ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திகில் படமான 'சாருலதா' தாய்லாந்தில் வெளியான 'அலோன்' என்ற படத்தின் தழுவலாகும்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான சாருவும், லதாவும் தங்களது 20வயது முதல் இரு உடல் ஓர் உயிர் என்று ஒன்றாகவே வளர்கிறார்கள். இவர்களது வாழ்க்கையில் காதல் வருகிறது. அந்த காதலால் இவர்களுக்கிடையே ஏற்படும் மோதலில் ஒருவர் இறந்துப் போகிறார். இறந்தவர் ஆவியாக வந்து ஆர்பாட்டம் செய்ய, அந்த நேரத்தில் இறந்துப் போனது அந்த பிரியாமணி அல்ல என்ற ஒரு திருப்புமுனையை இயக்குநர் படத்தில் வைத்திருக்கிறார்.
அப்படியானால் இறந்தது யார்? என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் விதத்தில் படத்தை முடித்திருக்கிறார்கள்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதாலே இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிகமான எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுவிட்டது. படம் வெளியானப் பிறகு அதுவே ஆபத்தாகவும் ஆயிற்று என்று சொல்லும் விதத்தில் இப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்திற்காக பெரிதாக எதுவும் யோசிக்காமல் இருவரும் எப்போதும் கட்டிபிடித்துகொண்டு நடப்பதையே படமாக்கி அதையே கீரீன்மேட்டின் மூலம் சொதப்பல் கிராபிக்ஸ் காட்சியாக்கியிருக்கிறார்கள். திகில் காட்சிகள் நமது பழைய தமிழ்ப் படங்களை நினைவு படுத்துகிறது.
சாருவாகவும், லதாவாகவும் பிரியாமணி நடித்திருக்கிறார். இதில் லதா அதிரடியான குணம் கொண்டவராகவும், சாரு மென்மையான குணம் கொண்டவராகவும் இருக்கிறார். இரண்டு குணங்களுக்கும் உள்ள வேறுபாட்டை தனது நடிப்பின் மூலம் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் பிரியாமணி.
ஹீரோ என்று சொல்வதை விட ஹீரோயினுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் என்று சொல்லும் விதத்தில் தான் ஸ்கந்தாவின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
பிரியாமணிக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வன்னன், படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் வருவதோடு சரி, அவரை அப்படியே மருத்துவமனையில் படுக்க வைத்து விடுகிறார் இயக்குநர். பிறகு க்ளைமாக்ஸில் வந்து தலையை காட்டுகிறார்.
மாங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பையனும், ஆர்த்தியும் காமெடி பண்றோம் என்று ரசிகர்களை கடுப்பேத்துராங்க. மாங்கா சீதாவை வர்ணிப்பதற்கு ஏற்றது போலவே அழகானா ஆண்டியாக வந்து சீதா ரசிகர்களை குஷிப்படுத்துறாங்க.
சுந்தர் சி.பாபுவின் இசையில் "கடவுள் தந்த கவிதை.." என்ற பாடல் மட்டும் நினைவில் நிற்கிறது. மற்றப் பாடல்களும், பின்னணி இசையும் சொதப்பல்.
சில குறிப்பிட கதாபாத்திரங்களை வைத்துகொண்டு ஒரு சிறிய படத்தை இயக்கியிருக்கும் பொன்குமரன், அதற்கு பெரிய பில்டப் கொடுத்தது ரொம்பவே தப்பா போச்சு.
ஜெ.சுகுமார் (டிஎன்எஸ்)