்டவரை என்னதான் முயன்றாலும் எழுப்பிவிட முடியாது.

அரசாங்கத்தின் உண்மையான நிலைமையும் அதுதான். அது, முன்னாலேயே இதில் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டது இதற்குச் சட்டரீதியான சடங்குகளை நிறைவேற்றி விடவேண்டும் என்பதில் மாத்திரமே அது கவலை கொண்டு விட்டது. ஆகையால் சாஸ்திரியாரின் உண்மையான எச்சரிக்கை அரசாங்கத்தினிடம் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணவில்லை. இத்தகையதோர் நிலைமையில் என் பேச்சு வனாந்தரத்தில் இட்ட ஓலமாகவே முடியும். வைசிராயை நான் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். அரசாங்கத்தின் செய்கையால், சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுவதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது என்று அக் கடிதங்களில் கூறினேன். ஆனால், ஒன்றும் பயன்படவே இல்லை. மசோதாக்கள் இன்னும் சட்டங்களாகக் கெஜட்டில் பிரசுரமாகவில்லை. நானோ, அதிக பலவீனமான நிலையில் இருந்தேன். என்றாலும், சென்னையிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததும், அந்த நீண்ட பிரயாணத்தினால் ஏற்படக்கூடிய அபாயத்திற்கும் துணிவது என்று முடிவு செய்தேன். அச்சமயம் பொதுக் கூட்டங்களில் போதிய அளவு உரக்கப் பேச என்னால் முடியாது.

பொதுக்கூட்டங்களில் நின்று கொண்டு பேசுவதற்கும் இயலாது. அந்த நிலைமை எனக்கு இப்பொழுதும் இருந்து வருகிறது. நின்று கொண்டு நீண்ட நேரம் பேச முயல்வேனாயின் என் உடம்பு முழுவதும் நடுக்கமெடுக்கும்; மூச்சுத் திணறும். தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர்மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனியுரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள், என் நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்துகொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம். அது எப்படியாயினும், முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொண்டது அப்பொழுதுதான். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில் மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும், அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால் தான் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் வக்கீல் தொழிலை நடத்தச் சேலத்திலிருந்து வந்திருந்தார்.

சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால், அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கி இருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தை கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு நாள் சொன்னார். அவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத் தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக் கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரௌலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான் அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்றச் சட்டங்களை நாம் சாத்விக முறையில் மீற முடியுமா? அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது? இதையும் இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவித்தும் விட்டேன். இந்த ஆலோசனைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ரௌலட்மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற செய்தி கிடைத்தது. அதைப்பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே எழுந்துவிட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயுள்ள நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அது கனவைப்போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும் ராஜ கோபாலச்சாரியாரிடம் கூறினேன்: நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக்கொள்ளுவது என்பதே அது.

ஆன்மத் தூய்மை செய்துகொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத் தூய்மை செய்து கொள்ளுவதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு மேல் படினி விரதம் இருக்கமாட்டார்கள். ஆகவே, பட்டினி விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்கவேண்டும். இந்த நமது கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால், பம்பாய், சென்னை, பீகார், சிந்து ஆகிய மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக் காரணம் உண்டு என்றேகருதுகிறேன். என்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலச்சாரியார் உடனே ஏற்றுக்கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான் தயாரித்தேன். 1919 மார்ச் 30-ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6-ஆம் தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே அறிவித்தோம். நீண்டகாலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை. இதெல்லாம் எவ்விதம் நடந்ததென்பதை யார் அறிவார்கள்? இந்தியா முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும் அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தன. அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது
.


Offline Anu

மறக்க முடியாத அந்த வாரம்!


தென்னிந்தியாவில் சில நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்து விட்டுப் பம்பாய் போய்ச் சேர்ந்தேன். அது ஏப்ரல் 4-ஆம் தேதி என்று நினைக்கிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்களுக்கு நான் பம்பாயில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஸ்ரீ சங்கரலால் பாங்கர் எனக்குத் தந்தி கொடுத்திருந்தார்.  ஆனால், இதற்கு மத்தியில் டில்லி, மார்ச் 30-ஆம் தேதியே ஹர்த்தாலை அனுஷ்டித்து விட்டது. காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி, ஹக்கீம் அஜ்மல்கான்சாகிப் ஆகிய இருவர் சொல்லுவதுதான் அங்கே சட்டம். ஹர்த்தால் தினம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்ற தந்தி அங்கே தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. அதைப் போன்ற ஹர்த்தாலை டில்லி அதற்கு முன்னால் என்றும் கண்டதே இல்லை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மனிதனைப்போல் ஒன்றுபட்டுவிட்டதாகவே தோன்றியது. ஜூம்மா மசூதியில் கூட்டத்தில் பேசும்படி சுவாமி சிரத்தானந்தஜியை அழைத்திருந்தார்கள். அவரும் போய்ப் பேசினார். இவைகளெல்லாம் அதிகாரிகள் சகித்துக்கொண்டு விடக் கூடியவை அன்று. ஹர்த்தால் ஊர்வலம் ரெயில்வே ஸ்டேஷனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது போலீஸார் தடுத்துச் சுட்டதால் பலர் மாண்டு காயமும் அடைந்தார்கள். அடக்குமுறை ஆட்சி டில்லியில் ஆரம்பமாயிற்று.

சிரத்தானந்தஜி, டில்லிக்கு அவசரமாக வருமாறு என்னை அழைத்தார். பம்பாயில் ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்கள் முடிந்தவுடனேயே நான் டில்லிக்குப் புறப்படுவதாக அவருக்குப் பதில் தந்தி கொடுத்தேன். டில்லியில் நடந்த அதே கதையே லாகூரிலும், அமிர்தசரஸிலும் சில வித்தியாசங்களுடன் நடந்தன. அமிர்தசரஸிலிருந்த டாக்டர் சத்தியபாலும்; டாக்டர் கிச்சலுவும் உடனே அங்கே வருமாறு வற்புறுத்தி என்னை அழைத்தார்கள். அச்சமயம் அவர்களுடன் எனக்குக் கொஞ்சமும் பழக்கமே இல்லை. என்றாலும், டில்லிக்குப் போய்விட்டு அமிர்தசரஸு க்கு வர உத்தேசித்திருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆறாம் தேதி காலை பம்பாய் நகர மக்கள் கடலில் நீராடுவதற்காகச் சௌபாத்திக்கு ஆயிரக்கணக்கில் சென்றனர். நீராடிய பிறகு ஊர்வலமாகத் தாகூர்துவாருக்குப் போனார்கள். ஊர்வலத்தில் ஓரளவுக்குப் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். முஸ்லிம்களும் ஏராளமாக ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். ஊர்வலத்திலிருந்த எங்களில் சிலரை, முஸ்லிம் நண்பர்கள், தாகூர் துவாருக்குப் பக்கத்திலிருந்த மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே என்னையும் ஸ்ரீ மதி நாயுடுவையும் பேசும்படியும் செய்தார்கள்.

சுதேசி விரதத்தையும் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞையையும் மக்கள் அந்த இடத்திலேயே எடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விட்டல்தாஸ் ஜேராஜானி யோசனை கூறினார். ஆனால் அந்த யோசனைக்கு நான் சம்மதிக்கவில்லை. பிரதிக்ஞைகளை அவசரத்தில் கூறி, அவற்றை மக்கள் மேற்கொள்ளும்படி செய்யக் கூடாது என்றும், இதுவரையில் மக்கள் செய்திருப்பதைக் கொண்டே நாம் திருப்தியடைய வேண்டும் என்றும் சொன்னேன். ஒரு முறை செய்துகொண்டு விட்ட பிரதிக்ஞையை மீறி நடக்கக் கூடாது. ஆகையால், சுதேசி விரதத்தின் உட்கருத்துக்களை மக்கள் தெளிவாக அறிய வேண்டும் என்றும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப்பற்றிய பிரதிக்ஞையினால் ஏற்படக் கூடிய பெரும் பொறுப்புக்களைச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முற்றும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். முடிவாக ஒரு யோசனையும் சொன்னேன். பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், அதற்காக மறுநாள் காலையில் திரும்பவும் அங்கே கூடவேண்டும் என்றேன். பம்பாயில் ஹர்த்தால் பூரண வெற்றியுடன் நடந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். இதன் சம்பந்தமாக இரண்டு, மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 

பொதுமக்களால் எளிதில் மீறக் கூடியவைகளாக இருக்கும் சட்டங்கள் விஷயத்தில் மாத்திரமே சட்ட மறுப்புச் செய்வது என்று முடிவாயிற்று. உப்பு வரி மீது மக்களுக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது. அச்சட்டத்தை ரத்துச் செய்யும்படி பார்க்க வேண்டும் என்பதற்குப் பலமான இயக்கம் ஒன்றும் கொஞ்ச காலமாக நடந்துவந்தது. ஆகையால், உப்புச் சட்டங்களை மீறி மக்கள் தங்கள் வீடுகளிலேயே கடல்நீரைக் கொண்டு உப்புத் தயாரிக்கும்படி செய்யலாம் என்று யோசனை கூறினேன். என்னுடைய மற்றொரு யோசனை, அரசாங்கம் தடுத்திருக்கும் பிரசுரங்களை விற்கலாம் என்பது. நான் எழுதிய புத்தகங்களில் இரண்டு ஹிந்த் சுயராஜ், சர்வோதயா (ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூலைத் தழுவிக் குஜராத்தியில் எழுதியது) இவை இரண்டையும் அரசாங்கம் தடுத்திருந்தது. இக்காரியத்திற்கு அவ்விரு புத்தகங்களையும் உடனே எடுத்துக் கொள்ளலாம். அவற்றை அச்சிட்டுப் பகிரங்கமாக விற்பனை செய்வது, சாத்விகச் சட்டமறுப்புச் செய்வதற்கு எளிதான வழி என்று தோன்றியது. ஆகவே, இதற்குப் போதுமான பிரதிகள் அச்சிடப்பட்டன. பட்டினி விரதம் முடிந்த பிறகு அன்று மாலை நடக்கவிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அப்புத்தகங்களை விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி ஆறாம் தேதி மாலை, தடுக்கப்பட்டிருந்த அப்புத்தகங்களைப் பொதுமக்களிடையே விற்பதற்கு அப் பிரசுரங்களுடன் ஏராளமான தொண்டர்கள் வெளி வந்தனர். ஸ்ரீ மதி சரோஜினி தேவியும் நானும் மோட்டாரில் வெளியே சென்றோம். எல்லாப் பிரதிகளும் உடனே விற்றுப்போயின. விற்று வந்த பணத்தைச் சட்ட மறுப்பு இயக்கத்திற்காகவே செலவிடுவது என்பது ஏற்பாடு. இவ்விரு புத்தகங்களுக்கும், பிரதி நான்கு அணா என்று விலை வைத்தோம். ஆனால், அந்தப் பிரதிகளை என்னிடமிருந்து யாரும் நாலணா மாத்திரமே கொடுத்து வாங்கியதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமானவர்கள் தங்கள் கையிலிருந்த பணம் முழுவதையும் அப்படியே கொடுத்துவிட்டு, அப்புத்தகங்களை வாங்கினார்கள். ஒரு பிரதியை வாங்க ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் வந்து குவிந்தன. ஒரு பிரதியை ஐம்பது ரூபாய்க்கு நான் விற்றதாகவும் நினைவிருக்கிறது! தடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகங்களை வாங்குவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்படக் கூடும் என்பதும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், அத் தருணம் அவர்கள், சிறை செல்லும் பயம் முழுவதையுமே அடியோடு ஒழித்திருந்தார்கள்.  தான் தடுத்திருந்த இப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டது சம்பந்தமாக அரசாங்கம் தனக்குச் சௌகரிய மானதோர் கருத்தை மேற்கொண்டது என்பதை நான் பிறகே அறிந்தேன்.

உண்மையில் விற்கப்பட்ட புத்தகங்கள் தன்னால் தடுக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல என்றும், ஆகவே நாங்கள் விற்றவை தடுக்கப்பட்ட புத்தகங்கள் என்ற விளக்கத்தின் கீழ் வந்தவை என்று கருதப்படவில்லை என்றும் அரசாங்கம் கருதியதாம். புதியதாக அச்சிட்டது, தடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின் மறுபதிப்பேயாகையால், அவற்றை விற்பது சட்டப்படி குற்றமாகாது என்று அரசாங்கம் கருதியது. இச்செய்தி பொதுவாக ஏமாற்றத்தையே அளித்தது.  மறுநாள் காலை சுதேசி, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞைகளைச் செய்து கொள்ளுவதற்காக மற்றோர் கூட்டம் நடந்தது. மின்னுவதெல்லாம் தங்கம் ஆகிவிடாது என்பதை முதல் தடவையாக விட்டல்தாஸ் ஜேராஜானி உணர்ந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு மிகச் சிலரே வந்திருந்தார்கள். அச்சமயம் வந்திருந்த சில சகோதரிகளை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அக்கூட்டத்திற்கு வந்த ஆண்களும் ஒரு சிலரே நான் பிரதிக்ஞை நகலை முன்னதாக தயாரித்துக்கொண்டு வந்திருந்தேன். அப்பிரதிக்ஞையை எடுத்துக்கொள்ளுமாறு வந்திருந்தவர்களிடம் சொல்லுவதற்கு முன்னால், அதன் பொருளை அவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொன்னேன். கூட்டத்திற்குச் சிலரே வந்திருந்தது எனக்கு வியப்பையோ, ஆச்சரியத்தையோ உண்டாக்கவில்லை. ஏனெனில், பொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால் பிரியப்படுவார்கள்.

அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.  ஆனால், இவ்விஷயத்தைக் குறித்து நான் ஓர் அத்தியாயமே எழுத வேண்டும். எனவே, தொடர்ந்து கதைக்கே திரும்புவோம். டில்லிக்கும் அமிர்தசரஸு க்கும் போக 7-ஆம் தேதி இரவு புறப்பட்டேன். 8-ஆம் தேதி மதுராவை அடைந்ததும் நான் கைது செய்யப்படலாம் என்ற வதந்திகள் இருப்பதாக முதன் முதலாக அறிந்தேன். மதுராவுக்கு அடுத்தபடி ரெயில் நின்ற இடத்தில் என்னைப் பார்க்க ஆச்சாரிய கித்வானி வந்தார். என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற திடமான செய்தியை அவர் சொன்னதோடு நான் இடும் வேலையைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்காக அவருக்கு நன்றி கூறினேன். அவசியமாகும்போது அவருடைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டேன் என்றும் அவருக்கு உறுதி சொன்னேன். ரெயில், பால்வால் ஸ்டேஷனை அடைவதற்கு முன்னாலேயே எழுத்து மூலமான உத்தரவு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டு விடுமாகையால் பாஞ்சாலத்தின் எல்லைக்குள் நான் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவு கூறியது. ரெயிலிலிருந்து இறங்கும்படியும் என்னிடம் போலீஸார் கூறினர்.

வற்புறுத்தி அழைக்கப்பட்டிருப்பதன் பேரிலேயே நான் பாஞ்சாலத்திற்குப் போகிறேன். நான் அங்கே போவது அமைதியை உண்டாக்குவதற்கே; அமைதியைக் கெடுப்பதற்காக அல்ல. ஆகையால், இந்த உத்தரவுக்கு உடன்பட என்னால் முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறி வண்டியிலிருந்து இறங்க மறுத்து விட்டேன்.  கடைசியாக ரெயில் பால்வாலை அடைந்தது. மகாதேவ் என்னுடன் இருந்தார். டில்லிக்கு நேரே போய், என்ன நடந்தது என்பதைச் சுவாமி சிரத்தானந்தஜியிடம் கூறி, மக்களை அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளுமாறு அவருக்குச் சொன்னேன். எனக்குப் பிறப்பித்த உத்தரவை மீறி, மீறியதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன் என்பதையும், எனக்கு எந்தத் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஜனங்கள் மாத்திரம் பூரண அமைதியுடன் இருந்து வருவார்களானால் அதுவே நமக்கு வெற்றியை அளிக்கும் என்பதையும் மக்களுக்கு அவர் விளக்கிச் சொல்ல வேண்டும் என்றும் கூறினேன்.  பால்வால் ரெயில்வே ஸ்டேஷனில் என்னை ரெயிலிலிருந்து இறக்கிப் போலீஸ் பாதுகாப்பில் வைத்தார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் டில்லியிலிருந்து ரெயில் வந்தது. என்னை ஒரு மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். போலீஸ் கோஷ்டியும் என்னுடன் வந்தது.

மதுராவை அடைந்ததும் என்னைப் போலீஸ் முகாமுக்குக் கொண்டு போனார்கள். என்னை என்ன செய்யப் போகிறார்கள், என்னை அடுத்தபடி எங்கே கொண்டு போகப்போகிறார்கள் என்பதைச் சொல்ல எந்தப் போலீஸ் அதிகாரியாலும் முடியவில்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார்கள். பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சாமான்கள் ரெயில் ஒன்றில் என்னை ஏற்றினார்கள். மத்தியானம் சாவாய் மாதப்பூரில் என்னை இறக்கினர். லாகூரிலிருந்து மெயில் ரெயிலில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பௌரிங், இப்பொழுது என்னைக் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டார். அவரோடு என்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். நான் சாதாரணக் கைதி என்பதிலிருந்து பெரிய மனிதக் கைதி ஆகிவிட்டேன். அந்த அதிகாரி, ஸர் மைக்கேல் ஓட்வியரைக் குறித்து நீண்ட புகழ் மாலை பாட ஆரம்பித்துவிட்டார். ஸர் மைக்கேலுக்கு என் மீது எந்தவிதமான விரோதமும் இல்லை என்றும், பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டுவிடும் என்றுதான் அவர் பயப்படுகிறார் என்றும் கூறினார். இன்னும் ஏதேதோ சொன்னார்.

கடைசியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விட நானாகவே ஒப்புக்கொண்டு விடுவதோடு பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே வருவதில்லை என்பதற்குச் சம்மதிக்கும்படியும் அந்த அதிகாரி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவுக்கு நான் உடன் பட்டுவிட முடியாது என்றும், நானாகத் திரும்பிப் போய் விடவும் தயாராயில்லை என்றும் அவருக்குப் பதில் சொன்னேன். அதன் பேரில் அந்த அதிகாரி, வேறு வழியில்லாது போகவே என் மீது சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததாக வேண்டி இருக்கிறது என்றார். என்னை என்னதான் செய்யப் போகிறீர்கள்? என்று அவரைக் கேட்டேன். அது தமக்கே தெரியவில்லை என்றும், மேற்கொண்டு வரும் உத்தரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார். தற்போதைக்கு உங்களை நான் பம்பாய்க்கு அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறேன் என்றார். நாங்கள் சூரத் போய்ச் சேர்ந்தோம். அங்கே என்னை மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நாங்கள் பம்பாயை அடைந்ததும், இனி நீங்கள் உங்கள் இஷ்டம்போல் போகலாம் என்று அந்த அதிகாரியே என்னிடம் கூறினார். ஆனால், நீங்கள் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இறங்கிவிடுவது நல்லது உங்களுக்காக அங்கே ரெயில் நிற்கும்படி செய்கிறேன். கொலாபாவில் பெருங்கூட்டம் இருக்கக்கூடும் என்றும் கூறினார். அவர் விருப்பப் படியே செய்வதில் எனக்குச் சந்தோஷம்தான் என்று அவருக்குச் சொன்னேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.

எனக்கு நன்றியும் கூறினார். அவர் யோசனைப்படியே நான் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனில் இறங்கினேன். அப்பொழுதுதான் ஒரு நண்பரின் வண்டி அப்பக்கமாகப் போயிற்று. அந்த வண்டியில் ஏறி ரேவாசங்கர ஜவேரியின் வீடு சேர்ந்தேன். நான் கைது செய்யப்பட்ட செய்தி பொது மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டி அவர்களை வெறி கொண்டவர்களாகச் செய்திருக்கிறது என்று அந்த நண்பர் கூறினார். பைதுனிக்கு அருகில் எந்த நேரத்திலும் கலகம் மூண்டுவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள். மாஜிஸ்டிரேட்டும் போலீஸாரும் இதற்குள்ளாகவே அங்கே போய்விட்டனர்! என்றும் அவர் கூறினார்.  நான் ரேவாசங்கரின் வீடு போய்ச் சேர்ந்ததுமே, உமார் ஸோபானியும் அனுசூயா பென்னும் அங்கே வந்து, உடனே பைதுனிக்கு மோட்டாரில் வருமாறு அழைத்தனர். பொது மக்கள் பொறுமை இழந்துபோய் அதிக ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். அவர்களைச் சாந்தப்படுத்த எங்களால் முடியவில்லை. நீங்கள் வந்தால்தான் அதைச் செய்யமுடியும் என்றார்கள். நான் மோட்டாரில் ஏறினேன். பைதுனிக்கு அருகில் பெருங்கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன்.

என்னைக் கண்டதும் மக்கள் ஆனந்தத்தால் பைத்தியம் கொண்டவர்களைப் போல் ஆகிவிட்டனர். உடனேயே ஓர் ஊர்வலமும் உருவாகிவிட்டது. வந்தே மாதரம் அல்லாஹோ அக்பர் என்ற கோஷங்கள் வானை அலாவி ஒலித்தன. பைதுனியில் குதிரைப் போலீஸ் படை ஒன்றைக் கண்டோம். மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியாக இருக்கும்படி கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், கற்கள் மாரியிலிருந்து நாங்கள் தப்ப முடியாது என்றே தோன்றியது. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் தெருவைத் தாண்டிக் கிராபோர்டு மார்க்கெட்டை நோக்கிப்போக இருந்த சமயத்தில், திடீரென்று குதிரைப் போலீஸ் படையொன்று எதிர்த்து நின்றது. ஊர்வலம் கோட்டையை நோக்கி மேலும் போகாதபடி தடுக்கவே அப்படை அங்கே இருந்தது. கூட்டமோ அதிக நெருக்கமானது. போலீஸ் அணியைப் பிளந்து கொண்டும் கூட்டம் புகுந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அப்படிப் பட்ட பிரம்மாண்டமானதோர் கூட்டத்தில் என் குரல் கேட்பதற்கு இடமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் குதிரைப் படைக்குத் தலைமை வகித்த அதிகாரி, கூட்டத்தைக் கலைக்கும்படி அப்படையினருக்கு உத்தரவிட்டார். உடனே குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிய வண்ணம் கூட்டத்தினரைத் தாக்கினர்.

நானும் காயமடைந்து விடுவேன் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால், நான் பயந்தபடி ஆகிவிடவில்லை. குதிரை வீரர்கள் வேகமாகச் சென்றபோது அவர்கள் ஈட்டி எங்கள் மோட்டார்மீதுதான் உராய்ந்தது. ஊர்வலத்தில் மக்களின் வரிசையெல்லாம் சின்னாபின்னமாகி விட்டன. கூட்டத்தில் எங்கும் ஒரே குழப்பநிலை. பிறகு மக்கள், ஓடத் தொடங்கிவிட்டனர். சிலர், குதிரை, மக்கள் இவர்களின் காலடியில் மிதிபட்டுப் போயினர். மற்றவர்களோ, நசுக்குண்டு காயப்பட்டுவிட்டனர். எங்கும் ஒரே ஜன மயமான அக்கூட்டத்திற்கிடையே குதிரைகள் போவதற்கே இடமில்லை. மக்கள் கலைவதென்றால், அவர்கள் வெளியேறுவதற்கும் வழியில்லை. ஆகவே, ஈட்டி வீரர்கள் கண்மூடித்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து சென்றனர். தாங்கள் செய்தது இன்னது என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பதே எனக்குச் சந்தேகம். அங்கிருந்த நிலைமை முழுவதுமே மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. வெறிபிடித்த குழப்பத்தில் குதிரை வீரர்களும் மக்களும் ஒன்றாகக் கலந்து போய் விட்டனர்.  இவ்வாறு கூட்டத்தைக் கலைத்து அது மேற்கொண்டும் போக முடியாதபடி தடுத்துவிட்டனர். எங்கள் மோட்டாரை மட்டும் போக அனுமதித்தார்கள். கமிஷனர் ஆபீசுக்கு எதிரில் மோட்டாரை நிறுத்தச் செய்தேன். போலீஸாரின் நடத்தையைக் குறித்துக் கமிஷனரிடம் புகார் கூற அதிலிருந்து இறங்கினேன்.

  கமிஷனர் ஸ்ரீ கிரிபித்தின் காரியாலயத்திற்குச் சென்றேன். அக்காரியாலயத்திற்குப் போகும் மாடிப் படிக்கட்டுகளிலெல்லாம் சிப்பாய்கள், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் முற்றும் ஆயுதபாணிகளாக இருந்ததைக் கண்டேன். ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பது போல அவர்கள் இருந்தனர். தாழ்வாரத்திலும் சிப்பாய்கள் அதிகம் இருந்தார்கள். உள்ளே செல்ல என்னை அனுமதித்தனர். நான் உள்ளே சென்றபோது ஸ்ரீ கிரிபித்துடன் ஸ்ரீ பௌரிங்கும் உட்கார்ந்திருந்ததைக் கண்டேன்.  நான் நேரில் கண்ட காட்சிகளையெல்லாம் கமிஷனருக்கு விவரித்துச் சொன்னேன். அவர் பின்வருமாறு சுருக்கமாகப் பதில் கூறினார்: ஊர்வலம் கோட்டைக்குப் போனால், அங்கே நிச்சயமாகக் கலகம் நேர்ந்திருக்குமாகையால், கோட்டையை நோக்கி ஊர்வலம் போவதை நான் விரும்பவில்லை. கேட்டுக் கொள்ளுவதற்குக் கூட்டத்தினர் செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைக் கண்டேன். ஆகையால், கூட்டத்திற்குள் புகுந்து தாக்கும்படி குதிரைப்படையினருக்கு நான் உத்தரவிடுவது அவசியமாயிற்று.  அதற்கு நான் ஆனால் அதன் விளைவு என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவே வேண்டுமே. குதிரைகள் மக்களை மிதித்தே தீரும். அந்தக் குதிரைப் படையை அனுப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன் என்றேன்.
ஸ்ரீ கிரிபித் கூறியதாவது: அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. உங்கள் உபதேசத்தினால் மக்களிடையே என்ன பலன் ஏற்படும் என்பதை உங்களைவிடப் போலீஸ் அதிகாரிகளாகிய நாங்கள் நன்கு அறிவோம். ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நிலைமை மீறிப் போய்விடும். உங்கள் கட்டுக்கும் ஜனங்கள் அடங்காதவர்களாகப் போய்விடுவது நிச்சயம் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். சட்டத்தை மீறி நடப்பதென்பது வெகு சீக்கிரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான தாகிவிடும். ஆனால், அமைதியாக இருக்க வேண்டிய கடமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய நோக்கங்கள் நல்லவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் பொதுஜனங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இயற்கையான சுபாவத்தை அனுசரித்துத்தான் அவர்கள் நடப்பார்கள். இதில்தான் உங்கள் கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். பொதுஜனங்கள் இயற்கையாகவே அமைதியானவர்களே அன்றிப் பலாத்கார சுபாவம் உடையவர்கள் அல்ல என்றேன். இவ்வாறு நீண்ட நேரம் விவாதித்தோம். முடிவாகக் கிரிபித், உங்கள் போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.  எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால் சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைத்துவிடுவேன் என்றேன்.  அப்படியா சொல்லுகிறீர்கள்? நீங்கள் விடுதலையானதுமே பாஞ்சாலத்திற்குப் போவீர்கள் என்று ஸ்ரீ பௌரிங்கிடம் கூறினீர்களே என்று ஸ்ரீ கிரிபித் கேட்டார்.
ஆம். அடுத்த ரெயிலிலேயே புறப்பட்டுவிட விரும்பினேன். ஆனால், இன்று அது ஆகாத காரியம்.  நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களாயின், உங்கள் போதனைகளை மக்கள் கேட்கவில்லை என்ற நிச்சயம் உங்களுக்குக் கட்டாயம் ஏற்படும். அகமதாபாத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அமிர்தசரஸில் என்ன நடந்திருக்கிறது? எல்லா இடங்களிலுமே மக்கள் வெறி கொண்டுவிட்டார்கள். எல்லா விவரங்களும் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பு உங்களையே சாரும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார், ஸ்ரீ கிரிபித்.  அதற்கு நான் பின்வருமாறு கூறினேன்: அவ்வாறு நான் கண்டால், அதன் பொறுப்பைத் தயங்காமல் நான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆனால், அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்தன என்று நான் கண்டால் மிகவும் மனவேதனை அடைவதோடு ஆச்சரியமும் படுவேன். அமிர்தசரஸில் நடந்ததுபற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. அங்கே நான் போனதே இல்லை.
அங்கே யாருக்கும் என்னைத் தெரியாது. ஆனால், பாஞ்சாலத்தைப் பற்றியும் கூட ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். பாஞ்சாலத்திற்குள் நான் போவதைப் பாஞ்சால அரசாங்கம் தடுக்காமல் இருந்திருக்குமாயின், அங்கே அமைதி நிலவும்படி செய்வதற்கு நான் பெருமளவு உதவியாக இருந்திருப்பேன். என்னைத் தடுத்ததன் மூலம் அனாவசியமாக மக்களுக்கு ஆத்திரம் மூட்டிவிட்டார்கள்.  இவ்விதம் மேலும் மேலும் விவாதித்துக்கொண்டே போனோம். இருவர் கருத்தும் ஒத்துப்போவதற்குச் சாத்தியமே இல்லை. சௌபாத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி, அமைதியாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளுவது என்று இருக்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன். சௌபாத்திக் கடற்கரையில் பொதுக் கூட்டம் நடந்தது. அகிம்சையின் கடமையைக் குறித்தும், சத்தியாக்கிரகத்தின் எல்லைகளைக் குறித்தும், விரிவாக எடுத்துக் கூறினேன். முக்கியமாகச் சத்தியாக்கிரகம் உண்மையோடிருப்பவர்களுக்கே ஆயுதம். சத்தியாக்கிரகி, அகிம்சையை அனுசரிக்கப் பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறான். இதை மக்கள் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் அனுசரித்தாலன்றிப் பொதுஜன சத்தியாக்கிரகத்தை நான் நடத்த முடியாது என்றும் சொன்னேன்.
 அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்ததாக அனுசூயா பென்னுக்கும் செய்திகள் கிடைத்தன. அவரையும் கைது செய்து விட்டார்கள் என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அவர் கைதானார் என்ற வதந்தியைக் கேட்டு மில் தொழிலாளர்கள் வெறி கொண்டு வேலை நிறுத்தம் செய்ததோடு பலாத்காரச் செயல்களையும் செய்து விட்டார்கள். ஒரு சார்ஜண்டு அடித்துக் கொல்லப்பட்டு விட்டார்.  நான் அகமதாபாத்துக்குச் சென்றேன். நதியாத் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளங்களைப் பெயர்த்துவிட முயற்சிகள் நடந்தன என்றும், வீரம்காமில் அரசாங்க அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், அகமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன். பொதுஜனங்கள் பயப்பிராந்தியில் இருந்தனர். பலாத்காரச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டு விட்டார்கள். அவர்கள் அதற்கு வட்டியும் சேர்த்து அனுபவிக்கும்படி செய்யப்பட்டுவிட்டனர். கமிஷனர் ஸ்ரீ பிராட்டிடம் என்னை அழைத்துக்கொண்டு போவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தார். கோபத்தினால் அவர் துடிதுடித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரிடம் சாந்தமாகவே பேசினேன்.
நடந்து விட்ட கலவரங்களுக்காக என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். ராணுவச் சட்டம் அனாவசியமானது என்று நான் சொன்னதோடு, அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளிலெல்லாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் சொல்லி, சபர்மதி ஆசிரம மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிக்கும்படியும் கேட்டேன். இந்த யோசனை அவருக்குப் பிடித்திருந்தது. பொதுக்கூட்டமும் நடந்தது. அது ஏப்ரல் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். அன்றோ, அதற்கு மறுநாளோ, ராணுவச் சட்ட ஆட்சியும் ரத்தாயிற்று. பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மக்கள் தாங்கள் செய்து விட்ட தவறை உணரும்படி செய்ய முயன்றேன். அவர்களுடைய செய்கைகளுக்குப் பிராயச்சித்தமாக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் தெரிவித்தேன். அதேபோல் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டேன். பலாத்காரச் செயல்களைச் செய்துவிட்டவர்கள், தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு யோசனை கூறினேன். என்னுடைய கடமை என்ன என்பது பட்டப்பகல் போல் எனக்கு விளங்கியது. அகமதாபாத் தொழிலாளர்களிடையே நான் அதிக காலம் செலவிட்டிருக்கிறேன்.
அவர்களுக்குச் சேவையும் செய்திருக்கிறேன். அவர்களிடமிருந்து சிறந்த காரியங்களை நான் எதிர்பார்த்திருக்கும் போது, அத்தொழிலாளர்கள் கலகங்களில் ஈடுபட்டது என்னால் சகிக்க முடியாததாயிற்று. அவர்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்தேன்.  மக்கள் தாங்கள் செய்துவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டும் என்று அவர்களுக்கு நான் கூறியதுபோலவே, அக்குற்றங்களை மன்னித்து விடுமாறு அரசாங்கத்திற்கும் யோசனை கூறினேன். இரு சாரரும் என் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற ஸர் ராமாபாயும், அகமதாபாத் நகரவாசிகள் சிலரும், என்னிடம் வந்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அமைதியின்மையின் படிப்பினையை மக்கள் அறிந்துகொள்ளும் வரையில் சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைப்பதென்று நான் தீர்மானித்துக் கொண்டு விட்டதால், அவர்களுடைய வேண்டுகோளுக்கே அவசியமில்லை. அந்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.  ஆனால், நான் செய்துவிட்ட இத்தீர்மானத்தைக் குறித்துத்
துக்கப்பட்டவர்களும் உண்டு.
எல்லா இடங்களிலுமே அமைதி நிலவவேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தாக வேண்டிய நிபந்தனை என்று நான் அதைக் கருதுவதானால், பொதுஜன சத்தியாக்கிரகம் என்பதே அசாத்தியமானதாகி விடும் என்று அவர்கள் கருதினார்கள். அவர்களுடன் மாறுபட்ட கருத்தை நான் கொள்ள வேண்டியிருந்ததற்காக வருந்தினேன். நான் யாருடன் இருந்து வேலை செய்து வந்தேனோ அவர்கள், அகிம்சைக்கும் துன்பங்களை அனுபவிப்பதற்கும் தயாராயிருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தவர்களே, அகிம்சையை அனுசரிக்க முடியவில்லையென்றால், சத்தியாக்கிரகம் நிச்சயமாகச் சாத்தியமில்லாததே. சத்தியாக்கிரகத்திற்கு மக்களை நடத்திச் செல்ல விரும்புகிறவர்கள், அகிம்சையின் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களை வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியான கருத்துக் கொண்டிருந்தேன். அதே அபிப்பிராயமே எனக்கு இன்றைக்கும் இருந்துவருகிறது.



Offline Anu

ஒரு ஹிமாலயத் தவறு

அகமதாபாத் கூட்டம் முடிந்தவுடனே நதியாத்திற்குச் சென்றேன். ஹிமாலயத் தவறு என்ற சொல்லை நான் முதன் முதலில் அங்கேதான் உபயோகித்தேன். அச்சொல் பின்னால் அதிகப் பிரபலமாயிற்று. அகமதாபாத்தில்கூட, நான் செய்துவிட்ட தவறை லேசாக உணர ஆரம்பித்துவிட்டேன். ஆனால், நதியாத்திற்குச் சென்று அங்கே இருந்த உண்மையான நிலைமையைப் பார்த்து, கேடா ஜில்லாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமாகக் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட பிறகே, நான் பெருந்தவறைச் செய்துவிட்டேன் என்பது திடீரென்று எனக்குப் பட்டது. கேடா ஜில்லாவின் மக்களையும் மற்ற இடங்களில் இருந்தவர்களையும், அதற்கு வேண்டிய பக்குவத்தை அவர்கள் அடைவதற்கு முன்னாலேயே சாத்விகச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும்படி சொல்லிவிட்டது பெருந்தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றியது. நான் ஒரு பொதுக் கூட்டத்தில் இவ்விதம் கூறினேன். இவ்விதம் தவறை நான் ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் பரிகசிக்கப்பட்டது கொஞ்சமல்ல. ஆனால், அவ்வாறு தவறை ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் வருத்தப்பட்டதே இல்லை. ஏனெனில், ஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல் இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.

அதோடு சத்தியாக்கிரகியாக இருக்க விரும்புகிறவர், இந்த விதியை மனப்பூர்வமாகவும் தவறாமலும் அனுசரித்து வரவேண்டும் என்றும் நான் நம்புகிறேன். நான் செய்துவிட்ட ஹிமாலயத் தவறு என்ன என்பதை இனிக்கவனிப்போம். சாத்விகச் சட்ட மறுப்பைச் செய்வதற்கு ஒருவர் தகுதியை அடைவதற்கு முன்னால், அவர் அரசாங்கச் சட்டங்களுக்கு விரும்பி மரியாதையுடன் பணிந்து நடந்தவராக இருக்கவேண்டும். ஏனெனில், சட்டத்தை மீறி நடந்து விட்டால் அதற்குரிய தண்டனையை அடைய நேருமே என்ற பயத்தினாலேயே பெரும்பாலும் அத்தகைய சட்டங்களுக்குப் பணிந்து நடக்கிறோம். அதிலும் ஒழுக்க நெறி சம்பந்தப்படாத சட்டங்கள் விஷயத்தில் இது பெரிதும் உண்மையே ஆகும். உதாரணமாக, திருடுவதற்கு எதிரான சட்டம் இருந்தாலும், இல்லாது போனாலும், யோக்கியமும் கௌரவமும் உள்ள ஒருவர், திடீரென்று திருட முற்பட்டுவிட மாட்டார். ஆனால், இவரே, இருட்டிய பிறகு சைக்கிளில் விளக்கு வைத்துக்கொண்டே வெளியில் போக வேண்டும் என்ற விதியை மீறி நடந்து விடுவதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. இது சம்பந்தமாக அதிக ஜாக்கிரதையாக இருக்கும்படி புத்திமதி கூறினால், அதையாவது அன்போடு ஏற்றுக்கொள்ளுவாரா என்பதும் சந்தேகம்.

ஆனால், இந்த விதியை மீறினால் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரப்படும் அசௌகரியத்திலிருந்து தப்புவதற்கு மாத்திரம், கட்டாயமான இது போன்ற விதியை அவர் அனுசரித்து நடப்பார். அவ்விதம் சட்டத்திற்கு உடன்படுவது, ஒரு சத்தியாக்கிரகி விருப்பத்துடன் தானே உடன்பட வேண்டியதைப் போன்றது ஆகாது. ஒரு சத்தியாக்கிரகி, சமூகத்தின் சட்டங்களுக்குப் புத்திசாலித்தனமாகவும், தமது சுயேச்சையான விருப்பத்தின் பேரிலும் உடன்பட்டு நடக்கிறார். ஏனெனில், அவ்விதம் செய்வது தமது புனிதமான கடமை என்று அவர் கருதுகிறார். இவ்விதம் சமூகத்தின் சட்டங்களுக்கு ஒருவர் தவறாமல் பணிந்து நடந்தால்தான், எந்தக் குறிப்பிட்ட விதிகள் நல்லவை, நியாயமானவை, எவை அநியாயமானவை, பாவமானவை என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய தகுதி அவருக்கு ஏற்படும். அப்பொழுதுதான் தெளிவான சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சில சட்டங்களைச் சாத்வீக முறையில் மீறுவதற்கான உரிமை அவருக்கு ஏற்படும்.

அவசியமான இந்த எல்லையைக் கவனிக்காமல் போனது தான் நான் செய்த தவறு. இவ்வாறு மக்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ளுவதற்கு முன்னால் சாத்வீகச் சட்ட மறுப்பை ஆரம்பிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டு விட்டேன். இத்தவறு, ஹிமாலயத்தைப் போன்று பெரியது என்று எனக்குத் தோன்றுகிறது. கேடா ஜில்லாவில் பிரவேசித்ததுமே கேடா சத்தியாக்கிரகத்தைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் எனக்குத் திரும்ப வந்தன. எனவே, அவ்வளவு தெளிவான விஷயத்தை நான் எப்படிப் புரிந்து கொள்ளாது போனேன் என்று ஆச்சரியப்பட்டேன். சாத்விகச் சட்ட மறுப்பு செய்வதற்கு வேண்டிய தகுதியை மக்கள் பெறுவதற்கு முன்னால், அதன் ஆழ்ந்த உட் பொருள்களை அவர்கள் முற்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதை நான் தெரிந்துகொண்டேன். எனவே, பொதுஜன அளவில் சாத்விகச் சட்ட மறுப்பைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்னால் நன்றாகப் பண்பட்ட, சத்தியாக்கிரகத்தின் கண்டிப்பான நிபந்தனைகளை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கும், புனித உள்ளம் படைத்த தொண்டர்கள் படை இருக்கும்படி செய்யவேண்டியது அவசியம். அவைகளை அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், தூக்கமின்றி உஷாராக இருப்பதன் மூலம் மக்களைச் சரியான வழியில் நடக்கும்படி செய்யவும் அவர்களால் முடியும்.

என் மனத்தில் இவ்விதமான எண்ணங்களுடன் நான் பம்பாய் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த சத்தியாக்கிரக சபையின் மூலம் சத்தியாக்கிரகப் படையைத் திரட்டினேன். சத்தியாக்கிரகத்தின் பொருள் சம்பந்தமாகவும், அதன் உள்ளிருக்கும்  முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் அறியும்படி செய்யும் வேலையை அத்தொண்டர்களின் உதவியைக் கொண்டு ஆரம்பித்தேன். இவ்விஷயத்தைப் போதிக்கும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு முக்கியமாக இந்த வேலை நடந்தது. இந்த வேலை நடந்துகொண்டிருந்தபோது ஒரு விஷயத்தை நான் காண முடிந்தது. சத்தியாக்கிரகம் சம்பந்தமான சமாதான வேலையில் மக்கள் சிரத்தை கொள்ளும்படி செய்வது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைக்கண்டேன். தொண்டர்களும் பெருந்தொகையில் வந்து சேரவில்லை. சேர்ந்த தொண்டர்களோ, ஒழுங்காக முறைப்படி பயிற்சியைப் பெறவுமில்லை. நாளாக ஆகப்புதிதாக வந்து சேருகிறவர்களின் தொகை அதிகமாவதற்குப் பதிலாகக் குறைந்து கொண்டே போயிற்று. சாத்விகச் சட்ட மறுப்புப் பயிற்சியின் அபிவிருத்தி, நான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப் போலத் துரிதமானதாக இருக்கப்போவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.


Offline Anu

நவ ஜீவன், எங் இந்தியா

இவ்வாறு அகிம்சையைப் பாதுகாப்பதற்கான இயக்கம், மெதுவாகவே எனினும் நிதானமாக, ஒரு பக்கம் அபிவிருத்தி அடைந்துகொண்டு வந்த சமயத்தில், மற்றோர் பக்கத்தில் அரசாங்கத்தின் சட்ட விரோதமான அடக்கு முறைக் கொள்கை அதிகத் தீவிரமாக இருந்து வந்தது. பாஞ்சாலத்தில் அந்த அடக்குமுறை, தனது பூரண சொரூபத்தையும் காட்டி வந்தது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராணுவச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது. அதாவது, சட்டம் என்பதே இல்லை என்றாயிற்று. விசேட நீதிமன்றங்களை அமைத்தார்கள். இந்த விசேட நீதி மன்றங்கள், எதேச்சாதிகாரியின் இஷ்டத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கருவிகளாகத்தான் இருந்தனவே அன்றி உண்மையில் நீதி வழங்கும் மன்றங்களாக இல்லை. நீதி முறைக்கெல்லாம் முற்றும் மாறாகச் சாட்சியத்திற்குப் பொருந்தாத வகையில் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அமிர்தசரஸில் ஒரு பாவமும் அறியாத ஆண்களும் பெண்களும், புழுக்களைப் போல் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்லும்படி செய்யப்பட்டனர். ஜாலியன் வாலா பாக் கொலையே உலகத்தின் கவனத்தையும், முக்கியமாக இந்திய மக்களின் கவனத்தையும் அதிகமாகக் கவர்ந்ததென்றாலும், இந்த அட்டூழியத்தின் முன்பு அப்படுகொலை கூட என் கண்ணுக்கு அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை.

என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடனே பாஞ்சாலத்திற்குப் போகும்படி வற்புறுத்தப்பட்டேன். அங்கே செல்ல அனுமதி அளிக்குமாறு வைசிராய்க்கு எழுதினேன்; தந்தியும் அடித்தேன். ஆனால், ஒரு பலனும் இல்லை. அவசியமான அனுமதியில்லாமல் நான் போவேனாயின், பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே போக நான் அனுமதிக்கப்படமாட்டேன். சாத்விகச் சட்ட மறுப்புச் செய்தேன் என்ற திருப்தியோடு இருந்துவிட வேண்டியதுதான். இவ்விதம் என்ன செய்வதென்று தோன்றாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இருந்த நிலைமைப்படி பார்த்தால், பாஞ்சாலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை மீறுவது சாத்விகச் சட்ட மறுப்பு ஆகாது என்றே எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், நான் எந்த வகையான அமைதியான சூழ்நிலையை விரும்பினேனோ அதை என்னைச் சுற்றிலும் நான் காணவில்லை. பாஞ்சாலத்தில் நடந்துவந்த அக்கிரமமான அடக்குமுறையோ மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. ஆகையால், அப்படிப்பட்ட சமயத்தில் நான் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது சாத்தியமென்றாலும், அது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது போன்றே ஆகும் என்று எண்ணினேன். எனவே, போகுமாறு நண்பர்கள் கூறிய போதிலும், பாஞ்சாலத்திற்குப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். இத்தகைய முடிவுக்கு நான் வரவேண்டியிருந்தது எனக்கே அதிக கஷ்டமாகத்தான் இருந்தது. அட்டூழியங்களையும் அநீதிகளையும் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருந்தன. ஆனால், நானோ எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்துகொண்டு பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

அச்சமயத்தில் ஸ்ரீ ஹார்னிமனின் கையில் பம்பாய்க் கிரானிகிள் பத்திரிகை பலமான சக்தியாக இருந்து வந்தது. அதிகாரிகள் திடீரென்று அவரைப் பிடித்து வெளியேற்றிவிட்டார்கள். அரசாங்கத்தின் இச்செய்கை அதிசயம் நிறைந்த காரியம் என்று எனக்குத் தோன்றியது. அச் செய்கையை இப்பொழுதும் மிக்க அருவருப்பான செய்கையாகவே எண்ணுகிறேன். சட்ட விரோதமான கலவரங்களை ஸ்ரீ ஹார்னிமன் என்றும் விரும்பியதில்லை என்பதை நான் அறிவேன். பாஞ்சால அரசாங்கம் எனக்குப் பிறப்பித்த தடை உத்தரவைச் சத்தியாக்கிரகக் கமிட்டியின் அனுமதியில்லாமல் நான் மீறியது அவருக்குப் பிடிக்கவில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பது என்ற முடிவை அவர் பூர்ணமாக ஆதரித்தார். சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பதாக நான் அறிவிப்பதற்கு முன்னாலேயே, சட்ட மறுப்பை நிறுத்தி வைக்குமாறு யோசனை கூறி அவர் எனக்குக் கடிதமும் எழுதினார். நான் அப்பொழுது அகமதாபாத்தில் இருந்ததால், பம்பாய்க்கும் அதற்கும் உள்ள தூரத்தின் காரணமாக நான் அறிவித்த பிறகே அக்கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆகவே அவர் திடீரென்று நாடு கடத்தப்பட்டது எனக்கு மனவேதனை மட்டுமன்றி ஆச்சரியத்தையும் அளித்தது.  இவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டுவிடவே பம்பாய்க் கிரானிகிளின் டைரக்டர்கள், பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பைஏற்றுக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீ பிரெல்வி ஏற்கனவே அப்பத்திரிகையில் இருந்தார். ஆகவே, நான் செய்யவேண்டியது அதிகமில்லை. ஆனால், என் சுபாவத்தை அனுசரித்து இப்பொறுப்பு என்னுடைய சிரமத்தை அதிகமாக்கியது. ஆனால், எனக்குச் சிரமம் இல்லாதபடி செய்ய வந்தது போல்
அரசாங்கமும் முன் வந்துவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவினால் கிரானிகிள் பத்திரிக்கையை நிறுத்திவைத்து விட வேண்டியதாயிற்று.

கிரானிகிள் நிர்வாகத்தை நடத்தி வந்த நண்பர்களான ஸ்ரீ உமார் ஸோபானியும், ஸ்ரீ சங்கரலால் பாங்கரும், இதே சமயத்தில் எங் இந்தியா என்ற பத்திரிக்கையையும் நிர்வகித்து வந்தார்கள். கிரானிகள் நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், அதனால் ஏற்பட்டிருக்கும் குறை நீங்குவதை முன்னிட்டு, எங் இந்தியாவின் ஆசிரியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். வாரப் பத்திரிக்கையாக நடந்து வந்த எங் இந்தியாவை, வாரம் இருமுறைப் பத்திரிகையாக்கலாம் என்றார்கள். நானும் அதைத் தான் எண்ணினேன். சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைப் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நான் ஆவலோடு இருந்தேன். அதோடு இம்முயற்சியால் பாஞ்சால நிலைமையைக் குறித்தும் ஓரளவுக்கு என் கடமையைச் செய்யலாம் என்றும் நம்பினேன். ஏனெனில், நான் என்ன எழுதினாலும், அதன் முடிவு சத்தியாக்கிரகமே. அரசாங்கத்திற்கும் அது தெரியும். ஆகையால், இந்நண்பர்கள் கூறிய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு விட்டேன்.  ஆனால், ஆங்கிலத்தை உபயோகித்து, சத்தியாக்கிரகத்தில் பொது மக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? நான் முக்கியமாக வேலை செய்து வந்த இடம் குஜராத். ஸ்ரீ ஸோபானி, ஸ்ரீ பாங்கர் கோஷ்டியுடன் அச்சமயம் ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக்கும் இருந்தார்.

குஜராத்தி மாதப் பத்திரிக்கையான நவஜீவனை அவர் நடத்தி வந்தார். இந்த நண்பர்கள் அதற்குப் பணவுதவி செய்து வந்தார்கள். அந்த மாதப் பத்திரிக்கையையும் அந்நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ இந்துலாலும் அதில் வேலை செய்வதாகக் கூறினார். அந்த மாதப் பத்திரிக்கை வாரப் பத்திரிக்கையாக மாற்றப் பட்டது.  இதற்கு மத்தியில் கிரானிகிள் புத்துயிர் பெற்றெழுந்தது. ஆகையால், எங் இந்தியா முன்பு போலவே வாரப் பத்திரிக்கையாயிற்று. இரண்டு வாரப் பத்திரிக்கைகளை, இரண்டு இடங்களிலிருந்து பிரசுரிப்பதென்பது, எனக்கு அதிக அசௌகரிய மானதோடு செலவும் அதிகமாயிற்று. நவஜீவன் முன்பே அகமதாபாத்திலிருந்து பிரசுரமாகி வந்ததால் என் யோசனையின் பேரில் எங் இந்தியாவும் அங்கேயே மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு இதல்லாமல் வேறு காரணங்களும் உண்டு. இத்தகைய பத்திரிகைகளுக்குச் சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தியன் ஒப்பீனியன் அனுபவத்திலிருந்து அறிந்திருந்தேன். மேலும், இந்தியாவில் அப்பொழுது கடுமையான அச்சுச் சட்டங்கள் அமுலிலிருந்தன. ஆகையால், என்னுடைய கருத்துக்களைத் தங்கு தடையின்றி வெளியிட நான் விரும்பினால், லாபம் கருதியே நடத்தப் பட்டவையான அப்பொழுதிருந்த அச்சகங்கள், அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கும். எனவே, சொந்தத்தில் ஓர் அச்சகத்தை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாயிற்று.

அகமதாபாத்திலேயே சௌகரியமாக அச்சகத்தை அமைத்துக் கொள்ளலாமாகையால், எங் இந்தியாவையும் அங்கே கொண்டு போனோம். சத்தியாக்கிரகத்தைக் குறித்துப் பொதுமக்களுக்கு இப் பத்திரிக்கைகளின் மூலம் என்னால் இயன்ற வரையில் போதிக்கும் வேலையைத் தொடங்கினேன். இரு பத்திரிக்கைகளுக்கும் ஏராளமானவர்கள் சந்தாதாரர்களாயினர். ஒரு சமயம் ஒவ்வொரு பத்திரிக்கையும் நாற்பதினாயிரம் பிரதிகள் செலவாயின. நவஜீவன் சந்தாதாரர்கள் தொகை ஒரேயடியாகப் பெருகிய போதிலும் எங் இந்தியாவின் சந்தாதார்கள் தொகை நிதானமாகவே அதிகரித்தது. நான் சிறைப்பட்ட பிறகு, இரு பத்திரிக்கைகளின் சந்தாதாரர் தொகையும் அதிகமாக குறைந்து விட்டது. இன்று எண்ணாயிரம் பிரதிகளே போகின்றன.  இப்பத்திரிக்கைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிக்கைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை.  என் அளவில் நான் மன அமைதியை அடைவதற்கும் இப்பத்திரிக்கைகள் எனக்கு உதவியாக இருந்தன. சாத்விகச் சட்டமறுப்பை உடனே ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று ஆகிவிட்டபோது, என் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக் கூறவும், மக்களுக்குத் தைரியம் ஊட்டவும் அவை உதவியாக இருந்தன. மக்களுக்கு அதிகக் கடுமையான சோதனை ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு இவ்விரு பத்திரிக்கைகளும் சிறந்த சேவை செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத் தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.


Offline Anu

பாஞ்சாலத்தில்

 
பாஞ்சாலத்தில் நடந்தவைகளுக்கெல்லாம் நானே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் கூறினார். ஆத்திரமடைந்த சில இளம் பஞ்சாபிகளும், ராணுவச் சட்ட அமுலுக்குப் பொறுப்பாளி நான்தான் என்றனர். சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைக்காமல் இருந்தால், ஜாலியன் வாலாபாக் படுகொலையே நடந்திராது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலரோ, நான் பாஞ்சாலத்திற்கு வந்தால், என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தும் அளவுக்கும் போய்விட்டார்கள். ஆனால், நான் செய்தது சரியானது என்றும், ஆட்சேபிக்க முடியாதது என்றும், எண்ணினேன். புத்தியுள்ளவர்கள் யாரும் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கில்லை என்றும் கருதினேன்.  பாஞ்சாலத்திற்குப் போகவேண்டும் என்று நான் பரபரப்புடன் இருந்தேன். இதற்குமுன் நான் அங்கே போனதே இல்லை. இதனாலேயே அங்கே போய் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாயிற்று. பாஞ்சாலத்திற்கு வருமாறு என்னை அழைத்த டாக்டர் சத்தியபால், டாக்டர் கிச்லு, பண்டித ராம்பாஜ் தத் சௌத்ரி ஆகியோர் அச்சமயம் சிறையில் இருந்தார்கள். ஆனால், அவர்களையும் மற்றக் கைதிகளையும் அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத் துணிய முடியாது என்று கருதினேன்.

நான் பம்பாயிலிருந்த சமயங்களில் ஏராளமான பஞ்சாபிகள் என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். நான் அவர்களுக்கும் ஆறுதலை அளித்தது. அச்சமயம் எனக்கு இருந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் தொத்திக்கொண்டு விடுவதாக இருந்தது.  ஆனால், நான் பாஞ்சாலத்திற்குப் போவதை அடிக்கடி ஒத்திப்போட வேண்டியதாயிற்று. அங்கே போவதற்கு நான் அனுமதி கேட்கும் போதெல்லாம் வைசிராய், பொறுங்கள்! என்று கூறி வந்தார். ஆகையால், நான் போவது காலம் தள்ளிக்கொண்டே வந்தது. இதற்கு மத்தியில் ராணுவச் சட்டத்தின் கீழ் பாஞ்சால அரசாங்கம் செய்தவைகளின் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு ஹண்டர் கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ ஸி.எப்.ஆண்டுரூஸ் இதற்குள் அங்கே போய்விட்டார். அங்கே இருந்த நிலைமையைக் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் உள்ளத்தைப் பிளப்பனவாக இருந்தன. ராணுவச் சட்ட அமுல் அட்டூழியங்கள், பத்திரிக்கைகளில் வெளியான விவரங்களைவிடப் படுமோசமாக இருக்கின்றன என்ற அபிப்பிராயம் எனக்கு உண்டாயிற்று. உடனே புறப்பட்டு வரும்படி அவர் என்னை வற்புறுத்தினார். அதே சமயத்தில் மாளவியாஜியும், உடனே பாஞ்சாலத்திற்குப் புறப்படுமாறு எனக்குத் தந்தி கொடுத்தார். இப்போதாவது நான் பாஞ்சாலத்திற்குப் போகலாமா? என்று மற்றோர் முறையும் வைசிராய்க்குத் தந்தி கொடுத்துக் கேட்டேன். ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதிக்குப் பிறகு நான் பாஞ்சாலத்திற்குப் போகலாம் என்று பதில் வந்தது. எனக்கு இப்பொழுது அத்தேதி சரியாக ஞாபகம் இல்லையென்றாலும், அக்டோபர் 17-ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

 நான் லாகூர் போய்ச் சேர்ந்ததும் கண்ட காட்சியை என் ஞாபகத்திலிருந்து என்றும் அழித்துவிட முடியாது. ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு கோடியிலிருந்து மற்றோர் கோடிக்கு ஒரே ஜனசமுத்திரம். நீண்டகாலம் பிரிந்திருந்து விட்ட உறவினரைச் சந்திப்பதற்குக் கிளம்பிவிடுவதைப் போல லாகூர் மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்து ஆர்வத்துடன் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்த மிகுதியால் அவர்கள் தலைகால் புரியாதவர்களாகிவிட்டனர். நான், காலஞ்சென்ற பண்டித ராம்பாஜ் தத்தின் பங்களாவில் தங்கினேன். என்னை உபசரிக்கும் பாரம் ஸ்ரீ மதி சரளாதேவிக்கு ஏற்பட்டது. உண்மையில், அது பெரிய பாரமேயாகும். ஏனெனில், இப்பொழுது இருப்பதைப் போன்று அக்காலத்திலும் நான் தங்கும் இடம் பெரிய சத்திரமாகவே ஆகி வந்தது.  பாஞ்சாலத்தின் முக்கியமான தலைவர்களெல்லோரும் சிறையில் இருந்ததால், அவர்களுடைய ஸ்தாபனங்களைப் பண்டித மாளவியா, பண்டித மோதிலால்ஜி, காலஞ் சென்ற சுவாமி சிரத்தானந்தஜி ஆகியோர் பொருத்தமாகவே வகித்து வந்தார்கள். சுவாமி சிரத்தானந்தஜியையும் மாளவியாவையும் இதற்கு முன்பே நான் நன்றாக அறிவேன். ஆனால், மோதிலால்ஜியுடன் முதன் முதலாக இப்பொழுதுதான் நான் நெருங்கிப் பழகினேன்.

இந்தத் தலைவர்களும், சிறை செல்லும் பாக்கியத்திலிருந்து தப்பிய உள்ளூர்த் தலைவர்களும், தங்கள் மத்தியில் நான் என் சொந்த வீட்டில் இருப்பதாகவே உணரும்படி செய்தனர். இதனால், அவர்களின் நடுவே நான் அந்நியனாக உணரவே இல்லை.  ஹன்டர் கமிட்டியின் முன்பு விசாரணைக்குச் சாட்சியம் அளிப்பதில்லை என்று நாங்கள் ஏகமனதாக முடிவு செய்த விஷயம், இப்பொழுது சரித்திரப் பிரசித்தமானது. இவ்விதம் முடிவு செய்ததற்கான காரணங்கள், அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை இங்கே திரும்பக் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றை மாத்திரம் சொன்னாலே போதும். இவ்வளவு காலமான பிறகும் அந்த நிகழ்ச்சிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது, அக் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் செய்த முடிவு முற்றும் சரியானதும் பொருத்தமானதுமாகும் என்றே இப் பொழுதும் நான் எண்ணுகிறேன்.  ஹன்டர் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் முடிவு செய்து விட்டதன் விளைவாகக் காங்கிரஸின் சார்பாக அதேபோல விசாரணையை நடத்த உத்தியோகஸ்தரல்லாதவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமிப்பது என்று தீர்மானித்தோம். பண்டித மோதிலால் நேரு, காலஞ்சென்ற தேசபந்து ஸி.ஆர்.தாஸ், ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, ஸ்ரீ எம்.ஆர். ஜெயகர் ஆகியோரும் நானும் அக்கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். உண்மையில் எங்களை நியமித்தவர் பண்டித மாளவியாஜியே. விசாரிப்பதற்காக நாங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். கமிட்டியின் வேலைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதோடு அதிகப்படியான இடங்களில் விசாரிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. இதனால், பாஞ்சால மக்களையும் பாஞ்சாலத்தின் கிராமங்களையும் நெருங்கிப் பழகி அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

இந்த விசாரணையை நான் நடத்தி வந்தபோது பாஞ்சாலத்தின் பெண்களிடமும் நான் நெருங்கிப் பழகினேன். எவ்வளவோ காலமாக ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்தவர்களைப் போன்றே நாங்கள் பழகினோம். நான் சென்ற இடங்களிலெல்லாம் பெண்கள் ஏராளமாக வந்து கூடினார்கள். அவர்கள், தங்கள் கையினால் நூற்ற நூல்களையும் என் முன்பு கொண்டு வந்து குவித்தார்கள். கதர் வேலைக்குப் பாஞ்சாலத்தில் அதிக இடமுண்டு என்ற உண்மையை, நான் செய்து வந்த விசாரணை வேலையின் மூலம் தெரிந்து கொண்டேன்.  மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அட்டூழியங்களைக் குறித்து என் விசாரணையை மேலும் மேலும் நான் நடத்திக் கொண்டு போகப் போக, அரசாங்கத்தின் கொடுமைகளைப் பற்றியும், அதன் அதிகாரிகளின் எதேச்சாதிகார அக்கிரமங்களைக் குறித்தும், ஏராளமான விவரங்களை அறியலானேன். இவற்றையெல்லாம் அறியவே எனக்கு மன வேதனை அதிகமாயிற்று. பாஞ்சாலம், யுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏராளமான சிப்பாய்களைக் கொடுத்துதவிய மாகாணம். அப்படியிருக்க, இந்த மாகாணம் இவ்வளவு மிருகத்தனமான அட்டூழியங்களுக்கு எப்படிப்பணிந்து பொறுத்துக் கொண்டிருந்தது என்பதே எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுதுகூட அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கமிட்டியின் அறிக்கையைத் தயாரிக்கும் வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாஞ்சால மக்களிடம் எந்தவிதமான அட்டூழியங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவோர், இக்கமிட்டியின் அறிக்கையைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன். அதைக் குறித்து இங்கே நான் சொல்ல விரும்புவதெல்லாம், அந்த அறிக்கையில் மனமார மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பது ஒன்றுமே இல்லை. அதில் கூறப்பட்டிருப்பது ஒவ்வொன்றும் சாட்சியங்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான். மேலும், பிரசுரமாகி  இருக்கும் சாட்சியங்கள், கமிட்டியினிடமிருக்கும் சாட்சியங்களில் மிகச் சிலவேதான். எங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் ஒரு சிறிது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருந்த எதுவும், அறிக்கையில் வர நாங்கள் அனுமதிக்கவில்லை. உண்மை  ஒன்றையே, அசல் உண்மையை மாத்திரமே, வெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் பேரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகையால், பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடைய ஆட்சி நிலைத்திருக்கும்படி செய்வதற்காக எந்த அளவுக்குப் போகக்கூடியதாக இருக்கிறது, எவ்வளவு ஜீவகாருண்யமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்யக் கூடியது என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் அறிய முடியும். எனக்குத் தெரிந்த வரையில், இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒரு விஷயமாவது, தவறானது என்று இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.


Offline Anu

பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்?

பாஞ்சாலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தற்சமயத்திற்கு நாம் நிறுத்திவிட்டு மற்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பாஞ்சாலத்தில் நடந்த டயர் ஆட்சிக் கொடுமைகளைக் குறித்துக் காங்கிரஷ் விசாரணையைத் தொடங்கிய அச்சமயத்தில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. கிலாபத் பிரச்சனையைக் குறித்து ஆலோசிப்பதற்காக டில்லியில் நடக்கவிருந்த ஹிந்து, முஸ்லிம் கூட்டு மகாநாட்டுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பில் கையொப்பமிட்டிருந்தவர்களில் காலஞ்சென்ற ஹக்கீம் அஜ்மல் கான் சாகிபும், ஸ்ரீ ஆஸப் அலியும் இருந்தனர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் அம்மகாநாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அந்த வருடம் நவம்பரில் கூடவிருந்த மகாநாட்டிற்கு அவர் உபதலைவராக இருப்பது என்று இருந்ததாகவும் எனக்கு ஞாபகம். கிலாபத் விஷயமாகச் செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தினால் ஏற்பட்ட நிலைமையைக் குறித்தும், யுத்த சமாதான வைபவங்களில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்துகொள்ளுவதா என்பதைப் பற்றியும் அம்மகாநாடு விவாதிக்க இருந்தது. அழைப்புக் கடிதத்தில் இன்னுமொன்றும் கூறியிருந்தார்கள். மகாநாட்டில் கிலாபத் விஷயம் மாத்திரமே அன்றிப் பசுப் பாதுகாப்பைப்பற்றிய விஷயமும் விவாதிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

பசுப் பிரச்சனையைக் குறித்து இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அழைப்புக்குப் பதிலளித்து நான் எழுதிய கடிதத்தில் மகாநாட்டுக்கு வருவதற்கு என்னாலான முயற்சியைச் செய்வதாகக் கூறினேன். அதோடு, இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகக் கவனிக்கவோ அல்லது பேரம் பேசும் உணர்ச்சியுடன் அவற்றைக் கலப்பதோசரியல்ல என்றும், அதனதன் தகுதிக்கு ஏற்பத் தனித்தனியாக இவ்விஷயங்களை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் என்றும் எழுதினேன். இவ்விதமான எண்ணங்களோடேயே நான் அம்மகாநாட்டிற்குச் சென்றேன். அதற்குப் பின்னால் நடந்த மகாநாடுகளுக்கு பத்தாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள். அவைகளைப் போல் இம்மகாநாடு இல்லாவிட்டாலும், இதற்கும் அநேகர் வந்திருந்தார்கள். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் மகாநாட்டுக்கு வந்திருந்தார். மேலே சொன்ன விஷயத்தைக் குறித்து அவருடன் விவாதித்தேன். என்னுடைய வாதத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். மகாநாட்டில் அதை எடுத்துக்கூறும் வேலையை அவர் எனக்கே அளித்தார். இதே போலக் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிப்பிடமும் இதைப் பற்றி விவாதித்தேன்.

மகாநாட்டின் முன்பு நான் பேசியபோது கூறியதாவது: கிலாபத் பிரச்சனைக்குள்ள அடிப்படை, நியாயமானது, நீதியானது என்று நம்புகிறேன். அப்படி இருக்குமாயின் அரசாங்கம் மோசமான அநீதியையே இதற்கு முன்னால் செய்திருக்கிறது என்றால், கிலாபத் தவறுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோருவதில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு நிற்க ஹிந்துக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். கிலாபத் பிரச்னைக்கு ஹிந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு விலை கொடுப்பதுபோலப் பசுவைக் கொல்லுவதில்லை என்று முஸ்லிம்கள் சொல்லுவது எவ்விதம் சரியல்லவோ, அதேபோல முஸ்லிம்களுடன் இதில் ஒரு சமரசத்திற்கு வர இச்சந்தர்ப்பத்தை ஹிந்துக்கள் பயன்படுத்திக் கொள்ளுவதும் அழகல்ல. ஆகையால், இதன் சம்பந்தமாகப் பசுப் பிரச்னையைக் கொண்டு வருவதே முறையாகாது. ஆனால், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்தும், அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் அவர்கள்பால் கொள்ள வேண்டிய கடமை உணர்ச்சியினாலும், முஸ்லிம்கள் தாங்களாகவே விரும்பிப் பசுவைக் கொல்லுவதை நிறுத்திவிடுவார்களானால், அது முற்றும் வேறான விஷயம்.

இது முஸ்லிம்களுக்குப் பெருந்தன்மையாவதோடு அவர்களுக்கு அதிகக் கௌரவத்தையும் அளிக்கும். இவ்விதம் ஒரு சுயேச்சையான முடிவுக்கு வருவது முஸ்லிம்களின் கடமை. இது அவர்கள் நடத்தையின் கௌரவத்தையும் உயர்த்தும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ற வகையில் முஸ்லிம்கள், பசுக்களைக் கொல்லுவதை நிறுத்துவதாயிருந்தால் கிலாபத் விஷயத்தில் ஹிந்துக்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் அவ்விதம் செய்ய வேண்டும். நிலைமை இதுவாகையால், இவ்விரு விஷயங்களையும் தனித்தனியாக விவாதித்து முடிவுக்கு வர வேண்டும். இந்த மகாநாட்டில் கிலாபத் பிரச்னையைக் குறித்து மாத்திரமே விவாதிக்க வேண்டும். மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு என்னுடைய வாதம் சரி என்று பட்டது. இதன் பலனாக, பசுப் பாதுகாப்பு விஷயம் இம்மகாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. ஆனால், என்னுடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மௌலானா அப்துல் பாரிசாகிப், நமக்கு ஹிந்துக்கள் உதவி செய்தாலும் உதவி செய்யாது போனாலும் சரி, நாம் ஹிந்துக்களின் நாட்டினர் என்ற வகையில், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்து முஸ்லிம்கள் பசுக்களைக் கொல்வதை விட்டுவிட வேண்டும் என்றார். பசுக்களைக் கொல்லுவதை அவர்கள் அடியோடு விட்டுவிடுவார்கள் என்றே அநேகமாகத் தோன்றியது.  கிலாபத் தவறு பற்றிய விஷயத்துடன் பாஞ்சால விஷயத்தையும் பிணைத்துவிட வேண்டும் என்று சிலர் ஒரு யோசனை கூறினார்கள்.

அந்த யோசனையை நான் எதிர்த்தேன். பாஞ்சாலப் பிரச்னை உள்நாட்டு விஷயமாகையால், யுத்த சமாதான வைபவங்களில் கலந்து கொள்ளுவதா, இல்லையா என்று நாம் முடிவுக்கு வருவதற்கு இது நமக்குப் பொருத்தமானதாகாது என்றேன். கிலாபத் பிரச்னை, யுத்த சமாதான ஒப்பந்தம் காரணமாக நேரடியாக எழுந்துள்ளது. அதில் போய் உள்நாட்டு விஷயத்தையும் கலந்து விடுவோமாயின், பகுத்தறியாத பெருங் குற்றத்தை செய்தவர்களாவோம் என்றேன். என்னுடைய வாதத்தை எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டனர். இக்கூட்டத்தில் மௌலானா ஹஸரத் மோகானி பிரசன்னமாகி இருந்தார். அதற்கு முன்பே அவரை நான் அறிவேன். ஆனால், அவர் எவ்வளவு சிறந்த போராட்ட வீரர் என்பதை நான் அங்கேதான் தெரிந்துகொண்டேன். ஆரம்பம் முதற்கொண்டே நாங்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தோம். அநேக விஷயங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தொடர்ந்து இருந்து வந்தன.

இம்மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. அத்தீர்மானங்களில் ஒன்று, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதேசி விரதம் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அதை அனுசரிப்பதையொட்டி, அந்நியச் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அப்பொழுது கதர், இன்னும் அதற்குரிய ஸ்தானத்தை அடைந்துவிடவில்லை. ஹஸரத் சாகிப் ஒப்புக்கொண்டு விடக்கூடிய தீர்மானமன்று இது. கிலாபத் விஷயத்தில் நீதி மறுக்கப்படுமானால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர் நோக்கம். ஆகையால், முடிந்தவரையில் பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரமே பகிஷ்கரிக்க வேண்டும் என்றுபோட்டித் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். அந்தக் கொள்கையே தவறானது என்றும், அது அனுபவ சாத்தியமில்லை என்றும் கூறி நான் அத்தீர்மானத்தை எதிர்த்தேன்.

நான் அப்பொழுது கூறிய வாதங்கள் இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்தவை. அகிம்சையைப் பற்றிய என் கருத்துக்களையும் மகாநாட்டில் கூறினேன், நான் கூறிய வாதங்கள் கூட்டத்தில் இருந்தோரின் உள்ளங்களை மிகவும் கவர்ந்தன என்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஹஸரத் மோகானி பேசினார். அவருடைய பேச்சுக்கு பலத்த ஆரவாரமான வரவேற்புகள் இருந்ததால் என் பேச்சு எடுபடாமலேயே போய்விடுமோ என்று அஞ்சினேன். என் கருத்தை மகாநாட்டின் முன் கூறாது போனால், கடமையில் தவறியவனாவேன் என்று நான் கருதியதனாலேயே பேசத்துணிந்தேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என் பிரசங்கத்தை அதிகக் கவனமாகக் கேட்டதோடு, மேடையில் இருந்தவர்கள் அதற்கு முழு ஆதரவையும் அளித்தது எனக்கு வியப்பும் ஆச்சரியமுமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராகப் பலர்  எழுந்து என் கருத்தை ஆதரித்துப் பேசினார்கள். பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரம் பகிஷ்கரிப்பது என்றால், அந்த நோக்கம் நிறைவேறாது போவதோடு, தாங்கள் நகைப்புக்கு இடமானவர்களாகவும் ஆகி விடநேரும் என்பதைத் தலைவர்கள் காணமுடிந்தது. பிரிட்டிஷ் சாமான் ஏதாவது ஒன்றேனும் தம் உடம்பில் இல்லாதவர் ஒருவர்கூட அம்-மகாநாட்டில் இல்லை. ஆகையால், தாங்களே அனுசரிக்க முடியாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதால், தீமையைத் தவிர வேறு எதுவும் இராது என்பதைக் கூட்டத்திலிருந்த அநேகர் உணர்ந்து கொண்டனர்.

அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பது மாத்திரம் நமக்குத் திருப்தி அளித்துவிட முடியாது. ஏனெனில், அந்நியத் துணியை நாம் சரியானபடி பகிஷ்கரிப்பதற்கு, நமக்குத் தேவையான சுதேசித் துணிகளை நாமே தயாரித்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை யாரால் சொல்ல முடியும்? பிரிட்டிஷாரை உடனே பாதிக்கக்கூடிய ஏதாவது ஒன்று நமக்கு வேண்டும். உங்கள் அந்நியத் துணிப் பகிஷ்காரம் வேண்டுமானால், அப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், அதோடு அதைவிடத் துரிதமான, வேகமான ஒன்றையும் எங்களுக்குக் கொடுங்கள் என்று மௌலானா ஹஸரத் மோகானி பேசினார். அவர் பேச்சை நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பதற்கு மேலாக மற்றொரு புதிய திட்டமும் அவசியம் வேண்டும் என்பதை உணர்ந்தேன். அந்நியத் துணியை உடனே பகிஷ்கரித்து விடுவது என்பது அச்சமயம் அசாத்தியமானது என்றும் எனக்குத் தோன்றியது. நான் விரும்பினால், நமது துணித் தேவைக்குப் போதுமான துணி முழுவதற்கும் வேண்டிய கதரை நாம் உற்பத்தி செய்ய முடியும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. இதைப் பின்னால் தான் கண்டு பிடித்தேன். மேலும், அந்நியத் துணிப் பகிஷ்காரத்திற்கு ஆலைகளை மாத்திரம் நம்பி இருப்போமாயின், நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதை அப்பொழுதே நான் அறிவேன். மௌலானா தமது பிரசங்கத்தை முடித்த சமயத்தில் நான் இன்னும் இந்த மனக்குழப்பத்திலேயே இருந்துவந்தேன்.  பேசுவதற்கு எனக்கு ஹிந்தி அல்லது உருதுமொழியில் தக்க சொற்கள் அகப்படாமல் இருந்தது, பெரிய இடையூறாக இருந்தது.

முக்கியமாக வடநாட்டு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு கூட்டத்தின் முன்பு, விவாதங்களோடு கூடிய பிரசங்கத்தை நான் செய்ய நேர்ந்தது இதுவே முதல் தடவையாகும். கல்கத்தாவில் முஸ்லிம் லீக் கூட்டத்தில் நான் உருதுவில் பேசியிருக்கிறேன். ஆனால், அங்கே பேசியது சில நிமிடங்களே. அதோடு உணர்ச்சியோடு கூடிய ஒரு கோரிக்கையை அங்கே கூடி இருந்தோருக்கு வெளியிடுவதே அப்பேச்சின் நோக்கம். அதற்கு நேர்மாறாக இங்கே, விரோதமான கூட்டத்தினரல்லவாயினும் குற்றங்குறை கண்டுபிடிக்கக்கூடியதான ஒரு கூட்டத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு என் கருத்தை விளக்கிக் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டியும் இருந்தது. ஆனால், எனக்கு இருந்துவந்த சங்கோஜத்தை எல்லாம் முன்பே விட்டுவிட்டேன். குற்றமற்ற நாசுக்கான டில்லி உருதுவில் பிரசங்கம் செய்வதற்காக நான் - அங்கே போனவன் அல்ல. ஆனால், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் என் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அங்கே சென்றேன். இதில் நான் வெற்றியும் பெற்றேன். ஹிந்தி-உருது மாத்திரமே இந்தியாவின் பொது மொழியாக இருக்க முடியும் என்ற உண்மைக்கு இக்கூட்டம் எனக்கு நேரடியான ருசுவாக இருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களின் மனத்தை நான் எவ்வளவு தூரம் கவர்ந்தேனோ அதே போல நான் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் கவர்ந்திருக்க முடியாது. மௌலானா தமது சவாலை வெளியிடவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியே அவர் வெளியிட்டிருந்தாலும், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொண்டும் இருக்கமாட்டேன்.

புதிய கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கு வேண்டிய ஹிந்தி அல்லது உருதுச் சொற்கள் எனக்கு அகப்படவில்லை. இது ஓரளவுக்கு எனக்குக் கஷ்டமாகவே இருந்தது. கடைசியாக, அக்கருத்தை நான் கோவாப்பரேஷன் (ஒத்துழையாமை) என்ற ஆங்கிலச் சொல்லால் விவரித்தேன். முதன் முதலாக  இக்கூட்டத்திலேயே இச்சொல்லை நான் உபயோகித்தேன். மௌலானா பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அரசாங்கத்தை ஆயுதங்களைக் கொண்டு எதிர்ப்பதென்பது அசாத்தியமானது; விரும்பத்தக்கதல்ல என்றால், அநேக காரியங்களில் அந்த அரசாங்கத்துடன் அவர் ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் போது, சரியானபடி அதை எதிர்ப்பது என்று அவர் பேசிக்கொண்டிருப்பது வீண் காரியம் என்று எண்ணினேன். ஆகையால், அந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்காமல் இருந்து விடுவது ஒன்றே அதற்கு உண்மையான எதிர்ப்பாகும் என்றும் எனக்குத் தோன்றியது. இவ்விதம் ஒத்துழையாமை என்ற சொல்லைப் பிரயோகித்தேன். ஆனால், அச்சொல்லில் அடங்கியுள்ள அநேக விளைவுகளைக் குறித்து அப்பொழுது எனக்குத் தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆகையால், நான் விவரங்களைப் பற்றிக் கவனிக்கவே இல்லை. பின்வருமாறு மாத்திரம் சொன்னேன்: முஸ்லிம்கள் மிக முக்கியமானதோர் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

யுத்த சமாதான ஷரத்துக்கள் அவர்களுக்குச் சாதகமில்லாதவைகளாக இருக்குமாயின் - ஆண்டவன் அதைத் தவிர்ப்பாராக- அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். இவ்விதம் ஒத்துழைப்பை நிறுத்தி விடுவது மக்களுக்குள்ள பறிக்க முடியாத ஓர் உரிமை ஆகும். அரசாங்கம் அளித்திருக்கும் பட்டங்களையும் கௌரவங்களையும் தொடர்ந்து வைத்து கொண்டிருக்கவோ, அரசாங்க உத்தியோகத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கவோ நாம் கடமைப்பட்டிருக்கவில்லை. கிலாபத் போன்ற மிகப் பெரியதோர் லட்சியத்தில் அரசாங்கம் நமக்குத் துரோகம் செய்யுமாயின், அதனுடன் நாம் ஒத்துழையாமை செய்யாமல் இருப்பதற்கில்லை. ஆகையால், நமக்கு அரசாங்கம் துரோகம் செய்யுமானால், அதனுடன் ஒத்துழைக்காமல் இருக்க நமக்கு உரிமை உண்டு.  ஆனால், ஒத்துழையாமை என்ற சொல் எங்கும் புழக்கத்துக்கு வரச் சில மாதங்களாயின. அப்போதைக்கு அது அம்மகாநாட்டின் நடவடிக்கைகளில் மறைந்து போயிற்று. உண்மையில் ஒரு மாதத்திற்குப் பின்னால், அமிர்தசரஸில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் ஒத்துழைப்புத் தீர்மானத்தை நான் ஆதரித்தபோது, துரோகம் செய்யவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவ்வாறுசெய்தேன்.


Offline Anu

அமிர்தசரஸ் காங்கிரஸ்

ராணுவ ஆட்சிக் காலத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான பஞ்சாபிகளைப் பாஞ்சால அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருந்துவிட முடியாது. இவர்களெல்லாம், பெயரளவிலேயே கோர்ட்டுகளாக இருந்த மன்றங்களில் அரைகுறையான சாட்சியங்களைக் கொண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இப் பெரிய அநீதியைக் குறித்து எங்கே பார்த்தாலும் கண்டனங்கள் எழுந்ததால், அவர்களை மேற்கொண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது அசாத்தியம் என்று ஆகிவிட்டது. காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு முன்னாலேயே சிறையில் இருந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் மகாநாடு நடந்து கொண்டிருந்த போதே லாலா ஹரி கிருஷ்ணலாலும் மற்றத் தலைவர்களும் விடுதலையாயினர். அலி சகோதரர்களும் சிறையிலிருந்து நேரே காங்கிரஸு க்கு வந்தார்கள். மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பண்டித மோதிலால் நேரு தமக்கு ஏராளமான வருமானத்தை அளித்து வந்த வக்கீல் தொழிலைத் தியாகம் செய்துவிட்டுப் பாஞ்சாலத்தையே தமது தலைமை ஸ்தானமாகக் கொண்டு மகத்தான சேவை செய்திருந்தார்.

காங்கிரஸ் மகாநாட்டுக்கு அவரே தலைவர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி வரவேற்பு கமிட்டித் தலைவராக இருந்தார். இந்தச் சமயம் வரையில் காங்கிரஸின் வருடாந்திர நடவடிக்கையில் நான் கொண்ட பங்கு, தேசீய மொழியில் என் பிரசங்கத்தைச் செய்து ஹிந்தியை அனுசரிக்கும்படி வற்புறுத்தி வந்ததே ஆகும். அந்தப் பிரசங்கங்களில் வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர் குறைகளைக் குறித்தும் எடுத்துக் கூறி வந்தேன். இந்த ஆண்டு அதைவிட நான் அதிகமாக எதுவும் செய்ய வேண்டி இருக்கும் என்றும் நான் எதிர் பார்க்கவில்லை. ஆனால், இதற்கு முன்னால் அநேக சமயங்களில் நேர்ந்திருப்பதைப் போன்றே இச்சமயமும் பொறுப்பான வேலை எனக்கு வந்து சேர்ந்தது. புதிய அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து மன்னரின் அறிவிப்பு அப்பொழுதுதான் வெளியாயிற்று. எனக்குக் கூட அது முற்றும் திருப்தியளிப்பதாக இல்லை. மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அது திருப்தியை அளித்தது. அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறைபாடுடையவைகளேயாயினும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே என்று அச்சமயம் நான் எண்ணினேன்.

மன்னரின் அறிக்கையிலும், அதன் பாஷையிலும் லார்டு சின்ஹாவின் கைத்திறன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இது எனக்குச் சிறிதளவு நம்பிக்கையையும் அளித்தது. ஆனால், காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் போன்ற அனுபவமுள்ள தீரர்களோ, அந்தச் சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று தலையை அசைத்து விட்டார்கள். பண்டித மாளவியாஜி நடுநிலைமை வகித்தார். பண்டித மாளவியாஜி, தமது சொந்த அறையிலேயே நான் தங்கும்படி செய்தார். ஹிந்து சர்வகலாசாலை அஸ்திவார விழாச்சமயம் அவருடைய எளிய வாழ்க்கையைக் குறித்து நான் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தேன். ஆனால், இச்சமயம் அவருடைய அறையிலேயே அவருடன் இருந்து வந்ததால், அவருடைய அன்றாட வாழ்க்கை முறையை மிக நுட்பமாகக் கவனிக்க என்னால் முடிந்தது. நான் கண்டவை, எனக்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தன. ஏழைகள் எல்லோரும் தாராளமாக வந்து இருக்கக்கூடிய தரும சத்திரத்தைப் போன்றே அவரது அறைகாட்சி அளித்தது. அந்த அறையில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் விடமுடியாது. உள்ளே அவ்வளவு கூட்டம். எந்த நேரத்திலும் யாவரும் அவர் அறைக்குள் போகலாம். விரும்பும் வரையில் அவருடன் தாராளமாக பேசிக்கொண்டிருந்து விட்டுப் போகலாம்.

இந்த அறையின் ஒரு மூலையில் என்னுடைய சார்ப்பாய் (நார்க் கட்டில்) மிகவும் கம்பீரமாகக் கிடந்தது. ஆனால், மாளவியாஜியின் வாழ்க்கை முறையை இந்த அத்தியாயத்தில் நான் வர்ணித்துக்கொண்டு இருப்பதற்கில்லை. நான் கூற வந்த விஷயத்திற்கே நான் திரும்பவேண்டும்.  இவ்வாறு தினமும் மாளவியாஜியுடன் நான் பழக முடிந்தது. ஒரு மூத்த சகோதரரைப் போன்று அவர், பலதரப் பட்ட கட்சியினரின் கருத்துக்களையும் அன்போடு எனக்கு விளக்கிச் சொல்லி வந்தார். அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றிய தீர்மானத்தின் மீது மகாநாட்டின் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டாக வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதைக் கண்டேன். பாஞ்சால அட்டூழியங்களைக் குறித்த காங்கிரஸின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பில் நானும் பங்கு கொண்டிருந்ததால், அதன் சம்பந்தமாக இனி மேல் செய்ய வேண்டியவைகளையும் நான் கவனித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். அது சம்பந்தமாக அரசாங்கத்துடன் விவகாரம் நடத்தியாக வேண்டும். அதே போல கிலாபத் பிரச்னையும் இருந்தது. மேலும் ஸ்ரீ மாண்டேகு, இந்தியாவின் லட்சியத்திற்குத் துரோகம் செய்ய மாட்டார். துரோகம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கமாட்டார் என்றும் அச்சமயம் நான் நம்பியிருந்தேன்.

அலி சகோதரர்களும் மற்ற கைதிகளும் விடுதலை செய்யப்பட்டது நல்ல சகுணம் என்றும் எனக்குத் தோன்றியது. இந்த நிலைமையில் அரசியல் சீர்திருத்தங்களை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தைச் செய்வதே சரியான காரியம் என்றும் எண்ணினேன். ஆனால், தேசபந்து சித்தரஞ்சன் தாஸோ, அரசியல் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல, திருப்திகரமானவை அல்ல என்று அடியோடு நிராகரித்து விடவேண்டியதே என்ற கருத்தில் உறுதியுடன் இருந்தார். காலஞ்சென்ற லோகமான்யரோ, அநேகமாக நடுநிலைமையே வகித்தார். ஆனால், தேசபந்து அங்கீகரிக்கும் எந்தத் தீர்மானத்திற்கும் சாதகமாகத் தமது ஆதரவை அளித்து விடுவதென்றும் தீர்மானித்திருந்தார். இத்தகைய அனுபவமுள்ள, நீண்ட காலம் சிறந்த தேசத் தொண்டாற்றி மக்களின் மதிப்பைப் பெற்றிருந்த தலைவர்களின் கருத்துக்கு மாறான கருத்தை நான் கொள்ளுவது என்ற எண்ணமே என்னால் சகிக்க முடியாததாக இருந்தது. ஆனால், அதே சமயத்தில் என்னுடைய மனச்சாட்சியின் குரலும் எனக்குத் தெளிவாக ஒலித்தது. காங்கிரஸிலிருந்து ஓடிப் போய்விடவே நான் முயன்றேன். காங்கிரஸில் இனி நடக்கவிருக்கும் நடவடிக்கைகளில் நான் கலந்துகொள்ளாது இருந்து விடுவதே எல்லோருக்கும் நன்மையாக இருக்கும் என்று பண்டித மாளவியாஜியிடமும் மோதிலால்ஜியிடமும் சொன்னேன். அவ்வாறு நான் செய்தால், மதிப்பிற்குரிய
தலைவர்களுக்கு மாறான கருத்தை நான் காட்டிக்கொள்ளுவதிலிருந்து நான் காப்பாற்றப்பட்டவனும் ஆவேன் என்றேன்.  ஆனால், என் யோசனையை இவ்விரு தலைவர்களும் அங்கீகரிக்கவில்லை.

என்னுடைய இந்த யோசனை எப்படியோ லாலா ஹரிகிருஷ்ண லாலின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. அப்படிச் செய்யவே கூடாது. பாஞ்சாலத்தினரின் உணர்ச்சிகளை அது மிகவும் புண்படுத்தும் என்றார் அவர். இவ் விஷயத்தைக் குறித்து லோகமான்யர், தேசபந்து, ஸ்ரீ ஜின்னா ஆகியவர்களுடன் விவாதித்தேன். ஆனால், எந்த வழியையும் காண முடியவில்லை. முடிவாக என் துயர நிலைமையை மாளவியாஜியிடம் எடுத்துக் கூறினேன். சமரசம் ஏற்படும் என்பதற்கான எதையும் நான் காணவில்லை. என் தீர்மானத்தை நான் கொண்டு வருவதாயின், அதன்மீது வாக்கெடுக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு வேண்டிய ஏற்பாடு எதுவும் அங்கிருப்பதாக நான் காணவில்லை. காங்கிரஸ் மகாநாட்டில் இதுவரையில் கை தூக்கச் சொல்லி வாக்கெடுக்கும் முறையே அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பிரதிநிதிகளுக்கும், மகாநாட்டை வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களெல்லாம் அப்பொழுது போய்விடுவதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இத்தகைய பெரிய கூட்டங்களில் வாக்குகளை எண்ணுவதற்கான சாதனங்களும் நம்மிடம் இல்லை. வோட்டு எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், அதற்கு வேண்டிய வசதியும் நம்மிடம் இல்லை, அதில் அர்த்தமும் இல்லை என்று சொன்னேன். லாலா ஹரிகிருஷ்ண லாலே இதில் கை கொடுக்க முன் வந்தார். வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாக ஒப்புக் கொண்டார். வாக்கெடுக்கும் தினத்தன்று, வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களைக் காங்கிரஸ் பந்தலில் அனுமதிக்க மாட்டோம். வாக்குகளை எண்ணிக் கணக்கிடுவதைப் பொறுத்த வரையில் நான் கவனித்துக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் மாத்திரம் காங்கிரஸு க்கு வராமல் இருந்து விடக் கூடாது என்றார், அவர்.

 நான் உடன்பட்டேன். என் தீர்மானத்தைத் தயாரித்தேன். உள்ளத்தில் நடுங்கிக்கொண்டே அதைப் பிரேரிக்கவும் முற்பட்டேன். பண்டித மாளவியாஜியும் ஸ்ரீ ஜின்னாவும் அதை ஆதரிக்க இருந்தனர். எங்களுடைய கருத்து வேற்றுமையில் மனக்கசப்பு என்பது ஒரு சிறிதேனும் இல்லாமல் இருந்த போதிலும், நியாயத்தை எடுத்துக் கூறியதைத் தவிர எங்கள் பிரசங்கங்களில் வேறு எதுவுமே இல்லையென்றாலும், அபிப்பிராய பேதம் இருக்கிறது என்பதை மக்கள் சகிக்கவே இல்லை. அது அவர்களுக்கு வேதனையை அளித்தது என்பதைக் கண்டேன். பூரணமான ஒற்றுமையையே அவர்கள் விரும்பினார்கள்.  ஒரு பக்கம் பிரசங்கங்கள் செய்யப்பட்டு வந்த அதே சமயத்தில் மற்றொரு பக்கத்தில், அபிப்பிராய பேதத்தில் சமரசம் செய்து வைப்பதற்கு மேடையில் முயற்சிகள் நடந்து கொண்டு வந்தன. அதற்காக, தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டு வந்தனர். ஒற்றுமையை உண்டாக்குவதற்கு மாளவியாஜி எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். அச்சமயத்தில் ஜெயராம்தாஸ், தீர்மானத்திற்குத் தமது திருத்தத்தை என்னிடம் கொடுத்தார். தமக்குள்ள இனிய சுபாவத்துடன், பிளவு ஏற்படும் இப்பெரிய தொல்லையிலிருந்து பிரதிநிதிகளைக் காப்பாற்றும் படியும் என்னைக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய திருத்தம் எனக்குப் பிடித்திருந்தது. இதற்கிடையில் நம்பிக்கைக்கு எங்காவது இடம் இருக்கிறதா என்று மாளவியாஜியின் கண் தேடிக்கொண்டே இருந்தது. ஜெயராம்தாஸின் திருத்தம் இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எனக்குத் தோன்றுகிறது என்று அவரிடம் நான் கூறினேன். அடுத்த படியாக அத்திருத்தம் லோகமான்யரிடம் காட்டப்பட்டது. ஸி. ஆர். தாஸ் ஒப்புக்கொள்ளுவதாக இருந்தால், எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றார். அவர் முடிவாக தேசபந்து தாஸு ம் தமது பிடியைத் தளர்த்தி அங்கீகாரத்திற்காக ஸ்ரீ விபினசந்திரபாலை நோக்கினார். மாளவியாஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. திருத்தத்தைக் கொண்ட காகிதச் சீட்டை அவர் பிடுங்கிக்கொண்டு, சரி என்று தேசபந்து திட்டமாகத் தமது ஆதரவை அறிவிப்பதற்கு முன்னாலேயே, சகோதரப் பிரதிநிதிகளே! சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிய நீங்கள் ஆனந்த மடைவீர்கள் என்று கோஷித்தார். பிறகு அங்கே கண்ட காட்சி வர்ணிக்க முடியாததாகும். கூடியிருந்தவர்களின் கரகோஷம் பந்தலையே பிளந்துவிடும் போல் எழுந்தது. இதுகாறும் கவலை தேங்கியிருந்த முகங்கள் ஆனந்தத்தால் பிரகாசமடைந்தன.  திருத்தத் தீர்மானத்தைக் குறித்து இங்கே கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அத்தியாயங்களில் நான் விவரித்து வரும் என்னுடைய சத்தியசோதனையின் ஒரு பகுதியாக மேற்கண்ட தீர்மானத்தை எவ்வாறு நான் கொண்டுவர நேர்ந்தது என்பதை விவரிப்பதே இங்கே என்னுடைய நோக்கமாகும். இந்தச் சமரசம் என்னுடைய பொறுப்பை மேலும் அதிகரித்தது.


Offline Anu

காங்கிரஸ் பணி ஆரம்பம்

அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டது, காங்கிரஸின் ராஜீய காரியங்களில் என்னுடைய உண்மையான பிரவேசம் என்றே நான் கொள்ள வேண்டும். இதற்கு முந்திய காங்கிரஸ் மகாநாடுகளுக்கு நான் போனதெல்லாம், காங்கிரஸினிடம் எனக்குள்ள பக்தியை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போன்றதே அன்றி வேறல்ல. அந்தச் சமயங்களில் காங்கிரஸின் சாதாரணப் போர் வீரன் என்று தான் நான் இருந்தேனேயல்லாமல் எனக்கென்று குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. சாதாரணச் சிப்பாய் என்பதற்கு அதிகமாக எதையும் நான் விரும்பியதும் இல்லை. இரண்டொரு காரியங்களைச் செய்யும் தன்மை என்னிடம் இருக்கக்கூடும். அது காங்கிரஸு க்குப் பயன்படும் என்று அமிர்தசரஸ் அனுபவம் காட்டியது. பாஞ்சால விசாரணை சம்பந்தமாக நான் செய்த வேலை, காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து, பண்டித மாளவியாஜி ஆகியவர்களுக்குத் திருப்தியளித்தது என்பதை, அதற்கு முன்னாலேயே என்னால் காண முடிந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டிக்கு அனுப்பும் தீர்மானங்களைக் குறித்து ஆலோசித்த தலைவர்களின் தனிக் கூட்டங்களுக்கு வழக்கமாக என்னையும் அழைப்பார்கள். தலைவர்களின் விசேட நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களையும், யாருடைய சேவை தங்களுக்குத் தேவைப் படுகின்றதோ அவர்களையும் மாத்திரமே அத்தகைய கூட்டங்களுக்கு அழைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்படாதவர்கள் சிலரும் சில சமயங்களில் இக்கூட்டங்களுக்கு வந்து விடுவதும் உண்டு.

 அடுத்த ஆண்டில் ஒரு காரியங்களைச் செய்வதில் நான் சிரத்தை கொண்டேன். அவற்றைச் செய்வதில் எனக்கு விருப்பமும் ஆற்றலும் இருந்தன. அவற்றில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம். இதைச் செய்வதென்று  காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக்  காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்திற்கு ராஜாக்களிடத்திலும் மகாராஜாக்களிடமும் பணம் கேட்பதற்கில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, இதற்கு நிதி திரட்டும் முக்கியப் பொறுப்பு, நான் எதிர்பார்த்ததைப் போலவே என் பேரில் தான் விழுந்தது.

தாராள குணமுள்ள பம்பாயின் மக்கள் ஏராளமாகப் பணம் கொடுத்தார்கள். ஆகையால், இந்த ஞாபகார்த்தச் சின்னத்தின் டிரஸ்ட்டிடம் பாங்கில் இப்பொழுது பெருந்தொகை இருக்கிறது. ஆனால், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்களின் ரத்தங்கள் கலந்தோடிய அந்த இடத்தில் எந்த விதமான புனித ஞாபகச் சின்னத்தை எழுப்புவது என்பதே இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்னை. இந்த மூன்று சமூகங்களும் ஒற்றுமையினாலும் அன்பினாலும் பிணைக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, நினைவுச் சி ன்ன நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது நாட்டு மக்களுக்கு இப்பொழுது புரியாமல் இருந்து வருகிறது. தீர்மானங்களைத் தயாரிப்பதில் எனக்கு இருந்த ஆற்றல், காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றொன்று ஆகும். எதையும் சுருக்கமாகக் கூறும் ஆற்றலை, நீண்ட கால அனுபவத்தினால் நான் பெற்றிருந்தேன். இதைக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொண்டார்கள். அப்பொழுது இருந்த காங்கிரஸ் அமைப்பு விதிகள், கோகலே தயாரித்து வைத்துவிட்டுப் போன ஆஸ்தியாகும். காங்கிரஸ் இயந்திரம் நடந்துகொண்டு போவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சில விதிகளை அவர்
அமைத்திருந்தார்.

இந்த விதிகளைத் தயாரித்ததைப்பற்றிய ருசிகரமான சரித்திரத்தைக் கோகலேயின் வாய் மொழியாலேயே நான் கேட்டிருக்கிறேன். காங்கிரஸின் வேலைகள் மிக அதிகமாகி விட்ட இக்காலத்திற்கு இந்த விதிகள் போதுமானவைகளே அன்று என்பதை இப்பொழுது ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்து விட்டனர். இவ்விஷயம் ஆண்டுதோறும் காங்கிரஸின் ஆலோசனைக்கு வந்து கொண்டும் இருந்தது. காங்கிரஸின் ஒரு மகாநாட்டிற்கும் மற்றொரு மகாநாட்டிற்கும் இடையிலும், ஓர் ஆண்டில் புதிதாக ஏற்படக்கூடிய நிலைமைகளிலும், வேலை செய்வதற்கு அச்சமயம் காங்கிரஸில் எந்தவிதமான ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. அப்பொழுதிருந்த விதிகளின்படி, காரியதரிசிகள் மூவர் உண்டு. ஆனால், அவர்களில் ஒருவர் தான் காங்கிரஸின் வேலைகளைக் கவனிப்பார். அவரும் முழு நேரமும் அவ்வேலையைக் கவனிப்பவரல்ல. அவர் ஒருவரே எவ்விதம் காங்கிரஸ் காரியாலயத்தை நடத்தி, எதிர்காலத்தைக் குறித்துச் சிந்தித்து, காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் பழைய பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதும் சாத்தியமாகும்? ஆகையால், அந்த ஆண்டில் இந்த விஷயம் மிக முக்கியமானது என்று எல்லோரும் கருதினார்கள். பொது விஷயங்களையெல்லாம் காங்கிரஸ் மகாநாடே விவாதிப்பதென்றால், அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிப்பது கஷ்டம்.

காங்கிரஸு க்கு வரும் பிரதிநிதிகள் தொகை இவ்வளவுதான் என்பதற்கோ, ஒவ்வொரு மாகாணமும் இத்தனை பிரதிநிதிகளைத்தான் அனுப்பலாம் என்பதற்கோ எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. இவ்விதம் அப்பொழுதிலிருந்த குழப்பமான நிலைமையில் ஏதாவது அபிவிருத்தி செய்தாக வேண்டியது அவசியம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். காங்கிரஸின் விதிகளை அமைக்கும் பொறுப்பை, ஒரு நிபந்தனையின் பேரில், நான் ஏற்றுக் கொண்டேன். பொதுமக்களிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்த இரு தலைவர்கள் லோகமான்யரும், தேசபந்துவும் என்பதைக் கண்டேன். காங்கிரஸ் விதிகளை அமைக்கும் கமிட்டியில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், விதிகள் அமைப்பு வேலையில் நேரடியாகக் கலந்து கொள்ளுவதற்கு அவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பது தெரிந்ததே. ஆகையால், விதிகள் கமிட்டியில் என்னுடன் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் இருவர் இருக்க செய்து விடவேண்டும் என்றும் யோசனை கூறினேன். இந்த யோசனையைக் காலஞ்சென்ற லோகமான்யரும், காலஞ்சென்ற தேசபந்துவும் ஏற்றுக் கொண்டார்கள். முறையே தங்கள் பிரதிநிதிகளாக ஸ்ரீ மான்கள் கேல்கர், ஐ.பி.ஸென் ஆகிய இரு பெயர்களையும் கூறினர். விதிகள் அமைப்புக் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு தடவையேனும் ஒன்று சேர முடியவில்லை. ஆனால், கடிதப் போக்குவரத்தின் மூலமே ஆலோசித்துக் கொண்டோம். முடிவாக ஒருமனதான அறிக்கையையும் சமர்ப்பித்தோம். இந்தக் காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் குறித்து நான் ஓரளவுக்குப் பெருமை அடைகிறேன்.இந்த விதிகள் முழுவதையும் நாம் நிறைவேற்றி வைக்க முடிந்தால், இவற்றை நிறைவேற்றுவது ஒன்றின் மூலமே நாம் சுயராஜ்யத்தை அடைந்துவிட முடியும் என்று நான் கருதுகிறேன். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் காங்கிரஸின் ராஜீய காரியங்களில் உண்மையில் நான் பிரவேசித்து விட்டேன் என்றே சொல்லலாம்.


Offline Anu

கதரின் பிறப்பு

1908-இல் நான் எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலில், இந்தியாவில் வளர்ந்து கொண்டு வரும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து, கைத்தறி அல்லது கைராட்டினமே என்று எழுதினேன். அந்தச் சமயம் வரையில் கைத்தறியையோ ராட்டினத்தையோ நான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. இந்திய மக்களை வாட்டி வரும் வறுமையைப் போக்குவதற்கு உதவியாக இருக்கும் எக்காரியமும் அதே சமயத்தில் சுயராஜ்யம் ஏற்படும்படி செய்யும் என்ற கருத்தை வைத்துக்கொண்டு அப்புத்தகத்தில் இப்படி எழுதினேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பிய போதும்கூட கைராட்டினத்தை நான் நேராகப் பார்த்ததில்லை. சபர்மதியில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்தபோது அங்கே சில கைத்தறிகளை வைத்தோம். அவற்றை அமைத்தவுடனே ஒரு பெரிய கஷ்டமும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆசிரமத்திலிருந்த நாங்கள் எல்லோரும் உத்தியோகம், வியாபாரம் முதலியவைகளில் ஈடுபட்டிருந்தவர்களே அன்றி எங்களில் யாரும் கைத்தொழில் தெரிந்தவர்கள் அல்ல.

தறிகளில் நாங்கள் வேலை செய்வதற்கு  முன்னால் நெசவு வேலையை எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால், திகைத்துப் போய் எடுத்த காரியத்தை இலகுவில் விட்டு விடுகிறவரல்ல மகன்லால் காந்தி. இயந்திர விஷயங்களில் இயற்கையாகவே அவருக்கு ஆற்றல் இருந்ததால், சீக்கிரத்திலேயே அக்கலையில் அவர் முற்றும் தேர்ச்சி பெற்று விட்டார். ஒருவர் பின் ஒருவராகக் கைத்தறியில் நெய்பவர்கள் பலரை ஆசிரமத்தில் புதிதாகப் பழக்கி விட்டோம். எங்கள் கையால் நாங்களே நெய்துகொண்ட துணிகளைத்  தான் நாங்கள் உடுத்த வேண்டும் என்பதே நாங்கள் கொண்ட லட்சியம். மில் துணியைப் போட்டுக் கொள்ளுவதை உடனே விட்டுவிட்டோம். இந்தியாவில் தயாரான நூலைக் கொண்டு கையினால் நெய்த துணிகளை மாத்திரமே அணிவது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தீர்மானித்துக் கொண்டோம். இப்பழக்கத்தை மேற்கொண்டதால் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்கள் ஏற்பட்டன. நெசவாளர்களின் வாழ்க்கை நிலையையும், எந்த அளவுக்கு அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் அறிந்தோம்.

தங்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள், எந்தவிதமாகப் பலவிதமான மோசடிகளுக்கும் அவர்கள் இரையாகின்றனர் என்பது, கடைசியாக, அவர்களுக்குச் சதா வளர்ந்து கொண்டே போகும் கடன் நிலைமை ஆகியவைகளையும், அவர்களுடன் நேரடியான தொடர்பு கொண்டதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம். எங்களுடைய தேவைக்குப் போதுமான துணி முழுவதையும் உடனே நாங்களே தயாரித்துக் கொண்டுவிடும் நிலையில் நாங்கள் இல்லை. ஆகையால், கைத்தறி நெசவாளர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொள்ளுவதே நாங்கள் அடுத்தபடியாகச் செய்ய முடிந்தது. இந்திய மில் நூலைக் கொண்டு கைத்தறியில் தயாரான துணிகள், ஜவுளி வியாபாரிகளிடம் இருந்தோ, கைத்தறிக்காரர்களிடம் இருந்தோ சுலபமாகக் கிடைக்கவில்லை. இந்திய மில்கள் நயமான உயர்ந்த ரக நூல்களைத் தயாரிக்காததால், உயர்ந்த ரகத் துணிகளையெல்லாம் வெளிநாட்டு நூலைக் கொண்டே நெய்து வந்தார்கள். இன்றுகூட, உயர்ந்த ரக நூலை இந்திய ஆலைகள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கின்றன.

மிக உயர்ந்த ரக நூலை அவர்கள் தயாரிக்கவே முடியாது. எங்களுக்காகச் சுதேசி நூலை நெய்வதற்கு ஒப்புக் கொள்ளும் நெசவாளரை அதிகச் சிரமத்தின் போரிலேயே நாங்கள் தேடிப் பிடிக்க முடிந்தது. அவர்கள் நெய்யும் துணி முழுவதையும் ஆசிரமம் வாங்கிக் கொண்டு விடுவது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் இசைந்தார்கள். இவ்வாறு நம் ஆலைகளில் தயாரிக்கும் நூலைக் கொண்டு நெய்த துணிகளை மாத்திரமே நாங்கள் உடுத்துவது என்று தீர்மானித்து, நண்பர்களிடையே இதை நாங்கள் பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்திய நூல் ஆலைகளுக்காக வலிய வேலை செய்யும் ஏஜெண்டுகளாக நாங்கள் ஆனோம். இதனால், எங்களுக்கு ஆலைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்களுடைய நிர்வாகத்தைப் பற்றிய சில விஷயங்களையும், அவர்களுக்கு இருந்த கஷ்டங்களையும் நாங்கள் அறிய முடிந்தது. தாங்கள் நூற்கும் நூலைக் கொண்டு தாங்களே நெய்து விடவும் வேண்டும் என்பதே ஆலைகளின் நோக்கம் என்பதைக் கண்டோம். கைத்தறி நெசவாளர்களிடம் அவர்களுக்கு இருந்த ஒத்துழைப்பு, விரும்பி அளிக்கும் ஒத்துழைப்பல்ல என்பதையும் தவிர்க்க முடியாத நிலையில், தாற்காலிகமாக அளிப்பதே என்பதையும் கண்டோம். இந்த நிலையில் எங்களுக்கு வேண்டிய நூலை நாங்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டோம். இதை நாங்களே செய்து கொண்டு விட்டாலன்றி, ஆலைகளை நம்பி இருப்பது என்பது இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. நூல் நூற்கும் இந்திய ஆலைகளின் தரகர்களாகத் தொடர்ந்து இருந்து கொண்டு வருவதால், நாட்டிற்கு எந்தச் சேவையையும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தோம்.

நாங்கள் சமாளித்து ஆக வேண்டியிருந்த கஷ்டங்களுக்கு முடிவே இல்லை. எப்படி நூற்பது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ளுவதற்குக் கைராட்டினமோ, நூற்பவரோ கிடைக்கவே இல்லை. ஆசிரமத்தில் நெய்வதற்கான நூலைக் கண்டுகள் ஆக்குவதற்கு ஒருவகை ராட்டினத்தை உபயோகித்து வந்தோம். ஆனால், இதையே நூற்கும் ராட்டையாகவும் உபயோகிக்கலாம் என்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் காளிதாஸ் ஜவேரி ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். நூற்பது எப்படி என்பதை அப்பெண் எங்களுக்குக் காட்டுவார் என்றும் சொன்னார். உடனே ஆசிரமவாசி ஒருவரை அந்தப் பெண்ணிடம் அனுப்பினோம். இவர், புதிய விஷயங்களை வெகு எளிதில் கற்றுக் கொண்டுவிடும் ஆற்றல் படைத்தவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், இவரும் அக்கலையின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே திரும்பி வந்து விட்டார்.  இவ்விதம் காலம் போய்க்கொண்டே இருந்தது. நாளாக ஆக நானும் பொறுமையை இழந்து வந்தேன். கையினால் நூற்பதைக் குறித்து ஏதாவது தகவலை அறிந்திருக்கக் கூடியவர்களாக ஆசிரமத்திற்கு வருவோர் போவோர்களிடம் எல்லாம் அதை குறித்து விசாரித்துக் கொண்டு வந்தேன். இக்கலை பெண்களிடம் மாத்திரமே இருந்து வந்தாலும், அது அநேகமாய் அழிந்து போய்விட்டதாலும், ஒருவருக்கும் தெரியாத மூலை முடுக்குகளில் நூற்பவர்கள் யாராவது சிலர் இருப்பார்கள். அப்படி இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் இன்னாரென்பதைப் பெண்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும்.

புரோச் கல்வி மகாநாட்டில் தலைமை வகிப்பதற்காக 1917-இல் என்னுடைய குஜராத்தி நண்பர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றனர். அங்கேதான் கங்காபென் மஜ்முதார் என்னும் அற்புதமான பெண்மணியைக் கண்டுபிடித்தேன். அவர் விதந்து என்றாலும் அவருக்கு எல்லையற்ற ஊக்கமும் முயற்சியும் உண்டு. படிப்பு என்ற வகையில் பார்த்தால் அவர் அதிகம் படித்தவர் அல்ல. ஆனால், தீரத்திலும் பொது அறிவிலும் நமது படித்த பெண்களை அவர் எளிதில் மிஞ்சிவிடக் கூடியவர். தீண்டாமைக் கொடுமையை அவர் முன்னாலேயே விட்டொழித்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவர் தாராளமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய்து வந்தார். அவருக்குச் சொந்தத்தில் சொத்து உண்டு. அவருடைய தேவைகளோ மிகச் சொற்பம். நல்ல திடகாத்திரமான உடல் உள்ளவராகையால் எங்கும் துணையில்லாமலேயே போய் வருவார். சர்வ சாதாரணமாகக் குதிரைச் சவாரி செய்வார். கோத்ரா மகாநாட்டில் அவரைக் குறித்து இன்னும் நெருக்கமாக அறியலானேன். ராட்டினம் கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருந்த துயரை அவரிடம் முறையிட்டுக் கொண்டேன். ஊக்கத்துடன் விடாமல் தேடி ராட்டினத்தைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்களித்து, என் மனத்திலிருந்த பளுவை அவர் குறைத்தார்.


Offline Anu

முடிவில் கண்டுகொண்டேன்!

குஜராத் முழுவதிலும் கங்காபென் தேடியலைந்து விட்டுக் கடைசியாகப் பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர் என்ற இடத்தில் கைராட்டையை அவர் கண்டுபிடித்தார். அங்கே அநேகம் பேர் தங்கள் வீடுகளில் கைராட்டைகளை வைத்திருந்தார்கள். ஆனால், வெகு காலத்திற்கு முன்னாலேயே, அவையெல்லாம் ஒன்றுக்கும் ஆகாதவை என்று கருதி மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக அவைகளைப் பரண்களில் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஒழுங்காக யாராவது பட்டை போட்ட பஞ்சு கொண்டுவந்து கொடுத்து, நூற்ற நூலையும் வாங்கிக்கொள்ளுவதாக இருந்தால், தாங்கள் திரும்பவும் ராட்டையில் நூற்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கங்காபென்னிடம் அறிவித்தனர். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கங்காபென் எனக்கு அனுப்பினார். பட்டை போட்ட பஞ்சுக்கு ஏற்பாடு செய்வது கஷ்டமாக இருந்தது. இதைக் குறித்துக் காலஞ்சென்ற உமார் ஸோபானியிடம் கூறினேன். அவர் தம்முடைய மில்லிலிருந்து பட்டை போட்ட பஞ்சைப் போதுமான அளவு கொடுப்பதாக உடனே கூறி, இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிட்டார்.

உமார் ஸோபானியிடமிருந்து வந்த பட்டை போட்ட பஞ்சைக் கங்கா பென்னுக்கு அனுப்பினேன். உடனே, நூற்ற நூல் ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டது. அந்த நூலை என்ன செய்வது என்பது பிறகு ஒரு பிரச்னையாகி விட்டது.  ஸ்ரீ உமார் ஸோபானி மிகுந்த தாராளமான குணமுடையவர்தான். ஆனால், அவருடைய தாராளத்தை எப்பொழுதுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது என்பது கூடாது. பட்டை போட்ட பஞ்சைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்கிக் கொண்டிருப்பதென்பது என்மனத்திற்குக் கஷ்டமாக இருந்தது. மேலும், மில்லில் தயாரான இப்பஞ்சை உபயோகித்துக் கொள்ளுவது அடிப்படையிலேயே தவறு என்றும் எனக்குத் தோன்றிற்று. மில்லில் பட்டை போட்ட பஞ்சை உபயோகிக்கலாமென்றால் மில் நூலையே ஏன் உபயோகித்துக் கொள்ளக்கூடாது? முன் காலத்திலெல்லாம் கைராட்டையில் நூற்றவர்கள், வேண்டிய பஞ்சை பட்டை போட்டு எவ்வாறு தயாரித்துக் கொண்டு வந்தார்கள்? என் மனத்தில் எழுந்த இத்தகைய எண்ணங்களோடு கங்காபென்னுக்கு ஒரு யோசனை கூறினேன்.

பஞ்சு அடித்துப் பட்டை போட்டுக் கொடுக்கக் கூடியவர்களைக் கண்டுபிடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் நம்பிக்கையோடு அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். பஞ்சு கொட்டிப் பட்டை போட்டுத் தரக்கூடிய ஒருவரை அவர் அமர்த்தினார். அந்த ஆசாமியோ, தமக்கு அதிகம் கொடுக்காவிட்டாலும் மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். அந்தச் சமயத்தில் அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதிகம் அல்ல என்று எண்ணினேன். கொட்டிய பஞ்சிலிருந்து பட்டை போடுவதற்குச் சில இளைஞர்களையும் கங்கா பென் பழக்கினார். யாராவது பஞ்சு கொடுத்து உதவ வேண்டும் என்று பம்பாயில் கொடுக்க முன்வந்தார். இவ்விதம் கங்கா பென்னின் முயற்சி எதிர்பார்த்ததற்கு மேலாகவே பலன் தந்தது. வீஜாப்பூரில் தயாரான நூலை நெய்வதற்கும் நெசவாளர்களுக்கு அவர் ஏற்பாடு செய்தார். சீக்கிரத்தில் வீஜாப்பூர்க் கதர், புகழ்பெற்று விளங்கியது.

வீஜாப்பூரில் இந்த அபிவிருத்திகளெல்லாம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆசிரமத்திலும் கைராட்டினம் துரிதமாக நிலைபெற்று வந்தது. மகன்லால் காந்தி, தமக்குள்ள யந்திர நுட்ப ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி ராட்டினத்தில் பல அபிவிருத்திகளைச் செய்தார். ராட்டினத்தின் சக்கரத்தையும் மற்ற சாமான்களையும் ஆசிரமத்திலேயே தயாரிக்க ஆரம்பித்தார். ஆசிரமத்தில் தயாரான முதல் கதர், கெஜம் 17 அணா விலையாயிற்று. அதிக முரடாயிருந்த இந்தக் கதரை அந்த விலைக்கு நண்பர்களுக்குச் சிபாரிசு செய்ய நான் தயங்கவே இல்லை. அவர்களும் மனமுவந்து அவ்விலையைக் கொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.  நான் பம்பாயில் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அங்கேயும் ராட்டினங்களைத் தேடுவதற்கு வேண்டிய சக்தி எனக்கு இருந்தது. கடைசியாக நூல் நூற்கக்கூடியவர்கள் இருவர் தென்பட்டனர். ஒரு சேர், அதாவது 28 தோலா அல்லது சுமார் முக்கால் ராத்தல் நூலுக்கு ஒரு ரூபாய் விலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். கதரின் பொருளாதாரத் தத்துவத்தைக் குறித்து அப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது.

கையினால் நூற்ற நூலுக்கு என்ன விலையும் கொடுக்கலாம் என்று எண்ணினேன். வீஜாப்பூரில் கொடுக்கப்படும் விலையையும் நான் கொடுத்த விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் ஏமாற்றப்பட்டேன் என்பதைக் கண்டேன். நூற்றவர்களோ, விலையில் எதையும் குறைத்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆகையால், அவர்களை அனுப்பிவிட வேண்டியதாயிற்று. என்றாலும், அவர்களை அமர்த்தியிருந்ததால், பயனில்லாது போகவில்லை. ஸ்ரீமதிகள் அவந்திகாபாய், ரமீபாய் காம்தார், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரின் தாயார், ஸ்ரீமதி வசுமதி பென் ஆகியவர்களுக்கு அவர்கள் நூற்கக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். என் அறையில் ராட்டினம் ஆனந்தமாகச் சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. நான் நோயினின்றும் குணம் அடைவதற்கு அந்தக் கீதம் பெருமளவு துணை செய்தது என்று நான் கூறினால், அது மிகையாகாது. அதனால், உடலுக்கு ஏற்பட்ட நன்மையைவிட மனத்திற்கு ஏற்பட்ட நற்பலன் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார். அப்படியானால், மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நானும் ராட்டையில் நூற்க ஆரம்பித்தேன். ஆனால், அச்சமயம் நான் அதிகமாக எதுவும் நூற்கவில்லை.

கையினால் கொட்டித் தயாரித்த பஞ்சுப் பட்டைகளைச் சம்பாதிக்கும் பிரச்னை மீண்டும் பம்பாயிலும் ஏற்பட்டது. பஞ்சு  கொட்டுகிறவர் ஒருவர், பஞ்சு கொட்டும் வில்லுடன், அந்த வில்லின் நாணிலிருந்து ஒலி எழுப்பிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கரின் வீட்டு வழியே தினம் போய்க்கொண்டிருப்பார். அவரைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவரை விசாரித்ததில் அவர் மெத்தைகளுக்குத் திணிக்கும் பஞ்சை கொட்டுகிறவர் என்று தெரிந்தது. நூற்பதற்குப் பஞ்சுப் பட்டைகள் போட்டுத் தர அவர் சம்மதித்தார். ஆனால், அதிகமாகக் கூலி கேட்டார், என்றாலும் நான் கொடுத்தேன்.இவ்வாறு நூற்ற நூலைப் பவித்திர ஏகாதசியன்று சுவாமிக்கு மாலை போடுவதற்காகச் சில வைஷ்ணவ நண்பர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஸ்ரீ சிவ்ஜி, நூற்கக் கற்றுக்கொடுக்கும் வகுப்பு ஒன்றைப் பம்பாயில் ஆரம்பித்தார். இந்தப் பரிசோதனைகளுக்கு எல்லாம் அதிகப் பணம் செலவாயிற்று. ஆனால், கதரில் நம்பிக்கையுள்ள, தாய்நாட்டிடம் பக்தியுள்ள தேசாபிமானிகளான நண்பர்கள், இச்செலவையெல்லாம் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார்கள். இவ்விதம் செலவான பணம் வீணாகிவிடவில்லை என்பதே என்னுடைய பணிவான கருத்து. இதனால் எங்களுக்கு அதிக அனுபவம் ஏற்பட்டதோடு கைராட்டையின் சாத்தியங்களும் எங்களுக்குத் தெரியலாயின.

நான் கதரை மாத்திரமே உடுத்த வேண்டும் என்ற பேரவா அப்பொழுது எனக்குப் பலமாக ஏற்பட்டது. அப்பொழுது இந்திய ஆலைகளில் தயாரான வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தேன். ஆசிரமத்திலும் வீஜாப்பூரிலும் தயாரான முரட்டுக் கதர்த் துணி, முப்பது அங்குல அகலமே இருக்கும். ஆகையால், கங்கா பென்னுக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்தேன். ஒரு மாத காலத்திற்குள் நாற்பத்தைந்து அங்குல அகலத்தில் எனக்குக் கதர் வேட்டி தயாரித்துக் கொடுக்காது போனால், அகலக் கட்டையாக இருக்கும் முரட்டுக் கதரையே கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று அவருக்குத் தெரிவித்தேன். இந்த இறுதி எச்சரிக்கை அவரைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ஆனால், அவரிடம் கேட்டதை அவர் நிறைவேற்றி விட்டார். ஒரு மாதத்திற்குள்ளேயே 45 அங்குல அகலத்தில் ஒரு ஜதைக் கதர் வேட்டிகளை அவர் எனக்கு அனுப்பினார். இதன் மூலம் எனக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடாமல் அவர் காப்பாற்றிவிட்டார். அதே சமயத்தில் ஸ்ரீ லட்சுமிதாஸ், லாத்தியிலிருந்து ஸ்ரீ ராம்ஜி என்ற நெசவுக்காரரையும் அவர் மனைவி கங்கா பென்னையும் ஆசிரமத்திற்கு அழைத்துவந்து ஆசிரமத்திலேயே கதர் வேட்டி நெசவாகும்படி செய்தார். கதர் பரவுவதில் இத்தம்பதிகள் செய்திருக்கும் சேவை அற்பமானது அன்று. குஜராத்தில் மாத்திரமேயல்லாமல் வெளியிலும் கையால் நூற்ற நூலைக்கொண்டு  நெய்வதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கங்கா பென், தறியில் நெய்வதைப் பார்ப்பதே மிகவும் உற்சாகம் ஊட்டும் காட்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் ஆற்றல் மிக்க இச் சகோதரி, கைத்தறியில் வேலை செய்ய உட்கார்ந்துவிட்டால், அவர் மனம் முழுவதும் அதிலேயே ஆழ்ந்துவிடும். பிறகு அவர் மனத்தையும் கண்களையும் தறியிலிருந்து வேறு இடத்திற்குத் திருப்புவதென்பது மிகவும் கஷ்டமான காரியமே.


Offline Anu

அறிவூட்டிய சம்பாஷணை

கதர் இயக்கத்தையும் அப்பொழுது சுதேசி இயக்கம் என்றே சொல்லி வந்தனர். இந்த இயக்கத்தை ஆரம்பம் முதற் கொண்டே ஆலை முதலாளிகள் அதிகமாகக் குறை கூறி வந்தனர். காலஞ்சென்ற உமார் ஸோபானியே திறமை மிக்க ஆலை முதலாளிதான். தமது அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவர் எனக்கு ஆலோசனைகள் கூறிவந்ததோடு, மற்ற ஆலை முதலாளிகளின் அபிப்பிராயங்களையும் அப்போதைக்கப்போது எனக்குத் தெரிவித்தும் வந்தார். அந்த ஆலை முதலாளிகளில் ஒருவர் சொன்ன வாதங்கள் அவர் மனத்தை அதிகம் கவர்ந்தன. அவரை நான் சந்திக்க வேண்டும் என்று உமார் ஸோபானி வற்புறுத்தினார். நானும் சம்மதித்தேன். அதன் பேரில் நாங்கள் சந்தித்துப் பேச அவர் ஏற்பாடு செய்தார். ஆலை முதலாளி, சம்பாஷணையைப் பின்வருமாறு ஆரம்பித்தார்: இதற்கு முன்னாலேயே சுதேசிக் கிளர்ச்சி நடந்துகொண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?  ஆம். அறிவேன் என்றேன்.

வாங்காளப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆலை முதலாளிகளாகிய நாங்கள், சுதேசி இயக்கத்தை எங்கள் சொந்த லாபத்திற்கு முற்றும் பயன்படுத்திக் கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கம் உச்ச நிலையில் இருந்த சமயம், துணியின் விலையை நாங்கள் உயர்த்தினோம். அதையும் விட மோசமான காரியங்களையும் செய்தோம்.  ஆம். அதைக் குறித்தும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நான் மனம் வருந்தியதும் உண்டு. உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை நான் அறிய முடியும். ஆனால், அவ்வாறு வருத்தப்படுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. நாங்கள் பரோபகார நோக்கத்திற்காக எங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கவில்லை. லாபத்திற்காகத் தொழில் நடத்துகிறோம். அதில் பங்கு போட்டிருப்பவர்களையும் நாங்கள் திருப்தி செய்ய வேண்டும். ஒரு பொருளின் விலை ஏறுவது, அப்பொருளுக்கு இருக்கும் கிராக்கியைப் பொறுத்தது. தேவைக்கும் சரக்கு விற்பனைக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றிய விதியை யார் தடுத்துவிட முடியும்? சுதேசித் துணிகளின் தேவையை அதிகரிப்பதனால் அத்துணிகளின் விலை ஏறித்தான் தீரும் என்பதை வங்காளிகள் அறிந்தே இருக்க வேண்டும்.

நான் குறுக்கிட்டுக் கூறியதாவது: என்னைப் போன்றே வங்காளிகளும் பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆலை முதலாளிகள் இவ்வளவு படுமோசமான சுயநலக்காரர்களாகவும் தேசாபிமானம் இல்லாதவர்களாகவும் இருந்துவிட மாட்டார்கள் என்று பரிபூரணமாக அவர்கள் நம்பி விட்டார்கள். தாய்நாட்டிற்கு நெருக்கடியான நிலைமை நேர்ந்துள்ள சமயத்தில் ஆலை முதலாளிகள், அவர்கள் செய்துவிட்டதைப் போன்று, அந்நிய நாட்டுத் துணியைச் சுதேசித் துணி என்று மோசடியாக விற்றுவிடும் அளவுக்குப் போய்த் துரோகம் செய்து விடுவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்கள் நீங்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என்னிடம் வரும்படி உங்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்தேன். கபடம் இல்லாதவர்களான வங்காளிகள் செய்துவிட்ட அதே தவறை நீங்களும் செய்து விடவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கை செய்யவே இங்கே வரும்படி செய்தேன் என்றார் அவர்.

 இவ்வாறு கூறிவிட்டு, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தமது குமாஸ்தாவை அழைத்து, தமது ஆலையில் தயாராகும் துணிகளின் மாதிரிகளைக் கொண்டுவரும்படி கூறினார். அதைச் சுட்டிக்காட்டி அவர் என்னிடம் கூறியதாவது: இதைப் பாருங்கள்; எங்கள் ஆலையில் இப்பொழுது கடைசியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் துணியின் மாதிரி இது. இதற்குக் கிராக்கி ஏராளமாக இருந்து வருகிறது. வீணாகப் போகும் கழிவிலிருந்து இதைத் தயாரிக்கிறோம். ஆகையால், இயற்கையாகவே இது மலிவானது. வடக்கே ஹிமாலயப் பள்ளத்தாக்குகள் வரையில் இதை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாடெங்கும் எல்லா இடங்களிலுமே - உங்கள் குரலும், ஆட்களும் போகவே முடியாத இடங்களிலும்கூட - எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குப் புதிதாக, அதிகப்படியான ஏஜெண்டுகள் தேவை இல்லை என்பதை நீங்கள் காணலாம். அதோடு, இந்தியாவில் அதன் தேவைக்குப் போதுமான அளவு துணி உற்பத்தி ஆகவில்லை என்பதையும் நீங்கள் அறியவேண்டும். ஆகவே, சுதேசி இயக்கம், இங்கே துணி உற்பத்தி அதிகமாவதையே பெரிதும் பொறுத்திருக்கிறது.

நாங்கள் உற்பத்தி செய்வதைப் போதிய அளவு அதிகரித்து, அவசியமாகும் அளவுக்கு அதன் தரத்தையும் எப்பொழுது அபிவிருத்தி செய்துவிடுகிறோமோ அப்பொழுதே அந்நியத் துணி இறக்குமதி, தானே நின்று போய்விடும். ஆகையால், நான் உங்களுக்குக் கூறும் யோசனை என்னவென்றால், நீங்கள் இப்பொழுது நடத்தி வரும் முறையில் உங்கள் கிளர்ச்சியை நடத்திவர வேண்டாம்; ஆனால், புதிதாக ஆலைகளை அமைப்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்பதே. இப்பொழுது நமக்குத் தேவையெல்லாம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதே அன்றி எங்கள் சரக்குகளுக்குத் தேவையை அதிகப்படுத்தப்பிரச்சாரம் செய்வதன்று. அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் இதே காரியத்திலேயே இப்பொழுதே நான் ஈடுபட்டிருக்கிறேனென்றால், என் முயற்சியை நீங்கள் வாழ்த்துவீர்களல்லவா? என்று கேட்டேன். கொஞ்சம் திகைத்துப்போய், அது எப்படி முடியும்? என்றார், அவர். ஆனால், புதிய ஆலைகளை அமைப்பதைக் குறித்து நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். அப்படியானால், நிச்சயமாக உங்களைப் பாராட்ட வேண்டியதே என்றார்.

நான் இப்பொழுது செய்துகொண்டிருப்பது அதுவல்ல. ஆனால், கைராட்டினத்திற்குப் புத்துயிர் அளிப்பதில் நான் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறேன் என்று அவருக்கு விளக்கிச் சொன்னேன்.  இன்னும் குழப்பமடைந்தவராகவே அவர், அது என்ன விஷயம்? என்று என்னைக் கேட்டார். கைராட்டினத்தைப் பற்றிய விவரங்களையும், அதைக் கண்டுபிடிப்பதற்காக வெகு காலம் தேடியலைந்ததைப் பற்றியும் அவருக்குச் சொல்லி நான் மேலும் கூறியதாவது: இவ் விஷயத்தில் என் அபிப்பிராயம் முற்றும் உங்கள் அபிப்பிராயமே ஆகும். ஆலைகளின் ஏஜெண்டாகவே நானும் ஆகிவிடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை. அப்படி ஆகிவிடுவதனால் நாட்டிற்கு நன்மையை விடத் தீமையே அதிகமாகும். நம் மில் துணிகளை வாங்குகிறவர்கள் இன்னும் வெகுகாலம் வரையில் குறையவே மாட்டார்கள். ஆகையால், கையினால் நூற்ற துணி உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவ்விதம் தயாரான கதர், விற்பனையாகும்படி பார்ப்பதே என் வேலையாக இருக்க வேண்டும், இருந்தும் வருகிறது. எனவே, கதர் உற்பத்தியிலேயே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

இந்த வகையான சுதேசியத்திலேயே நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஏனெனில், அரைப்பட்டினி கிடந்து, போதிய வேலையும் இல்லாமல் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இதன்மூலம், நான் வேலை கொடுக்க முடியும். இந்தப் பெண்களை நூல் நூற்கும்படி செய்து, அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை இந்திய மக்கள் உடுத்தும்படி செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த இயக்கம் இப்பொழுது ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கிறது. ஆகையால், இந்த இயக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியாது. என்றாலும், இதில் பூரணமான நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் அதனால் எந்தவிதமான தீமையும் விளைந்துவிடப் போவதில்லை. அதற்கு மாறாக, நாட்டின் துணி உற்பத்தி நிலையை அது அதிகமாக்கும் அளவுக்கு - அந்த அளவு மிகக் குறைவானதாகவே இருந்தாலும், அந்த அளவுக்கு - அதனால் நிச்சயமான நன்மையே உண்டு. ஆகவே, நீங்கள் குறிப்பிட்ட தீமை எதுவும் இயக்கத்தில் கிடையாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் பேரில் அவர் கூறியதாவது: உங்கள் இயக்கத்தை நீங்கள் நடத்துவதற்கு நாட்டின் துணி உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கமென்றால், அதற்கு விரோதமாக நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால், இயந்திர யுகமான இந்தக் காலத்தில் கைராட்டினம் முன்னேற முடியுமா என்ற விஷயம் வேறு இருக்கிறது. என்றாலும், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.


Offline Anu

அதன் அலை எழுச்சி

கதர் இயக்கம் அடைந்த அபிவிருத்தியைக் குறித்து விவரிப்பதற்கு மேலும் சில அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் பற்பல காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கிறேன். அவை பொதுஜனங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிறகு அவற்றின் சரித்திரத்தைக் குறித்து இந்த அத்தியாயங்களில் நான் கூறிக் கொண்டிருப்பது இவற்றின் நோக்கத்திற்கே புறம்பானதாகும். நான் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் எழுதிக் கொண்டிருந்தால், அதற்கே தனி நூல் எழுத வேண்டியிருக்கும். அதை முன்னிட்டே அம்முயற்சியை நான் செய்யக்கூடாது. என்னுடைய சத்திய சோதனையின் ஊடே சில விஷயங்கள், தாமே வந்தவைகளைப் போன்றே எனக்கு எப்படி வந்து சேர்ந்தன என்பதை விவரிப்பதுதான் இந்த அத்தியாயங்களை நான் எழுதுவதன் நோக்கம். ஆகவே, ஒத்துழையாமை இயக்கக் கதைக்கே திரும்புவோம். அலி சகோதரர்கள் ஆரம்பித்த பலம் பொருந்திய கிலாபத் கிளர்ச்சி தீவிரமாக நடந்துவந்த சமயத்தில், அகிம்சை விதியை ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு அனுசரித்து நடக்க முடியும் என்ற விஷயத்தைக் குறித்து மௌலானா அப்துல் பாரி முதலிய உலாமாக்களுடன் நான் விரிவாக விவாதித்தேன்.

இஸ்லாம், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் அகிம்சை கொள்கையாக அனுசரிப்பதைத் தடுக்கவில்லை என்றும், அக்கொள்கையை அனுசரிப்பதென்று அவர்கள் விரதம் கொண்டிருக்கும் போது அந்த விரதத்தை அவர்கள் நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும் முடிவாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். கடைசியாகக் கிலாபத் மகா நாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேறியது. ஒரு சமயம் அலகாபாத் கூட்டத்தில் இந்த விஷயத்தின்மீது இரவெல்லாம் விவாதம் நடந்தது, எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. அகிம்சையோடு கூடிய ஒத்துழையாமை, காரிய சாத்திய மாகுமா? என்பதில் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிபுக்கு ஆரம்பத்தில் சந்தேகமே இருந்தது. ஆனால், அவருடைய சந்தேகம் நீங்கிய பின்னர் அந்த இயக்கத்தில் அவர் முழு மனத்துடன் ஈடுபட்டார். அவர் உதவி, இயக்கத்திற்கு மதிப்பிடற்கரிய பலனை அளித்தது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு குஜராத் ராஜீய மகாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அதை எதிர்த்தவர்கள், பூர்வாங்கமாக ஓர் ஆட்சேபத்தைக் கூறினார்கள்.

இதைப்பற்றிக் காங்கிரஸ் ஒரு முடிவு செய்வதற்கு முன்னால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு மாகாண மகாநாட்டுக்குத் தகுதி கிடையாது என்பது அவர்களுடைய வாதம். இந்த வாதத்தை எதிர்த்த நான், பின்னோக்கிப் போகும் இயக்கம் சம்பந்தமாகத்தான் இந்தத் தடை பொருந்தும் என்றும், முன்னோக்கிப் போகும் விஷயத்தில் அதற்குப் போதிய நம்பிக்கையும் உறுதியும் நம்மிடம் இருக்குமானால், இத்தகைய தீர்மானம் செய்வதற்கு கீழ்ப்பட்ட ஸ்தாபனங்களுக்குப் பூரணமான தகுதி இருப்பதோடு அப்படிச் செய்வது அவைகளின் கடமை என்றும் கூறினேன். தாய் ஸ்தாபனத்தின் கௌரவத்தை அதிகரிப்பதற்குச் செய்யும் முயற்சியை, ஒருவர் அம்முயற்சியை தமது சொந்தப் பொறுப்பிலேயே செய்வாராயின், அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என்றும் வாதித்தேன். பின்னர் அந்த யோசனையின் தன்மைமீது விவாதம் நடந்தது. விவாதத்தில் சிரத்தை முக்கியமாக இருந்ததெனினும், இனிய நியாயத்திற்கு ஏற்றசூழ்நிலையிலேயே விவாதம் இருந்தது. முடிவில் தீர்மானத்தின் மீது வாக்கெடுத்தபோது அது மிக அதிக ஆதரவுடன் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதற்கு ஸ்ரீ வல்லபாய், ஸ்ரீ அப்பால் தயாப்ஜி ஆகிய இருவரின் செல்வாக்கே முக்கியமான காரணமாகும்.

ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜியே அம்மகாநாட்டின் தலைவர். அவருடைய ஆதரவு முழுவதும் ஒத்துழையாமைத் தீர்மானத்திற்குச் சாதகமாகவே இருந்தது. இந்த விஷயத்தைக் குறித்து விவாதிப்பதற்காகக் கல்கத்தாவில் 1920 செப்டம்பரில் காங்கிரஸ் விசேஷ மகாநாட்டைக் கூட்டுவது என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. அம்மகாநாட்டிற்காகப் பெருமளவில் முன்னேற்பாடுகளெல்லாம் நடந்தன. லாலா லஜபதிராயை அம்மகா நாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். பம்பாயிலிருந்து காங்கிரஸ், கிலாபத் ஸ்பெஷல் ரெயில்கள் சென்றன. கல்கத்தாவில் பிரதிநிதிகளும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். மௌலானா ஷவுகத் அலி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்துழையாமைத் தீர்மானத்தின் நகலை நான் ரெயிலிலேயே தயாரித்தேன். அச்சமயம் வரையில் நான் தயாரிக்க நகல்களில் பலாத்காரமற்ற என்ற சொல்லை அநேகமாக நான் தவிர்த்து வந்தேன். ஆனால், என்னுடைய பிரசங்கங்களில் மாத்திரம் அதை அடிக்கடி உபயோகித்து வந்தேன். இவ்விஷயத்தைக் குறித்து உபயோகிக்க வேண்டிய சொற்களை நான் அப்பொழுதுதான் சேகரித்துக் கொண்டு வந்தேன்.

முற்றும் முஸ்லீம்களையே கொண்ட கூட்டத்திற்குப் பலாத்காரமற்ற என்பதற்குச் சரியான சமஸ்கிருதச் சொல்லை உபயோகிப்பதினால், நான் கூறுவதன் பொருளை அவர்கள் சரியானபடி அறிந்து கொள்ளும்படி செய்ய முடியாது என்பதைக் கண்டேன். ஆகையால், அதற்குப் பொருத்தமான வேறு ஒரு சொல்லை எனக்குக் கூறும்படி மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தைக் கேட்டேன். பா அமன் என்ற சொல்லை அவர் கூறினார். அதேபோல, ஒத்துழையாமைக்கு தர்க்-ஈ-மவாலாத் என்ற சொற்றொடரை உபயோகிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார்.  இவ்வாறு ஒத்துழையாமை என்பதற்குச் சரியான ஹிந்தி, குஜராத்தி, உருதுச் சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பதிலேயே நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த முக்கியமான காங்கிரஸ் மகாநாட்டிற்கு நான் ஒத்துழையாமைத் தீர்மானத்தைத் தயாரிக்க வேண்டி வந்தது. அசல் நகலில் பலாத்காரமற்ற என்ற சொல்லை நான் விட்டுவிட்டேன். இவ்வாறு விட்டுப் போய் விட்டதைக் கவனிக்காமல், அதே வண்டியில் என்னுடன் பிராயணம் செய்த மௌலானா ஷவுகத் அலியிடம் அந்த நகலைக் கொடுத்தேன். அன்றிரவு தவறைக் கண்டுகொண்டேன்.

அச்சகத்திற்கு நகலை அனுப்புவதற்கு முன்னால், விட்டுப் போனதைச் சேர்த்துவிட வேண்டும் என்ற செய்தியுடன் காலையில் மகாதேவை அனுப்பினேன். ஆனால், விட்டுப் போனதைச் சேர்த்துவிடுவதற்கு முன்னாலேயே நகல் அச்சாகிவிட்டது என்று எனக்கு ஞாபகம். விஷயாலோசனைக் கமிட்டி, அன்று மாலையே கூட வேண்டும். ஆகையால், அச்சான நகல் பிரதிகளில் அவசியமான திருத்தங்களை நான் செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய நகலுடன் நான் தயாராக இல்லாதிருந்திருந்தால், அதிகக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதைப் பின்னால் கண்டுகொண்டேன்.  என்றாலும், என் நிலைமை உண்மையில் பரிதபிக்கத்தக்கதாகவே இருந்தது. இத்தீர்மானத்தை யார் ஆதரிப்பார்கள், யார் எதிர்ப்பார்கள் என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. லாலா லஜபதிராய் எந்தவிதமான போக்குக் கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியாது. பிரசித்தி பெற்ற போராட்ட வீரர்கள், போருக்கு ஆயத்தமாகப் பெருங்கூட்டமாக வந்து, கல்கத்தாவில் கூடியிருப்பது ஒன்றையே நான் கண்டேன். டாக்டர் பெஸன்ட், பண்டித மாளவியாஜி, ஸ்ரீ விஜயராகவாச்சாரியார், பண்டித மோதிலால்ஜி, தேசபந்து ஆகியோர் அவர்களில் சிலர். பாஞ்சால, கிலாபத் அநியாயங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் நோக்கத்துடன் ஒத்துழையாமையை அனுசரிப்பது என்று மாத்திரமே என் தீர்மானத்தில் கண்டிருந்தது. ஆனால், அது ஸ்ரீ விஜயராகவாச்சாரியாருக்குத் திருப்தியளிக்கவில்லை.

ஒத்துழையாமைப் பிரகடனம் செய்வதென்றால், குறிப்பிட்ட அநீதிகளைப் பொறுத்ததாக மாத்திரம் அது ஏன் இருக்க வேண்டும்? நாடு அனுபவித்துக் கொண்டு வரும் பெரிய அநீதி, அதற்குச் சுயராஜ்யம் இல்லாதிருப்பதேயாகும். ஆகையால், ஒத்துழையாமைப்
போராட்டம் அந்த அநீதியை எதிர்த்து நடத்துவதாகவே இருக்க வேண்டும் என்று அவர் விவாதித்தார். தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையையும் சேர்த்துவிட வேண்டும் என்று பண்டித மாளவியாஜியும் விரும்பினார். அதற்கு நான் உடனே சம்மதித்து, சுயராஜ்யக் கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்ந்தேன். தீர்மானம், நீண்ட, விரிவான, ஓரளவுக்குக் கடுமையான விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது.  இந்த இயக்கத்தில் முதலில் சேர்ந்தவர் மோதிலால்ஜி. தீர்மானத்தின் பேரில் அவருடன் நான் நடத்திய இனிமையான விவாதம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சொல்லமைப்பில் சில மாற்றங்களை அதில் செய்யவேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அவ்வாறே நான் செய்தேன். தேச பந்துவையும் இந்த இயக்கத்தில் தாம் சேர்த்துவிடுவதாகச் சொன்னார்.

தேசபந்துவின் உள்ளம் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், வேலைத் திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் பொதுமக்களுக்கு இருக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது. நாகபுரி காங்கிரஸில்தான் அவரும் லாலாஜியும் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். லோகமான்யர் இல்லாத தன் நஷ்டத்தைக் குறித்து விசேஷ மகாநாட்டில் நான் மிகுந்த மன வருத்தத்துடன் உணர்ந்தேன். லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர் நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிறது. அது வேறு விதமாக இருந்து, ஒத்துழையாமை இயக்கத்தை அவர் எதிர்த்திருந்தாலும், அவருடைய எதிர்ப்பை எனக்கு ஒரு பாக்கியமாகவும், போதனையாகவுமே நான் மதித்திருப்பேன். எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்திருக்கிறது. ஆனால், அது மனக்கசப்பை உண்டாக்கியதே இல்லை. எங்களுக்குள் இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர் எப்பொழுதும் என்னை  அனுமதித்து வந்தார். இதை நான் எழுதும்போது கூட, அவர்  மரணத்தைப் பற்றிய சந்தர்ப்பங்கள் என் கண் முன்பு மிகத் தெளிவாக நிற்கின்றன. அப்பொழுது நடுநிசி நேரம்.

என்னுடன் அப்பொழுது வேலை செய்து வந்த பட்டவர்த்தன், அவர் மரணமடைந்தார் என்ற செய்தியை டெலிபோன் மூலம் எனக்கு அறிவித்தார். அச்சமயம் என்னுடைய சகாக்கள் என்னைச் சூழ்ந்து இருந்தனர். அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே, என் மிகப்பெரிய துணைவர் போய் விட்டார் என்பதை என் உதடுகள் தாமே ஒலித்தன. அப்பொழுது ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்துடன் நடந்து கொண்டிருந்தது. அவரிடமிருந்த ஆதரவையும் உற்சாகமூட்டும் சொல்லையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒத்துழையாமையின் முடிவான கட்டத்தைக் குறித்த அவருடைய போக்கு எவ்விதம் இருக்கும் என்பது. எப்பொழுதும் வெறும் ஊகமாகவும், அதைப்பற்றிச் சிந்திப்பது வீண் வேலையாகவுமே இருக்க முடியும். ஆனால், அவருடைய மரணத்தால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத நஷ்டத்தைக் கல்கத்தாவில் கூடியிருந்த ஒவ்வொருவரும் அதிகமாக உணர்ந்து வருந்தினார்கள் என்பது மாத்திரம் நிச்சயம். நாட்டின் சரித்திரத்தில் ஏற்பட்டிருந்த அந்த நெருக்கடியான சமயத்தில் அவருடைய ஆலோசனைகள் கிடைக்காது போனதைக் குறித்து ஒவ்வொருவரும் வருந்தினார்கள்.


Offline Anu

நாகபுரியில்

காங்கிரஸின் கல்கத்தா விசேஷ மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள், நாகபுரி வருட மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். கல்கத்தாவைப் போலவே இங்கும் பிரதிநிதிகளும் வேடிக்கை பார்ப்போரும் ஏராளமாக வந்திருந்தார்கள். அப்பொழுதும் காங்கிரஸு க்கு வரும் பிரதிநிதிகளின் தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், அம்மகாநாட்டில் பிரதிநிதிகளின் தொகை பதினான்கு ஆயிரத்திற்கு வந்துவிட்டது என்பதே என் ஞாபகம். பள்ளிக்கூடப் பகிஷ்காரத்தைப் பற்றிய பகுதியில் சிறு திருத்தம் செய்ய வேண்டும் என்று லாலாஜி வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். அதைபோல் தேசபந்துவின் யோசனையின் பேரில் மற்றும் சில திருத்தங்களும் செய்யப்பட்டன. பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. காங்கிரஸ் அமைப்பு விதிகளின் மாற்றத்தைப் பற்றிய தீர்மானமும், காங்கிரஸின் இந்த மகாநாட்டிலேயே விவாதத்திற்கு வர இருந்தது.

உபகமிட்டி தயாரித்திருந்த நகல், கல்கத்தா விசேஷ மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையால், விஷயம் முழுதும் அறிவிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டிருந்தது. முடிவாகத் தீர்மானிப்பதற்காக அது நாகபுரி மகாநாட்டின் முன்பு வந்தது. அம்மகாநாட்டிற்கு ஸ்ரீ ஸி.விஜயராகவாச்சாரியார் தலைவர். ஒரே ஒரு முக்கியமான மாற்றத்துடன் விஷய ஆலோசனைக் கமிட்டி, நகலை நிறை வேற்றியது. பிரதிநிதிகளின் தொகை 1,500 ஆக இருப்பது என்று நகலில் இருந்தது என்று நினைக்கிறேன். அந்தத் தொகைக்குப் பதிலாக அந்த இடத்தில் 6,000 என்பதை விஷயாலோசனைக் கமிட்டி சேர்த்தது. இவ்விதம் இத்தொகையை அதிகரித்தது. அவசரப்பட்டு முடிவுக்கு வந்ததன் பலன் என்பது என் முடிவு. இத்தனை வருடங்களின் அனுபவமும் என்னுடைய அக்கருத்தையே ஊர்ஜிதம் செய்கிறது. காரியங்களைச் சரியாக நடத்துவதற்குப் பிரதிநிதிகளின் தொகை அதிகமாக இருப்பது எந்த வகையிலும் உதவியாக இருக்கும் என்றோ, ஜனநாயகக் கொள்கையை அது பாதிக்கிறது என்றோ நம்புவது வெறும் மயக்கம் என்பதே என் கருத்து.

எப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும் ஆறாயிரம் பொறுப்பற்ற ஆசாமிகளை விட, மக்களின் நன்மையில் தீவிர ஆர்வம் கொண்ட, விசாலமான மனப்போக்குள்ள, உண்மையானவர்களான ஆயிரத்து ஐந்நூறு பிரதிநிதிகளே ஜனநாயகத்திற்கு என்றும் சிறந்த பாதுகாப்பாவார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்த வேண்டும். பிரதிநிதிகளின் தொகை விஷயத்தில் விஷயாலோசனைக் கமிட்டி ஏதோ மனக்கிலேசம் அடைந்திருந்ததால், ஆறாயிரம் என்ற எண்ணுக்கு மேலேயும் போக அது விரும்பியிருக்கக் கூடும். ஆகையால், ஆறாயிரம் என்ற எல்லை சமரசத்தின் பேரில் திட்டம் செய்யப்பட்டது. காங்கிரஸின் லட்சியத்தைப் பற்றிய விஷயத்தில் பலமான விவாதம் நடந்தது.

நான் சமர்ப்பித்திருந்த அமைப்பு விதிகளில் சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது என்பது காங்கிரஸின் லட்சியம் என்று இருந்தது. காங்கிரஸிலிருந்த ஒரு கோஷ்டியினர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் சுதந்திரம் அடைவது என்பது மாத்திரம் என்று காங்கிரஸின் லட்சியத்தைக் கட்டுப் படுத்திவிட வேண்டும் என்று விரும்பினார்கள். இக்கட்சியினரின் கருத்தைப் பண்டித மாளவியாஜியும், ஸ்ரீ ஜின்னாவும் எடுத்துக் கூறினர். ஆனால்,தங்களுக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெற அவர்களால் முடியவில்லை. அதோடு, சுதந்திரத்தை அடைய அனுசரிக்கும் முறை, சமாதானத்தோடு கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அமைப்பு விதிகளின் நகல் கூறியது. இந்த நிபந்தனைக்கும் எதிர்ப்பு இருந்தது. அனுசரிக்கும் முறையைப் பற்றி எந்த விதமான தடையும் இருக்கக்கூடாது என்று எதிர்த்தவர்கள் கூறினார்கள். இதைக் குறித்துத் தெளிவாக மனம் விட்டு விவாதித்த பிறகு, அசல் நகலில் கூறியிருப்பதைக் காங்கிரஸ் அங்கீகரித்தது.

இந்த அமைப்பு விதிகளை மக்கள் யோக்கியமாகவும், புத்திசாலித்தனத்தோடும், உணர்ச்சியோடும் நிறைவேற்றியிருந்தால், பொதுமக்கள் அறிவைப் பெறுவதற்கு அதுவே சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அதோடு, அதை நிறைவேற்றி வைப்பதற்குச் செய்யும் காரியங்களே நமக்குச் சுயராஜ்யத்தையும் கொண்டு வந்திருக்கும். ஆனால் இந்தக் கருத்தைக் குறித்து இங்கே விவாதிப்பது பொருத்தமற்றதாகும். இந்த காங்கிரஸ் மகாநாட்டில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் ஆகியவைகளைப் பற்றிய தீர்மானங்களும் நிறைவேறின. அது முதற்கொண்டு காங்கிரஸின் ஹிந்து உறுப்பினர்கள், ஹிந்து மதத்திலிருந்த தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழித்துக் கட்டும் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றனர். கதரின் மூலம், இந்தியாவிலிருக்கும் எலும்புக் கூடுகளான ஏழை மக்களுடன் உயிரான உறவுப் பந்தத்தையும் காங்கிரஸ் கொண்டுவிட்டது. கிலாபத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காங்கிரஸ் அதனளவில் செய்த பெரிய பிரத்தியட்ச முயற்சியாகும்.