Author Topic: வாழைக்காய் வறமிளகாய் சட்னி  (Read 549 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


வாழைக்காய் வறமிளகாய் சட்னி

வாழையின் பயன்கள், போசாக்குகள் பற்றி ஏற்கனவே நிறையக் கூறியாய் விட்டது.

அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

சோளகக் காற்று வீசும் காலத்திலும் சுழன்றடிக்கும் சூறாவளிக்காற்று வந்த பொழுதுகளிலும் முதலில் முறிந்து விழுவது வாழைதான்.

நிலத்தில் விழுந்த வாழைமரங்களில் இருக்கும் பிஞ்சுக்காய்களை என்ன செய்வது என்பது எல்லோருக்கும் பெரும்பாடாக இருக்கும்.

காயை முழுதாக அவித்தெடுத்து வறை, தேங்காய் சம்பல்,சட்னி,பொரியல் செய்துகொள்வார்கள். இவ் வழியே பாரம் பரியமாக நடைமுறையில் இருந்து வந்த சமையல் முறைதான் இச் செய்முறை.

நமது முன்னோர்கள் மரக்கறிகளின் தோலிலுள்ள சத்துக்கள் பற்றியும் நிறையவே அறிந்திருந்தார்கள்.

சமையலில் உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பால் பிசுக்கு, போன்ற காய்கறி வகைகளை தோல் நீக்காது தோலுடன் சமைத்து உண்டனர்.

இவ்வாறுதான் வாழைக்காயின் உட்தோலையும் எடுத்து சமையல் செய்து வந்தார்கள்.

இச் சமையல் முறைகள் இப்பொழுது பெரும்பாலும் வழக்கில் இல்லை.

ஒரு வாழைக்காயை வைத்து இருவகைச் சமையல் செய்து விடுவார்கள்.

உட் சதைப்பகுதியை தேங்காய் பால்கறி அல்லது கூட்டு, குழம்பு, காரக்கறியாகச் செய்து கொள்வார் இல்லாது போனால் செய்யும் சாம்பாரிலும் கலப்பர்.

அதன் வெளித்தோலை சட்னி, இடிசம்பல் செய்து விடுவார்கள். பொருளும் வீண்போகாது சத்தும் கிடைக்கும்.

இவை புதிய தலை முறையினருக்கு தெரிந்திருக்கவும் மாட்டாது
உரலில் இட்டு இடிக்கும் சம்பலின் சுவையும் அம்மியில் வைத்து பசையாக கட்டியாக உருட்டி அரைத்தெடுக்கும் சட்னியின் சுவையும் அட ..அட...

உங்கள் நாக்கு உறுண்டு பிரளுதா... அம்மா பாட்டியின் ஞாபகங்கள் வந்து விட்டதா?

கள்ளமாக எடுத்துத் திண்ட சம்பல்களின் ருசி ஞாபகங்கள் வந்திருக்குமே!

திருமணமாகாதவர்கள் உரல்,அம்மி.ஆட்டுக் கல்லுடன் இருக்கும் சம்பலை வாயில் எடுத்து வைத்து ருசி பார்த்தால் கல்யாணத்தன்று கட்டாயம் மழைபெய்யும்.

இதை நான் சொல்லவில்லை முன்னோர்கள் சொல்லுவார்கள்.

எங்கள் சிறுவயதில் சம்பல் இடிக்கும் போது கூறுவார்கள்.

திருமணமானவர்களுக்கு விதிவிலக்கா ? நீங்களே சொல்லுங்கள்.

இன்று இச்சமையலைச் செய்வோமா.

தேவையான பொருட்கள்


வாழைக்காய் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
வறமிளகாய் - 5 - 7 ( காரத்திற்கேற்ப)
சாம்பார் வெங்காயம் - 7 -10
பூண்டு – 2 - 4 பல்லு
சீரகம் - 1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
உப்பு – ( தேவைக்கேற்ப )
புளி - ( தேவைக்கேற்ப )
ஓயில் - ½ ரீ ஸ்பூன்

செய்முறை


வாழைக்காயின் மேல் தோலை நார்வாங்கி வீசிவிடுங்கள். நாற்புறமும் இருக்கும் உட்தோலை சீவி எடுத்து அலசி சிறிது தண்ணீர்விட்டு அவித்து எடுங்கள்.

ஒயிலில் வறமிளகாய் , பூண்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உரலில் இடிப்பதாக இருந்தால் இப்போதெல்லாம் இது எங்கே???

சிறிய ஈய உரல் வைத்திருப்பவர்கள் செய்து கொள்ளலாம் .


அவித்தெடுத்த வாழைக்காய் தோல்களை 2 அங்குலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

முதலில் மிளகாயை உரலில் போட்டு இடியுங்கள். இத்துடன் உப்பு சீரகம் சேர்த்து இடித்துவிட்டு பூண்டையும் சேர்த்து இடித்து விடுங்கள்.

அடுத்து கறிவேற்பிலை , வெங்காயம் இரண்டையும் போட்டு புளி சேர்த்து இடியுங்கள்.

தேங்காய் துருவல் சேர்த்து நன்கு இடியுங்கள்.

இதனுடன் வாழைக்காய் துண்டுகளைக் கொட்டி இடித்துக் கொள்ளுங்கள்.

பசையாகும் வாழைக்காய் உலக்கையை எடுக்கவிடாது சற்று இழுத்துக்கொள்ளும். மூச்சைப் பிடித்து கைகளை இழுத்துக் எடுத்துக் கொண்டு (கைகளுக்கும், உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்) வாழைக்காய் தேங்காயுடன் சேரும்வரை நன்றாக இடித்து எடுங்கள்.

இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி...

யார் அங்கே உரலுடன் இருக்கும் போது வாயில் வைத்துப் பார்ப்பது? நல்ல பிள்ளையாக சற்றுப் பொறுத்திருங்கள்.

நல்ல காலம் எனது திருமணத்தில் மழை பெய்யவில்லை!!

இதோ கோப்பையில் வைத்துத் தருகிறேன்.

(உரல் வைத்திராதவர்களுக்கு இருக்கிறதே மிக்சி லேசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்