Author Topic: மகாபாரதம்  (Read 9504 times)

Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #30 on: February 20, 2012, 12:43:24 PM »
மகாபாரதம் பகுதி-31

ஆசை யாரையும் விட்டதில்லை. எல்லா அரசர்களுமே திரவுபதியின் கண்ணம் பிற்கு பலியாகி விட்டனர். அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். திரவுபதி சபைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் கையில் மாலை இருந்தது. அம்பெய்து மேலே சுழலும் சக்கரத்தை வீழ்த்துபவருக்கு அந்த மாலை விழ வேண்டும். இதயமெல்லாம் படபடக்க அர்ஜூனன் அவையில் இருக்கிறானா என நோட்டமிட்டாள். பிராமண வேடத்தில் இருந்த அவன் கண்ணில் படவில்லை. கலக்கத்துடன் இருந்த அவளுக்கு பணிப்பெண்கள் அங்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன், இதர கவுரவர்கள், சகுனி, அஸ்வத்தாமன், கர்ணன், கண்ணனின் அண்ணன் பலராமன், கண்ணபிரான், கண்ணபிரானின் தம்பியும், போஜகுலத்தலைவனுமான சாத்தகி, கண்ணனின் எதிரி சிசுபாலன், மாவீரன் ஜராசந்தன், பகதத்தன், சல்லியன், நீலன் ஆகியோரை அறிமுகம் செய்தனர். கண்ணபிரான், பிராமண வடிவில் வந்திருப்பவர்கள் பாண்டவர்களே என புரிந்து கொண்டு தன்னோடு வந்த யதுகுல அரசர்களை போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர்கள் விலகிக் கொண்டனர். ஒரு சிலர் முயற்சித்து பார்த்து தோற்றனர். எந்த அரசரும் வெற்றி கொள்ள இயலாத நிலையில் அர்ஜூனன் எழுந்தான்.

திருஷ்டத்தும்யுனா! நான் பிராமணன். எனினும் வித்தையறிந்தவன். நான் இங்கே சுழலும் மீன் சக்கரத்தை வீழ்த்தினால், எனக்கு உன் தங்கையைத் தருவாயா? என்றான். ஒரு பிராமணன் என் தங்கையை மணப்பது பாக்கியத்திலும் பாக்கியம், என்றான் திருஷ்டத்யும்னன். அர்ஜூனன் போட்டி விதிப்படி அந்த சக்கரத்தை பார்க்காமலேயே, பின்புறமாக திரும்பி நின்று ஒரே அம்பில் வீழ்த்தினான். சிவபெருமான் மேருமலையை வீழ்த்தியது போல் இருந்ததாம் இந்தக்காட்சி. பிராமண வடிவில் வந்து சக்கரத்தை வீழ்த்தியவன் அர்ஜூனனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று புரிந்து கொண்ட திரவுபதி அவன் கழுத்தில் மாலையிட்டாள். இதுகண்டு அரசர்கள் கொதித்தனர். நாமெல்லாம் க்ஷத்திரியர்கள். மாபெரும் வீரர்கள். நம் கண்முன்னால் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் குல பெண்ணை இழுத்துப் போகிறான். இது தகாது. அவனைக் கொன்று திரவுபதியை மீட்போம், என்றபடியே அர்ஜூனன் மீது பாய்ந்தனர். முதலில் கர்ணன் தான் பாய்ந்தான். அடேய் பிராமணா! நான் எமனை எதிரில் வந்தாலும் அவனோடு போரிடுபவன். உன்னை இந்த மண்ணில் வைத்து தேய்த்து விடுகிறேன், என்று கர்ஜித்தான்.

அர்ஜூனன் அவன் தோளில் ஒரு அம்பை விட்டான். வலி தாங்காமல் சாய்ந்தான் கர்ணன். அடுத்து சல்லியன் அவன் மீது பாய்ந்தான். அவனை பீமன் தூக்கி வீசினான். மார்பில் உதைத்தான். அவனது நெஞ்செலும்புகள் நொறுங்கி விட்டன. எனவே மற்ற அரசர்கள் மொத்தமாக அவர்கள் மீது பாய்ந்தனர். அப்போது கண்ணபிரான் குறுக்கிட்டான். மன்னர்களே! வந்திருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல! அவர்களும் க்ஷத்திரியர்களே. பஞ்சபாண்டவர்கள் இறந்து விட்டதாக உலகம் கருதி கொண்டிருக்கிறது. அவர்கள் தான் இவர்கள். அர்ஜூனனனே சக்கரத்தை வீழ்த்தி, திரவுபதியை கை பிடித்தவன், என்றார். அரசர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர். பின்னர் துருபதனிடம் விடைபெற்று, திரவுபதியுடன் குந்திதேவி தங்கியிருந்த குயவன் வீட்டுக்குச் சென்றனர் பாண்டவர்கள். தர்மர் வாசலில் நின்றபடியே, அம்மா! நாங்கள் வந்து விட்டோம். ஒரு கனி கொண்டு வந்திருக்கிறோம், என்றார். உள்ளிருந்த குந்தி, அப்படியா! ஐந்து பேரும் பங்கு வைத்துக் கொள்ளுங்கள், என்றாள். தர்மர் இக்கட்டான நிலையில் இருந்தார். ஐயோ! தென்ன விபரீதம், நாம் கொண்டு வந்தது ஒரு பெண்ணை. அவளை கனிக்கு ஒப்பிட்டு சொன்னோம். தாயோ பங்கு வைத்துக் கொள்ள சொல்கிறாள். இவளை ஐந்து பேரும் மணக்காவிட்டால், தாய் சொல்லை மீறியதாகும்.

ஐவரும் மணந்தால், ஊர் உலகம் சிரிக்கும். திரவுபதியால் வெளியே தலைகாட்டவே முடியாது. என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே குந்தி வெளியில் வந்தாள். தான் செய்த தவறை உணர்ந்தாள். தாய் சொன்னதை வேதவாக்காக ஏற்று, ஐவரும் அவளை மணக்க முடிவாயிற்று. திரவுபதியின் தந்தை துருபதன், குயவன் வீட்டில் இருந்த பாண்டவர்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். ஐவரும் அவளை மணம்முடிக்க இருந்ததைக் கேட்டு வருத்தப்பட்டான். அவன் மனம் குழம்பியிருந்த வேளையில் அங்கே வியாசர் வந்தார். மகரிஷி! சரியான சமயத்தில் வந்தீர்கள். என் இக்கட்டான நிலையை சொல்லுகிறேன். விடை சொல்லுங்கள், என்றதும், முக்காலமும் உணர்ந்த வியாசர் துருபதனிடம், மன்னா! நடந்ததையும், நடக்க இருப்பதையும் நானறிவேன். இந்த பந்தம் பூர்வஜென்ம பலனால் ஏற்பட்டது. உன் மகள் முற்பிறவியிலும் இவர்கள் ஐந்து பேருக்கே மனைவியாக இருந்தாள். அதற்கு முன் இவள் நளாயினி என்ற பெயரில் இப்பூவுலகில் வசித்தாள். இவளை அந்தணர்களின் தலைவரான மவுத்கல்ய முனிவர் மணம் செய்திருந்தார். தன் மனைவியின் பொறுமையையும், கற்புத்திறனையும் சோதிக்க இவளுக்கு பல சோதனைகள் வைத்தார்.

ஒரு கட்டத்தில் தனக்கு தொழுநோய் வந்தது போல நடித்தார். அப்போதும் அவரது மார்பையே தழுவினாள் இந்தப் பெண். ஒரு சமயம் தொழுநோயால் அழுகிய தன் விரலை உணவில் போட்டு வைத்து விட்டார். அதையும் அமிர்தமாய் நினைத்து உண்டாள் இந்தப் பெண். இதனால், மவுத்கல்யர் ஆனந்தம் கொண்டார். தன் பழைய சுந்தர வடிவை எடுத்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அப்போதும் இவள், உங்கள் மாறாத அன்பு வேண்டும், என்றுதான் கேட்டாள். அதன்பின் நளாயினி இறந்துவிட்டாள். மறுபிறவியில் இவள் இந்திரசேனை என்ற பெயரில் பிறந்தாள். முற்பிறவியில் மணந்த மவுத்கல்யர் இவள் கன்னிப்பருவம் அடையும் வரை உயிருடன் தான் இருந்தார். அவரைச் சந்தித்து முற்பிறவியில் தான் அவரது மனைவியாக இருந்ததைச் சொல்லி, இப்பிறவியிலும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டினாள். அவரோ, அப்போது குடும்ப வாழ்வை வெறுத்து தவவாழ்வை மேற்கொண்டிருந்தார். எனவே அவளை மணக்க மறுத்து விட்டார். எனவே சிவபெருமானை நினைத்து தவமிருக்க காட்டுக்குச் சென்று விட்டாள், என்ற வியாசர் கதையைத் தொடர்ந்தார்


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #31 on: February 20, 2012, 12:47:29 PM »
மகாபாரதம் பகுதி-32

இந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே! நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அவள் சிவனிடம், சுவாமி! எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ஐந்து முறை கேட்டாள். சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார். நீ ஐந்து முறை என்னிடம் கணவன் வேண்டும் என கேட்டதால் ஐந்து சிறந்த கணவர்கள் உனக்கு கிடைப்பார்கள், என்றார். இந்திரசேனை பதறிவிட்டாள். நான் தங்களிடம் ஐந்து முறை கேட்டதன் காரணம் மிகச்சிறந்த கணவர் அமைய வேண்டும் என்பதால்தான். தாங்கள் சொன்னதுபோல் ஐந்து கணவர்களை கேட்கவில்லை, என்றாள். நான் காரண காரியத்துடன்தான் எதையும் செய்வேன். உன்னை அவ்வாறு சொல்ல வைத்ததும் நான்தான். உலக நலன் கருதி நீ ஐந்து பேருக்கு மனைவியாக வேண்டி உள்ளது. அவர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இந்த அரிய தியாகத்தை செய்ய வேண்டி உள்ளது. ஒரு நல்ல செயலுக்காக விதிகளை மீற வேண்டி உள்ளது. எனவே எனது கட்டளைப்படி நீ நடக்க வேண்டும், என்று சொல்லி மறைந்தார்.

இந்திரசேனை மிகுந்த வருத்தமடைந்தாள். கங்கைக்கு சென்று நீராடி தான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது நீங்க வேண்டும் என கங்காதேவியை பிரார்த்தித்துக்கொண்டாள். ஆற்றில் குளிக்கும்போதே அவள் கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டியது. அந்த கண்ணீர்த்துளிகள் தங்கத் தாமரைகளாக மாறின. அப்போது தேவலோகத்திலிருந்து இந்திரன் அங்கு வந்தான். அவன் இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குளித்துவிட்டு கரையேறிய இந்திரசேனையை பின் தொடர்ந்தான். அப்போது சிவபெருமான் எதிரே வந்தார். அவரைக்கூட கவனிக்காமல் அந்த அதிசயப் பெண்ணைப் பற்றி சிந்தித்தபடியே இந்திரன் நடந்து கொண்டிருந்தான். இதனால் கோபமடைந்த சிவபெருமான், இந்திரனை சிறையிலடைத்தார். அங்கே ஏற்கனவே நான்குபேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்திரலோக அரசர்களாக இருந்தவர்கள். சிவபெருமான் இந்திரசேனையிடம், நான் குறிப்பிட்ட ஐந்து கணவர்களும் இவர்கள்தான். அடுத்த பிறவியில் இந்திரர்களாக இருந்த இவர்கள் ஐந்து பேரும் உன்னை மனைவியாக அடைவார்கள், என்றார். இந்திரசேனையின் ஆயுட்காலம் முடிந்தது. அவள் துருபதனான உனது மகளாக பிறந்தாள்.

 நீ பாஞ்சால தேசத்தை ஆள்வதால் மக்கள் அவளை பாஞ்சாலி என அழைத்தனர். நீ திரவுபதி என செல்லப் பெயரிட்டு அவளை அழைத்து வருகிறாய். இப்போது இந்த ஐந்துபேருக்குமே சிவபெருமானின் கட்டளைப்படி உலக நன்மை கருதி நீ அவளை மணம் முடித்து வைக்க வேண்டும், என்றார் வியாசர்.வியாசரின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன் உலக நலனுக்காக தன் மகளை பஞ்சபாண்டவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதம் தெரிவித்தான். அழகிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. அங்கே ஐந்து பேருக்கும் அவளை தனித்தனியாக திருமணம் செய்து கொடுத்தனர். தன் மருமகன்களுக்கு ஏராளமான படைபலத்தையும், நாடுகளையும், செல்வத்தை யும் அள்ளிக்கொடுத்தான். இந்தச்செய்தி துரியோதனனை எட்டியது. அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இறந்துபோனதாக கருதப்பட்ட பாண்டவர்கள் மீண்டும் உயிரோடு வந்ததை அவனால் தாங்கமுடியவில்லை. பொறாமையால் அவன் பாஞ்சால தேசத்தின்மீது படையெடுத்தான். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன், துரியோதனனை எதிர்த்தான். இரண்டு படைகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கவுரவப்படை பின்வாங்கியது. ஆனால் போர்க்களத்தில் கர்ணனும், சகுனியும் திருஷ்டத்யும்னனை தொடர்ந்து எதிர்த்தனர். இவர்களில் கர்ணனை நகுலன் எதிர்த்தான். அவனுடைய அம்புமழை கர்ணனை கடுமையாகத் தாக்கியது. காயமடைந்த அவன் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவிட்டான்.

சகாதேவன் சகுனியை விரட்டியடித்தான். பீமன் தனித்து நின்று துரியோதனன் உள்ளிட்ட நூறு கவுரவர்களையும் அடித்து நொறுக்கினான். தோற்றுப்போன துரியோதனப்படை தன் நாட்டை நோக்கி ஓடிவிட்டது. இந்த நேரத்தில் கண்ணபிரான் பாஞ்சால நாடு வந்து சேர்ந்தார். அவர் பாண்டவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லி வந்தார். பாண்டவர்கள் தங்களுக்கு கிடைத்த சீதன நாடுகளை நல்ல முறையில் ஆண்டனர். இந்நேரத்தில் அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் தன் தம்பி விதுரனுடன் ஆலோசனை செய்தான். பாண்டவர்களுக்கு உரிய நாட்டை கொடுத்து விடுவதே சிறந்தது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தூதுவனை அனுப்பி பாண்டவர்களை அஸ்தினாபுரிக்கு வரவழைத்தான். அவர்களுக்குரிய ராஜ்ய பாகத்தை ஒப்படைத்து விட்டான். இதன்பிறகு தர்மருக்கே முடிசூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தர்மரின் பட்டாபிஷேக நாளும் நெருங்கியது. வியாசரும் இன்னும் பல முனிவர்களும் தர்மரின் பட்டாபிஷேகத்தைக் காண வந்திருந்தார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப்பிறகு திருதராஷ்டிரன் தர்மரை அழைத்தான். மகனே! நீ உன் தம்பிகளுடன் காண்டவபிரஸ்தம் நகருக்கு செல். அங்கே தங்கியிரு, என்றான்.

தர்மருக்கு அந்நகருக்கு எப்படி செல்வதென யோசனை எழுந்தது. ஏனெனில் அந்த நகரம் காட்டுப்பகுதியில் இருந்தது. ஊரே பாழடைந்து போய்விட்டது. மனிதர்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. இருந்தாலும் தம்பிகளை அழைத்துக் கொண்டு தர்மர் அங்கு புறப்பட்டார். கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் விஸ்வகர்மாவையும், இந்திரனையும் அழைத்தார். அவர்கள் கண்ணனை வணங்கி நின்றனர். இந்த காட்டை அழித்து இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அழகிய நகரத்தை நிர்மாணித்துக் கொடுங்கள். மூவுலகிலும் இதுபோன்ற நகரம் இருக்கக்கூடாது, என ஆணையிட்டார் கண்ணன். அதன்படி இந்திரனின் மேற்பார்வையில் விஸ்வகர்மா காண்டவபிரஸ்த நகரை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார். இரவு நேரத்தில்கூட அந்த நகரம் ஜொலித்தது. எங்கு பார்த்தாலும் தங்கத்தாலான மாட மாளிகைகள், அழகிய அரண்மனைகள், பெரிய மதில்கள், தோரண வீதிகள், பூஞ்சோலைகள், தடாகங்கள் என அருமையாக அமைக்கப்பட்டிருந்தது அந்நகரம். கண்ணபிரான் அந்நகரை சுற்றிப்பார்த்தார். இந்திரனின் மேற்பார்வையில் கட்டப்பட்டதால் அந்த ஊருக்கு இந்திரப்பிரஸ்தம் என பெயர் சூட்டினார்.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #32 on: February 20, 2012, 12:48:46 PM »
மகாபாரதம் பகுதி-33

பேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா? திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் அங்கே இருந்தாள். வயல்களில் மிக அதிகமாக கரும்பு விளைந்து, தேவைக்கு அதிகமானதால், வெட்டத் தேவையின்றி சாய்ந்து, அதில் இருந்து புறப்பட்ட சாறு ஆறாய் ஓடி, குளங்களை ஏற்படுத்தி யது. அன்னப்பறவைகள் அந்த கருப்பஞ்சாற்று குளங்களில் நீந்திய காட்சி பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது. இந்திரபிரஸ்தத்தில் ஏராளமான மக்கள் குடியேறினர். இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பல தொழில் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். இந்த நேரத்தில் நாரத மகரிஷி இந்திரபிரஸ்தத்திற்கு வந்தார். இந்த கலகக்காரருக்கு இங்கே என்ன வேலை? அவர் வந்தால், ஏதோ ஒரு கலகம் நடந்தாக வேண்டுமே! ஆம்...அதை நடத்தி வைத்ததன் மூலம், பிற்காலத்தில் ஏற்படப்போகும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தரும் சில நன்மையான செயல்களையும் நடத்தவே அவர் வந்து சேர்ந்தார். அவரை பாண்டவர்களும், குந்திதேவியும் வரவேற்று, ரத்தின சிம்மாசனத்தில் அமர வைத்தனர். ராஜோபசாரத்தை ஏற்றுக்கொண்ட நாரதர் திரவுபதியை அழைத்தார். மகளே!...நீ ஐவருக்கு மனைவியாய் இருக்கிறாய்.

ஒரே நேரத்தில் அவர்கள் ஐந்துபேரும் ஏதாவது கட்டளையிட்டால், நீ என்னதான் செய்வாய்? உலகில் ஒருத்திக்கு ஒருவன் என்பதே சமாளிக்க சிரமமான விஷயம். அந்த ஒருவன் சொன்னதை நிறைவேற்றவே, நம் தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். உனக்கோ ஐந்து பேர். ஆளுக்கொரு வேலையைச் சொல்வார்கள். யார் சொன்னதை செய்ய முடியாமல் போனாலும் உன்னைத் திட்டுவார்கள். இந்த நிலைமை உனக்கு சிரமமாய் இருக்குமோ இல்லையோ? அது மட்டுமல்ல! இன்னும் சில பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வந்துவிடக்கூடாதே, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். திரவுபதி பதிவிரதை. சுவாமி! உங்கள் ஆசி இருக்கிறது, என் சகோதரன் கண்ணன் இங்கிருக்கிறார். அந்த பரந்தாமனின் அருளுடன் நான் எந்த சூழலையும் சமாளிப்பேன், என சொல்லிவிட்டாள். நாரதர் அவளது நம்பிக்கையை மனதுக்குள் மெச்சினார். ஆனாலும், பிரச்னையை அவர் விடவில்லை. பாண்டவர்களை அழைத்தார். அவர்களிடமும் இதே விஷயத்தைச் சொன்னார். சுவாமி! நீங்கள் சொல்வது நியாயம் தான். இதற்குரிய பாதையையும் நீங்களே காட்டிவிடுங்கள், என்றனர். தர்ம சகோதரர்களே! ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். நாராயணனால் வதம் செய்யப்பட்ட இரண்யகசிபுவை பற்றி நீங்கள் அறிவீர்கள்.

அவனது பேரன்கள் சுந்தன், உபசுந்தன். இரண்டு சகோதரர்களும் பிரிக்கமுடியாத அன்புடன் திகழ்ந்தனர். அவர்கள் மூன்று லோகங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பினர். இதற்காக கடும் தவமிருந்து மும்மூர்த்திகளையும் வரவழைத்து வரமும் பெற்று விட்டனர். அது மட்டுமா! யாராலும் தங்களுக்கு அழிவுவரக்கூடாது என்ற வரமும் பெற்றனர். பிறகென்ன! அட்டகாசம் தான், அமர்க்களம் தான்! இவர்களது தொல்லையைப் பொறுக்கமுடியாமல் தேவர்கள் திலோத்துமை என்ற அழகியைப் படைத்து சுந்த, உபசுந்தர்கள் கண்ணில் படும்படி நடமாட வைத்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. அன்றுவரை ஒற்றுமையாக இருந்த அந்த சகோதரர்கள் மனதில், இவளை யார் முதலில் அடைவது என்ற எண்ணம் உண்டாயிற்று. சுந்தன் அவளது கையைப் பிடித்து இழுத்தான்.  உபசுந்தன் அவனிடமிருந்து அவளைப் பறித்தான். சுந்தன் தன் தம்பியிடம், அடேய்! அவள் உனக்கு அண்ணன் மனைவி. தாய் போன்றவள். தாயின் கையை பிடித்து இழுக்கிறாயே, என்றான். உபசுந்தன் அவனிடம், உஹூம்... அவள் என்னுடையவள். நீ என் அண்ணன். எனக்கு தந்தை போன்றவன். அவ்வகையில், அவள் உனக்கு மருமகள் ஆகிறாள். மருமகளை கையைப் பிடித்து இழுக்கிறாயே! வெட்கமாய் இல்லை, என்றான். வந்தது வினை. இருவரும் அந்தப் பெண்ணுக்காக கடும் போரிட்டனர். ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர்.

இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்பது இப்போது புரிந்து விட்டதா? உங்கள் ஐந்து பேருக்குள்ளும், திரவுபதியைக் குறித்து சண்டை வந்துவிடக்கூடாது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை அவளுடன் வாழ வேண்டும். அப்படி ஒருவர் அவளுடன் வாழும் போது, இன்னொருவர் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அப்படி பார்க்க நேர்ந்தால், அவர் ஒரு வருடம் மாறுவேடம் பூண்டு தீர்த்த யாத்திரை போய்விட வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குத் தான் நல்லது, என்றார். தர்ம சகோதரர்களுக்கு அது சரியெனப்பட்டது. திரவுபதிக்கும் முழு மனநிறைவு. அவர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டார். பாண்டவர்களும் இந்த விதிமுறையை எவ்வித பிசகுமின்றி கடைபிடித்தனர். ஆனால், விதி யாரை விட்டது? ஒருநாள், ஒரு அந்தணன், அரண்மனை வாசலில் நின்று, ஏ பாண்டவர்களே! நீங்கள் ஆளுவது நாடா இல்லை காடா? என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள். பிரஜைகளை பாதுகாப்பவனே மன்னன். ஏ தர்மா! வெளியே வா! நியாயம் சொல், என்று கத்தினார். அந்தணரின் சப்தம் ஆயுதசாலைக்குள் இருந்த தர்மருக்கு கேட்க வில்லை. ஆனால், அரண்மனை உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்த அர்ஜூனனின் காதில், அந்தணனின் அவலக்குரல் கேட்டது. அவன் வேகமாக அந்தணன் நிற்குமிடத்துக்கு வந்தான்.

அந்தணரே! மன்னிக்க வேண்டும். அண்ணா ஆயுதசாலையை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு நியாயம் சொல்ல அவர் வரவேண்டும் என்பதில்லை. நானே பிரச்னையைத் தீர்த்து விடுகிறேன். தங்களுக்கு ஏதும் அநியாயம் நேர்ந்து விட்டதா? என்றான் கவலை தொனிக்க. வில்லாளி வீரனே! என் கறவைப் பசுக்களை இடையன் ஒருவன் பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பினேன். சில கள்வர்கள் அவனை அடித்துப் போட்டு விட்டு பசுக்களை ஓட்டி சென்று விட்டனர். செழிப்பு மிக்க ராஜாங்கம் நடத்துவதாக மார்தட்டுகிறீர்கள்! ஆனால், திருடர்கள் நம் நாட்டுக்குள் வந்து விட்டார்களே! என் மாடுகளை மீட்டுத்தா, என்றார். இவ்வளவுதானே! உமது பசுக்களை மீட்டுத்தருவது என் கடமை. நீங்கள் அமைதியாக இல்லத்துக்கு செல்லுங்கள். பசுக்கள் வந்து சேரும், என உறுதியளித்தான். அவசரமாக ஆயுதசாலைக்குள் புகுந்தான். அங்கே தற்செயலாக வந்திருந்த திரவுபதி அண்ணன் தர்மரின் அணைப்பில் இருந்தாள். அவளது முகத்தை கூட அர்ஜூனன் பார்க்கவில்லை. அண்ணனின் கால்களும், திரவுபதியின் சின்னஞ்சிறு அழகிய கால்களும் ஒன்றிணைந்திருப்பதைப் பார்த்து விட்டான். அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #33 on: February 20, 2012, 12:50:18 PM »
மகாபாரதம் பகுதி-34

தர்மரும், திரவுபதியும் இணைந்திருந்த காட்சியை அர்ஜூனன் கவனித்தாலும் மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் மறைத்திருக்கலாம். பார்த்த ஒன்றையே பார்க்கவில்லை என பொய்சாட்சி சொல்லும் காலம் இது. காரணம், நமக்கு அதனால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்! உயிர் மீது ஆசை. ஆனால், அர்ஜூனன் தர்மனின் தம்பியல்லவா! அந்த தர்மத்தின் சாயல் இவன் மீதும் படிந்திருந்தது என்பதில் ஆச்சரியமென்ன! அந்த பதட்டமான மனநிலையிலும் கடமையை அவன் மறக்கவில்லை. வில் அம்புடன் பசுக்களைக் கவர்ந்து சென்றவர்களை  தேடிச் சென்றான். சில நிமிடங்களில் அவர்களைப் பிடித்து விட்டான். பசுக்களை மீட்டு அந்தணர்களிடம் ஒப்படைத்தான். மனம் அலைபாய்ந்தது. தர்மரும், திரவுபதியும் வரும் வரை காத்திருந்தான். நடந்த விஷயத்தை தலைகுனிந்து சொன்னான். அர்ஜூனா! இதில் பாதகம் ஏதுமில்லை. ஆயுதசாலைக்குள் சல்லாபத்தில் ஆழ்ந்திருந்தது எனது குற்றமே! மேலும், நீ வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அறியாமல் நடக்கும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. இதுபற்றி கவலை கொள்ளாதே, என்றார் தர்மர். அர்ஜூனன் மறுத்துவிட்டான்.

அண்ணா! தெரிந்து நடந்தது, தெரியாமல் நடந்தது என்ற வித்தியாசம் சட்டத்திற்கு கிடையாது. அது இருக்கவும் கூடாது. தெரிந்தே செய்துவிட்டு, தெரியாமல் செய்தேன் என தப்பித்துக் கொள்ள இது வழிவகுக்கும். மேலும், சட்டத்தை வகுத்தவர்களே அதை மீறுவது என்பது நமக்குள்ள மரியாதையைக் குலைத்து விடும். விதிமுறைகளின் படி நான் ஒரு வருட காலம் தீர்த்த யாத்திரை கிளம்புகிறேன். எனக்கு விடை கொடுங்கள், என்றான். தம்பியின் நேர்மையை எண்ணி பெருமிதமடைந்த தர்மர், அர்ஜூனனுக்கு அனுமதி கொடுத்தார். தாயிடமும், மற்ற சகோதரர்களிடமும் விடைபெற்று அவன் கங்கை கரைக்குச் சென்றான். கங்கைக்கரையில் மக்கள் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மத்தியில் ஒரு பேரழகி தன் தோழிகளுடன் நீராட வந்தாள். கலகலவென்ற சிரிப்பொலி கங்கைக் கரையை நிறைக்க, அவர்கள் ஆற்றில் இறங்கி நீராடினர். அர்ஜூனன் அவர்களைப் பார்த்தான். தோழிகள் சுற்றிலும் நின்று, அவள் மீது தண்ணீரை வாரியிறைக்க, வாழைத்தண்டிலும் வள வளப்பான வெண்ணிற கைகளால் அதை தடுத்து விளையாடினாள் அந்த கட்டழகி. அர்ஜூனனின் பார்வை அவள் மீது விழுந்தது. உலகில் இப்படியும் ஒரு பேரழகியா? இறைவா! உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இவள் மட்டும் எனக்கு கிடைத்தால்...! அவன் சிந்தித்தபடியே அவர்கள் நீராடுவதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்தான்.

இந்த காதலுக்கு மட்டும் காலமும் கிடையாது...இடமும் கிடையாது...ஆளும் புரியாது. அந்த பேரழகியும், கரையில் வில் அம்பு சகிதம் நின்றிருந்த அந்த பேரழகனைப் பார்த்து விட்டாள். ராமபிரானும், சீதையும் நோக்கியது போல, அவர்களின் கண்கள் கலந்தன. ஆ...எனது உலகில் கூட இப்படி ஒரு பேரழகனைக் கண்டதில்லையே. இவன் யார்? மணந்தால் இவனைத்தான் மணக்க வேண்டும். ஆனால், இவன் பூலோகவாசியாயிற்றே! நான் நாகலோகத்தவள் அல்லவா? இந்த உறவை யார் ஏற்பார்கள்? அவளது உள்ளம் கலங்கியது. தோழிகள் அவளது பார்வை சென்ற திசையை கவனித்தனர். அவர்கள் கேலி செய்யத் துவங்கி விட்டனர். எங்கள் தலைவியே! அந்த மாவீரனை கண்கொட்டாமல் பார்க்கிறாயே! அவன் மானிடன். அவனை நமது லோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது, என்றனர் சிரிப்புடன். என் அன்புத்தோழிகளே! அப்படி சொல்லாதீர்கள். கண்டவுடன் அவன் மீது காதல் கொண்டு விட்டேன். தேசங்களை மட்டுமல்ல... இனங்களை மட்டுமல்ல...உலகங்களையும் கடந்தது இந்தக் காதல். நான் அவனை அடைந்தே தீர வேண்டும். அவன் யாரென விசாரியுங்கள், என்றாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாளோ என நினைத்த தோழிகளுக்கு அவளது காதலின் தீவிரம் புரிந்தது.

என்ன இருந்தாலும், தங்கள் ராணியல்லவா! அவர்கள், அந்த வாலிபனிடம் சென்றனர். அவனைப் பற்றி தெரிந்து கொண்டனர். தலைவிக்கு தகவல் சொன்னார்கள். என்ன... அவன் இந்திரனின் மகன் அர்ஜூனனா? எல்லா உலகமும் விரும்பும் அவனை இப்போது தான் பார்த்திருக்கிறேன். அவன் அர்ஜூனன் என்பது நிஜமானால், இப்போதே சொல்கிறேன். அவன் தான் என் கணவன், என்றாள். கரைக்கு அவசரமாகச் சென்றவள் அவனருகே சென்றாள். எதை எதிர்பார்த்தானோ, அது இவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவே, அர்ஜூனன் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. அவளை அணைத்துக் கொண்டான். அவள் நாகலோகத்துக்கு அவனை அழைத்தாள். இருவரும் கங்கையில் மூழ்கினர். பிலாத்துவாரம் எனப்படும் நதியின் அடியிலுள்ள துவாரத்தின் வழியே நாகலோகத்துக்கு சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவள் கர்ப்பமானாள். ஒரு மகனைப் பெற்றாள். அவன் அரவான் என பெயர் பெற்றான். பின் மனைவியிடம் தான் வந்த நோக்கத்தைச் சொல்லி, பிராமண வேஷம் தரித்து, இமயமலைக்கு புறப்பட்டான். பின்னர் யமுனை, திருப்பதி, காஞ்சிபுரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், சிதம்பரம் தரிசனம் முடித்து, மதுரை வந்தான். மதுரையை ஆண்ட மன்னன் அவனை வரவேற்றான். அவனைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான். அரண்மனையில் தங்க பிராமண வடிவத்தில் இருந்த அர்ஜூனனுக்கு அனுமதியளித்தான்.

அன்று மாலையில் அவன் அரண்மனைப் பூங்காவுக்கு சென்றான். அங்கேயும் ஒரு கட்டழகி இருந்தாள். அவளது இடை சிறியது. கண்கள் காந்த சக்தி கொண்டது. தோழிகளிடம் பேசும்போது, அவளது சிவந்த அதரங்கள் சிந்திய புன்னகைக்கு விலையே கிடையாது. அர்ஜூனனுக்கு அவளைப் பார்த்தவுடனேயே மயக்கம் ஏற்பட்டது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆற்றுமணலைக் கூட எண்ணி விடலாம், அர்ஜூனன் பெண்டாட்டிகளை எண்ண முடியாது என்று. கட்டழகனைத் தேடி கட்டழகிகள் வருவது சகூம் தானே! தோழிகளின் பேச்சில் இருந்து அவள் மன்னன் மகள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆம்...அவள் இளவரசி சித்திராங்கதை.  அர்ஜூனன் தன்னை ஒளிந்திருந்து கவனித்ததை அவள் பார்க்கவில்லை. அவள் மீது கொண்ட மோகத்தால், தனது பிராமண வேடத்தை கலைத்து விட்டு, பேரழகு திலகனாக அவள் முன்னால் போய் நின்றான். சூரியன் தான் வானத்திலிருந்து திடீரென கீழிறங்கி வந்துவிட்டதோ, என அதிர்ந்து போன அவள், அதிர்ச்சியுடன் அவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #34 on: February 20, 2012, 12:51:48 PM »
மகாபாரதம் பகுதி-35

அர்ஜூனனைக் கண்டஅவுடனேயே ராஜகுமாரி சித்திராங்கதை அவன் மீது காதல் கொண்டுவிட்டாள். அர்ஜூனனுக்கும் அவள் மீது கொள்ளை ஆசை பிறந்தது. இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டனர். விஷயம் பாண்டியமகாராஜாவை எட்டியது. வந்திருப்பது அர்ஜூனன் என்பதை அறிந்த பாண்டியராஜா மகிழ்ச்சியடைந்தார். தன் மகள் சரியான கணவனைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதை எண்ணி மகிழ்ந்தார். முறைப்படியாக அர்ஜூனனுக்கு தன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தார். மருமகனிடம், அர்ஜூனரே! எங்கள் குலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மிகச்சிறந்த குழந்தையாக இருக்கும் என்று எங்கள் முன்னோர்களில் ஒருவர் தவப்பயன் காரணமாக வரம் பெற்றார். அவரது காலத்துக்குப் பிறகு வந்த என் முன்னோர்களுக்கு ஆண்குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிறப்பாக ஆட்சியும் செய்தனர். எனக்கோ பெண் பிறந்தாள். எனவே, அவளது காலத்துக்குப் பின் ஆளும் குழந்தைக்கு நீர் உரிமை கொண்டாடக் கூடாது. அவன் இந்திரபிரஸ்தத்துக்கு வரமாட்டான். எங்கள் பாண்டிய நாட்டையே ஆளுவதற்கு அனுமதிக்க வேண்டும், என்றான்.

அர்ஜூனனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பப்புருவாகனன் என குழந்தைக்கு பெயரிட்டனர். அந்தக்குழந்தையையும், மனைவியையும் மாமனார் பொறுப்பில் விட்டுவிட்டு அர்ஜூனன் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான். சேது சமுத்திரத்தில் நீராடிய பிறகு, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளித்து பாவங்களைக் கழுவினான். கன்னியாகுமரியில் புனித நீராடினான். பின்னர் வடதிசை நோக்கி பயணம் செய்து, துவாரகையை அடைந்தான். அங்கே கண்ணன் தன் தாய் தேவகி, அண்ணன் பலராமன், சகோதரி சுபத்ரா ஆகியோருடன் வசித்தார். கண்ணனின் தரிசனம் பெற அவரைச் சந்தித்தான். கண்ணன் அர்ஜூனனுக்கு ஆசிர்வாதம் செய்தார். இவ்வளவு நாளும் பிராமணவேடம் தரித்த அவன், இப்போது சன்னியாசியாக மாறியிருந்தான். கண்ணனுடைய சகோதரி சுபத்ரா, அர்ஜூனனை யார் என அறியாமலேயே அவன் மீது காதல் கொண்டிருந்தாள். அர்ஜூனனின் வில் வித்தை பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்த வீரனுக்கு மனைவியாக வேண்டும் என்பது அவளது நீண்டநாள் கனவு. இதை கண்ணனும் அறிவார். தங்கையை அர்ஜூனனுக்கு மணம் முடித்து வைப்பதில் அவருக்கு அலாதி பிரியம். ஆனால், கண்ணனின் யதுகுல மக்கள் இதுபோன்ற திருமணங்களை ஆதரிக்கமாட்டார்கள் என்பது தெரியும்.

சகோதரன் பலராமனோ, யதுகுலத்தைச் சேர்ந்தவனுக்கே தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன். அர்ஜூனனிடம் கண்ணன், அர்ஜூனா, நீ என் மைத்துனன் ஆக வேண்டும். அதற்கு என் தங்கையை மணக்க வேண்டும். நீ அவளுடன் அந்தப்புரத்தில் தங்கியிரு இதே சன்னியாசி வேடத்தில். சமயம் வரும் போது, அவளை கடத்திச்சென்று விடு. ஒரு பெண் மன்னர்களை விரும்பும்போது, மன்னர்கள் அவளைக் கடத்திச்செல்வது என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். என் தங்கை உன்னை விரும்புகிறாள். அவளை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார். அர்ஜூனனுக்கும் சுபத்ரையை பற்றி நன்றாகத் தெரியும். அவள் பேரழகி, அறிவிலும், வீரத்திலும் சிறந்தவள் என்று. தேர்களை செலுத்துவதில் அவளுக்கு நிகர் அவளே. அவளைத் திருமணம் செய்து கொள்வதில், அவனுக்கு கொள்ளை ஆசை. கண்ணனின் திட்டப்படி, சன்னியாச வேடத்திலேயே அந்தப்புரத்தில் தங்கினான் அர்ஜூனன். கண்ணன் தங்கையிடம், சுபத்ரா! வந்திருப்பவர் மகாதபஸ்வி. அவருக்கு நல்லமுறையில் பணிவிடை செய், என்றார்.

வந்திருப்பது அர்ஜூனன் என்பதை அறியாத சுபத்ரா அவனை சன்னியாசியாக கருதி, கால் பிடித்தாள், கை பிடித்தாள். விதவிதமாய் உணவு படைத்தாள். ஒருமுறை அவனது மார்பை பார்த்துவிட்டாள். வயதானவர் போல் இல்லாமல், வீரத்தழும்பு களுடன் காட்சியளித்தது. அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனைப் பற்றி அறிவதற்காக, சுவாமி! தாங்கள் இந்திரபிரஸ்தத்தில் இருந்து வருவதாக அறிந்தேன். அங்கே தர்மமகாராஜா, பீமன், நகுலன், சகாதேவன், குந்திதேவியார் எல்லாரும் நலம்தானே? என்றாள். ஆம் என்ற அர்ஜூனன், பெண்ணே! எல்லாரையும் விசாரித்தாய், அர்ஜூனனை பற்றி ஏன் விசாரிக்கவில்லை, என்றான். அவள் வெட்கத்தால் தலை குனிந்தாள். அர்ஜூனன் அவளை வற்புறுத்தவே, அருகிலிருந்த தோழிப்பெண்கள், துறவியே! எங்கள் தலைவி, அர்ஜூனனை விரும்புகிறாள். அதன் காரணமாக வெட்கத்தால், அவரைப் பற்றி விசாரிக்கவில்லை, என்றாள். நீ விசாரிக்காவிட்டாலும் சொல்கிறேன் பெண்ணே! அந்த அர்ஜூனன், இப்போது இதே ஊரில் தான் இருக்கிறான், என்றவனை சுபத்ரா ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவர் எங்கு தங்கியிருக்கிறார்? என ஆர்வத்துடன் கேட்க, இதோ! உன் முன்னால் சன்னியாசி வேடத்தில் இத்தனை நாளும் இருந்தான். இப்போது வேஷம் கலைத்து உன் முன்னால் வருவான், என்ற அர்ஜூனன்,

வேஷத்தைக் கலைத்தான். அவள் மகிழ்ச்சியும், நாணமும் கலந்து நின்ற போது, கண்ணன் அங்கு வந்தார். பார்த்தீபா! நீ சுபத்ரையை தேரில் ஏற்றிக்கொள். அவள் தேரை ஓட்டட்டும். நீ தேரில் அமர்ந்து, உன்னை தடுக்க வருபவர்களை வெற்றிகொண்டு, ஊர் போய் சேர், என்றார். பின்னர் பலராமனிடமும் யதுகுலத்தவரிடமும் சென்று, அர்ஜூனன் சுபத்ராவை கடத்திச்செல்கிறான் என நல்லபிள்ளை போல் முறையிட்டார். சுபத்ரா தேர் ஓட்ட, அர்ஜூனனைப் பின்தொடர்ந்த பலராமன் மற்றும் யதுவீரர்களை அம்புமழை பெய்து விரட்டியடித்தான் அர்ஜூனன். பின்னர் நாடு போய் சேர்ந்தான். அங்கே சுபத்ரையை மணந்து கொண்டான். விஷயமறிந்த கண்ணன், பலராமனை சமாதானப்படுத்தி, சீதனப்பொருட்க ளுடன் இந்திரபிரஸ்தம் சென்றான். அங்கே சுபத்ராவுக்கும், அர்ஜூனக்கும் திருமணம் செய்து வைக்க வசிஷ்டரை மனதால் நினைத்தான். வசிஷ்டர் வந்தார். அவரது தலைமையில் மந்திரம் ஓதி திருமணமும் முடிந்தது. சுபத்ரா கர்ப்பமானாள். அவளுக்கு குரு÷க்ஷத்ர போரில் சரித்திரம் படைக்கப்போகும் ஒரு வீரமகன் பிறந்தான்


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #35 on: February 20, 2012, 12:53:14 PM »
மகாபாரதம் பகுதி-36

அர்ஜூனன் அந்த வீரமகனுக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டினான். இந்த சமயத்தில், அக்னி பகவான் அர்ஜூனனை சந்திக்க தேவலோகத்தில் இருந்து, அந்தணர் வேடத்தில் வந்தான். அவனுக்கு காண்டவவனத்தின் மீது ஒரு கண். அடர்ந்த அந்த காட்டில் லட்சக்கணக்கில் மரங்கள், செடி, கொடிகள், சிங்கம், கரடி, யானைகள், முக்கியமாக தக்ஷகன் என்ற நாகங்களின் தலைவன், அவனது மனைவி நாகமாது, மகன் அசுவசேனன் ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் தன் நாக்கிற்கு இரையாக்கி விட அவனுக்கு ஆசை. இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், அவனுக்கு அர்ஜூனனின் உதவி தேவை. அதெப்படி? ஒரு தேவன், மானிடனின் உதவியை நாடுவதாவது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும். காரணமில்லாமல், எதுவும் நிகழ்வதில்லை. அக்னியும், இந்திரனும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் பகைவர்கள். அக்னி எங்கெல்லாம் செல்கிறானோ, அவனை மழைக்கு அதிபதியான இந்திரன் தடுத்து விடுவான். பெருமழையைப் பெய்து தீயை அணைத்து விடுவான். அக்னியோ கொடும்பசியுடன் திரிவான். போதாக்குறைக்கு காண்டவவனம் இந்திரனுக்கு சொந்தமான இடம்.

தன் சொந்த இடம் அழிய அவன் சம்மதிப்பானா? எனவே அர்ஜூனனின் உதவியுடன், 60 யோஜனை தூரமுள்ள (ஒரு யோஜனை என்பது 24 கி.மீ.,) காட்டை சாப்பிட வேண்டும் என வந்து விட்டான். மூன்று லோகங்களிலும் வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பது தேவர்களே ஒத்து  கொண்ட விஷயம். ஒருவேளை இந்திரன் மழையைப் பொழிந்தாலும், அர்ஜூனன் வானத்தில் சரமழை பொழிந்து அதை நிறுத்திவிடுவான் என்பது அக்னிக்கு தெரியும். மேலும், அர்ஜூனனின் மைத்துனர் கிருஷ்ணன் வேறு பூமியில் இருக்கிறார். ஒருமுறை, ஆயர்பாடி மக்கள் நடத்திய விழாவிற்கு தன்னை அழைக்காததால் ஆத்திரமடைந்த இந்திரன் பெருமழையை  பெய்வித்தான். அப்போது, பகவான் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்து, அதனை குடையாகப் பிடித்து மக்களை  காத்தார். அர்ஜூனன் தனக்கு உதவும் போது, கிருஷ்ணரும் தனக்கு உதவியாக வேண்டும் என்பது அக்னியின் கணக்கு. அவன் நினைத்தது போலவே நடந்தது. அக்னியின் வேண்டுகோளை அர்ஜூனன் ஏற்றான். காண்டவவனம் தனக்கு கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில், அக்னி பகவான் அர்ஜூனனுக்கு எடுக்க எடுக்க அம்புகள் குறையாத இரண்டு அம்பறாத்துணிகள், காண்டீபம் என்ற பெயர் கொண்ட ஒரு வில், அனுமனின் சின்னம் பொறித்த கொடி, தேர், நான்கு வெள்ளைக் குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், ஒரு தேரோட்டியையும் வழங்கினான்.

அர்ஜூனன் பிற்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட குரு÷க்ஷத்ர களத்தில் பகவான் கிருஷ்ணனுடன் போராடப் போகிறான் என்பதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட தேவர்கள் இவ்வாறு அவனுக்கு உதவினர். கிருஷ்ணரும், அர்ஜூனனும் காண்டவவனத்துக்குள் அக்னியுடன் புகுந்தனர். காட்டில் அக்னி தன் ஜ்வாலைகளை படர விட்டது தான் தாமதம்! உலகம் தீயால் அழியும் போது, எப்படி எரியுமோ, அதுபோல் காட்டில் பெரும் தீ மூண்டது. மரங்கள் கரிக்கட்டையாயின. செடி கொடிகள் பாழாயின. மிருகங்கள் ஓலமிட்டபடியே அழிந்தன. பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தன் இனத்தாரைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோற்றது. பாம்புகள் கூண்டோடு அழிந்தன. கலவரமடைந்த தக்ஷகனின் மனைவி நாகமாது தன் குழந்தையான அஸ்வசேனனை வாயில் கவ்விக்கொண்டு, தீயில் இருந்து தப்பி ஓடியது. இவ்வளவு தீயிலும் தப்பி ஓடிவரும் அந்தப்பாம்பு அர்ஜூனனின் கண்களில் பட்டுவிட தன் அம்பால் அதன் தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையில் சிக்கியிருந்த அஸ்வசேன பாம்பு அந்த தலையுடன் வெகு தூரத்தில் போய் விழுந்தது. பின்பு தன் வாயிலிருந்து விடுபட்ட அந்த பாம்பு, வெகுதூரத்தில் போய் விழுந்தது. தாயின் மரணத்திற்காக வேதனைப்பட்ட அசுவசேன பாம்பு, வேகமாக ஊர்ந்து சென்றது. அது செல்லும் வழியிலுள்ள மற்ற பாம்புகளிடம் விசாரித்ததில், அர்ஜூனனின் கொடும் பகைவன் கர்ணன் என்பது தெரிய வந்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், அர்ஜூனனின் எதிரியான கர்ணனின் அவைக்குள் நுழைந்த அந்தப்பாம்பு, அவனைச் சரணடைந்தது. பின்னர் ஒரு அம்பாக மாறி, கர்ணனின் அம்பறாத்துணியில் நாகாஸ்திரமாக அமர்ந்து கொண்டது. இதை எய்தால், எதிரே இருப்பவனை மாய்த்து விட்டு எய்தவனிடமே மீண்டும் திரும்பி விடும். மீண்டும் இதைப் பயன்படுத்தலாம். இப்படி காடு எரிந்து கொண்டிருக்க, காண்டவ வனத்தின் சொந்தக்காரனான இந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்களுடன் காண்டவ வனத்திற்கு வந்துவிட்டான். பெருமழை பெய்தது. அர்ஜூனன் இதை எதிர்பார்த்திருந்தான். சரமாரியாக அம்புகளை வானத்தில் ஏவி, மழையை காட்டுக்குள் விழாமல் தடுத்தான். எனவே, இந்திரன் தான் பெற்ற சொந்த மகனான அர்ஜூனனனுடன் மோதும் நிலை ஏற்பட்டது. கடும்போர் நடந்தது. இந்திரனாலோ, தேவர்களாலோ அர்ஜூனனை அசைக்க முடியவில்லை. அதே நேரம், அர்ஜூனனுக்கு பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதிலும் கவலை.

கண்களை நாலாபுறமும் ஓடவிட்டு, அவன் இந்திரன் விடுத்த பாணங்களுக்கு, பதில் பாணங்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இதற்குள் அக்னி காட்டை முழுவதுமாக எரித்து விழுங்கிவிட்டான். அவனுக்கு பரமதிருப்தி. அவனது வயிறு குளிர்ந்தது. இந்திரனின் வயிறு எரிந்தது. இந்தக் காட்டில் தான் மயன் என்ற தேவசிற்பியும் வசித்தான். அவனும், சார்ங்கம் என்ற பறவை இனத்தின் நான்கு குஞ்சுகளும் மட்டும் தீயில் இருந்து தப்பினர். தக்ஷக பாம்பு என்னாயிற்று என்பது அர்ஜூனனுக்கு தெரியவில்லை. காடு முழுமையாக காவு போனதால் ஆத்திரமடைந்த இந்திரன், தாக்குதலை தீவிரப்படுத்தினான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் எழுந்தது. நிறுத்துங்கள் போரை! இந்திரனும் தேவன் தான். அர்ஜூனனும், கிருஷ்ணரும் தேவர்கள் தான்! எனவே வெற்றி தோல்வி யாருக்கு என்பதை இப்போர் நிர்ணயிக்காது. இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தக்ஷகப்பாம்பு இங்கிருந்து தப்பி விட்டது. அது குரு÷க்ஷத்திரத்தை சென்றடைந்து விட்டது, என்றது.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #36 on: February 20, 2012, 12:54:54 PM »
மகாபாரதம் பகுதி-37

எப்படியாயினும், இந்திரனுடன் நடந்த இந்தப் போர் தங்களுக்கே வெற்றி தந்ததாக கிருஷ்ணரும், அர்ஜூனனும் எண்ணினர். தர்மரும் மகிழ்ச்சியடைந்தார். இந்த சமயத்தில், இந்திரப்போரில் உயிர் தப்பிய தேவசிற்பி மயன், தர்மரையும், கிருஷ்ணரையும் சந்தித்து நன்றி கூற வந்தான். காட்டில் இருந்த தன்னை தீயில் இருந்து காப்பாற்றியது கிருஷ்ணரே என்பது அவனது நம்பிக்கை. தர்மரிடம் அவன், குரு குல மன்னனே! உங்கள் தம்பி என்னை உயிருடன் விட்டதற்கு பரிகாரமாக, தேவலோக அரண்மனையான சுதர்மையை விட மிக அழகான அரண்மனை ஒன்றை உங்களுக்கு கட்டித்தர உள்ளேன். இதை கட்டுவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால், உங்களுக்காக இதை 14 ஆண்டுகளிலேயே கட்டி முடித்து விடுவேன். இதற்காக ஒரு சிறு மரத்துண்டையோ, கல்லையோ பயன்படுத்த மாட்டேன். அத்தனையும் ரத்தினங்கள். அவை உலகில் எங்கும் கிடைக்காதவை. பிந்து என்ற குளத்தில் இவை ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. விருஷபர்வா என்ற அசுரன் ஒரு காலத்தில் தான் வென்ற மன்னர்களிடமிருந்து பறித்த இந்த ரத்தினங்களை அந்தக்குளத்தில் பதுக்கி வைத்துவிட்டான். அவற்றை எனது 60 லட்சம் ஊழியர்களையும் அனுப்பி எடுத்து வருவேன். அந்த அபூர்வ ரத்தினங்களால் மாளிகை அமைத்து தருகிறேன், என்றார்.

கிருஷ்ணரும், தர்மரும் சம்மதம் தெரிவித்தனர். சொன்னபடியே 14 ஆண்டுகளில் கட்டி முடித்துவிட்டான் மயன். இந்த புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசம் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. கிருஷ்ணர் தர்மரிடம், தர்மா! கிடைத்தற்கரிய அரண்மனை உனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், ராஜ்யத்தின் எல்லைப்பரப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். எனவே, நீ ராஜசூகயாகம் நடத்த அறிவிப்பு செய். உனது வெண்புரவியை அனுப்பு. அது எங்கெல்லாம் செல்கிறதோ, அந் நாடுகளை உனக்கு சொந்தமாக்கிக் கொள், என்றார். மைத்துனர் சொல்லுக்கு மறுசொல் உண்டா? தர்மர் சம்மதித்து விட்டார். மற்றவர்களை எளிதில் வென்று விடலாம். ஆனால், ஜராசந்தன் என்ற மகத தேசத்து மன்னனை வெல்வது எளிதான விஷயமல்ல என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இவன் கிருஷ்ணனையே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய பெருமை படைத்தவன். இவன் யார் தெரியுமா? கிருஷ்ணன், கண்ணனாக கோகுலத்தில் சிறுவயதில் வளர்ந்த போது, தன் தாய்மாமன் கம்சனைக் கொன்றான். கம்சனுக்கு ஹஸ்தி, பிராப்தி என்ற மனைவியர் இருந்தனர். அவர்கள் ஜராசந்தனின் மகள்கள். அதாவது, கம்சனின் மாமனார் தான் ஜராசந்தன்.

தன் மருமகனைக் கொன்ற கண்ணனை. அவன் ஓட ஓட விரட்டியடித்தான். கிருஷ்ணர் தன் மக்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுடன் கடலின் நடுவில் இருந்த ஒரு தீவுக்கு அழைத்துச் சென்று அங்கேயே பதினெட்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். அந்த தீவு தான் இப்போது குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகை ஆகும். இப்படி தன்னை அவமானப்படுத்திய ஜராசந்தனைக் கொல்வதற்கு கிருஷ்ணன் தகுந்த நேரம் பார்த்திருந்தார். அதற்கு இந்த யாகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஜராசந்தனைக் கொல்ல தகுதி படைத்த ஒரே வீரன் பீமன் மட்டுமே! அவன் கோடி யானை பலமுள்ளவனாக தன் வலிமையைப் பெருக்கியிருந்த நேரம் அது. அவனையும், அர்ஜூனனையும் அழைத்துக்கொண்டு, கிருஷ்ணர் மகத நாட்டுக்கு கிளம்பினார். ஜராசந்தனுக்கு பிறநாட்டு மன்னர்களை பிடிக்காது. மன்னராக வருபவர் யாரும் அவனது எல்கைக்குள்ளேயே கால் வைக்க முடியாது. எனவே, அவர்கள் பிராமணர் போல் வேடம் தரித்து அரண்மனைக்குள் சென்றனர். அந்தணர்களுக்கு மதிப்பளிக்கும் ஜராசந்தன் அவர்களை வரவேற்றான். ஆனால், கணநேரத்திலேயே வீரர்களுக்குரிய தழும்புகள் அவர்களது மார்பில் இருப்பதைக் கவனித்து விட்ட அவன் சுதாரித்து, நீங்கள் யார்? என்று கேட்டு வேஷத்தை கலைத்து விட்டான்.

வந்திருப்பது கிருஷ்ணன் என்றதும் அவனது ஆத்திரம் அதிகமானது. ஏ கிருஷ்ணா! நீ ஏற்கனவே என்னிடம் தோற்றோடி, கடலுக்குள் ஒளிந்து கிடப்பவன். உன்னிடம் போர் செய்வது எனக்குத்தான் அவமானம். இதோ! நீ அழைத்து வந்திருக்கிறாயே! வில்வித்தை விஜயன். இவன் சிறுவன். ஒரு சிறுவனிடம் மோதி என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இதோ நிற்கிறானே! ஒரு தடியன். இவன் பலசாலியாகத் தெரிகிறான். இவனோடு மோதி சொர்க்கத்துக்கு அனுப்புவேன், என்றபடி தொடைகளை தட்டியபடி போருக்கு அறை கூவல் விடுத்தான். கிருஷ்ணர் என்ன நினைத்து வந்தாரோ அது நடந்து விட்டது. நினைப்பதையெல்லாம் நடத்திக் கொள்ளும் பெருமை அந்த கிருஷ்ணனுக்கு உண்டு. அப்படியானால், அவர் ஜராசந்தனிடம் தோற்றோடியது போல் ஏன் நடித்தார்? அவர் மானிடனாகப் பூமியில் பிறந்திருக்கிறாரே! மானிடனாக பிறந்தவன், வாழ்க்கையின் பல கட்டங்களில் சரிந்து விழுந்தாக வேண்டுமே! அதற்கு அந்த கிருஷ்ணன் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன! போர் துவங்கியது. கடும் போர். 15 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருவரும் போரிட்டனர்.

சம அளவிலான பலசாலிகள் என்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. ஏனெனில், 15ம் நாள் முடிவில், இருவருமே மயங்கி விழுந்துவிட்டனர். இவர்களில் யார் மயக்கம் தெளிந்து எழுந்து முதலில் அடிக்கிறாரோ அவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை. அதிர்ஷ்டவசமாக பீமனுக்கு முதலில் மயக்கம் தெளிந்தது. அவன் தடுமாறியபடியே எழுந்தாலும், சுதாரித்து ஜராசந்தனின் அருகே சென்றான். என்ன ஆச்சரியம்! இவனது கால்கள் தெரிந்ததோ இல்லையோ, ஜராசந்தனும் ஒரு துள்ளலுடன் எழுந்தான். மீண்டும் கடும் போர். ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போன ஜராசந்தனை, தன் பலம் கொண்ட மட்டும் அழுத்திப்பிடித்த பீமன், அவனை இரண்டாக கிழித்தே விட்டான். அந்த மாமிசத்துண்டுகளை வீசி எறிந்து ஆர்ப்பரித்தான். மகதநாட்டு மக்கள் தலைகுனிந்த வேளையில், ஜராசந்தனின் உடல் ஒட்டிக்கொண்டது. அவன் துள்ளி எழுந்தான். இந்த அதிசயம் கண்டு கிருஷ்ணரைத் தவிர எல்லாரும் அதிர்ந்தனர். ஏனெனில், உடல் ஒட்டும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும்.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #37 on: February 20, 2012, 12:56:19 PM »
மகாபாரதம் பகுதி-38

போர் தொடர்ந்தது. ஜராசந்தன் புதுவலிமை பெற்று பீமனுடன் யுத்தம் செய்தான். அர்ஜூனன் ஆச்சரியத்துடன், கண்ணா! இதெப்படி சாத்தியம். அண்ணா பீமன், ஜராசந்தனை இரண்டாக கிழித்தபிறகும், அவனது உடல் ஒட்டிக்கொண்ட ரகசியம் என்ன? என்றான். கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அது ஒரு பெரியகதை என்று ஆரம்பித்தார். பிருகத்ரதன் என்ற அசுரன் தேவர்களுக்கு பரம எதிரி. இவனுக்கு இரண்டு மனைவிகள். காசிராஜனின் புத்திரிகள். ஆனால், புத்திர பாக்கியம் இல்லை. அவன் கவுசிகமுனிவரை அணுகி இதற்குரிய வழிகேட்டான். அப்போது முனிவர் ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அந்த மரத்தில் இருந்து ஒரு கனி முனிவரின் மடியில் விழுந்தது. அவர், அந்தப் பழத்தை பிருகத்ரதனிடம் கொடுத்து, இந்த அதிசயக்கனியை உன் மனைவியருக்கு கொடு. அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் என்றார். அவர்கள் ஆளுக்கு பாதியாக பழத்தைச் சாப்பிட்டனர். கர்ப்பம் தரித்து மகிழ்ந்திருந்தனர். ஒரே நாளில் பிரசவம் நிகழ்ந்தது. ஒரு மனைவி பாதி பிள்ளையையும், இன்னொருத்தி பாதி பிள்ளையையும் பெற்றனர். இதுகண்டு பயந்து போன பிருகத்ரதன், அந்த பாதிக் குழந்தைகளை கிரிவிரசம் என்ற நகருக்கு கொண்டு போய் வீசி எறிந்து விட்டான்.

அந்த வழியே ஜரை என்ற அரக்கி வந்தாள். அவள் இந்த அதிசயக்குழந்தைகளைக் கண்டாள். அவற்றை சாப்பிட மனமின்றி, ஒன்றோடு ஒன்றாகப் பொருத்தினாள். அவை இரண்டும் பொருந்தி அழகிய வடிவத்துடன் உயிர் பெற்றன. அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்து, அதை பிருகத்ரதனிடமே ஒப்படைத்தாள். இவன் வெட்டிப்பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு ஜராசந்தன் என்று பெயர் வைத்தான் பிருகத்ரதன். இவன் இப்படி பிறந்ததால் இவனது சாவும் அதன்படியே தான் ஆகும், என்ற கிருஷ்ணர், கதையைத் தொடர்ந்தார். அர்ஜுனா! ஜராசந்தனுக்கு ஒரு ஆசை, பூலோகம் முழுவதுமே தனக்கு அடிமைப்பட வேண்டுமென்று! இதனால், பல நாட்டு மன்னர்களை ஜெயித்து அவர்களின் நாட்டை தன் பிடிக்குள் கொண்டு வந்தான். அவர்கள் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக அரசர்களைப் பலியிடும் நரமேதயாகம் செய்ய முடிவெடுத்தான். இதற்காக, அந்த அரசர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். அவர்களை விடுவிப்பது நமது கடமை, என்றார். பின்னர் பீமனிடம், அவனை இரண்டாகக் கிழித்து இடம் மாற்றிப்போடும் படி சைகை செய்தார். பீமனும் அவ்வாறே செய்ய ஜரா சந்தனின் கதை முடிந்தது. பின்னர் ஜராசந்தனால் சிறை வைக்கப்பட்ட அரசர்களை விடுதலை செய்தார் கிருஷ்ணர். ஜராசந்தனின் மகன் சகதேவன், கிருஷ்ணரை நமஸ்கரித்து சரணடைந்தான்.

அவனுக்கு பட்டம் சூட்டிய கிருஷ்ணர், மகதநாட்டை அவனிடமே ஒப்படைத்து விட்டார். பதிலுக்கு அவன், தன் செல்வத்தின் பெரும்பகுதியை பீமனுக்கு கொடுத்தான். இதன் பிறகு இந்திரப்பிரஸ்தம் வந்த அவர்கள், ராஜசூகயாகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பல திசைகளுக்கும் சென்று அந்நாட்டு அரசர்களை ஜெயித்தனர். யாகத்திற்கான பெரும்பொருளை சில அரசர்கள் தாங்களாகவே கொடுத்து விட்டனர். பீமனின் மகன் கடோத்கஜனை வரவழைத்த சகாதேவன், நீ இலங்கை சென்று அந்நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வா, என அனுப்பினான். அப்போது இலங்கையை ராவணனின் தம்பி விபீஷணன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட காரியம் என்றது மட்டுமல்லாமல், கடோத்கஜன் தன் குலத்தைச் சேர்ந்த இடும்பியின் மகன் என்பதால் பெருமையடைந்து, 14 தங்க பனைமரங்களைக் கொடுத்தான். சித்தப்பாவின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் விடைபெற்றான். ராஜசூய யாகத்திற்கு பீஷ்மர், கவுரவர்கள், கர்ணன் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டனர். எல்லா நாட்டு மன்னர்களும் வந்தனர். அவர்களில் ஒருவன் சிசுபாலன். இவன் ஒரு பிறவியில் வைகுண்டத்தில் காவல்புரிந்தவன்.

விஜயன் என்ற பெயர் கொண்டவன். இவனோடு பணிசெய்த மற்றொருவன் ஜெயன். இவர்கள் ஒரு முறை நாராயணனைக் காணவந்த துர்வாசமுனிவரை தடுத்து நிறுத்தவே, கோபமடைந்த அவர், இவர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் ஏழு பிறவிகள் பகவானின் பக்தர்களாக பூமியில் பிறப்பார்கள் என்று சொல்லவே, ஜெயவிஜயர்கள் அழுதனர். எனவே, மூன்று பிறவிகள் பிறந்து பகவானுக்கு எதிராகச் செயல்படத்தயாரா எனக் கேட்ட போது, பிறவிகள் குறைந்தால் போதும் என ஒப்புக்கொண்டனர். அதன்படி கிருதயுகத்தில் இவர்கள் இரண்யனாகவும், இரண்யாட்சனாகவும் பிறந்து, பெருமாளுக்கு எதிராக நடந்தனர். பெருமாள் நரசிம்மராகவும், வராகமூர்த்தியாகவும் அவதாரம் எடுத்து அழித்தார். திரேதாயுகத்தில் கும்பகர்ணனாகவும், ராவணனாகவும் பிறந்தனர். லட்சுமிதாயின் அம்சமான சீதாதேவிக்கு இன்னல் செய்து, ராமனாய் பிறந்த விஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். வாபராயுகத்தில் கம்சனாகவும், சிசுபாலனாகவும் பிறந்தனர். இப்போது கிருஷ்ணராக அவதாரமெடுத்த பகவான் கம்சனை ஏற்கனவே கொன்றுவிட்டார். சிசுபாலன் தன் அழிவிற்காக காத்திருக்கிறான். சிசுபாலனின் தாய் கிருஷ்ணனின் பக்தை. அவள் பகவானிடம், கிருஷ்ணா! என் பிள்ளையைக் கொன்றுவிடாதே. அவன் மீது நான் வைத்துள்ள பாசம் ஏராளம், என்றாள். பேச்சில் வல்லவரான கிருஷ்ணன், தாயே! உன் மகன் நூறு தவறு செய்யும்வரை பொறுத்திருப்பேன். அதைத் தாண்டினால் கொன்றுவிடுவேன், என சொல்லிவிட்டார்.

சிசுபாலன் ராஜசூகயாகத்தின் போது நூற்று ஒன்றாவது தவறைச் செய்ய வந்திருக்கிறான். யாகத்தின் போது அக்கிர பூஜை என்ற சடங்கை நடத்துவார்கள். உலகில் யார் உயர்ந்த மன்னரோ, அவருக்கு அந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணர் துவாரகாபுரியின் மன்னரல்லவா! அவ்வகையில் அவரே இந்த பூஜைக்குரியவர் என்றார் யாகத்திற்கு வந்திருந்த வியாசமுனிவர். இதை சிசுபாலன் எதிர்த்தான். யார் இந்த கருப்பனுக்கா அக்கிர பூஜை செய்யப் போகிறீர்கள்? மாடு மேய்க்கும் இவனுக்கு பூஜை பெற என்ன தகுதியிருக்கிறது? கோகுலத்தில் வெண்ணெய் திருடிய இந்த திருடனுக்காக அக்கிர பூஜை? மேலும், இவன் பெண் பித்தனல்லவா? கோபியர்கள் குளிக்கும்போது, துணிகளை திருடி மரத்தின் மேல் இருந்தபடி அவர்களை நிர்வாணமாக ரசித்தவன் அல்லவா? ஜராசந்தனுக்கு பயந்து ஓடி துவாரகையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவனுக்கு பூஜை செய்வதை நான் எதிர்க்கிறேன். வீரம்மிக்க பல அரசர்கள் இங்கிருக்கும் போது, இந்த பேடிக்கா பூஜை என்றான் ஏளனம் கலந்த சிரிப்புடன். கிருஷ்ணரின் கண்கள் சிவந்தன.


Offline Anu

Re: மகாபாரதம்
« Reply #38 on: February 20, 2012, 12:57:48 PM »
மகாபாரதம் பகுதி-39

அவர் சிசுபாலனிடம், சிசுபாலா, நாம் இருப்பது வேறொருவரின் நாட்டில்! இல்லாவிட்டால், உன் சிரத்தை இப்போதே அறுத்திருப்பேன். நாம் இருவருமே நகரின் வெளியே செல்வோம். அங்கு போர் செய்வோம். உனக்கு இன்றுதான் இறுதிநாள், என்றார். சிசுபாலன் சற்றும் மனம் கலங்காமல், போருக்கு புறப்பட்டான். கடும் போர் நடந்தது. சற்றும் சளைக்காமல் சண்டையிட்டான் சிசுபாலன். தகுந்த நேரத்தில், தன் சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை அறுத்தார் கிருஷ்ணன். உடனே, சிசுபாலனின் உயிர் பிரகாசம் மிக்க ஒளிப்பந்தாக மாறி, வைகுண்டம் சென்றடைந்தது. இதுகண்டு, போரை வேடிக்கை பார்த்த அரசர்கள் ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர், பூலோகத்தில் இருந்தபடியே வைகுண்டத்தை அனைவர் கண்ணிலும் காட்டியது பெறற்கரிய பேறாக அங்கு வந்தோர்க்கு அமைந்தது. அவர் அவைக்கு திரும்பியதும், எல்லா மன்னர்களும் அவரை நமஸ்கரித்தனர். சிலர் பரந்தாமா, கோவிந்தா என நாக்குளற பாடினார்கள். ஒருவழியாக யாகம் சிறப்பாக முடிந்தது. மன்னர்கள் ஊர் திரும்பி விட்டனர்.

துரியோதனன் ஊருக்கு திரும்பியவுடன் அவையைக் கூட்டினான். பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி இவர்களுடன் மன்னர் திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அமைச்சர் பெருமக்கள் வீற்றிருந்தனர். துரியோதனன் அமைதியாக இருந்தான். ஆனால், அவன் முகரேகைகளின் குறிப்பைக் கொண்டே அவனது சிந்தனை என்ன என்பதை அங்கிருந்தோர் யூகித்து விட்டனர். அவர்களில் கர்ணன், என் அன்பு நண்பனே! தர்மன் இந்த உலகில் தானே ராஜாதி ராஜா என்பதை நிரூபித்து விட்டான். அவனது யாகத்திற்கு தேவர்களே திரண்டு வந்து விட்டனர் என்றால், அவனது மகிமையைச் சொல்ல வார்த்தைகள் ஏது? இனி அவனுக்கு நிகர் அவன் தான், என்றான். சகுனி எழுந்தான். கர்ணா! நீ சொல்வது தற்காலிகமானது. என் மருமகன் துரியோதனன் சிங்கம். தர்மன் யானை. இந்த சிங்கம் இன்று குகைக்குள் இருக்கிறது. பசித்திருக்கும் சிங்கம் வெளியே வந்தால் யானையின் கதி என்னாகும் என்பது தெரியும் தானே! என்றான், தனக்கே உண்டான நமட்டுச்சிரிப்புடன். துரியோதனின் தம்பி துச்சாதனன், மாமா! அந்த தர்மன் சந்திரன். என் அண்ணனோ சூரியன்.

சூரியனின் முன்னால் பகல் நேரத்து சந்திரனின் நிலைமையை கேட்கவா வேண்டும்! என ஏதோ உலக மகா தத்துவத்தை உதிர்த்து விட்டது போல் சிரித்தான். புகழ்ச்சியும், பொறாமையும் மனிதனை அழித்து விடும் இரண்டு பெரிய கருவிகள். சொந்த சித்தப்பா மகன் நன்றாக இருப்பதைக் காண துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அந்த பொறாமைக்காரனுக்கு தூபம் போடுவது சொந்த தாய்மாமனும், தம்பியும். நண்பர்கள் தக்க நேரத்தில் தக்கதை எடுத்துச் சொல்ல வேண்டும். கர்ணன் அந்த விஷயத்தில் தவறிவிட்டான். இந்த வஞ்சகர்கள் பேசிய கவர்ச்சி வார்த்தைகள் துரியோதனனுக்கு மகிழ்ச்சியளித்தன. அற்பர்கள் அற்பமான வார்த்தையைக் கேட்டு மகிழ்வது இயற்கைதானே! இன்றுவரை அரசியல் உலகில் இதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! அவன் சபையோரிடம், அன்பர்களே! தர்மனின் பலம் அதிகரித்து வருகிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் அவன் மேலும் மேலும் உயர்ந்து அசைக்க முடியாத இடத்துக்கு போய்விடுவான்.

நான் இந்திரபிரஸ்தத்து அரண்மனையில் நுழைந்து, ராஜமண்டபத்தில் நுழைந்ததும் ஒரு இடத்தில் கிடப்பது பளிங்கு கல் என நினைத்து, தண்ணீர் தடாகத்தில் விழுந்து விட்டேன். இதைப் பார்த்து என் ஜென்ம விரோதி பீமனும், அவனோடு நின்ற திரவுபதியும் கேலி செய்து சிரித்தனர். என்ன செருக்கு அவர்களுக்கு! என் மனதை விட்டு எந்நாளும் அது நீங்காது. அந்த பீமனை நானும் அவமானப்படுத்த வேண்டும். அந்த திரவுபதியை மானக்கேட்டுக்கு ஆளாக்க வேண்டும். தர்மனை பதவியிலிருந்து இறக்க வேண்டும்,என்றான். துச்சாதனன் அவனிடம், அண்ணா! நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பாண்டவர்களின் வலதுகையான கிருஷ்ணன், இப்போது சல்லியனின் (நகுல சகாதேவரின் தாய்மாமன்) நாட்டுக்கு படையெடுத்துச் சென்றிருக்கிறான். சல்லியன் மகாவல்லவன். அவன் அவ்வளவு எளிதில் கிருஷ்ணனை விடமாட்டான். இந்த சமயத்தில் தர்மனை வெல்வது எளிது,என்றான். கர்ணன் எழுந்தான். நண்பா! என் வில்லுக்கு வேலை கொடு. பாண்டவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக வருவோரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறேன், என கர்ஜித்தான். சகுனி அவனை கையசைத்து அமரச் சொல்லிவிட்டு, துரியோதனா, உன் தம்பியும், கர்ணனும் நீ அழிவதற்கான யோசனையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மனை எதிர்த்து ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அவனது தம்பி பீமன் கீழே சரிந்து விழுந்தால் கூட, அங்கே நடந்து கொண்டிருக்கும் நூறுபேர் நசுங்கி விடுவார்கள். அர்ஜூனனின் வில்பலத்தை திரவுபதியின் சுயம்வரத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படியிருந்தும், போர் என்பது இப்போது உசிதமல்ல. வஞ்சனையால் தான் அவர்களை வெல்ல முடியும். அதற்கு ஒரே வழி சூது. சூதாட்டம் நல்ல குடும்பங்களை அழித்து விடும் என்பது உலக நியதிதானே, என்றவாறு நமட்டு சிரிப்பு சிரித்தான். மாமாவின் யோசனை மருமகனுக்கு பிடித்து விட்டது. மாமா! இங்கே வாருங்கள். இந்த ஆசனத்தில் நீங்களும் அமருங்கள், என்று தன் ஆசனத்திலேயே அமர இடம் கொடுத்தான். சகுனிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மருமகன் அருகே ஒன்றாக அமர்ந்து கொண்டான்.