விளக்கு புதிதாக இருக்கலாம்
வெளிச்சம் பழையது தானே
புதுமையிலும் பழமை பிறப்பதைப் பார்
கீதம் புதிதாக இருக்கலாம்
சங்கீதம் பழையது தானே
பழமையில் இருந்து புதுமை
பிறப்பதைப் பார்
துளிக்கும் கண்ணீர் புதிதாக இருக்கலாம்
துக்கம் பழையது தானே
உணர்வு பழையது
நம் அனுபவம் புதிது
நீ கண்மலரும் ஒவ்வொரு
புதிய விடியலையும்
பழைய சூரியனே கொண்டு வருகிறான்
இதோ பழையது என்று
இலைகளை உதிர்க்கும் மரம்
புதிதாக அணிவது அதே இலைகளையே
ஒரே ஊர்
பயணிக்கு புதிதாகிறது
அந்த ஊர்வாசிக்கு
பழைய ஊராக இருக்கிறது
அறிந்தவனுக்கு எது பழையதோ
அறியாதவனுக்கு அதுவே புதியது
அறிவென்பதே பழைய சேமிப்பல்லவா