கூத்தன்
கூத்தன் என்பது ஓட்டக்கூத்தனின் சுருக்கமான பெயர். இவர் செங்குந்தர் மரபினர். அம்மரபினர் போர்ப்படையில் சாதாரணப் பட்டாளத்துக்காரன் முதல் படைத்தலைவன் வரை பல வேலைகளில், மற்றும் நெசவுத் துறையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தகப்பனுமான சங்கரன் என்பவனிடம் ஊழியம் செய்து வந்தார். சங்கரனிடம் வீட்டு ஏவல்களைச் செய்வதை விட வேறு பெரிய பதவிக்கு உரிய தகுதிகள் ஒட்டக்கூத்தனுக்கு இருப்பதை ஒரு காங்கேயன் உணர்ந்தான்; தன் பெருமையை அறிந்து அந்த வள்ளலுக்கு நன்றி கூறத்தான், கூத்தன் ஒரு 'நாலாயிரக்கோவை' பாடினர்.
கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார். ஒரு பரணி பாடி, விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார். இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார். இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது. காரணம் - சொல்வளம், செய்யுள்களின் ஓசை நயம், அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும். ஈட்டி எழுபது, எழுப் பெழுவது, தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.
கம்பன்
கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி, ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம காதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.
புகழேந்தி
புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகக் கூறுவது வழக்கம். பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், அவன் மீது பொறாமை கொண்டான். கூத்தனுக்கு புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.
மேலும் செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாகயிருக்கவேண்டும். ஆனால் இது சந்தேகத்திற்குரியது. புகழேந்தி கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்ததாகக் கொள்ளலாம். புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர். நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் கையாண்டால், வெண்பா சிறந்த பலன் தரும்.
புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது, இலக்கியச் சிறப்பில்லாத பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபு உண்டாயிற்று. ஆனால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறிதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்